கொழும்பில் அருவருக்கும் பொது மலசல கூடங்கள் யார் பொறுப்பு? | தினகரன் வாரமஞ்சரி

கொழும்பில் அருவருக்கும் பொது மலசல கூடங்கள் யார் பொறுப்பு?

பாடசாலையின் துப்பரவற்ற கழிப்பறையைப் பயன்படுத்த விரும்பாததால் பாடசாலை நேரம் முழுவதும் சிறுநீர் கழிக்காமல் சிறுநீரகம் செயலிழந்து சிறுமியொருத்தி வவுனியாவில் உயிரிழந்த சம்பவம் அனேகருக்கு நினைவிருக்கலாம். பாடசாலைகளில் மாத்திரமல்ல பொதுக் கழிப்பறைகள் என்றாலே அலறுபவர்கள் ஏராளம். இப்படித்தான் எனது நண்பி யாழ்ப்பாணத்தில் உள்ள தனது வீட்டுக்குச் சென்றுவரும் ஒவ்வொரு முறையும் புலம்பிக்கொண்டெ இருப்பார். ஆயிரத்து நானூறு, ஆயிரத்து ஐந்நூறு ரூபாய் பணம் செலவழித்து சொகுசு பஸ்ஸில் ஏறி எட்டு ஒன்பது மணிநேர பயணத்தினிடையே ஒருசொட்டுத் தண்ணீர் கூட பல்லில் படாமல் பம்மிக்கொண்டு பயணம் செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்தை சொல்லிச் சொல்லி மாய்வார். காரணம் தண்ணீர் அருந்தினால் கழிப்பறைக்குச் செல்ல வேண்டும். நீண்ட தூர பயணத்தில் பஸ் நிறுத்தப்படும் எந்தவொரு இடத்திலும் மனிதர்கள் உபயோகிக்கக் கூடியவகையில் ஆரோக்கியமான கழிப்பறைகள் இல்லை என்பதுதான். ஆனாலும் சிலர் மூக்கைப் பொத்தியவாறே அந்தக் கழிப்பறைகளைப் பயன்படுத்திவிட்டுத் திரும்புவதையும் அவர் நினைவுறுத்தத் தவறுவதில்லை.

இதில் கவனிக்கப்படவேண்டியது நீண்டதூர பஸ் பிரயாணங்களின்போது குறித்த கடைகளுக்கு முன்பாகவே நாம் பயணிக்கும் வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. ஏக காலத்தில் அனேக பஸ்கள் வருகின்றன. திடீரென அலைமோதும் சனத்திரளுக்கேற்ப கடையின் கழிப்பறையை சுகாதாரமாகப் பேணுவது கடைச்சொந்தக்காரருக்கு சாத்தியமற்றதாக இருக்கலாம். ஆனால் கொழும்பு மாநகரில் பொதுக் கழிப்பறைகள் எவ்வாறிருக்கின்றன?

கொழும்பு மாநகருக்குள் நாளாந்தம் சுமார் ஆறு இலட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் வந்துபோகின்றனர். அவர்கள் தங்களது இயற்கைக் கடன்களை முடிப்பதற்கு போதிய வசதிகள் உள்ளனவா? பிரதான கடைத்தொகுதிகளை அண்டிய பகுதிகளில் பொதுகழிப்பறைகள் அறவே இல்லை. இப்பகுதிக்கு சொந்தத் தேவைகளுக்கு செல்லும் பொதுமக்கள் இயற்கை தேவைகளுக்கு அங்குள்ள மண்டபங்களை நாடிச்செல்கின்றனர்.

ஆண்கள் எவ்வாறோ மறைவிடங்களை நாடிச் சென்று விடுகின்றனர். ஆனால் பெண்கள் மற்றும் சிறார்களின் நிலை?

ஹெவ்லொக் டவுன் மயூராபதி கோவிலருகில் உள்ள சுரங்கப்பாதையில் காலடி வைத்தாலே ஒரே சிறுநீர் நாற்றம்தான். ரெக்லமேஷன் வீதியையும் செட்டித் தெருவையும இணைக்கும் முடக்குக்கு மூத்திர முடக்கு என்று வேறு பெயர் வைத்திருக்கின்றார்கள். அந்தளவுக்கு கொழும்பில் பொது மலசலகூடங்களுக்கான பற்றாக்குறை நிலவுகின்றது.

கொழும்பில் பொதுமலசலக்கூடங்கள் ஆங்காங்கே இருந்தாலும் சில இடங்களில் அவை சிறப்பாகப் பராமரிக்கப்பட்டாலும் அதிகமான மக்கள் பயன்படுத்துவதால் அதன் சுத்தமும் சுகாதாரமும் பராமரிப்பவரின் கையில்தான் உள்ளது என்றார் பஸ் சாரதி ஒருவர். “அதிகமான கிருமி தொற்றுகள் ஏற்படக்கூடிய இடமாக மலசலக்கூடம் உள்ளது என்றார் புறக்கோட்டை நடைபாதை வியாபாரியொருவர். பொதுமலசல கூடத்தைப் பராமரிப்பவர்களால் ஏன் அதனைச் சுத்தமாக வைத்திருக்க முடியாது, நாம் சும்மாவா பொதுமலக்கூடத்தை பயன்படுத்துகிறோம். ஒவ்வொரு முறை பயன்படுத்தும்போதும் 20 ரூபாய் கொடுக்கின்றோமே” என்றார் அந்த மலசலக்கூடத்தை பயன்படுத்திவிட்டுச் செல்லும் ஒருவர்.

கொழும்பு கோட்டை லோட்டஸ் வீதியில் அமைந்துள்ள கழிப்பறையானது மிகவும் பழைமையானது. 1931 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த மலசலக்கூடமான பழைமையை பறைசாற்றினாலும், அதன் சிறுநீர் கழிப்பதற்கான வசதிகள் போதுமானவையாக இருந்தாலும் மலங்கழிப்பதற்கென ஒதுக்கப்பட்ட பகுதி கதவுகள் அற்று திறந்தே கிடந்தது. இதுகுறித்து இதற்குப்பொறுப்பான ராஜா என்று அழைக்கப்படும் லலித்திடம் வினாவிய போது, “நாங்கள் நடைபாதை வியாபாரிகளின் சங்கமொன்றை நடாத்துகின்றோம். அதன் மூலம் பொதுமக்களின் தேவைக்காக இம்மலசலக்கூடத்தை பராமரித்து வருகின்றோம். இம்மலசலக்கூடம் இரவு பகல் என்றில்லாமல் இயங்குகின்றது. தற்போதைய சூழ்நிலையில் குழாய் நீர் தடங்கல் ஏற்பட்டுள்ளது. ஆனாலும் குழாய்க்கிணறொன்றின் மூலமாக தண்ணீரைப் பெற்று, விநியோகம் செய்கிறோம். ஒரு ஈ கூட இம்மலசலகூடத்தை அண்டாமல் நாளாந்தம் துப்பரவு செய்கிறோம். அதற்கான இரசாயனங்களை பாவிக்கின்றோம். சுமார் 180 பஸ் சாரதிகள் நாளாந்தம் இதனை பயன்படுத்துகின்றனர். தண்ணீரை சேமிப்பதற்காக தண்ணீர் தாங்கி ஒன்றையும் அமைத்துள்ளோம். இம்மலசலக்கூடத்திற்கு இரண்டு கதவுகள் தேவைப்படுகின்றன. அதனையும் கூடியவிரைவில் பொருத்துவோம். நவீன வசதிகளை உருவாக்க வேண்டியது கொழும்பு மாநகர சபையின் பொறுப்பாகும். எம்மால் முடிந்த வரை உச்ச சுகாதார பராமரிப்பையும், பொதுமக்களுக்கான சேவையினையும் வழங்குகிறோம் என்றார்.

கொழும்பு சதாம் வீதி நிலத்தடியில் பொதுமலசலக்கூடத்தில் சேவையாற்றும் நந்தசிரி ஹெட்டியாராச்சி, ”வந்து பாருங்கள்“ என்று எங்களுக்கு முழுமையான வசதிகளையும் காண்பித்து, இங்கு வரும் விசேட தேவையுடையோர், மதத்தலைவரகள் மற்றும் இராணுவ வீரர்களிடம் தான் பணம் வசூலிப்பதில்லை என்கிறார். இங்கு வரும் பொதுமக்களில் அதிகமானவர்களுக்கு கழிப்பறையை முறையாகப் பயன்படுத்தத் தெரியாது, சுகாதார முறைகளையும் கைகொள்ளத் தெரியாது என்று வேதனைப்படுகின்றார் அவர். இங்கு நான் மிகவும் சுத்தமாகவும், சிறப்பான வசதியுடனும் பொதுக்கழிப்பறையை வைத்திருக்கின்றேன். இதனை பயன்படுத்துவோர், என்றுமே அதனை ஒழுங்காகப் பயன்படுத்துவதில்லை. சிலர் படிகளிலேயே உமிழ்ந்துவிட்டுச் செல்கின்றனர். அதே நேரத்தில் ஆண்களுக்கான சிறுநீர் கழிக்கும் பாத்திரங்களில் பற்குத்தி, சுவீங்கம் மற்றும் சிகரட் துண்டுகள் போன்றவற்றையும் போட்டுவிட்டு செல்கின்றனர். இதனால் சிறுநீர் கழிப்பு குழாய்களில் அடைப்பு ஏற்படுகின்றது. அதேநேரத்தில் வாயைக் கொப்பளித்து எல்லா இடங்களிலும் துப்பிவிட்டும் செல்கின்றனர். தம்மைப்போலவே இன்னொருவர் இவ்விடத்தை பாவிக்க வேண்டும் என்பது இவர்களுக்கு தெரியாதா? அறியாமையால் அவ்வாறு செய்கிறார்களா இல்லாவிட்டால் சுத்தமாக இருக்கிறதே என்ற பொறாமையில் இப்படியான கீழ்த்தரமான செயல்களை செய்கிறார்களா என்று சிந்திக்க தோன்றுகின்றது. சிலர் நவீன மலசலக்கூடத்தையே பாவிக்க தெரியாமல் தடுமாறுகின்றனர். என்றார்.

நீண்டதூரப் பயணத்தை மேற்கொண்டோ அல்லது அலுவலகங்களிலிருந்தோ சிலர் இவ்விடத்தையே நம்பி வருகின்றனர். இயற்கையை யாரால் தடுக்க முடியும். ஆனாலும் கொஞ்சம் நாகரீகமும் தெரிந்திருக்க வேண்டும். நாம் நாளாந்தம் சுத்திகரிப்பு செய்கிறோம். ஆனாலும் இதனை பயன்படுத்தும் அனைவருமே தமது பொறுப்பை உணர்ந்தால் சரி. நாம் உபயோகிக்கும் மலசல கூடங்கள் தூய்மையாக இருந்தால் அதனால் இதனால் நன்மை அடையப்போவது நாமெல்லோரும் தானே. மலசலகூடக் கழிவுகள் எல்லாம் பிரதான கழிவுக் குழாயை சென்றடைகின்றன. இவ்விடம் நிலத்திற்கு கீழே இருப்பதால் முன்பு கழிவு நீர் அனைத்தும், காற்றமுக்க முறையினால் பிரதான குழாயை நோக்கி நகர்ந்துவிடும். தற்போது காற்றழுத்த இயந்திரம் பழுதடைந்துள்ளதால், சில வேளைகளில் நகர சபை பெளஸர்கள் மூலமாக இக்கழிவுகள் அப்புறப்படுத்தப்படுகின்றன. இதற்கான திருத்த வேலையும் விரைவில் செய்தால் இன்னும் பல வருடங்களுக்கு எந்தவிதமான பிரச்சினையும் இன்றி சிறந்த முறையில் இம்மலசலக்கூடத்தை பயன்படுத்தலாம் என்கிறார் அவர் நம்பிக்கையோடு.

கொழும்பு மாநகர சபையின் பணிப்பாளர்களில் ஒருவரான எம். ஏ. சி. எம். பஸாலிடம் பொது மலசலகூடங்கள் பற்றி வினவியபோது, “கொழும்பு மாநகரில் ஐம்பது பொது மலசக்கூடங்கள் காணப்படுகின்றன. பொதுமக்கள் வாழும் பொதுவீடமைப்புக்களில் சுமார் 1500 பொதுமலசலக்கூடங்கள் காணப்படுகின்றன. அவையாவும் கொழும்பு நகர சபைக்குச் சொந்தமானவையல்ல. ஆனாலும் மாநகர சபை உறுப்பினர்களின் பங்களிப்புடன் இவையும் புனரமைக்கப்பட்டுள்ளன. கொழும்பு மாநகர சபைக்குச் சொந்தமான வீடமைப்பு திட்டங்களிலுள்ள பொதுமலசலக்கூடங்கள் நகர சபைக்குச் சொந்தமானவையே. இதேவேளையில் கொழும்பு நகரில் காணப்படும் பொது மலசலக்கூடங்கள் அனைத்தும் நகர சபைக்குச் சொந்தமானதல்ல. சில இலங்கை போக்குவரத்து சபை, தனியார் போக்குவரத்து கம்பனி, புகையிரத நிலையம் மற்றும் துறைமுக அதிகார சபை உட்பட பலவற்றுக்குச் சொந்தமானவை.. சில பொதுமலசலக் கூடங்களை பராமரிப்பதென்பது இலகுவானதல்ல. இவற்றைப் பராமரிக்கவென பத்திரிகையில் விலைமனுக்கோரினோம். ஆனாலும் எதிர்பார்த்த பதில் கிடைக்கவில்லை.” என்றார்.

கொழும்புக்கு நாளாந்தம் வந்துபோகும் மக்கள் தொகைக்கேற்ப அவற்றின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டியதன் அவசியம் பற்றிக் கேட்ட போது,

கொழும்பில் 18 பொதுகழிப்பிடங்களை சிறப்பாகப் பராமரிக்கிறோம். அதே ​நேரத்தில் மேலும் ஏழு பொதுக்கழிப்பிடங்கள் விரைவில் பொதுமக்களின் பாவனைக்கு விடப்படவுள்ளன. ஒரு பொதுக்கழிப்பறையை பராமரிக்க மாதாந்தம் இரண்டு இலட்சம் ரூபாய் செலவுசெய்ய வேண்டியுள்ளது. இச்செலவு இக்கழிப்பறைக்குரிய நீர், மின்சாரம், இரசாயனங்கள், துப்பரவு செய்யும் உபகரணங்கள், தொழிலாளர் சம்பளம் என்பனவற்றுக்குத் தேவைப்படுகின்றன. இதில் ஆண்களுக்கானது மற்றும் பெண்களுக்கானது என்று தனித்தனியே செயற்படுத்த வேண்டிய அவசியமும் உள்ளது. ஏனைய பொது மலசல கூடங்களை பராமரிப்பதா அல்லது வேறு அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு நிதியைப் பயன்படுத்துவதா என்ற நிலை உருவாகியுள்ளது. சில மலசல கூடங்கள் 1935 ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்டவையாக உள்ளன. அக்காலத்தில் கொழும்பு எங்கும் பொதுமலசல கூடங்களே காணப்பட்டன. வீடுகளில் மலசல கூடங்கள் நிர்மாணிக்கும் வழக்கம் அப்போது பாரியளவில் இருக்கவில்லை. நகர் அபிவிருத்தி அடையும் போது பொதுமக்களும் தமது இல்லங்களிலேயே தங்களுக்குரிய வசதிகளையும் செய்துகொண்டனர். தற்போது மலசல கூடங்கள் இன்றி வீடுகள் கட்டப்படுவதில்லை. இதனால் அதிகமான பொதுமலசலக்கூடங்கள் கைவிடப்பட்ட நிலையில் உள்ளன. முன்பு இவற்றைத் துப்பரவாக்கும் தொழிலாளர்கள் அதிக எண்ணிக்கையில் இருந்தனர். தற்போது அந்தநிலை மாறிவிட்டது. இப்படியான தொழிலுக்கு ஆட்களை தேடிப்பிடிப்பது மிகவும் கடினமாக இருக்கின்றது என்கிறார்.

பொதுக்கழிப்பிடங்களை கொழும்பு மாநகர சுகாதார பரிசோதகர்கள் அடிக்கடி சோதனை செய்கின்றனர். அவற்றின் சுகாதார நிலைமை பற்றி அவர்கள் மாதாந்தம் அறிக்கையொன்றும் சமர்ப்பிக்கின்றனர். மிகவும் அசுத்தமான நிலையில் காணப்படும் பொதுக் கழிப்பிடங்கள் பற்றிய முன்னெச்சரிக்கையும் விடுக்கப்படுகின்றது. பின்னர் அது குறித்த விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

அடிக்கடி சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்படலாம். பராமரிப்பாளர்கள் இவ்வாறான பொது மலசல கூடங்களை நாளொன்றுக்கு இரண்டு மூன்று தடவைகள் கூட துப்பரவாக்கலாம். ஆனால் அதனை சுகாதாரமாகவும் தூய்மையாகவும் பயன்படுத்துவதென்பது அவற்றைப் பயன்படுத்தும் ஒவ்வொருவரின் கைகளிலும் தான் தங்கியுள்ளது.

எந்தவொரு அரச, தனியார் அலுவலகத்தில் பணிபுரிபவரும் தனது அலுவலகத்தின் மலசல கூடம்பற்றி புலம்பியவாறே இருப்பார். ஒருவர், இருவர் அல்ல அனேகமாக எல்லோருமேதான். அப்படியானால் அவற்றை அசுத்தம் செய்வது யார்?

ஒவ்வொருவருடைய வீடுகளிலும் பாருங்கள், ஏதோவொரு அறையில் மின்விசிறி அல்லது யாருமின்றிச் சுழன்றால், தண்ணீர்க் குழாய் ஒழுகிக் கொண்டிருந்தால் அரக்கப்பரக்க அதனை அணைக்கும் நாங்கள் அலுவலகங்களில் தேவையில்லாமல் மின்விசிறி சுழன்று கொண்டிருந்தாலோ, தண்ணீர்க் குழாய் ஒழுகிக் கொண்டிருந்தாலோ, மின்குமிழ் ஒளிர்ந்து கொண்டிருந்தாலோ ஓடிச்சென்று அணைக்கின்றோமா?

அவ்வாறு பொதுச்சொத்துக்கள் மீதான எங்கள் அக்கறையீனமே பொதுக் கழிப்பறை விடயத்திலும் தொடர்கின்றது. எங்கள் சொந்த வீடுகளில் கழிப்பறையைப் பயன்படுத்திய ஒவ்வொரு தடவையும் நாம் அவ்வாறேதான் தண்ணீர் ஊற்றாமலோ அல்லது கண்ட இடங்களிலும் உமிழந்து விட்டோ வெளியே வருகின்றோமா?

சிந்திப்போம்....

 

 

Comments