பெண்ணுறுப்பு சிதைப்பு | தினகரன் வாரமஞ்சரி

பெண்ணுறுப்பு சிதைப்பு

பெப்ரவரி 6ஆம் திகதி பெண் பிறப்புறுப்புச் சிதைப்பை முற்றிலும் ஒழிக்கும் நாள்

பெண் பிறப்புறுப்புச் சிதைப்பு வளரிளம் பருவத்தில் மேற்கொள்ளப்படும் இந்தக் கொடுமை அவர்கள் வாழ்நாள் முழுவதும் ஆறாத ரணமாக மனத்தில் நிலைத்துவிடுகிறது. அந்த வலி தங்களுடைய வாழ்நாள் முழுவதும் இருந்துகொண்டே இருக்கிறது என்கின்றனர் இதனால் பாதிக்கப்பட்ட பெண்கள்.

பெண் குழந்தைகள் ஆறு, ஏழு வயதாக இருக்கும்போதே அவர்களுடைய பிறப்புறுப்பு சிதைக்கப்படுகிறது. பெண்களின் பாலுணர்வை குறைப்பதற்காக இந்தக் கொடூரச் செயல் நிகழ்த்தப்படுகிறது. இந்தச் சடங்கை மேற்கொள்ளும்போது சிறு குழந்தைகளுக்கு மயக்க மருந்துகூடக் கொடுக்கப்படுவதில்லை. கடுமையான ரத்தப்போக்குக்கு ஆளாகும் குழந்தைகளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாது வீட்டிலேயே சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த வன்கொடுமை மூவாயிரம் வருடங்களாக நடந்து கொண்டிருக்கிறது என்பதுதான் கொடுமையிலும் கொடுமை. பிரமிடுகள் புதைந்திருந்த மம்மிகளில் கூட இந்த அடையாளம் காணப்படுகிறது. அதுதான் இந்த சடங்கு 3,000 ஆண்டுகள் பழைமை மிக்கது என்று உலகுக்கு காட்டுகிறது.

பிறப்புறுப்புச் சிதைப்பால் ரத்தப்போக்கு, பிறப்புறுப்பில் நோய்த் தொற்று, எதிர்காலத்தில் குழந்தையின்மை, குழந்தை பிறப்பதில் சிக்கல் போன்ற பிரச்சினைகளை உடல்ரீதியாகப் பெண்கள் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. எகிப்து, எத்தியோப்பியா, சோமாலியா, சூடான் போன்ற நாடுகளில் 98% பெண்களுக்கு இச் சடங்கு பெருமையோடு நடத்தப்பட்டிருக்கிறது.

அங்கு பெண்ணாகப் பிறந்த அனைவருக்கும் கட்டாயமாக இதை செய்கிறார்கள். அப்படி செய்யாத பெண்கள் தீட்டு கழியாத புனிதமற்ற பெண்களாக கருதி வெறுத்து ஒதுக்குகிறார்கள். அந்த சடங்கின் பெயர் 'பெண் சுன்னத்'. உலக சுகாதார மையம் இதை 'பெண்ணுறுப்பு சிதைவு' என்கிறது.

 

அந்த நாடுகளில் எல்லாம் இந்தக் கொடுமை போற்றுதலுக்குரிய புனிதமாக கொண்டாடப்படுகிறது. அங்கு வாழும் 13 கோடி பெண்களின் பெண்ணுறுப்பு சிதைக்கப்பட்டுள்ளது. தினந்தோறும் 6,000 பெண்களுக்கு இது நடத்தப்படுகிறது.

அவர்கள் புனிதமாக கருதும் கலாசார விதி, 'பெண்கள் சைத்தானின் வடிவங்கள். அவர்களைப் பார்த்தால் பாலுணர்வு மட்டுமே தோன்றும். அவர்கள் பாலுணர்வு மிக்கவர்கள். ஆகவே அவர்களின் பாலுணர்வை சிதைப்பதன் மூலம் அவர்கள் ஒழுக்கத்தோடு வாழ்ந்து கணவனுக்கு யோக்கியமாய் இருப்பார்கள்.' என்கிறது.

இதை செய்த பின் பெண்ணின் பாலுணர்வு முற்றிலுமாக அழிந்துவிடும். மிக சொற்பமாக மனதளவில் மட்டுமே பாலுணர்வு தோன்றும்.

இதனால் இந்தப் பெண்கள் தவறான வழியில் போகமாட்டார்கள். வேறு ஆண்களுடன் தொடர்பு கொள்ள மாட்டார்கள். பாலுணர்வு இல்லாததால் காலம் முழுக்க கற்போடு இருப்பார்கள் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையும் ஆணாதிக்கம் திணித்த பெண் அடிமைத்தனமும் இதன் பின்னே இருக்கிறது.

இதை ஆங்கிலத்தில் 'பீமேல் ஜெனிடல் மியுட்டிலேஷன்' என்பார்கள்.

தமிழில் பெண்ணுறுப்பு சிதைவு. பெண்ணுறுப்பில் 'க்ளிட்டோரியஸ்' என்ற பகுதிதான் உணர்ச்சி மிகுந்தது. இந்த க்ளிட்டோரியஸ் எனும் பாகத்தை வெட்டி எடுப்பதுதான், பெண்ணுறுப்பு சிதைவின் முதல் பகுதி.

இந்த வெட்டும் வேலையை செய்வது மருத்துவர்களோ அறுவை சிகிச்சை நிபுணர்களோ அல்ல. வயது முதிர்ந்த கிழவியோ அல்லது பெண்ணின் தாயோ தான். எவ்வித மயக்க மருந்தும் கொடுக்காமல் கதற கதற ரண வேதனையோடு அறுத்தெரிவதுதான் முதல் நிலை. மருத்துவத்தில் இதற்கு 'க்ளிட்டோரிடேக்டமி' என்று பெயர்.

சடங்கின் இரண்டாம் நிலை, யோனியின் பக்கவாட்டில் இருக்கும் உதடுகளை வெட்டி எடுப்பது. அதையும் பிளேடால் அறுத்து எடுத்துவிடுவார்கள். இதனை 'லேபியாபிளாஸ்டி' என்று மருத்துவம் சொல்கிறது.

அதன்பின் மூன்றாம் நிலை, பெண்ணுறுப்பின் நுழைவு வாசலை ஊசி நூல் கொண்டு தைத்து மூடிவிடுவது. சிறுநீர், மாதவிலக்கு வெளியேற சின்னதாக இரண்டு துளை மட்டும் ஏற்படுத்தி விடுவார்கள். இதற்கு 'வெஜைனாபிளாஸ்டி' என்ற மருத்துவப் பெயரும் உண்டு.

இதை செய்வதற்கு வீட்டில் உள்ள கத்தி, பிளேடு, கண்ணாடி துண்டு, கத்திரி, சாதாரண ஊசி நூலையே பயன்படுத்துகிறார்கள்.

மூன்று நிலையும் முடிந்த பின்னே பெண்ணின் தாய் உறவினர்களிடம் வந்து 'என் மகள் பெண்ணாக மலர்ந்துவிட்டாள்' என்று மகிழ்ச்சியோடு சொல்வார். உடனே மதுவோடு விருந்து நடக்கும். உள்ளே வீட்டின் பின்புறத்தில் ஒரு மூலையில் இரண்டு காலையும் சேர்த்துக் கட்டிய நிலையில் தாங்கமுடியாத வேதனையோடு பெண்ணாக மலர்ந்த சிறுமி கதறி அழுது கொண்டிருப்பாள். இனி அந்தப் பெண் உணர்ச்சியற்ற ஜடம்.

காயங்கள் ஆறுவதற்காக 40 நாட்கள் கால்களை சேர்த்தே கட்டிப்போட்டு விடுவார்கள். கொடுமைகள் நிறைந்த இந்த சடங்கு உருவாக்கும் வலி, வேதனை, அதிர்ச்சி, பலவிதமான உடல் சார்ந்த நோய்களை பெண்ணுக்கு கொண்டு வருகிறது. இலட்சக்கணக்கான பெண்கள் இதற்கு பின் கடுமையான மன அழுத்தத்திற்கு ஆளாகி இருக்கிறார்கள். இவ்வளவு பாதிப்புகள் இருந்தும் இதை பெண்கள் தொடர்ந்து செய்து கொள்வதற்கு காரணம் அசைக்க முடியாத மத மற்றும் மூட நம்பிக்கைதான்.

இக் கொடூரச் செயல் இந்தியாவில் உள்ள சில சமூகத்தினராலும் பின்பற்றப்படுகிறது. இது மனித உரிமை மீறல் என ஐ.நா. தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. மனித தன்மையற்ற இந்தச் செயலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக 2003 முதல் ஒவ்வோர் ஆண்டும் பெப்ரவரி 6-ம் திகதி பெண் பிறப்புறுப்புச் சிதைப்பை முற்றிலுமாக ஒழிக்கும் நாளாக அனுசரிக்கப்படுகிறது.

இந்தக் கொடூரப் பழக்கத்தைக் கடைப் பிடிப்பவர்களில் 75 சதவீதத்தினர் போரா பிரிவைச் சேர்ந்தவர்கள். ஆனால், இதை நிரூபிக்கப் போதுமான ஆதாரங்கள் இல்லாததால் இதைத் தடுக்க அரசும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்வதில்லை. இதைக் குற்றச் செயலாகக் கருதி இந்தக் கொடூரத்தை ஒழிக்க வலியுறுத்தி போரா சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் தங்களுக்கு ஏற்பட்ட கொடுமைகளை வெளியே சொல்லத் தொடங்கியுள்ளனர்.

ஐ.நாவின் கணிப்பீட்டின் படி 20 பெண்களில் ஒரு பெண் பிறப்புறுப்பு சிதைப்புக்கு உள்ளாக்கப்படுகிறார். யுனிசெஃப்பின் ஆய்வுகளில் ஆபிரிக்கா மற்றும் மத்திய கிழக்கில் உள்ள 29 நாடுகளில் இந்த பழக்கம் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பிரிட்டனில் இந்த பழக்கம் சட்டப்பூர்வமாக தடைசெய்யப்பட்டாலும் அது கடைப்பிடிக்கப்படுவது அதிகரித்துள்ளது.

Comments