போதை மாஃபியாவுக்கும் அரசியலுக்கும் இடையிலான பிணைப்பு தகர்க்கப்பட வேண்டும்! | தினகரன் வாரமஞ்சரி

போதை மாஃபியாவுக்கும் அரசியலுக்கும் இடையிலான பிணைப்பு தகர்க்கப்பட வேண்டும்!

யானை வரும் பின்னே மணி யோசை வரும் முன்னே' என்பது போல் இலங்கையில் தேர்தல் திருவிழா வரப்போகிறது என்பதற்கான கட்டியக் கூறல்கள் ஏலவே ஆரம்பிக்கப்பட்டுவிட்டன. நாட்டின் பாராளுமன்ற ஆட்சியாளர் பிரிவும், நாட்டின் நிறைவேற்று அதிகார மட்டமும், எதிர்க்கட்சி வட்டாரங்களும் தீயாய் வேலைசெய்ய ஆரம்பித்துவிட்டுள்ள சுறுசுறுப்பையும் காணமுடிகிறது. இருக்கின்ற காலப்பகுதியில் ஆளுந்தரப்பு அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பித்துவிட கரிசனை காட்டுகிறது. பறந்து பறந்து நிகழ்ச்சித் திட்டங்களில் கலந்துகொள்கின்றார் பிரதமர். ஜனாதிபதியும் தன் பங்கிற்கு பாதாள உலக தாதாக்களை தூக்கில் போட்டே தீருவேன் என்று சூளுரைக்கிறார். மாறி மாறி ஊடகங்களில் வெளிப்படுத்தப்படும் போதைப் பொருள் வர்த்தகத்தின் இலங்கையின் வகிபாகத்தை நோக்குமிடத்து அட இவ்வளவு பேர் இதில் ஈடுபட்டுள்ளார்களா என்று புருவத்தை உயர்த்தத் தோன்றுகிறது. அப்படியென்றால் நம் கண்முன்னே தெரிவது கடலுக்குள் ஒளிந்துள்ள பனிமலையின் ஒரு சிறு பகுதி மட்டும் தானா?

ஏலவே கைதுசெய்து மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளவர்களை தூக்கிலே போடப்படுவதற்கான முஸ்தீபுகள் ஜரூராக இடம்பெற்று வருகின்றன. தரமான தூக்குக்கயிறு தேடப்பட்டு வருகிறது. தூக்கு மேடை உபகரணங்களும் தயார்படுத்தப்படுகின்றன. எழுபதுகளிலே நின்றுபோய்விட்ட தூக்குத் தண்டனை மீள அமுல்படுத்தப்படுமா என்ற கேள்வி மக்கள் மத்தியில் இருந்து வருகிறது. சிறையில் மரண தண்டனை பெற்றுள்ளவர்கள் வயிற்றிலே புளி கரைக்கப்பட்டுள்ளமை அவர்கள் மேற்கொள்ளும் மேன்முறையீடுகளில் இருந்து தெரியவருகிறது.

கடந்த காலங்களில் போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புபட்டவர்கள் மற்றும் பாதாள உலகக் கேடிகள் பிடிபட்டதும் அவர்கள் ஆயுதங்களை மறைத்து வைத்திருக்கும் இடங்களுக்கு காவல் துறையினரால் அழைத்துச் செல்லப்பட்டு அச் சமயத்தில் காவல் துறையை அவர்கள் தாக்க முற்பட்டதால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவங்கள் பல பதிவாகி இருந்தன. வெலிக்கடையில் இடம்பெற்ற துப்பக்கிச்சூட்டு சம்பவத்தில் பாதாள உலக நபர்கள் பலரும் சுட்டுக்கொல்லப்பட்ட நிகழ்வையும் இங்கு குறிப்பிடுதல் பொருத்தம்.

இச்சம்பவங்கள் கூட இலங்கையின் பாதாள உலக போதைப்பொருள் கும்பல்கள் பலமாக இருந்துள்ள நிலையை தெளிவாக வெளிப்படுத்துகின்றன. மறுபுறம் பாதாள உலக கும்பல்களுக்கு இடையில் இடம்பெறும் மோதல்கள் காரணமாக இடம்பெற்ற கொலைச் சம்பவங்களும் தொடர்ச்சியாக பதிவுசெய்யப்பட்டு வருகின்றன.

அண்மையில் டுபாயில் இடம்பெற்ற கைதுகள் அதனைத் தொடர்ந்து நிகழ்ந்துவரும் சம்பவங்கள் அனைத்துமே இலங்கையில் இந்தப் பிரச்சினையானது நாம் நினைப்பது போல் சாதாரணமான ஒரு செடியின் அளவில் அல்லாமல் கிளைபரப்பி பரந்துவிரிந்த ஒரு ஆலவிருட்சமாக விஸ்வரூபம் எடுத்துள்ளதை அவதானிக்க முடிகிறது. இதைக் கட்டுப்படுத்த வேண்டுமாயின் சிங்கப்பூர், இந்தோனேஷியா போன்ற நாடுகளில் உள்ளதுபோல கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்ற கருத்து மேலோங்கி வருகிறது. மெக்ஸிகோ, கொலம்பியா போன்ற போதைப்பொருள் வர்த்தகம் பிரபலமாக இடம்பெறும் நாடுகளில் போதைப்பொருள் மன்னர்கள் சிறைபிடிக்கப்பட்ட போதிலும் சிறையிலிருந்து தப்பியோடிய சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன. இலங்கையில் போதைப்பொருள் மன்னர்கள் சிறையில் இருந்தவாறே தனது வலைப்பின்னலை இயக்கி வந்துள்ளமையை கடந்த காலத்தில் இடம்பெற்ற சமப்வங்களின் மூலம் அறியமுடிகிறது. எனவே சமூகத்தில் புற்றுநோயாக மாறியுள்ள இப்போதைப் பொருள் மாபியாவை மரணதண்டனை அமுலாக்கத்தின் மூலமாகவேனும் கட்டுப்படுத்த வேண்டியது அவசியமாகிறது.

குறுகிய காலத்தில் பெரும் செல்வந்தராக மாறக்கூடிய ஒரு குறுக்கு வழியாக போதைப்பொருள் வர்த்தம் உள்ளதால் அதில் ஈடுபட பலரும் முயற்சிப்பது தெரிகிறது. சமூகத்திற்கு இது மிகப்பெரிய தீமையாக அமைந்தாலும் அதுபற்றியெல்லாம் கவலைப்படாமல் பணபலத்தை பெருக்குவதும் அதன் மூலம் பாதாள உலக பலத்தை அதிகரிப்பதும் இடம்பெற்று வருகிறது.

அரச இயந்திரத்திற்குள் இருக்கும் கறுப்பு ஆடுகள் மற்றும் அரசியல்வாதிகள் சிலரின் நேரடி அல்லது மறைமுக ஆசீர்வாதங்கள் இல்லாமல் இத்தகைய கோஷ்டிகள் இவ்வவு தூரம் வளர்ந்திருக்க முடியாது.

பொதுவாக தேர்தல் காலங்களில் பிரசாரங்கள் தொடக்கம் மற்றும் ஏனைய நடவடிக்கைகளுக்கு அவசியமான நிதியை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகளின் போதும் ஏனைய நிதிசார் தேவைகளை பூர்த்திசெய்யும் போதும் இத்தகைய சமூக விரோத சக்திகள் தம்மிடம் உள்ள அபரிமிதமாக நிதி வளத்தை அதில் முதலீடு செய்கின்றனர். அதன்பின்னர் அரசியல் நடவடிக்கையில் இவர்களின் மறைகரம் செயற்படத் தொடங்குகிறது. அழுத்தக் குழுக்களாக செயற்படும் இவர்கள் தங்களின் வலைப்பின்னலை வலுவாக அமைத்துக்கொள்கின்றனர். சிலவேளைகளில் காவல்துறையினர் கூட அவர்களின் மறைமுக நடவடிக்கைகளை அறிந்தும் நடவடிக்கை எடுக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு விடுகின்றனர்.

எவ்வாறாயினும் அண்மைக் காலங்களில் காவல்துறை மற்றும் ஏனைய பொறுப்புவாய்ந்த துறைகளின் தொடர்ச்சியான நடவடிக்கைகள் காரணமாக போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட பலர் தொடர்ச்சியாக கைதுசெய்யப்பட்டு வருகின்றனர். அத்துடன் பெரும் தொகையில் போதைப்பொருட்களும் கைப்பற்றப்பட்டு வருகின்றன.

அடுத்துவரும் தேர்தல்களில் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளவர்களுடன் தொடர்புகளை பேணும் மக்களை வேட்பாளர்களாக நிறுத்துவதை அரசியல் கட்சிகள் தவிர்க்க வேண்டும். போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளவர்களிடம் நிதிபெறும் நடவடிக்கைகளையும் முற்றாகத் தவிர்க்க வேண்டும்.

அரசியல் என்பது பணபலமிக்க ஒரு நடவடிக்கையாக மாறியுள்ள நிலையில் பணபலமிக்கவர்களில் செல்வாக்குக்குள் அரசியல்வாதிகள் வீழ்ந்து விடுவது சகஜமாக இருக்கலாம்.

ஆனால் சமூக பொறுப்புள்ள ஒரு அரசியல்வாதி சமூகவிரோதிகளுடன் தொடர்புபடுவதையும் பணம் பெறுவதையும் முற்றாகத் தவிர்க்க வேண்டும்.

மறுபுறம் அரசியலுக்கு தெரிவுசெய்யப்படும் ஆட்களின் கல்வி மற்றும் தொழில்சார் தராதரம் பற்றியும் சிந்திப்பது அவசியம். கட்சிகள் தமது கட்சிக்கு சண்டியர்களையும் பணமுதலைகளையும் வேட்பாளர்களாக நிறுத்துவதை சற்றே தளர்த்தி தொழில் வாண்மையாளர்களையும் ஒரு குறிப்பிட்ட சதவீதத்திலேனும் முன்னிறுத்துவது நன்று.

கனேடிய மற்றும் சிங்கப்பூர் பாராளுமன்றங்களில் இத்தகைய தொழில் வான்மையாளர்களும் திறமைசாலிகளுமே அமைச்சரவையில் இடம்பெறுகின்றனர்.

இலங்கையில் தூங்குவதற்கென்றே பாராளுமன்றம் செல்லும் உறுப்பினர்களை பார்க்கிறோம். அரசியல்வாதிகளையும் பார்க்கிறோம். தாம் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களுக்காக வாய்திறவாத மந்தைகளையும் பார்க்கிறோம்.

செயல் திறன் மிக்க வாண்மையாளர்களைக் கொண்ட இளம் சமூகத்தினர் எல்லா மாவட்டங்களிலும் பிரதேச மாகாண மற்றும் தேசிய மட்டத்தில் அரசியலுக்கு வரவேண்டும். அதற்கான வாய்ப்புகளை அவர்களுக்கு வழங்கவேண்டும்.

புதிய மொந்தையில் பழைய கள் என்பதுபோல ஏற்கெனவே ஊழலில் ஊறிப்போன அரசியல்வாதிகளை மீண்டும் மீண்டும் தெரிவு செய்து நாட்டை அதளபாதாளத்துக்குள் தள்ளிவிடாமல் நாட்டின் பொருளாதாரம், சுயகௌரவம் என்பன பற்றி சிந்தித்து முடிவெடுக்க வேண்டியது ஒவ்வொரு அரசியல் கட்சிகளினதும் பொறுப்பாகும்.

உங்கள் வேட்பாளர்களை சரியாக தெரிவுசெய்து மக்கள் முன்நிறுத்துங்கள். அவர்களில் சரியானவர்கள் மக்கள் தரிவு செய்யப்பட்டும். நீங்கள் பிழையானவர்களை நிறுத்தினால் அந்த அழுகிய பழங்களில் சிலவற்றைத்தான் மக்கள் தெரிவுசெய்ய வேண்டியிருக்கும். ஏனெனில் அவர்களும் வேறு தெரிவுகள் இருக்கப்போவதில்லை.

Comments