மொய் விருந்தும் 20 ரூபாய் பிச்சைக்காசும்! | தினகரன் வாரமஞ்சரி

மொய் விருந்தும் 20 ரூபாய் பிச்சைக்காசும்!

இப்போவெல்லாம் 20 ரூபாய்க்கு எந்த மதிப்பும் கிடையாது! பிச்சைக்காரர்களின் மிகக் குறைந்த எதிர்பார்ப்பாக இந்த 20 ரூபாய் இருந்துகொண்டிருக்கிறது. அப்படி 20 ரூபாயைக் கொடுத்தாலும் கொடுத்தவரின் மானத்தை வாங்கி விடுவார்கள் பிச்சைக்காரர்கள். எப்படி என்கிறீர்களா?

முன்பெல்லாம் பணச்சடங்கு, மொய் விருந்துக்குப் போகிறவர்களுக்கு இந்தச் சிக்கல் இருக்கும். ஒருவர் எவ்வளவு 'மொய்' (அன்பளிப்பு) கொடுக்கிறாரோ, அதனை அப்படியே பெயர் ஊருடன் ஒலிபெருக்கியில் சொல்லிவிடுவார்கள். குறைவாகக் கொடுத்தவருக்கு மானம் போகும். அதற்குப் பயந்துகொண்டே கூடுதலாக மொய் வைப்பார்கள். கொடுக்கும் தொகையைப் புத்தகத்தில் எழுதிவைப்பதும் இந்தப் பயத்திற்குக் காரணம்.

பணச்சடங்கும் அப்படித்தான். ஒருவருக்குப் பணத்தட்டுப்பாடு என்றால், விருந்து வைத்துப் பணம் சேர்ப்பார்கள். இது முன்பு யாழ்ப்பாணத்தில் வழக்கத்தில் இருந்தது. தமிழகத்தில் இன்னமும் நடைமுறையில் இருக்கிறது. யார் எவ்வளவு கொடுத்தார்கள் என்று குறித்து வைத்திருந்து மற்றைய விருந்தில் அவ்வாறு நடந்துகொள்வார்கள்!

பஸ்களில் பிச்சைக்காரர்களும் அப்படித்தான், கொடுப்பவர்களின் தொகையைக் குறிப்பிட்டு ஒவ்வொருவருக்காக நன்றி சொல்வார்கள். பெரும்பாலும் 20 ரூபாய் கொடுத்தால் குரலை மாற்றிக்கொள்வார்கள். 50, 100 என்றால் எப்படியிருக்கும் என்று சொல்லத்தேவையில்லை.

ஒருவர் பெரிய வாளுடன் பஸ்ஸில் ஏறுவார். அதை அப்படியே வாயில் வைத்துத் தொண்டைக்குழிக்குள் இறக்குவார். அதை அவர் செய்வதற்கு முன்னர், அதுபற்றிய சிரமத்தை விளக்குவார். அவரது முயற்சியைப் பார்க்கும் பொதுமக்கள் நூறு, 500 என்று கொடுப்பார்கள் என்பார். அதைக் கேட்பவர்கள் 20 ரூபாய் கொடுக்கத்தயங்குவார்கள்தானே! இப்படித்தான் இந்த 20 ரூபாய்க்கு இப்ப மவுசு. பிச்சைக்காரருக்குக் கொடுப்பதென்றால்கூடத் தயங்கித் தயங்கிக் கொடுக்கும் தொகை என்பது இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும்.

ஆனால், இந்தத் தொகையைப் பெறுவதற்கு மூன்று மாதகாலம் ஒரு போராட்டமே நடந்திருக்கிறது என்றால் நம்புவீர்களா? பத்துக்கும் மேற்பட்ட பேச்சுவார்த்தைகள். பணிப்பகிஷ்கரிப்புகள், ஆர்ப்பாட்டங்கள், கொடும்பாவி எரிப்புகள் எல்லாம் நடத்தி, இந்த 20 ரூபாயைப் பெற்றிருக்கிறார்கள். அதற்காக அவர்கள் அந்தத் தொகையைக் கொடுத்தவர்களை அவமானப்படுத்தவில்லை. கொடுத்தவர்களும் வெட்கப்படவில்லை. என்ன, பத்திரிகைகளிலும் ஏனைய ஊடகங்களிலும் சொல்லிக் காட்டினார்கள்.

ஊடகங்களில் பிரபல்யப்படுத்துவதைவிட பஸ்ஸில் சொல்வதுதானே அவமானம்! பஸ்ஸில் ஓர் 50 பேர் பார்த்துக்ெகாண்டிருப்பார்கள். இறங்கிச் சென்றால் யார், எவர் என்றும் தெரியாது. ஆனால், அது பெரும் அவமானம் என்று நினைக்கிறார்கள் பொதுஜனங்கள். என்றாலும், கோடிக்கணக்கான மக்களுக்குச் சொல்வதால், எந்த அவமானமும் ஏற்பட்டுவிடாது என்கிறார்கள் தோட்ட முதலாளிமார் சம்மேளனத்தினரும் தொழிற்சங்கத்தினரும். பிழைப்பதென்றால் அப்படித்தான் இருக்க வேண்டும் என்கிறார் நண்பர். அவரது பாணி என்னவென்றால், ரோசமுள்ளவன் கெட்டான், மழுங்கை பிழைச்சான்! ஆக, முதலாளிமார் சம்மேளனத்தைப்போன்றோ அல்லது தொழிலாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்களைப்போன்றோ மழுங்கையாக இருந்தால்தான் வாழ முடியும் என்று அடித்துச் சொல்கிறார் நண்பர்.

நல்ல மானுட தொடர்பாடலை ஏற்படுத்துவதென்றால், அவர்கள் சொல்வதைக் கவனமாகக் கேட்க வேண்டும்; எதிர்த்துப்பேசக்கூடாது. குறுக்குக் கேள்வியும் கேட்கக்கூடாது. அவர்கள் சொல்வது பிடிக்காவிட்டாலும், பிடித்ததைப்போல் நடிக்க வேண்டும் என்கிறார்கள் வெள்ளைக்காரர்கள். அதனைத் தொழிற்சங்கத்தினரிடம் கற்றுக்ெகாள்ள வேண்டும் என்பது நண்பரின் கருத்து. அவர்களும் அப்படித்தான், சம்மேளனம் எதைச் சொன்னாலும் எதிர்த்துப் பேசமாட்டார்கள். அதனால்தான், இருசாராருக்கும் இடையிலான பரஸ்பர புரிந்துணர்வு வருடா வருடம் மேம்பட்டு வருகிறது என்கிறார் அவர்.

அதேநேரம், பிச்சைக்காரர்களுக்கு இந்த 20 ரூபாயின் மதிப்பெல்லாம் தெரியாது. அதன் பெறுமதியைத் தோட்டத் தொழிலாளர்களிடமிருந்து அவர்கள் கற்றுக்ெகாள்ள வேண்டும். தொழிலாளர்கள் எவ்வளவு கொடுத்தாலும் வாங்கிக்ெகாள்வார்கள்; அடம்பிடிக்கமாட்டார்கள். அந்தளவிற்கு அவர்கள் எஜமான் விசுவாசிகள். மாடாய் உழைத்து ஓடாய்த் தேய்ந்தாலும், நாய்போல் நன்றியுள்ள ஜீவன்கள். அவர்களுக்குக் கணக்கும் தெரியாது ஒரு களிமண்ணும் புரியாது. எந்தத் தொகையை எதனுடன் கூட்டிக்ெகாடுத்தாலும் சரியென்பார்கள்! அதனால்தான், ஊழியர் சேமலாப நிதியத்தைச் சம்பளத்துடன் கூட்டிக்காண்பித்ததற்கும் மௌனமாக இருந்தார்கள்.

ஆரம்பத்தில் மொய் சடங்கு என்று சொன்னேனே, இப்படித்தான் யாழ்ப்பாணத்தில் ஒரு முக்கியஸ்தர் மொய் கொடுத்துவிட்டு வந்ததும், ஒலிபெருக்கியில் உரத்துச் சொல்வார்கள். அதனால், அவர் அவ்வாறான இடத்திற்குச் சென்றால், பெரிய தொகைக்குக் காசோலை எழுதி கொடுப்பார். பின்னர் அதனை வங்கியில் வைப்பிலிட்டால், திரும்பி வந்துவிடும். இது சரியா இந்த ஈபிஎப்பைச் சம்பளத்தில் சேர்த்தமாதிரி இல்லையா?

இப்பத்தான் ஓர் ஐடியா வருது. 20 ரூபாய்க்குக் கூடுதலான தொகையைப் பெற வேண்டுமாக இருந்தால் பிச்சைக்காரர்களின் உத்தியைப் பயன்படுத்தலாம்போல் இருக்கிறது. அவர்களின் சூட்சுமத்தைத் தோட்டத் தொழிலாளர் சங்கங்கள் பின்பற்றினால், சிலவேளை அடுத்த ஆண்டிலாவது ஓர் ஐம்பது ரூபாய் அதிகரிப்பைப் பெற்றுக்ெகாள்ளலாம் என்கிறது இந்த மரமண்டை.

Comments