வனத் திணைக்களத்திடம் சென்ற வயல் காணிகள் எப்போது மக்கள் வசமாகும்? | தினகரன் வாரமஞ்சரி

வனத் திணைக்களத்திடம் சென்ற வயல் காணிகள் எப்போது மக்கள் வசமாகும்?

ஜது பாஸ்கரன்   

 

‘யுத்தத்தின்போது வெளியேறிய ​ஜெயபுரத்து மக்கள் மீள் குடியேறிய பின்னர் அவர்களுக்கு அளிக்கப்பட்டிருந்த வயல் காணி தமக்கு சொந்தமானது என வனவளத் திணைக்களம் அடித்துச் சொல்லிவிட்டதால் அக் காணியைத் தம்மிடம் வழங்குமாறு இக் கிராமவாசிகள் அரசியல்வாதிகளிடமும் அதிகார மையங்களிலும் வேண்டி நிற்கின்றனர்.’  

“நாங்கள் வயல் செய்து வாழந்த காணிகளை வனவளத் திணைக்களம் பிடித்து வைத்துள்ளது. இதனை பெற்றுத்தருமாறு நாங்கள் கேட்காதவர்கள் யாரும் இல்லை, இதுவரை காணிகளும் கிடைத்தபாடாக இல்லை” என்று கிளிநொச்சி பூநகரி ஜெயபுரம் விவசாயிகள் கவலையோடு கூறுகிறார்கள்.  

1983ம்ஆண்டு காலப்பகுதியில் நாட்டில் நிலவிய அசாதாரண சூழ்நிலை காரணமாக மலையகம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இருந்து இடம்பெயர்ந்த ஒரு தொகுதி மக்கள் கிளிநொச்சி மாவட்டததில் தஞ்சமடைந்தனர். இவ்வாறு தஞ்சமடைந்தவர்கள் கிளிநொச்சி மாவட்டத்தின் மாயவனூர் இரணைமடுக்குளத்தினை அண்டிய சமந்தபுரம், மலையாளபுரம், கிருஸ்ணபுரம், பாரதிபுரம், தருமபுரம், ஜெயபுரம் போன்ற இடங்களில் காணிகள் வழங்கப்பட்டு குடியேற்றம் செய்யப்பட்டதுடன் மேற்படி புதிய கிராமங்களும் உருவாகின.  

இவ்வாறு உருவாகிய கிராமங்கள் இன்று பல்வேறு துறைகளில் வளர்ச்சியடைந்து வருகின்றன.  

 இது ஒரு புறமிருக்க இவ்வாறு உருவாக்கப்பட்ட பூநகரி ஜெயபுர கிராமததில் வாழ்ந்து வரும் மக்கள் தமக்கான வயல் காணிகளை பெற்றுத்தருமாறு கோரி வருகின்றனர். இது தொடர்பில் அந்த மக்களிடம் வினவிய போது ஒவ்வொரு குடும்பமும் தாங்கள் கைவிட்டுச்சென்ற தமது ஒரு ஏக்கர் வயல் காணிகளை மீள வழங்க வேண்டும் என்ற கருத்துக்களை ஆணித்தரமாக முன்வைத்தனர்.  

1990களில் இந்தப் பிரதேசத்தில் 548குடும்பங்களுக்கு குடியிருப்பதற்கான காணிகளும் அவர்கள் நெற் செய்கையினை மேற்கொள்ளக்கூடிய வகையில் தலா ஒரு ஏக்கர் வரையான வயல் காணிகளும் அப்போது வழங்கப்படிருந்தன.  

அவற்றை துப்பரவு செய்து பயிர்ச் செய்கைகளை மேற்கொண்டு வந்த நிலையில் தொடர்ந்து ஏற்பட்ட யுத்த சூழ்நிலைகளால் குறித்த பிரதேசத்தில் வாழ்ந்த மக்கள் இடம்பெயர்ந்து வெளிமாவட்டங்களிலும் இந்தியாவின் தமிழகத்திலும் தஞ்சமடைந்தனர்.  

யுத்த சூழல் அற்ற அமைதியான இக்காலப் பகுதியில் குடியேறி வாழ்ந்த இவர்கள் பின்னர் அல்லல் பட்டு சொந்த இடங்களை விட்டு வெளியேறிச் சென்றார். 2009ம் ஆண்டு இறுதியிலிருந்து மக்கள் மீள்குடியேறியுள்ளன.  

இவ்வாறு மீள்குடியேறிய மக்கள் தமது வயல் காணிகளை துப்பரவு செய்து வாழ்வாதாரப் பயிர்ச் செய்கைகளை மேற்கொள்ள முனைந்தபோது குறித்த வயல் நிலங்கள் கண்ணிவெடிகள் கொண்ட அபத்தான பகுதியாகக் காணப்பட்டது.  

இதனால் அந்த மக்கள் விவசாயத்தில் ஈடுபட முடியாத நிலை காணப்பட்டது.   

கடந்த 2016ம் ஆண்டில் இந்தப்பிரதேசங்களில் காணப்பட்ட வெடிபொருட்கள், கண்ணிவெடி அகற்றும் பிரிவினால் அகற்றப்பட்டு ஆண்டின் இறுதிப் பகுதியில் பிரதேச செயலகத்திடம் உரிய ஆவணங்கள் கையளிக்கப்பட்டன.  

 மக்களின் தொடச்சியான கோரிக்கைக்கு அமைவாக 2017ம் ஆண்டு ஜூலை மாதம் 18ம் திகதி பூநகரிப் பிரதேச செயலகத்தில் நடைபெற்ற பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் ஜெயபுரம் மக்களுக்குரிய வயல் காணிகளில் கண்ணிவெடிகளை அகற்றிய பகுதிகளிலிருந்து 100ஏக்கர் காணியை முதற்கட்டமாக விவசாயிகளுக்கு பகிர்ந்தளிப்பதென்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  

இந்த வயல் காணிகள துப்பரவு செய்து வழங்குவதற்கு விசேட நிதியொன்றை ஒதுக்ககித் தருமாறு பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக 2017ம் ஆண்டு நவம்பர் மாதம் 16ம் திகதி இந்தக் காணிகளை துப்பரவு செய்வதற்காக ஒரு மில்லியன் ரூபாவும் அதேபால டிசம்பர் மாதம் 12ம் திகதி ஒரு மில்லியன் ரூபா நிதியும் விடுவிக்கப்பட்டு துப்பரவுப்பணிகள் முன்னெடுக்கப்பட்டன.  

ஜெயபுரம் கமக்காரக அமைப்பினால் குறித்த துப்பரவுப் பணிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் முதற்கட்ட கொடுப்பனவாக 12இலட்சத்து 58ஆயிரம் ரூபா விடுவிக்கப்பட்டுள்ளது.  

இந்நிலையில் தான் வனவளத் திணைக்களம் குறித்த காணிகள் தமது கட்டுப்பாட்டின் கீழ் உள்ள காணிகள் எனத் தெரிவித்து அதன் துப்பரவுப்பணிகளை தடுத்து நிறுத்தியது.   இதனால் ஏனைய ஏழு இலட்சத்து பதினேழாயிரத்து 800ரூபா நிதியினை விடுவிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பூநகரிப் பிரதேச செயலகத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இதேவேளை கடந்த 2018ம்ஆண்டு பெப்ரவரி மாதம் 15ம் திகதி குறித்த காணிகளை பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் வனவள உத்தியோகத்தர்கள் பார்வையிட்டபோது அங்கு வனவளத் திணைக் களத்திற்குச் சொந்தமான எந்தவித அடையாளங்களும் அங்கு காணப்படவில்லை. இருந்தபோதும் வனவளத் திணைக்களத்தின் வட்டார அதிகாரி குறிப்பிடுகையில், எல்லைக்கற்கள் நடப்படவில்லை என்றாலும் அது தமக்குச் சொந்தமான காணிகள் என்கிறார். இங்கு வாழும் ஒவ்வொரு குடும்பத்துக்கு ஒரு ஏக்கர் நெல் காணியை பெற்றுக் கொள்வதற்காக வடக்கு மாகாண முதலமைச்சர் முதல் வடக்கு மாகாண ஆளுனர் யாழ் கிளிநொச்சி மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற பாராளுமன் உறுப்பினர்கள், அமைச்சர் மனோகணேசன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அரச தலைவர் என்று எல்லோருக்குமே தங்களுடைய கோரிக்கை மனுக்களை கையளித்துள்ளனர்.  

ஆனால், இதுவரை தமக்குத் தமது காணிகள் கிடைத்த படில்லை என்று தெரிவித்துள்ளனர்.  

இந்நிலையில் ஜனவரி மாதம் இது தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் மாவட்ட அலுவலகத்திலும் முறைப்பாடு செய்துள்ளனர்.  

இந்த முறைப்பாடு தொடர்பில் பிரதேச கமக்கார அமைப்பினுடைய தலைவர் ராமன் குறிப்பிடுகையில்,  

கிளிநொச்சி ஜெயபுரம் பகுதியில் 1990ஆம் ஆண்டு மக்களுக்கு வழங்கப்பட்ட சுமார் 548ஏக்கர் விவசாய மற்றும் குடியிருப்பு காணிகளை வனவளத் திணைக்களம் வனப்பகுதி என அடையாளப்படுத்தி காணிகளுக்குள் மக்கள் செல்வதை தடுத்துள்ளது என்கிறார்.  

இந்நிலையில் பாதிக்கப்பட்டுள்ள காணி உரிமையாளர்களால் மனித உரிமை ஆணைக்குழு அலுவலகத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில் ஜெயபுரம் வடக்கு கமக்கார அமைப்பு முறைப்பாட்டை பதிவு செய்துள்ளது. இதற்கமைய காணித் திணைக்களம் மற்றும் வனவளத் திணைக்கள அதிகாரிகளும் கடந்த 29ம் விசாரணைக்காக மனித உரிமைகள் ஆணைக்குழுற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.  

இந்த விசாரணைகளின் பின்னர் ஜெயபுரம் வடக்கு கமக்காரர் அமைப்பின் தலைவர் அரசப்பன் ராமர் கருத்து தெரிவிக்கையில், “ 1983ஆம் ஆண்டு 1990ஆம் ஆண்டு இனக்கலவரத்தையடுத்து இடம்பெயர்ந்த மக்களுக்காக ஜெயபுரம் பகுதியில் சுமார் 548ஏக்கர் காணி வழங்கப்பட்டிருந்தது. இந்தக் காணிகளில் மக்கள் ஆரம்பத்தில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தபோதும் அது பெரிய அளவில் வெற்றியளிக்கவில்லை. இந்நிலையில் தொடர்ந்து வந்த யுத்த நிலைமைகள் அப்பகுதி மக்கள் இடம்பெயர்ந்து வேறு இடங்களுக்குச் சென்றதுடன் இந்தியாவிற்கும் இடம்பெயர்ந்து சென்றிருந்தனர்.”  

“தமது ஆளுகைக்குட்பட்ட வனப்பகுதி எனக் கூறும் திணைக்கள உத்தியோகத்தர்கள் தடுத்தாலும் மக்களை தமது காணிகளுக்குள் போகவிடாது அந்தப் பகுதியில் தற்போது செல்வந்தர்கள் சிலர் வனவளத் திணைக்களத்தின் அனுசரணையுடன் விவசாயம் செய்து வருகின்றனர் இந்நிலையில் இந்த விடயம் தொடர்பாக பூநகரி பிரதேச செயலரின் கவனத்திற்கு கொண்டு சென்றபோதும் இதுவரை ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு எமது காணிகளை எம்மிடம் பெற்று கொடுக்குமாறு கேட்டு மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளோம்” என்கிறார் அரசப்பன் ராமர்.  

ஜெயபுரம் மக்களின் மீள்குடியேற்றம், வயல் காணி விடுவிப்பு தொடர்பில் புனர்வாழ்வு, புனரமைப்பு, மீள்குடியமர்வு மற்றும் வடக்கு அபிவிருத்தி அமைச்சர்டி.எம்.சுவாமிநாதன் அவர்களுக்கு 2017.08.24ஆம் திகதி விண்ணப்பம் செய்யப்பட்டது. அதனடிப்படையில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர், பூநகரி பிரதேச செயலாளர் ஆகியோரின் மேற்பார்வையில் புனர்வாழ்வு, புனரமைப்பு, மீள்குடியமர்வு மற்றும் வடக்கு அபிவிருத்தி அமைச்சின் MPRRR&HRA/03/F7/TFR/KilinochchiMk; இலக்க2017.11.14ஆம் திகதிய கடிதப் பிரகாரம் ஒதுக்கீடு செய்யப்பட்ட இரண்டு மில்லியன் ரூபா நிதியுடன் இவ் வயல் காணிகளில் திருத்த வேலைகள் மேற்கொள்ளப்பட்டபோது இக்காணிகள் வனவளத் திணைக்களத்திற்கு சொந்தமானது எனக்கூறி இம்மக்களின் வாழ்வாதார செயற்றிட்டம் தடுக்கப்பட்டது. ஆனால் இக்காணிகள் வனவளத் திணைக்களத்தினரால் அடையாளப்படுத்தப்பட்ட காணிகளோ, வனவளத் திணைக்களத்திற்கு சொந்தமான காணிகளோ இல்லை என்பதை கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபரும், பூநகரி பிரதேச செயலாளரும் எழுத்து மூலமாக உறுதிப்படுத்தியுள்ளார்.

அதேவேளை இவ்விடயம் தொடர்பில் என்னால் 2018.06.05ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது என்று விவரமாகப் பேசுகிறார் ராமர்.  

1983களிலிருந்து தொடரும் ஏதிலி வாழ்க்கையும், யுத்தமும், இடப்பெயர்வும், குடும்ப உறுப்பினர்களின் இழப்பும் இவ் ஏழை மக்களை கடுமையாக பாதித்துள்ளது. இக் கிராமத்தில் வாழும் மக்களில் 90%ஆனவர்கள் இந்நிலத்தைக் கிண்டியே தமது வாழ்வாதாரத்தை மேம்படுத்தியவர்கள். இவர்களுக்கு இலங்கையின் எப்பாகத்திலும் ஒரு அங்குல நிலம் கூட இல்லை.

விவசாயத்திற்கு ஏற்ற நீர்வளமும், நிலவளமும் ஜெயபுர மண்ணில் நிறைந்திருக்கின்றபோதும் தமது சொந்த மண்ணில் பயிர்ச் செய்கையில் ஈடுபட முடியாதவாறு தடுக்கப்பட்டுள்ள இம் மக்களின் நிலையை அமைச்சரவை வரைகொண்டு சென்று உடனடித் தீர்வைப் பெற்றுத் தரக்கூடிய ஆளுமையும், அதிகாரமும், கொண்டேன் தீர்வைப் பெற்றுத்தர வேண்டும் என்பது இவர்களின் கோரிக்கை, எதிர்பார்ப்பு.

Comments