அவன் அவனே | தினகரன் வாரமஞ்சரி

அவன் அவனே

புகழ்பெற்ற ஜென் குரு ஒருவரைத் திரளாக மக்கள் வந்து தரிசித்து அவர் கருத்துக்களைக் கேட்பது வழக்கம். அவர் இருந்த ஊரில் ஒரு இசைக் கலைஞன் இருந்தான். மிகத் திறமைசாலி. அதே சமயம் அவனிடம் எல்லாவித கெட்ட பழக்கங்களும் இருந்தன. குருவிடம் வந்த ஒருவர் அந்தக் கலைஞனைப் பற்றி மிகக் கேவலமாகப் பேசினார். உடனே குரு, அவன் சிறப்பாக இசை வாசிப்பானே! நாளெல்லாம் கேட்டுக் கொண்டிருக்கலாமே! என்று புகழ்ந்து பேச ஆரம்பித்தார். 

உடனே அங்கிருந்த இன்னொருவர், ஆமாம், அவன் இசைக்க ஆரம்பித்தால் அந்தக் கடவுளே வந்த மாதிரி இருக்கும். சங்கீதமே அவனுக்கு அடிமையாக இருக்குமே என்று குருவின் கருத்தை ஒத்துப்பேசினார். அப்போது குரு, அப்படியா, அவன் ஒரு ஏமாற்றுக்காரன் ஆயிற்றே! அவனை யாரும் நம்ப முடியாதே என்றார். 

குறை சொன்னவர், புகழ்ந்தவர் இருவருக்கும் குழப்பம். குரு இப்படி ஏடாகூடமாகப் பேசுகிறாரே, அவனைப் பற்றி அவர் உண்மையில் என்னதான் நினைக்கிறார் என்று அறிந்துகொள்ள விரும்பி அவரையே கேட்டனர். குரு சொன்னார். நான் அவனைப் புகழவும் இல்லை, இகழவும் இல்லை. எந்த மனிதனையும் எடைபோட நாம் யார்? ஒருவனை நல்லவன் என்றோ, தீயவன் என்றோ கூற உங்களிடமோ, என்னிடமோ என்ன அளவுகோல் உள்ளது? எதையும் ஒப்புக் கொள்வதோ, மறுப்பதோ என் வேலை அல்ல. அவன் நல்லவனும் இல்லை, கெட்டவனும் இல்லை. அவன் அவனாகவே இருக்கிறான். அவன் அவனே! அவன் செயலை அவன் செய்கிறான். உங்கள் செயல் எதுவோ அதை நீங்கள் செய்யுங்கள் என்றார். 

ஒருவரை நாம் நேசித்து விட்டால் அவரது தீயகுணங்கள் நமக்கு தெரிவது இல்லை. ஒருவரை வெறுத்து விட்டால் அவரது நற்செயல் தெரிவது இல்லை. யாரும் முழுமையான நல்லவர் தீயர் கிடையாது. அவன் அவனாகவே இருக்கட்டும். நீ நீயாக இரு. என்கிறது ஜென் குரு. இதையே திருவள்ளுவர் “குணம் நாடி குற்றமும் நாடி அவற்றுள் மிகை நாடி” என்கிறார்.  

சோ. வினோஜ்குமார்,
தொழினுட்பபீடம்,
யாழ். பல்கலைக்கழகம்,
கிளிநொச்சி.

Comments