கல்முனை வடக்கு பிரதேச செயலகம் காலாகாலமாக புறக்கணிக்கப்படுகிறது | தினகரன் வாரமஞ்சரி

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் காலாகாலமாக புறக்கணிக்கப்படுகிறது

  • கவீந்திரன் கோடீஸ்வரன் எம்.பி.
  • நேர்கண்டவர்: வி.சுகிர்தகுமார் வாச்சிக்குடா விசேட நிருபர்

ன்பது மாகாணங்களில் கூடுதலான பிரதேச செயலகப் பிரவுகளைக்ெகாண்ட மூன்றாவது மாகாணமாக கிழக்கு மாகாணம் விளங்குகிறது. இங்கு 45 பிரதேச செயலகப் பிரிவுகள் காணப்படுகின்றன. அதிலும் அம்பாறை மாவட்டம் 20 பிரதேச செயலகப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இங்கு இப்போது கல்முனை வடக்கு பிரதேச செயலகம் பற்றிய ஒரு சர்ச்சை தோன்றியிருக்கிறது. இந்தச் செயலகம் கடந்த 30 வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டு இன்று வரைக்கும் தரமுயர்த்தப்படாமல் இருக்கிறது. அதற்கான காலம் கனிந்து வரும் ​வேளையில், கல்முனை வடக்கு பிரதேச செயலம் பற்றிப் புதிதாக ஒரு சர்ச்சை உருவாக்கப்பட்டிருக்கிறதா, அல்லது உருவாகியிருக்கிறதா? என்பதைப் பற்றி அம்பாறை மாவட்டத்தின் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் விளக்கமளிக்கிறார்.

"கல்முனை வடக்கு பிரதேச செயலகம் 29 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளையும் 38 ஆயிரம் சனத்தொகையினையும் உள்ளடக்கிய நிலத்தொடர்புள்ள தமிழர்கள் பூர்வீகமாக செறிந்து வாழும் பிரதேசம். இப்பிரதேச செயலகம் 1989ஆம் ஆண்டு உதவி அரசாங்க அதிபர் காரியாலயமாக ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் 1993 ஆம் ஆண்டு பிரதேச செயலகமாக வர்த்தமானி பிரசுரத்தின் மூலம் மாற்றம் பெற்றது. ஆரம்பத்தில் 31 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுடன் செயற்பட்டுவந்த இப்பிரதேச செயலகத்தில் 2 பிரிவுகள் பிரிக்கப்பட்டு அப்பிரிவுகள் கல்முனை முஸ்லிம் பிரதேச செயலகத்துடன் இணைக்கப்பட்டன. ஆனாலும் 29 பிரிவுகளுடன் இன்று வரை செயற்பட்டு வரும் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் இன்றுவரை தரமுயர்த்தப்படவில்லை என்பது ஆச்சரியமே.

அவ்வாறு தரமுயர்த்தப்படுவது காலத்தின் தேவையும் அவசியமும். ஆகவே இப்பிரதேச செயலகத்தை காலம் தாழ்த்தாமல் தரமுயர்த்துவது அரசாங்கத்தின் கடமையாகும். இதனால் பலபிரச்சினைகளுக்கு தீர்வு காணமுடியும் என நான் நம்புகின்றேன்.

கேள்வி: கல்முனை வடக்கு பிரதேச செயலகம் நிலத்தொடர்புள்ள பிரதேச செயலகம் என்று சொல்லுகின்றீர்கள். அவ்வாறெனில் ஏன் இதுவரை தரமுயர்த்தப்படவில்லை என நீங்கள் நினைக்கின்றீர்கள்?

பதில்: உண்மையிலே நிலத்தொடர்புள்ள கல்முனை வடக்கு பிரதேச செயலகமே முதலில் தரமுயர்த்தப்பட்டிருக்கவேண்டும். அவ்வாறு நடைபெறவில்லை. கடந்த 1993ஆம் காலப்பகுதியில் செயற்பாட்டில் இருந்த 28 உப பிரதேச செயலகங்களில் 27 உப பிரதேச செயலகங்கள் பிரதேச செலகமாக தரமுயர்த்தப்பட்டன. அன்றும் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் மாத்திரம் புறக்கணிக்கப்பட்டது. யுத்தகாலத்தில் ஏற்பட்ட தமிழர்களின் அரசியல் பின்னடைவும் தமிழர்களின் விழிப்பின்மையும் சிலரின் சூழ்ச்சியுமே இதற்கு பிரதான காரணம் என்பதுடன் எமது கடந்தகால அரசியல்வாதிகளும் ஒருகாரணம். இது இவ்வாறிருக்க நிலத்தொடர்பற்ற கல்முனை முஸ்லிம் பிரதேச செயலகம் எப்போதோ தரமுயர்த்தப்பட்டது. இதற்கு அவர்களது அரசியல் பலமும் தந்திரோபாயங்களுமே காரணம். இதனை தவறு என்று நாம் எப்போதும் சொன்னதில்லை. இந்நிலையில் தற்போது ஒரு சில அரசியல்வாதிகளும் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படுவதில் தடைபோட்டு வருகின்றனர். இதன் மூலமாக தமிழ் மக்களின் அபிலாசைகளை சுக்குநூறாக உடைத்து அவர்களை எப்போதும் ஆண்டான் அடிமைகளாக வைத்துக் கொள்ளலாம் என்பதே அவர்களது இலக்கு. அது ஒரு காலத்திலும் நடைபெறாது.

கேள்வி: சில பிரதேசங்களில் 7 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுடன் பிரதேச செயலகம் தரமுயர்த்தப்பட்டுள்ளதாக அறிகின்றோம். அப்படி இருக்கையில் 29 கிராம உத்தியோகத்தர்களை உள்ளடக்கிய பிரதேச கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரமுயர்த்துவதில் என்ன தடை உள்ளது? அந்த தடை உடைக்கப்படுமா?

பதில்: இதில் தடைபோடுவதற்கு எந்தவித நியாயமான காரணமும் இல்லை. அவ்வாறு இருப்பதாக யாரும் கூறவுமில்லை. சிங்கள அரசியல் தலைவர்கள் மட்டுமல்லாது சில முஸ்லிம் தலைவர்களும் நன்கு இதனை உணர்ந்துள்ளனர். ஆனால் தமது அரசியலை நிலைநிறுத்த வேண்டும் என்பதற்காக வங்குரோத்து அரசியலை மேற்கொள்ளும் சிலரே இதனை தடுக்கின்றனர்.அந்த தடை விரைவில் உடைக்கப்படும்.

கேள்வி: கல்முனை வடக்கு பிரதேச செயலக தரமுயர்வால் முஸ்லிம் மக்கள் பாதிக்கப்படுவர் என சிலரால் கூறப்படுகின்றது. அதில் எந்தளவு உண்மை உள்ளது.

பதில்: இக்கேள்விக்கு சிரிப்புத்தான் வருகின்றது. ஒரு அரச அலுவலகம் தரமுயர்த்தப்படுவதால் எப்படி ஒரு இனம் பாதிக்கப்படும். அப்படியானால் இலங்கையில் எந்தவொரு அரசதிணைக்களமும் தரமுயர்த்தப்படமுடியாது. இது எல்லாம் ஒரு வகை மாயாஜாலவித்தை. இதன் மூலம் முஸ்லிம் மக்கள் பாதிக்கப்படுவர் எனும் ஒரு மாயையை காட்டி முஸ்லிம் மக்களையும் உசுப்பேத்துகின்றனர்.

இதனால் இரு சமூகங்களுக்கிடையிலே கசப்புணர்வை தூண்டி மக்களை சூடாக்கி அதில் குளிர் காயலாம் எனவும் எதிர்பார்க்கின்றனர். அதனூடாக தொடர்ந்தும் தமது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை தக்கவைத்துக்கொள்ளலாம் எனவும் நினைக்கின்றனர். இதற்காகவே மக்கள் மத்தியில் பொய் பிரச்சாரங்களை மேற்கொள்கின்றனர். அப்படி முஸ்லிம் மக்கள் பாதிக்கப்படுவர் என அவர்கள் நினைத்தால் அதற்கான சரியான காரணத்தை வெளியிடலாம். அப்படி ஒரு நியாயமான காரணம் எதுவும் அங்கில்லை. இதேவேளை எக்காரணத்தை கொண்டும் முஸ்லிம் மக்கள் பாதிக்கப்படும் விதத்தில் எந்ததிட்டமும் எம்மால் மேற்கொள்ளப்படாது என்றும் சம உரிமைகளுடன் வாழ்வதற்கே தமிழ் மக்கள் விரும்புகின்றனர் எனவும் இச்சந்தர்ப்பத்தில் கூறிவைக்க விரும்புகின்றேன்.

கேள்வி: இது தொடர்பில் முஸ்லிம் தலைவர்களுடன் பேசியுள்ளீர்களா?

பதில்: பலதடவைகள் பேசியுள்ளோம். நியாயமான காரணத்தையும் தெளிவுபடுத்தியுள்ளோம். முஸ்லிம் பிரதேசங்களை உள்ளடக்கியதாக கல்முனை வடக்கு பிரதேச செயலக எல்லைகள் இல்லை என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளோம். இதனால் முஸ்லிம் மக்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளோம். ஆனாலும் அவர்கள் எதனையும் ஏற்றுக்கொள்வதாக இல்லை. இப்பிரச்சினையை தீர்ப்பதற்கும் அவர்களுக்கு விருப்பமில்லை. தங்களது அரசியலே முக்கியம் என்பவர்களுடன் பேசி எப்பலனுமில்லை என்பதை உணர்ந்துள்ளோம். ஆயினும் மீண்டும் இதுபற்றி பேசுவதற்கும் நாம் தயாராகவுள்ளோம்.

கேள்வி: கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரமுயர்த்தல் தொடர்பில் அங்குவாழும் தமிழ் மக்கள் பல வருடங்களாக கோரிக்கை விடுப்பதுடன் பொறுமையுடனும் போராடிவருகின்றனர். இந்நிலையில் அங்குவாழும் மக்களின் மன நிலை எவ்வாறு உள்ளது என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்களா?

பதில்: நிச்சயமாக அங்கு வாழும் மக்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன். ஏனெனில் அவர்களது பொறுமை கடலைவிட பெரியது. ஆனாலும் அதற்கும் ஒரு எல்லையுண்டு. அவர்கள் தனி நாடோ தனி அலகோ கேட்கவில்லை. மாறாக தாம் வாழும் பிரதேசத்தில் உள்ள பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படவேண்டும். அதனூடாக தங்களது காரியங்களை இலகுபடுத்தவேண்டும் என்பதே அவர்களது நிலைப்பாடு. இந்நிலையில் அவர்களது பொறுமையை அரசாங்கமோ அரசியல் தலைமைகளோ தங்களுக்கு சாதகமாக நினைத்துக் கொள்ளக்கூடாது. சாது மிரண்டால் காடும் கொள்ளாது என்பதையும் நினைவுபடுத்த விரும்புகின்றேன். ஆகவே விரைவான தீர்வை அரசிடம் இருந்து பெற்றுக் கொடுக்க வேண்டியது எனதும் எனது கட்சியினதும் தலையாய கடமை என நினைக்கின்றேன்.

கேள்வி: அப்படியானால் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு இதற்கு பூரண ஆதரவை வழங்குமா?

பதில்: கண்டிப்பாக வழங்கும். வழங்கவும் வேண்டும். இது தொடர்பில் எமது கட்சியும் தலைமைத்துவமும் தகுந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. ஜனாதிபதியுடனும் பிரதமருடனும் அமைச்சர்களுடனும் பேசிவருகின்றது. இருந்தபோதிலும் தகுந்த பதிலை இந்த அரசாங்கம் இதுவரை வழங்கவில்லை அவ்வாறு வழங்கவில்லையாயின் தகுந்த பதிலடியை கொடுக்கவும் பாரிய போராட்டங்களை தேசிய ரீதியில் நடத்தவும் நாங்கள் தயங்க மாட்டோம். இதற்காக அனைத்து தமிழ் மக்களும் ஒன்றினைந்து குரல் கொடுக்கவும் தயாராக இருக்க வேண்டும் என இச்சந்தர்ப்பத்தில் தமிழ் மக்களிடம் கோரி5க்கையாக முன்வைக்கின்றேன்.

Comments