தோட்டத் தொழிலாளர்களுக்கு வரலாற்று சோதனையும் வேதனையும் | தினகரன் வாரமஞ்சரி

தோட்டத் தொழிலாளர்களுக்கு வரலாற்று சோதனையும் வேதனையும்

இன்று மலையக தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் “நாம் ஏமாறப் பிறந்தவர்களா இல்லையென்றால், ஏமாற்றப் படுபவர்களா” என்ற திரிசங்கு நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். யார் முதுகில் யார் குத்திவிட்டார் என்பதும் புரியவில்லை. ‘நல்ல காலம் பிறக்குது நல்லகாலம் பிறக்குது என்று குடுகுப்பைக்காரன் கூறி ஊரினையும் உலகையும் ஏமாற்றி வருவது போல் நம் மலையகத்தலைவர்களின் வார்த்தைகளும் மலையகத் தொழிலாளர்களை மட்டுமல்ல முழு மலையகத்தையுமே புரட்டிப் போட்டுள்ளது. வார்த்தைகளையும் வரவு செலவுத்திட்டம் என்ற வெடிகுண்டு மூலம் சிதறடித்து விட்டார் நமது நிதியமைச்சர் மங்கள சமரவீர. இவர் தன்னுடைய பெயருக்கு ஏற்ப மங்களகரமான செய்தியை கூறுவார் என்று எதிர்பார்த்திருந்தார்கள் தொழிலாளர்கள்.

மலையகத்தை இரண்டு பெரும் பிரிவாகப் பிரித்து வைத்து விட்டு வேடிக்கை பார்த்து விட்டு அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கின்றது. தொழிலாளர் சம்பள உயர்வு தொடர்பான கூட்டு ஒப்பந்தம். ஆம் கூட்டு ஒப்பந்தக்காரர்கள் என்றும் அதனை எதிர்ப்பவர்கள் என்றும் எதிரும் புதிருமாகப் பிரித்து வைத்துவிட்டது.

கூட்டு ஒப்பந்தத்தை எதிர்ப்பவர்களை திக்கு முக்காட செய்யும் நோக்குடன் “அடிப்படை சம்பளம் ஆயிரம் ரூபா” என்று ஒரு குண்டை தூக்கி வீசிவிட்டார் இ.தொ.கா தலைவர் ஆறுமுகன். அவர் எந்த சூழ்நிலையில் எப்படியான நிலைமையில் இந்த ஆயிரம் ரூபாய் என்பது பல வருடங்களின் பின் இப்போது மலையகத்தை மட்டுமல்ல வடக்கு கிழக்கு உட்பட முழு நாட்டையுமே உலுக்கிவிட்டது. கோட்டையில் ரயில் நிலையம் முதல் கோல் பேஸ் மைதானம் வரை உணர்வாளர்களை ஒன்று திரட்டி அரசாங்கத்தையே திரும்பிப் பார்க்க வைத்துவிட்டது.

இவ்வளவு ஆர்ப்பாட்டாங்களும் போராட்டங்களும் செவிடன் காதில் ஊதிய சங்காகப் போய்விட்டது.

வெற்றி முழக்கத்துடன் கூட்டு ஒப்பந்தம் செய்ய புறப்பட்ட ஆறுமுகன் இடை நடுவில் தனது படையணியில் ஒன்றை இழந்து விட்டு 20/= ரூபா சம்பள உயர்வைப்பெற்றுக் கொடுத்து ஒப்பந்தம் செய்துவிட்டு ஓய்ந்துவிட்டார். இதற்காகத் தான் இத்தனை ஆர்ப்பாட்டம் என்று யோசிக்க வைத்து விட்டது. தொழிலாளர்களுக்காக அனுதாபம் தெரிவிப்பதா அல்லது ஆறுமுகத்தானைப் பார்த்து அனுதாபப்படுவதா என்றும் புரியவில்லை. ஆறுமுகனின் இந்த நடவடிக்கை மறைந்த பெருந்தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமானின் மீதுகொண்ட அசையாத மரியாதையையும் பெரும் நம்பிக்கையையும் கூட ஆட்டம்காணச் செய்து விட்டது. அதனை மீண்டும் கட்டி எழுப்புவது இனி முடியாத காரியம். மக்கள் நம்பிக்கையை இழந்துவிட்டனர்.

கைகொடுக்க வந்த தமிழ்

முற்போக்கு கூட்டணி

ஆறுமுகன் அக் கம்பனியினரால் ஏமாற்றப்பட்டவர்களுக்கு கை கொடுத்து உதவும் ஆபத்பாந்தவர்களாக முன்வந்தார்கள் மனோ, திகா, ராதா கூட்டணியில் 750 ரூபாய் போதாது வரவு போனஸ், விலைக்கேற்ற கொடுப்பனவுகளைப் பெற்றுக் கொடுப்போம் என்று முழக்கம் இட்டார்கள். பிரதமர் ரணில் அரசில் முக்கிய புள்ளிகளாக இருக்கும் இவர்கள் எப்படியாவது பெற்றுக் கொடுப்பார்கள் என்று தொழிலாளர்கள் நம்பினர். இதனால் ஆறுமுகனின் பக்கம் இருந்தவர்கள் கூட இவர்களின் பக்கம் சாய்ந்தனர் நம்பினர்.

வழமையாகிப்போன இராஜிநாமா அழுத்தம்

இந்தச் சந்தர்ப்பத்தில் நாம் ஒன்றை திரும்பிப் பார்க்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. ஆறுமுகன் தொண்டமான் முதல் திகாம்பரம், மனோ கணேசன், இராதாகிருஷ்ணன் வரை தாம் அந்த நாற்காலிகளில் இருக்கும் போது எமது கோரிக்கை ஏற்கப்படாவிட்டால் தமது பதவிகளை இராஜிநாமா செய்வோம் என பல தடவை காலக்கெடுவும் வைத்தனர். ஆனால் ஆனது எதுவும் இல்லை. எல்லாம் வெறும் மிரட்டல்கள்தான் புஸ்வானமாகிவிட்டன. இந்த தலைவர்கள் விடுக்கும் “இராஜிநாமா” என்பது வழமையாகி விட்டது. கேட்டுக் கேட்டு காதுகளும் வலிக்கின்றன என்கின்ற நிலையாகிவிட்டது.

தொழிலாளர்கள் வாழ்வில்

வரலாற்று சாதனை

மூன்று தலைவர்களும் பிரதமருடனும் பெருந்தோட்டத் துறை அமைச்சருடனும் பல சுற்றுப் பேச்சுகளை நடத்தினர். இன்று முடிவு வரும், நாளை நல்ல தீர்வு கிட்டும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்தன.

பல சுற்றுப் பேச்சுகளின் பின் சம்பளத்துடனான கொடுப்பனவாக ஐம்பது ரூபா கிடைக்கும். அதுவும் அந்த ஐம்பது ரூபாவையும் ஒருவருடகாலத்திற்கு அரசாங்கமே கொடுக்கும் என்று இணக்கம் காணப்பட்டுள்ளது. அதேவேளை, இந்த ஐம்பது ரூபா கொடுப்பனவு வரவு செலவுத்திட்டத்தில் உத்தியோக பூர்வமாக அறிவிக்கப்படும் எனப் பிரதமர் ரணில் விக்கிரம சிங்க உறுதியளித்துள்ளார் என்றும் இந்தத் தலைவர்கள் அறிக்கை விட்டார்கள். முதன் முறையாக தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பான அறிவித்தல் வரவு செலவுத்திட்டத்தின் மூலம் அறிவிக்கப்படவுள்ளது. வரலாற்று சாதனை என்றும் தம்பட்டம் அடித்தார்கள் என்ன ஆனது?

தொழிலாளர்களுக்கு வழமைபோல்

வரலாற்று சோதனையா?

பானையில் இருந்தால்தானே அகப்பையில் வரும். அதேவேளை பரிமாறுபவன் மனது வைத்தால் தானே அது அகப்பையில் வெளிவரும் என்பது சரியாகிவிட்டது. இந்த தலைவர்கள் பிரதமருடனும் சம்பந்தப்பட்ட அமைச்சருடனும் தானே பல சுற்றுப் பேச்சுகளை நடத்தினார்கள். அதில் தேயிலை சபையோ அல்லது முதலாளிமார் சம்மேளனப் பிரதிநிதிகளோ கலந்து கொள்ளவில்லை. அரசாங்கம் ஒரு வருட காலத்திற்கு இந்த ஐம்பது ரூபாவை கொடுக்கும் என உறுதியளிக்கப்பட்டது. அப்படியாயின் நிதி அமைச்சு தானே அதற்கான நிதியை ஒதுக்கவேண்டும். இந்த நிதி அமைச்சு அதிகாரிகளாவது கலந்து கொண்டார்களா? இல்லையே!

பிரதமரின் சாமர்த்தியம்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க என்ன சாமான்யமானவரா? யாருக்கு எதை காட்டவேண்டும். எவரிடம் எதைக் கூற வேண்டும் என்பதை நன்றாகவே அறிந்தவர். தோட்டத்துரைமாரையும் ஆறுமுகன் தொண்டமானையும் அலரிமாளிகையிலேயே வைத்து கூட்டு ஒப்பந்தம் செய்யும் நிலையை ஏற்படுத்தியவர். இப்பொழுது முற்போக்கு கூட்டணியுடன் பேசி 50/= ரூபா அதிகரிப்பு என்று அறிவித்துவிட்டார். தொழிலாளர்களின் வாழ்வில் ஒரு சரித்திர சாதனை நிகழப்போகின்றது. சம்பள உயர்வு பட்ஜெட் மூலம் அறிவிக்கப்படப்போகிறது என ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட மக்களுக்கு பெரும் ஏமாற்றமானது. ஏன் தலைவர்களுக்கே தலை வாரிவிட்டது. நிதி அமைச்சர் இதைப்பற்றி ஒருவார்த்தை கூட கூறவில்லை. சம்பள அதிகரிப்பு தொடர்பாக தேயிலை சபையுடன் பேசி தீர்மானிக்க வேண்டும் என்று கூறிவிட்டார். அதாவது பழைய குருடி கதவை திறவடி என்று தேயிலை சபையுடனும் முதலாளிமாருடனும் பேசுக்கள் என்று முடித்து அப்படியானால் இதுதான் தொழிலாளர்களுக்கு வரலாற்று சாதனையா இல்லை. வேதனையா? காலம் தான் பதில் சொல்லும் என்ற நிலையில் தற்போது 50 ரூபாய் கொடுப்பனவு கிடைக்கும் என்பது மட்டும் உறுதியாகியுள்ளது.

Comments