மறப்போம் மன்னிப்போம்: அவுஸ்திரேலிய தென்னாபிரிக்க உதாரணங்கள் பின்பற்றப்பட வேண்டும் | தினகரன் வாரமஞ்சரி

மறப்போம் மன்னிப்போம்: அவுஸ்திரேலிய தென்னாபிரிக்க உதாரணங்கள் பின்பற்றப்பட வேண்டும்

கலாநிதி எம். கணேசமூர்த்தி, பொருளியல்துறை, கொழும்புப் பல்கலைக்கழகம்.

ஆறிய கஞ்சி பழங்கஞ்சி என்பது நன்கு பிரசித்தமான ஒரு பழமொழி. எந்தவொரு விடயத்தையும் ஆறப்போடும் போது அதன் தீவிரத்தன்மை குறைந்து படிப்படியாக நலிவடைந்து சாதாரண நிலைக்கு வந்துவிடும் என்பதே யதார்த்தம். மனிதனின் மறக்கும் தன்மை காரணமாக துன்பங்கள் துயரங்கள் வேதனைகளும் கூட காலப்போக்கில் ஆறிவிடும். என்வே தான் காலம் ஒரு அருமருந்து என்கிறார்கள். இவ்வளவு பெரிய பீடிகை ஏன் என வாசிப்பவர்கள் கேட்பது புரிகிறது.

சிலவாரங்களுக்கு முன்பு பிரதமரின் வடபுல விஜயத்தின் போது “பழையவற்றை மறப்போம் மன்னிப்போம்” என்று கூறிய விடயம் பற்றி அலசும்போது மேலே சொன்ன கூற்றுகளின் தாற்பரியம் விளங்கும்.

“ஏதோ நடந்தது நடந்துவிட்டது. அது நடந்து நீண்டகாலமும் ஆகிவிட்டது. அதைப் பற்றிப் பேசிப் பயனில்லை. இருபுறமும் சில தவறுகள் இடம்பெற்றிருக்கலாம். அவற்றைத் தூக்கிப் பிடித்துக் கொண்டிருப்பதால் எவருக்கும் நன்மையில்லை” என்ற தொனிப்பட அவர் கூறிய விடயங்கள் பற்றி எந்தவொரு ஊடகமும் பெரியதாக அலட்டிக் கொள்ளவில்லை. ஏனெனில் ஆறிப்போன ஒரு விடயம் பற்றி பெரிதாக அலட்டத் தேவையில்லை என்று அவையும் நினைத்திருக்கலாம்.

இரண்டாம் உலகப்போரின்போது இடம்பெற்ற யுத்தக் குற்றங்கள் தொடர்பில் மிக அண்மைக்காலத்தில் கூட சிலருக்கு தண்டனைகள் விதிக்கப்பட்டமை நினைவிருக்கலாம். எனவே ஆறிய கஞ்சியாக இருந்தாலும் கூட உரிய பாதிக்கப்பட்ட தரப்பினருக்கும் ஆறுதல் தரும் விடயமாக அமையும் என்பதே இதன் பின்புலம். 'காலதாமதமாக கிடைக்கும் நீதி மறுக்கப்பட்ட நிதிக்கு சமன்' என்பார்கள். அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும் என்றும் சொல்வார்கள். உலகில் நடந்த வன்முறைகளின்போது மனிதனுக்கு மனிதனால் இழைக்கப்பட்ட வன்முறை காரணமாக ஏற்பட்ட பாதிப்புக்களுக்கு எங்குமே பூரணமான நிதி வழங்கப்பட்டதாக வரலாறில்லை. யுத்தங்களும் ஆயுத வன்முறைகளும் அழகானதொன்றல்ல. இரத்தமும், சதையும், நிணநீருமாக நாறிப்போன அரக்கத் தனமான கொலைக்களம் அது. ஒரு ஆயுதத்திற்கு எதிரே இன்னொரு ஆயுதத்தை தாங்கிப் போராடும் ஒருவர் “கொல்லவேண்டும் அல்லது கொல்லப்படவேண்டும் என்பதே அங்கே யதார்த்தம். யுத்தத்தின் போது இதுபற்றி எவரும் கவலைப்படுவதில்லை. எனினும் அப்பாவிகளான பொதுமக்கள் பெண்கள் குழந்தைகள் மற்றும் ஆயுதமின்றி சரணடைந்தவர்களைக் கொன்று குவிப்பது யுத்த தர்மமல்ல. அவ்வாறு செய்பவர்களை வீரர்கள் என்று கருதுவது கேவலம். ஏதிலிகளாக சரணடைந்தவர்களை ரசித்து ருசித்து கொல்வது ஒன்றும் பராக்கிரமம் கிடையாது.

அவ்வாறான சம்பவங்கள் இலங்கையில் நடந்தன என்பதற்கு பல்வேறு ஆவணங்கள் சர்வதேச ரீதியில் முன்வைக்கப்படுகின்றன. அப்படி ஒன்று நடக்கவே இல்லை. ‘ஒரு கையில் துப்பாக்கியும் மறுகையில் மனித உரிமை புத்தகத்தையும் கொடுத்துத்தான் யுத்தத்திற்கு அனுப்பினோம். எனவே ஆயுதம் வைத்திருந்து அரசுக்கு எதிராகப் போர் செய்த பயங்கரவாதிகளையே பார்த்துப் பார்த்து அடையாளங்கண்டு சுட்டோம். பொதுமக்களை பயங்கரவாதத்தில் இருந்து மீட்பதற்கான மனிதாபிமான நடவடிக்கையே மேற்கொள்ளப்பட்டது. அதற்காக அப்பொதுமக்கள் படைத்தரப்புக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். குறைசொல்லக் கூடாது' என்று அப்போதைய ஆட்சியாளர்கள் கூறினார்கள்.

“அரச ஊழியர்கள் தம்மைத்தாமே மரத்தில் கட்டிக்கொண்டு தம்மைத்தாமே தாக்கிக் கொண்டார்கள்” என்று கூறும் ஒரு நாட்டில் துப்பாக்கி தானாக நீட்டி பொதுமக்களை தானாக சுட்டிருக்க கூடும் என்று கூறினாலும் அது ஆச்சரியப்படுவதற்கான விடயமல்ல.

யுத்தம் நிறைவுற்று கிட்டத்தட்ட 10 வருடங்கள் கடந்துள்ள நிலையில் பொறுப்புக் கூறல் பற்றிய விவகாரங்கள் இழுபறி நிலையில் இருந்து வருகின்றமையும், ஐ.நா.மனித உரிமைப்பேரவையின் கூட்டத் தொடர்கள் நடைபெறுகின்றபோது சற்றே சூடு பிடிக்கும் நிலையும் அதன் பின்னர் காற்றுப் போன பலூனின் நிலையிலும் இருப்பதைப் பார்க்க முடிகிறது.

மனித உரிமைப் பேரவையின் இவ்வருட கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் இலங்கைக்கு சாதகமான முடிவுகள் வரும் சமிக்​ைஞகள் தென்படுகின்றன. இவ்வாறானதொரு புறச்சூழலில் “மறப்போம் மன்னிப்போம்” என்னும் அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதன் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது.

உலகின் பிரதான நெருக்கடி மிகுந்த மனித உரிமை அவலங்கள் பல நாடுகளிலும் பதிவாகியுள்ளன. தென்னாபிரிக்காவின் நிறவெறி ஆட்சிக் காலத்தில் ஏற்பட்ட அவலங்கள் இதில் முதன்மையானது. ஜரிஷ் மக்களின் போராட்டம், அவுஸ்திரேலிய அபிர்ஜுனோ மற்றும் டொரஸ் நீரிணைத் தீவுகளைச் சேர்ந்த மக்களின் போராட்டம், ருவாண்டாவின் ஹுட்டு மற்றும் டுட்சி இன மக்களுக்கிடையில் இடம்பெற இன அழிப்பு போன்றனவும் ஊடகங்களின் கவனத்தை ஈர்த்த விவகாரங்களாக குறிப்பிடலாம்.

இதில் தென்னாபிரிக்க நிறவெறி அரசுக்கு எதிராக ஆயுதபோராட்டத்தில் ஈடுபட்டு சிறைசென்ற நெல்சன் மண்டேலாவின் தலைமைத்துவத்தின் பின்னர் அரசியல் ரீதியான முனைப்புகள் ஊடாக அப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டமையும், தற்போது உள்ளூர் கறுப்பின மக்கள் ஆட்சி அதிகாரத்தில் உள்ளதும் சிலாகித்துப் பேசப்படுகிறது. மண்டேலாவின் தலைமையில் வெள்ளை சிறுபான்மை இன ஆட்சி முடிவுக்கு வந்து கறுப்பின மக்களின் ஆட்சி தாபிக்கப்பட்டபோது அதுவரை அடக்குமுறைக்குட்பட்டிருந்த கறுப்பின மக்கள் வெள்ளையர்களுக்கு எதிராக வன்முறைகளில் ஈடுபடுவார்கள் என பரவலாக எதிர்பார்க்கப்பட்ட போதிலும் 'மறப்போம் மன்னிப்போம்' என்னும் மண்டேலாவின் அணுகுமுறை இரத்தக் களரியை தடுத்தது. தென்னாபிக்காவில் 1996 ஆண்டு உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு அமைக்கபட்டு அதனூடாக நடந்த அராஜகங்கள் வெளிக்கொணரப்பட்டன. வெள்ளை ஆட்சியாளர்கள் தமது குற்றங்களை ஒப்புக்கொண்டு பகிரங்கமாக வெட்கப்பட்டு மன்னிப்புக்கோரினர். செய்த குற்றத்தை ஏற்றுக் கொண்டு மன்னிப்புக் கேட்கும்போது மன்னிப்பதும் மறப்பதும் ஒரு தெரிவாக அமைந்தது. கேப்டவுனில் உள்ள ஆறாம் மாகாண அருங்காட்சியகத்தில் நிறவெறிகால அட்டூழியங்களை குறிக்கும் புகைப்படங்களும், பொருட்களும் மன்னிப்பைக் கோரும் மற்றும் வெட்கப்படுவதாகக் கூறும் பகிரங்கமாக அறிவிக்கும் பதாதைகளும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. நடந்தது என்ன என்பதை அடுத்துவரும் சந்ததியும் அறிந்து கொள்ளட்டும் என்பதற்காக அவற்றை ஆவணப்படுத்தி பாதுகாத்து வருகிறார்கள்.

எவ்வாறாயினும் தென்னாபிரிக்க உண்மையைக் கண்டறியும் குழுவின் அங்கத்தவர்கள் சிலருடன் உரையாடிய பொழுதும், தென்னாபிரிக்க இளைய சந்ததியை சேர்ந்த இளைஞர் குழுக்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடல்களின் போதும் வெளிவந்த விடயம் யாதெனில், மண்டேலாவுக்கு பின்னர் கறுப்பின மக்களின் ஆட்சியின்போதும் கூட கறுப்பின மக்களுக்கு எதிராக கல்வி வேலைவாய்ப்பு போனறவற்றில் பாரட்ச நிலை தொடர்கிறது என்பதாகும்.

அவுஸ்திரேலிய பழங்குடியின் மக்களாகிய அபர்ஜினோக்கள் மற்றும் டொரஸ் நீரிணை தீவுகளைச் சேர்ந்த மக்களே வந்தேறு குடிகளான வெள்ளையர்களின் ஆட்சியில் சொல்லொணாத் துன்பங்களை அனுபவித்தனர். இம்மக்களது குழந்தைகள் அவர்களிடமிருந்து பிரிக்கப்பட்டு வேறிடங்களில் வளர்க்கப்பட்டன.

 

 

அவர்களில் பலர் தமது பெற்றோரை மீண்டும் காணவேயில்லை அவ்வாறு வளர்க்கப்பட்டவர்கள் சம்பளம் பெறா வேலையாட்களாக வெள்ளை அரசுக்கு சேவகம் செய்தனர்.

இவ்வாறு பெற்றோரிடமிருந்து பிரிக்கப்பட்ட பிள்ளைகளில் சிலர் மீண்டும் பெற்றோரிடம் சேர்க்கப்பட்டனர். இது மிக அண்மைக்காலமாக நடைபெற்று வருகிறது. திருடப்பட்ட சந்ததி (Stolen Generation) மற்றும் திருடப்பட்ட கூலிகள் (Stolen wagon) என்பன சட்டத்திற்கும் தர்மத்திற்கும் மாறாக வெள்ளையரசினால் மேற்கொண்ட குற்றங்களாக பார்க்கப்பட்டன.

இந்நிலையில் 2008 ஆண்டு பெப்ரவரி மாதம் 13ம் திகதி அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் சார்பில் அப்போதைய பிரதமர் மேற்படி மக்களுக்கு நிகழ்த்தப்பட்ட கொடுமைகளை குற்றமாக ஏற்றுக் கொண்டு ஒரு தேசமென்ற வகையில் அம்மக்களிடம் அச்செயலுக்காக பகிரங்க மன்னிப்புக் கோரினார்.

தற்போது அவுஸ்திரேலிய அரசு மேற்படி மக்களின் மேம்பாட்டிற்காக பல்வேறு நலத்திட்டங்களையும் பொருளாதார வாய்ப்புக்களையும் ஏற்படுத்திக் கொடுத்துள்ள போதிலும் தமக்கு சமவுரிமை வழங்கப்படுவதில் பாரபட்சம் காட்டப்படுவதாக அவுஸ்திரேலிய பழங்குடி மக்களின் சார்பில் இயங்கும் நிறுவனங்களுடனான கலந்துரையாடல்களில் வெளிப்படுத்தப்பட்டது.

பழங்குடி அபர்ஜினோ மற்றும் டொரஸ் நீரிணைத் தீவுவாகின் நிலங்களின் கனிய வளங்கள் அபகரிக்கப்படுவதை வெளிப்படுத்தி தமது எதிர்ப்பை காட்டும் வகையில் அவுஸ்திரேலிய தலைநகர் கன்பராவில் உள்ள பாராளுமன்ற கட்டடத் தொகுதிக்கு அருகில் மேற்படி மக்களின் தற்காலிக கூடாரமொன்று அம்மக்களின் தூதுவராலயமாக (Aboriginal Tent Embassy) 1972லிருந்து செயற்பட்டு வருகிறது.

மேற்படி இரு சம்பவங்களிலும் குற்றம் இழைத்தவர்கள் அக்குற்றத்தை ஏற்றுக் கொண்டு அதற்காக மன்னிப்பை கோரினர். அத்துடன் இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு நட்ட ஈடு வழங்கவும் இன ஐக்கியத்தை உருவாக்க முயற்சிகளில் ஈடுபட்டும் வருகின்றனர்.

ஆயினும் கூட பாதிக்கப்பட்ட மக்கள் இதில் திருப்தி அடையவில்லை என்பது வெளிப்படையாகத் தெரிந்த உண்மை.

“நடந்தது பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம். பயங்கரவாதிகளிடமிருந்து தமிழ் மக்களை மீட்பதற்கான மனிதாபிமான நடவடிக்கை மட்டுமே என்றும் இப்போது தமிழர்கள் மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள் அவர்களுக்கு என்ன பிரச்சினை” என்றும் கேட்பவர்களிடம் தென்னாபிரிக்க சம்பவங்களும் அவுஸ்திரேலியாவின் பாடங்களும் எடுபடாது “யுத்தத்தின் மூலம் பயங்கரவாதப் பிரச்சினைக்கும் தமிழர்களின் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்பட்டு விட்டது. அதற்கான போராடிய வீரர்களை தண்டிக்க முனைவது நாட்டுக்கு செய்யும் துரோகமாகும் என்ற தொனிப்பட கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.

எனவே, உண்மைகளைக் கண்டறிவதிலோ, அதற்குரிய இலக்கை நோக்கிய நடவடிக்கைகளில் முன்னேற்றம் காண்பதிலோ நீண்ட தூரம் பயணிக்க வேண்டியிருக்கும். அதற்குள் கஞ்சி ஆறிப் போய்விடும்.

பாதிக்கப்பட்ட இப்போதைய சந்ததி இறந்து போய்விடும்.

எமது அடுத்த சந்ததி அஜித், விஜய், ரஜினி கட்டவுட்களுக்கு பாலூற்றுவதில் அக்கறையாக ஈடுபட்டிருக்கும்!

மறப்பதற்கோ மன்னிப்பதற்கோ தேவையும் அவசியமும் இருக்காது.

Comments