மீனாக்கிழவி | தினகரன் வாரமஞ்சரி

மீனாக்கிழவி

இளமை என்பது எவ்வளவு இனிமையானது. அழகானதோ அது போலவே முதுமையும். ஆனால் இவையிரண்டும் முகத்தில் முட்டி மோதும் அகத்தில் ஆடிப்பாடும் அளவுகளில் தான் இவைகளின் இனிமை, அழகு அடங்கும். முதுமை என்றாலே அதனை என்றுமே தொடமாட்டாதவர்கள் போல முகம் சுளிக்கும் எல்லோரும் என்றோ ஒரு நாள் தொட்டுத்தானே ஆக வேண்டும். இல்லை மெல்லமெல்ல நிழல்போல தொடர்ந்து வந்து கொண்டே தானே இருக்கும். இளமையிலும் முதுமையிலும் நல்ல பராமரிப்போடு வாழ்வதற்கும், ஆதரவற்று அநாதியாய் வாழ்வதற்கும் எவ்வளவு வித்தியாசம்.

அந்த மேமலை தோட்டத்து மீனாக்கெழவியும் இப்போது தானே ஆதரவற்று அநாதையாய் ஒருவர் பராமரிப்புமின்றி ஒத்தக் கட்டையாய் தன் வாழ்க்கைப் பயணத்தை ஓட்டிக்கொண்டு இருக்கிறார்.

“மீனாவும் கங்காணி சந்தனம் ஐயாவும் எப்படி இருந்து வாழ்ந்தவங்க. மேமலையின் ஒவ்வொரு தேயிலை மலையும் ஒவ்வொரு தேயிலைச் செடியும் அவங்க கதையைச் சொல்லும்” கிழவியைக் காண்பவர்கள் சொல்லும் வார்த்தைகள்.

இப்போது கிழிந்தப் பாயும் ஆக்கித்தின்ன சில பாத்திரங்களும், ஒரு தூக்குச் சட்டியும், வெங்கல குண்டானும் மட்டுமே கிழவியின் சொத்துக்கள். ‘செத்துப் போகும் வரை’ அந்த லயக் காம்பறாவும் சொந்தமாகாத சொத்து தான். வெள்ளை அடித்து துப்பரவு செய்து மட்டும் பத்து பதினைந்து வருஷம் இருக்கும். அடுப்புப் புகை, அடுத்த வீட்டுப் புகை, மழைக்காலம் கூரையில் இருந்து விழும் பனிபத்து எல்லாம் சேர்ந்து காம்பறாவின் இருட்டை பலமடங்காக்கி இருளாக்கும். அது மட்டுமா? குப்பி லாம்பின் ஆதிக்கமும் தான்.

“பாவி பரதேசிகள் எப்படா நான் கட்டையில போவன். அப்ப என் காம்புறாவை எடுத்துக்கலாம்னு போட்டிப் போடுறானுங்க. பாவி மக்க எவளையும் குடியிருக்க விடமாட்டேன்.” என்று அடிக்கடி முணுமுணுப்பாள் மீனாக்கெழவி.

சில நேரங்களில் உணர்ச்சி வசப்பட்டு உரக்கவும் கத்தி விடுவாள்.

அந்த காம்புறாவுக்கு எத்தனைப் பேர் போட்டி அதற்காக கணக்கனுக்கு பந்தம் பிடித்து பணிவிடைகள் செய்பவர்கள் நிறையப் பேர். அதனைத் தெரிந்து தான் கிழவி “வீடில்லா செலவெக்கம் கெட்டதுகள்” அடையாளப்படுத்திப் பேசுவாள். ஊட மாட சாடைச் சொல்லியும் வாய்க்கு வந்ததைச் சொல்லித் திட்டுவாள்.

வெக்கம் கெட்டதுகளும் தங்களுக்குள் நல்லவர்கள் போல “அந்த காம்புறா அப்படி என்னா பெரிய அதிர்ஷ்டமாம் நடுவீட்டு அடுப்புக் கரியும், இஸ்தோப்பு கருமமும் பணிபத்தையும் கழட்டவே செவரு ஓட்டயாய் போயிரும். கெழவி உசிரோடேயே வாட வீசுது. கெழவி செத்துப் பொனமாகி போனா அந்த நாத்தம் எத்தன நாளைக்கு இருக்குமோ” என்று சொல்லி சிரிப்பார்கள்.

“இருந்தாலும் முழுக்க நனைந்தவனுக்கு முக்காடு எதற்கு என்பதற்கு இலக்கணமாய் தோட்டத்தில் வீடில்லாத செல வயசு ஒத்தக்கட்டைகளும் நாளைக்கு பின்னுக்க கால்கட்டுப் போட்டுக்க இருக்கிற செலதுகளும் தான் இதற்குப் போட்டா போட்டி. தோட்டத்தில் வீடு இல்லாதவர்களுக்கு கெழவியின் வீடு என்ன...? எப்படி இருந்தால் தான் என்ன?” மீனாக்கெழவி தனக்குள் முணுமுணுக்கிறாள்.

வெக்கம் கெட்டதும் திரும்பவும் பேசிக் கொள்கிறார்கள். “பக்கத்து தோட்டங்களுல டவுனு, கொழும்புனு போறவங்க லயத்து காம்புறாவை இருவது முப்பதுக்குனு வித்திட்டுப் போறாங்களாம். செலவுங்க மாசா மாசம் கூலியும் வாங்குறாங்களாம்.”

தலைவர் வருகிறார். “என்னப்பா பார்லிமன்ட் போடுறீங்க. புதுசா என்னா திட்டம் கொண்டு வரப்போறீங்க” என்கிறார்.

கூட்டத்தில் ஒருவன், “புதுசா வீடு ஒன்னும் வேணாம். லயமாவது கட்டித்தாங்கன்னு மனு கொடுக்கப் போறோம்.”

அதற்கு தலைவரு ... “வெள்ளைக்காரவுங்க கட்டுன லயன்கள் அப்படியே இருக்குது சொல்ல ஏலாவது. குடும்பங்கள் எத்தனை பெருகி இருக்கு. வசதி உள்ளவங்க கொஞ்சமா சீர்திருத்தி இருக்காங்க. குடும்பம் பெருகின மாதிரி காம்புறா பெருகாட்டியும் ஒரு செல இடங்களுல ஒத்த ஒத்த வீடு, மாடி வீடுனு கட்டிக்கொடுத்திருங்காங்க தானே” என்கிறார்.

“வயித்தெரிச்சலா கிண்டாதீங்க. ஆமா அது நூத்துல ஒன்று. மத்ததெல்லாம் கூரைக்கு மேல கொட புடிச்சிக்கிட்டு நிக்குது. கலர் கலராய் இறப்பர் சீட்டு போட்டுக்கிட்டு இருக்கு. யூரியா பேக்குல மண் மூட நெறஞ்சி இருக்கு. அப்ப விழுவேன் இப்ப விழுவேன்னு செவரு எல்லாம் போட்டி போட்டுக்கிட்டிருக்கு. இந்த லச்சணத்துல தான் கெழவியின் காம்புறாவுக்கு போட்டி போடுறம் எலக்ஷனுல மாதிரி” என்கிறான் ஒருவன்.

“அப்ப நீயும் ஒட்டுக்கேக்குற. நம்பர சொல்லு” என்று குத்தலாய் கேட்கிறார் தலைவர்.

* * *

கெழவியின் அடுத்த வீட்டுக்காரர்கள் பார்வதியும், பாப்பாத்தியும் பார்வதி சொல்கிறார் “அடி செருப்பால. ஆளயும் மூஞ்சியும் பாரு எலக்ஷன் கேக்கப் போவுதங்களாம்.

பாப்பாத்தி அதற்கு, “அப்ப ஓட்டுப்போடாம காட கொடுத்துட்டு காச வாங்க வேண்டியது தான்.”

இருவரும் கொல்லென்று சிரிக்கிறார்கள். பின் நீண்ட மௌனம். பார்வதிக்கு வாய் முணுமுணுக்கிறது.

“என்னா நீயா தனிய பேசிக்கிற” பாப்பாத்தி.

இல்ல எந்த வெக்கம் கெட்ட பய புள்ளையாவது வந்துட்டு போகட்டும். அப்பதான் நாங்க சொஞ்சம் நிம்மதியாய் இருக்க முடியும். ஒரு புடி சொறாவது ஒழுங்கா திங்க முடியும். இல்லாட்டி இந்த இழவோட பெரிய கருமம் தான்.

மீனாக்கெழவிக்கு பத்து பதினைந்து வருஷமா இதெல்லாம் புளிச்சுப்போன வெசயம். அதற்காக ஒடனே செத்துவிடவா முடியும்?

ச்சீ.... ச்சீ.... என்ன கொண்டுப் போக காலன் வர மாட்டேங்கிறானே. எப்பத்தான் பாசக் கயித்தை. எங் கழுத்துல எமராசன் மாட்டுவானோ. எனக்கு ஒரு சாவும் வர மாட்டேங்குதே தினமும் புலம்பிக் கொள்வாள்.

அடுத்த வீட்டுப் பார்வதியும், பாப்பாத்தியும் தம் பிள்ளைகளை வாசலில் விளையாட விடவே மாட்டார்கள். மீனா கெழவிக்குப் பயந்து. விளையாடுவதற்காய் ஆத்துக்கு மேலுள்ள மேட்டு லயத்திற்கு கொண்டு போய் விடுவார்கள். பிள்ளைகளுக்கு கெழவியைக் கண்டாலே பேய்மாதிரி தான். மேட்டு லயத்துக் பிள்ளைகள் இவர்களைக் கண்டால் கிண்டலாக “மீனாக்கெழவிக வர்ராங்க” என்று பட்டப்பெயர் வைப்பார்கள்.

* * *

“ஏய் கெழவி. எவ்வளவு சொன்னாலும் ஒன்ன மாத்தவே முடியாது. ஒங்கிட்ட அடிக்கிற வீச்சம் தான் அடுத்த வீட்டுக்காரிக ஒன்ன திட்டித்தீர்க்க வைக்குது. நீ என்னதான் திட்டிக் கொட்டினாலும் ஆத்ர அவசரத்திற்கு ஒதவுறது அவுங்கதானே. திட்டுற கொஞ்சம் குறைச்சிக்கோ. அதுக புருஷமாரு காது கேட்டா ஒன் எழவுக்கு கூட வரமாட்டானுக.” கத்துகிறார் தலைவர்.

மீனாக்கெழவி பொக்கை வாயைத் திறந்து வெத்தில எச்சில் வடிய... “தல... வு.... ரு த...ம்....பி நா செத்த யாரு இல்லாட்டிலும் பரவாயில்ல. அண்டைக்கே தூக்கிப் போட்டுறனும்” சிரிப்போடு சொல்கிறார்.

தலைவரும் சிரித்துக் கொண்டே, “நீ இப்ப சாகு. சூடு ஆற முன்னுக்கே தூக்கிர்றம்” என்கிறார்.

“சரி ஒனக்கு என்னாத்தான் ஆச. சொல்லு வாங்கி தாரேன் ஒன்னும் வேணாமப்பா – ஒரு கட்டு வெத்திலயும் பாக்கு கொஞ்சமும் மட்டும் வாங்கி தா" என்கிறாள். பதிலுக்கு கெழவி உரிமையோடு.

இருவரும் சேர்ந்து சிரிக்கிறார்கள்.

தலைவர் சரி “மழ வரப்பாக்குது. ஆத்துக்குப் போய் குளிக்கத்தான் கஷ்டம். மழ தண்ணியிலாவது குளி. அப்பதான் தூக்கிப்போட நாலு பேரு வருவானுங்க. ஈசத்தொல்லை வேற. வாய் கண்ணு முக்ல எல்லாம் நொழையப் பாக்குது நான் போறேன்” என்று தலையில் கை வைத்தவாறு போகிறார்.

மீனாக்கெழவிக்கு மழை என்றால் அப்படி ஒரு சந்தோஷம். வீட்டுக் கூரையிலிருந்து வழியும் மழை நீரில் குளித்துக் கழுவுவது வழக்கம். அது மட்டுமா...? வேடனுக்கு சிரமமில்லாமலே சீவாத்து கெடச்சது மாதிரி புற்றீசல்களின் புது வருகை. கிழவியின் வாய் ஊறும்.

மழை கொட்டோ கொட்டென்று கொட்டுகிறது. புற்றீசல்கள் மழைத் துளிகளுக்கு எதிராக கீழிலிருந்து மேல் நோக்கி அலை அலையாய்... மாலை இருண்டு மழை இருட்டும் கருமையை கொண்டு வருகின்றது.

கிழவி குளிப்பதற்கு முன் குண்டான் சட்டியில் தண்ணீர் வைத்து புற்றீசல்களை தூக்குச் சட்டியில் பிடித்துப் பிடித்துப் போடுகிறாள். தூக்குச் சட்டி நிறைகிறது. கிழவியின் ஆசை போல!

கிழவி மனநிறைவோடு குளிக்கிறாள். வழமைக்கு மாறாக. கிழிந்த சேலையைக் கழுவி இஸ்தோப்பில் காயப்போடுகிறாள். குளிர் வாட்டுகிறது. மீனாக்கிழவி அழுக்கு நீங்கி புதுப்பொழிவோடு புதுச்சேலை ஒன்றையும் கட்டிக்கொள்கிறாள்.

குளிரைப் போக்க மிலாறுகள் சுடர்விட்டு எரிகிறது. தேத்தண்ணி சாயம் புது தெம்பை தருகிறது. தெம்போடு புற்றீசல்களை சட்டியில் போட்டு வறுத்தெடுக்கிறாள். ஒன்று இரண்டை காலை நீட்டியவாறே தலைவிரி கோலமாய் இருந்து அசை போடுகிறாள்.

அவளுக்கு அந்த பழக்கப்பட்ட சுவை ஆவேசமாய் தின்ன வைத்தது. கிழவியின் வாயிலிருந்து இரு புறுமும் பால் வடிகிறது.

* * *

மழை கொஞ்சம் கொஞ்சமாக வேகத்தை நிறுத்தி ஓய்வுக்கு தயாராகிறது போல! இடியும் மின்னலும் மட்டும் இடைக்கிடை பயமுறுத்திப் போகிறது.

பார்வதி நடு வீட்டில் வைத்திருந்த சட்டியில் சொட்டு சொட்டாய் நிரம்பி வழிந்திருந்த மழை நீரை வெளியில் கொட்டிவிட்டு ஒரே தடவை நோட்டமிடுகிறாள். மீனாக்கெழவின் விட்டு வெளிச்சம் வழமைக்கு மாறாக வாசற்படி வாயிலாக வெளியே விரிந்துப் போகிறது. பார்வதி “பாவம். குளித்து குளிர்வாட்டுது போல” நினைத்துக் கொள்கிறாள்.

காவல்காரன் இரும்புத் துண்டினால் இரவு ஏழு மணி என அடித்துச் சொல்கிறான். சில நாட்களில் ஐந்து பத்து நிமிஷங்கள் முந்தியும் பிந்தியும் அடிப்பான். அந்த ‘டாங்’ தான் அவன் வேலை செய்கிறான் என்பதற்கு அத்தாட்சி போல அன்னியர் காலம் தொட்டு.

ஏழு மணி ஆகிவிட்டதால் அவசர அவசரமாய் பார்வதி பிள்ளைகளுக்கு இரவு சாப்பாடு கொடுக்கிறாள். அவர்கள் தூக்க மயக்கத்தில் பாதியை மட்டும் உண்டு விட்டு தூங்கி விடுகிறார்கள். பார்வதியும் கணவன் அய்யக்கண்ணும் இஸ்தோப்பிலுள்ள அடுப்படியில் இருந்தவாறே குளிர்காய்ந்த படி, தோட்ட நடப்புகளை எல்லாம் துருவி ஆராய்ந்து கொண்டிருந்தார்கள்.

அய்யாக்கண்ணு இடைக்கிடை கோழித்துண்டோடு கிளாசையும் சுவைத்துக் கொண்டு. பேசிக் கொண்டிருந்தான். அவன் அடுப்புத் திட்டில் அவள், பலாக்கட்டையில் நேரம் போனதே தெரியவில்லை. காவல்காரன் ‘ஒன்பது’ என அடித்துச் சொல்கிறான்.

“பாவம் மீனாக் கெழவி. கொஞ்சம் சாப்பாடு கொடுத்திட்டு வா” என்கிறான் அய்யாக்கண்ணு. பார்வதியும் ஆமா என தலை அசைத்து சாப்பாடு கொண்டு போகிறாள்.

கிழவி காலை நீட்டியவாறே அசைபோட்டவாறே தலைவிரி கோலமாய்... புதிய சேலையுடன், அடுப்படியில்

“இந்தா கோழிக்கறியும் சோறும்” நீட்டுகிறாள் பார்வதி. பதிலுக்கு கிழவி “பார்...வ... தி ஓம் புள்ளைகளுக்கே கொண்டு போயி கொடு. இன்னைக்கி வேணாம். இந்தா நீயும்” என்று கையை நீட்டுகிறாள்.

“ச்... சீ” வாயில என்னன்னு வருது பாரு” பார்வதி ஆவேசமான குரலில். ஒருவாறு சுதாகரித்துக் கொண்டு கிழவின் கோப்பையில் சோற்றை கொட்டி விட்டு வெடுக்கென்று போய் விடுகிறாள்.

அய்யாக்கண்ணு “என்னா கெழவி போத்தலும் கேட்டு இருக்குமே” என்கிறான்.

“இல்ல” பார்வதி ஒரே வார்த்தையில் முடித்துக் கொண்டாள். பார்வதிக்கு இருந்த பசி எல்லாம் எங்கோ பறந்துப் போனது.

... நீ.... ண்.... ட மௌன இடைவெளி. பார்வதி ‘ஆ’ என கொட்டாவி விடுகிறாள்.

“சாப்பிட்டு படுப்பம். நாளைக்குப் பின்னுக்கு கெழவி மோசம் போயிட்டா பக்கத்துல இருக்க நமக்குத் தான் செலவு. அதுவுட்டு ஆளுக கொழும்புல எல்லாம் எப்படி வசதியா இருக்காங்க. இந்த கெழவிய மடத்திலாவது காசு கொடுத்து சேத்திருக்கலாம். என்னதான் இருந்தாலும் தோட்டத்த அண்டவுங்க தானே. அந்த காலத்துல புடிக்கவே முடியாதாம். ரொம்பவும் ராங்கியும் ரப்புமாத்தான் இருக்குமாம். எங்கம்மா சொல்லுவாங்க” என்றான் அய்யாக்கண்ணு.

இடைக்கிடை ஏவு... ஏவு... என ஏப்பமும் விட்டுக்கொண்டான்.

பார்வதிக்கு ஒன்றுமே ருசிபடவில்லை. கோப்பையில் மீதி இருந்ததையும் நாய்க்கு வைக்கிறாள். அவளுக்கு என்னவோ செய்கிறது. குமட்டலையும் அடக்கிக்கொண்டு வெற்றிலை கொஞ்சம் போட்டுக்கொள்கிறாள்.

“நல்ல வேல. நாளைக்கு ஞாயிற்றுக்கிழமை இல்லாட்டி நாளக்கி ஊத்துற மழயில, அட்டக்கடியிலவும் காட்டுமல தொங்கலுக்குப் போவனும்” அலுத்துக் கொள்கிறார்.

* * *

அய்யாக் கண்ணு விடிந்தும் உழைப்பின் களைப்பினால் குறட்டைவிட்டு தூங்கிக் கொண்டிருந்தான். பிள்ளைகளும் ஏனோ எழும்பவில்லை. பார்வதியும் புரண்டு படுக்கிறாள். வெளியிலிருந்து கதவு இடுக்கினூடாக வெளிச்சம் தெரிகிறது. பறவைகளில் கீச்சொலி காதுகளுக்கு கேட்கிறது. காவல்காரனின் கடைசி மணி ‘ஆறு’ என சொல்கிறது.

பார்வதி “அப்பனே ஆண்டவனே! என்ன பெத்த அப்பனே!” என்று எழுப்பி சாமி படம் தொங்கும் மூலையைப் பார்க்கிறாள்.

இரவு பெய்த மழையினால் இன்னும் யாரும் எழும்பவில்லைபோல. கிழவியும் தான் ஓடையின் சத்தம் கொஞ்சம் அதிகமாக கேடகிறது. பீலிக்கரையில் தண்ணீர் சும்மா போய்க் கொண்டிருந்தது. வழமையான பாத்திரங்களின் நாடகங்கள் எதுவுமில்லை. இரவு மழையில் மண்ணில் ஆயிரம் ஆயிரம் சித்திரங்கள் யாரினதும் கால் தடம் பட்டு கசங்கிப் போகாமலே.... ஒவ்வொன்றாய் இரசித்தபடி பார்வதி கைகால்.... கழுவுகிறாள்.... சுதந்திரமாக....

பீலிக்கரையில் தான் பெண்கள் கை கால்..... கழுவுவார்கள். ஆண்கள் ஓடைக்குப் போய்வருவார்கள். நேற்றிரவு மழை காரணமாக ஓடை சுத்தமாக ஓடிக் கொண்டிருந்தது.

பார்வதி இடுப்பில் குடத்தோடும், கையில் வாளியோடும் வீடு வருகிறாள். கிழவியின் வீட்டுக்குள்ளிருந்து நாய் வெளியில் வருகிறது. கதவு திறந்திருக்கிறது.

நாய் கோழிக்கறியையும் சோற்றையும் தின்று விட்டு, கிழவி மிச்சம் வைத்திருந்த ஈசல் பொறியையும் தின்று கோப்பையை வாயில் கவ்வியபடி ஓடி இருக்கிறது.

கிழவி பேச்சு மூச்சின்றி தரையில் நீட்டி நிமிர்ந்தபடி.

பார்வதிக்கு திக்கென்றது.

“எந்த கெட்ட நேரத்துல கெழவி கண்ண மூடுனிச்சோ. காலங்காத்தாலயே பொனத்து மூஞ்சில முளிச்சிப்புட்டம்” பயத்தால் உடல் சிலிர்க்க தூ... தூ... என துப்பிக்கொண்டு வெளியில் வந்தாள். நாய் ஈசல தட்டை நக்கி கொண்டு இருந்தது. கிழவி குளித்ததற்கு சாட்சியாய் கொடியில் சேலை தொங்கி கொண்டிருந்தது.

பார்வதி ஓடிப்போய் “இங்கருங்க.... இங்கருங்க.... கெழவிக்கு முடிச்சிப் போயிரிச்சு எழும்புங்க” என்றாள்.

அய்யாக்கண்ணு கண்களைக் கசக்கிக் கொண்டே சாரத்தை இழுத்து தலையோடு போர்த்துக் கொண்டு கணக்கப்பிள்ளையின் வீடு நோக்கிப் போகிறான்.

கணக்கப்பிள்ளை விஷயம் அறிந்தவராய் “அப்ப வீட்டை யாருக்கு கொடுப்பம்” எனக் கேட்கிறார். அய்யாக்கண்ணுக்கு கையும் ஓடவில்லை. காலும் ஓடவில்லை.

“அத பொறகு பாத்துக்கலாம். பொட்டி எடுக்க தலைவருக்கு சொல்லணும்” திரும்பிப் பார்க்காமலே மேட்டு லயம் போகிறான்.

“சாலையிலேயே கேதம் சொல்லி வாரியா – ரத்திரி கண்ட சொப்பணம் சரியாய் போச்சு” தலைவர் சொல்கிறார்.

* * *

கிழவியின் ஆசைப்படி உறவுக்காரர்களுக்கோ, கொழும்புகாரர்களுக்கோ கேதம் சொல்லவில்லை. சொன்னாலும் வரப்போவது இல்லை. பகல் இரண்டு மணிக்கெல்லாம் அடக்கம் பண்ணி முடிந்துவிட்டது.

அய்யாக்கண்ணு காலையில் தலைமாட்டில் தேங்காய் உடைத்து சாம்புராணி புகைப்பிடித்தது மட்டும்தான். வேறெந்த சடங்குகளும் நடக்கவில்லை. சந்தனம் கங்காணியின் கல்லறைக்கு பக்கத்தில் கிழவியின் ஆசைப்படி எல்லாம் முடிந்துவிட்டது.

“நல்லவேல கெழவிக்கு ஒருத்தருமில்ல. இல்லாட்டி எத்தன எத்தன சாஸ்திரங்கள். அதுலயும் குறை கண்டுபுடிச்சி சண்ட போட்டிருப்பம். எல்லா சாத்தரமும் இருந்தா ஒன்னு. இல்லாட்டி ஒன்று. கெழவிமாரி ஆளுகளுக்கு ஒரு மசிருமில்ல” என்கிறான் காவல்காரன் வேலு.

“கோழிக்கறியும் சோறும் இல்ல. ஈசப்பொரிதான் வெறியாய் இருந்திருக்கு” பார்வதி சொல்கிறாள். அப்போது தான் புரிந்தது பார்வதிக்கு நேற்றிரவு வந்த குமட்டல் கோபமெல்லாம் புரிந்தது – அய்யாக்கண்ணுக்கு.

அன்றிரவு! கிழவியின் வீடு பூட்டப்படாமலே இருந்தது.

அடுத்த நாளும் பூட்டப்படவில்லை.

மூன்றாம் நாள் கணக்கப்பிள்ளையும், காவல்காரனும் பூட்டோடு வருகிறார்கள்.

போகும் வழியில் “எல்லாரும் கவனம், நேரம் கெட்ட நேரத்துல உறும நேரத்துல குறுக்க மறுக்க போவாதீங்க. ஆஷசம் அலையுதாம் புள்ளைகளே” என்கின்றனர்.

பார்வதியின் பிள்ளைகள், பாப்பாத்தியின் பிள்ளைகள் மேட்டு லயம் போகாமலே சுதந்திரமாக ஓடியாடி விளையாடுகிறார்கள். மேட்டு லயப் புள்ளைகள் மீனாக்கெழவிகளுக்காக காத்து இருக்கிறார்கள். கிழவியின் காம்புறாவுக்கு போடப்பட்ட பூட்டை திறக்கும் பாக்கியம் யாருக்கு கிடைக்குமோ?

மீனாக்கெழவி விடுவாளா....? யாருக்குத் தெரியும்?

Comments