தெஹியோவிட்ட தமிழ் மகா வித்தியாலய கட்டட பணிகள் விரைவில் நிறைவுபெற வேண்டும் | தினகரன் வாரமஞ்சரி

தெஹியோவிட்ட தமிழ் மகா வித்தியாலய கட்டட பணிகள் விரைவில் நிறைவுபெற வேண்டும்

தெஹியோவிட்ட தமிழ் மகா வித்தியாலயத்தில் இரண்டு ஏக்கர் காணி களனிவெளி பிளான்டேசன் கம்பனியால் நிர்வகிக்கப்படும் தெஹியோவிட்ட தேவாலகந்தை தோட்டத்தில் தெஹியோவிட்ட கல்வி வலய காரியாலயத்திற்கு அருகில் (ஈரிய கொல்லை) 2017-.07.-16ஆம் திகதி வர்த்தமானி அறிவித்தலின் படி 2017-.12.-08ஆம் திகதி சம்பந்தப்பட்ட பாடசாலை நிர்வாகத்தினரிடம் காணி உறுதிப்பத்திரத்துடன் கையளிக்கப்பட்டது.

கடந்த 2019-.02.-08 அன்று 110 x 25 x 3 அளவிலான கட்டடத்தை நிர்மாணிப்பதற்காக சப்ரகமுவ மாகாண கல்வி அமைச்சு ஒதுக்கியுள்ள நான்கரை கோடி ரூபாவைக் கொண்டு கட்டடத்திற்கான அடிக்கல் மாகாண ஆளுநரால் நாட்டப்பட்டு நிர்மாண வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

தெஹியோவிட்ட தமிழ் மகா வித்தியாலயம் கேகாலை மாவட்டத்தில் முக்கிய தமிழ் பாடசாலைகளில் ஒன்று. தெஹியோவிட்ட நகரத்தைச் சுற்றியுள்ள பெருந்தோட்டங்களில் தரம் ஒன்றிலிருந்து தரம் ஐந்து வரை வகுப்புகள் நடைபெறுகின்றன. அந்த பெருந்தோட்டங்களிலுள்ள தமிழ் பாடசாலைகளில் கல்வி பயிலும் தமிழ் மாணவர்கள் தரம் ஆறிலிருந்து கல்வி கற்பதற்கு தெஹியோவிட்ட தமிழ் மகா வித்தியாலயத்திற்கு செல்லவேண்டியுள்ளது.

கேகாலை ருவன்வெல்ல நகரில் ஒரு தமிழ் வித்தியாலயம் உள்ளது. இப் பாடசாலையில் தரம் ஒன்றிலிருந்து தரம் பதினொன்று வரை வகுப்புகள் நடைபெறுகின்றன. கல்விப் பொதுத்தராதர உயர்தர வகுப்பில் கல்வி கற்பதானால் ருவன்வெல்ல பகுதி தமிழ் மாணவர்கள் தெஹியோவிட்ட தமிழ் மகா வித்தியாலயத்திலேயே தமது கல்வியைத் தொடர வேண்டியுள்ளது. கன்னத்தோட்டையில் சுலைமானியா முஸ்லிம் மகா வித்தியாலயம் உள்ளது. ஆனால் கல்வி பொதுத்தராதர வகுப்பில் கலைப்பிரிவுக்கு தெரிவு செய்யப்படும் தமிழ் மாணவர்களில் இந்து கலாசாரத்தை ஒரு பாடமாக கற்கும் மாணவர்கள் தெஹியோவிட்ட தமிழ் மகா வித்தியாலயத்திலேயே தமது உயர் கல்வியை தொடர வேண்டியுள்ளது. இதன் மூலம் தெஹியோவிட்ட தமிழ் மகா வித்தியாலயம் எந்த அளவுக்கு ஒரு முக்கியமான பாடசாலை என்பதை எளிதாக புரிந்து கொள்ள முடியும்.

முன்னாள் கல்வி ராஜாங்க அமைச்சரும் தற்போதைய விசேட பிரதேச அபிவிருத்தி அமைச்சருமான வீ. இராதாகிருஷ்ணன் தெஹியோவிட்ட தமிழ் மகா வித்தியாலயத்திற்கென ஒதுக்கப்பட்ட காணியை பார்வையிட திடீர் விஜயம் செய்ததோடு சப்ரகமுவ மாகாண கல்வி அமைச்சு அதிகாரிகளையும் சந்தித்ததுடன் தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து எட்டு கோடி ரூபாவை ஒதுக்கினார்.

இந்நிலையில் விசேட பிரதேச அபிவிருத்தி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில் தெஹியோவிட்ட தமிழ் மகா வித்தியாலயத்திற்கான கட்டட நிர்மாணங்களுக்கென ஒதுக்கிய எட்டு கோடி ரூபா கிடைக்குமா என தொலைபேசியில் தொடர்பு கொண்டு வினவியபோது அந்த நிதி நிச்சயம் கிடைக்கும் என்று உறுதிபட தெரிவித்தார்.

எனவே, வேலுசாமி இராதாகிருஷ்ணன் தனது அரசியல் செல்வாக்கை பிரயோகித்து அந்த நிதியை கிடைக்கச் செய்து தெஹியோவிட்ட தமிழ் மகா வித்தியாலயத்திற்கு தேவையான (110 x 25 x 2) அளவிலான மூன்று கட்டடங்களையும் ஒரு பாலத்தையும் நிர்மாணிக்கச் செய்து கட்டட நிர்மாண வேலைகளை பூர்த்தி செய்து தற்போதைய அரசாங்கத்தின் பதவி காலத்திற்குள்ளேயே பாடசாலை நிர்வாகத்தினரிடம் கையளிக்க வேண்டும்.

தெஹியோவிட்ட தமிழ் மகா வித்தியாலய அதிபர் புதிய பாடசாலைக்கான கட்டடங்களில் கணனி, பிரிவு, விஞ்ஞான ஆய்வு கூடம், நூலகம், பாடசாலை பிரதான மண்டபம் என்பவை உள்ளடக்கப்பட்டு வகுப்பறைகளும் அமைக்கப்பட்டால் எதிர்கால சந்ததியினர் பயனடைவார்கள் என குறிப்பிட்டார்.

தினகரன் வார மஞ்சரியின் மலைக்கதிர் பக்கத்தில் 2017.12.17ஆம் திகதி “தெஹியோவிட்ட தமிழ் மகா வித்தியாலயத்திற்கு காணி ஒதுக்கினால் போதாது; கட்டட நிர்மாணத்துக்கான நிதியும் ஒதுக்கப்பட வேண்டும்” என்னும் தலையங்கத்தின் கீழும் 2018-.11.-04 ஆம் திகதி "தெஹியோவிட்ட தமிழ் வித்தியாலய கட்டட நிர்மாணப்பணிகள் எப்போது ஆரம்பமாகும்?" என்னும் தலையங்கத்தின் கீழும் பிரசுரமான கட்டுரைகள் மூலம் உரிய பலன் கிட்டியுள்ளதை மறுக்க முடியாது.

அதுபோல் தெஹியோவிட்ட தமிழ் மகா வித்தியாலயம் புதிய இடத்தில் அங்க சம்பூர்வமான கட்டட தேவைகளுடன் நிர்மாணிக்கப்பட்டால் அந்த பாடசாலை மூலம் மாணவர்கள் உரிய பலன்களை பெறமுடியும்.

கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுக்கு தெஹியோவிட்ட தமிழ் மகா வித்தியாலயத்தின் முக்கியத்துவம் பற்றிய விளக்கம் அடியேனால் எழுத்து மூலம் அனுப்பி வைக்கப்பட்டமை (பதிவு அஞ்சல் மூலம்) இங்கு குறிப்பிட்டத்தக்கது. கல்வி இராஜாங்க அமைச்சர் என்பவர் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு மாத்திரமல்ல. முழு நாட்டிற்குமான அமைச்சர் என்பதை அவர் மறக்கக் கூடாது. கரிசனை காட்டி செயல்பட வேண்டும்.

Comments