11 இலட்சம் ரூபா செலவில் மேற்கொள்ளப்பட்டுள்ள குடிநீர்த் திட்டம் | தினகரன் வாரமஞ்சரி

11 இலட்சம் ரூபா செலவில் மேற்கொள்ளப்பட்டுள்ள குடிநீர்த் திட்டம்

அபிவிருத்தி என்று கூறப்படும்போது அவை மக்களின் நலன் கருதி மேற்கொள்ளப்படும் திட்டங்களாகும்.

இவ்வாறு மேற்கொள்ளப்படும் திட்டங்கள் பெருந்தொகையான நிதியைக் கொண்டே மேற்கொள்ளப்படுவதால் மக்களுக்கு நன்மை கிட்ட வேண்டும். மக்கள் முழுப் பலனையும் அடையக் கூடியதாகவும் இருத்தல் வேண்டும். அது மட்டுமல்லாது அவை உறுதியானதாகவும், உருப்படியானதாகவும், தரமானதாகவும் நிலைத்து நிற்கக்கூடியதாகவும் இருக்க வேண்டும்.

ஆனால் இன்று மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித் திட்டங்கள் இவ்வாறு அமையப்பெறுகின்றதா என்ற கேள்வி பலர் மத்தியிலும் எழுந்துள்ளது.

குறிப்பாக பெருந்தோட்ட மக்களின் நலன்கருதி தோட்டப்புறங்களில் மேற்கொள்ளப்படும் குடியிருப்பு, குடிநீர், மலசலகூடம், பாதை அமைத்தல் போன்ற அபிவிருத்தித் திட்டங்கள் தரக்குறைவான முறையில் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் அவை பழுதடைந்து மக்கள் பயன்பெற முடியாத நிலையை அடைந்து வருகின்றன.

களுத்துறை மாவட்டத்தின் இங்கிரிய நகருக்கு அருகாமையில் அமைந்துள்ளது தும்பறை தோட்டம். இந்த தோட்டத்தின் முதலாம் இலக்க பிரிவில் வசித்துவரும் குடியிருப்பாளர்கள் நீண்டகாலமாக எதிர்நோக்கிவந்த குடிநீர்ப் பிரச்சினைக்குத் தீர்வு பெற்றுக்கொடுக்கு முகமாக மலைநாட்டு புதிய கிராமம், உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் 11 லட்சம் ரூபா செலவில் 'ட்ரஸ்ட்' நிறுவனத்தின் மேற்பார்வையில் குடிநீர்த்திட்டம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.

இத்திட்டம் மிகவும் தரக்குறைவான முறையிலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளதைக் காணமுடிகிறது. குடிநீர்ப் பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளமை குறித்து குடியிருப்பாளர்கள் ஓரளவு நிம்மதியடைந்துள்ள போதிலும் மறுபுறத்தில் அதன் தரம் குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளனர். மிருகங்கள் மற்றும் மனிதர்களினாலும் மழைக் காலத்திலும் மாசடையக்கூடிய நிலையில் காணப்படும் நீரோடையொன்றில் பாதுகாப்பற்ற முறையில் சீமெந்தினாலான தண்ணீர்த்தாங்கியில் குழாயைப் பொருத்தி குழாய் ஊடாக பள்ளத்தை நோக்கி நீரை கொண்டுசென்று 10 ஆயிரம் லீட்டர் நீரை கொள்ளும் பிளாஸ்டிக் தண்ணீர் தாங்கியில் நீர் நிரப்பப்படுகிறது. இதிலிருந்து ஒவ்வொரு குடியிருப்பாளரின் வீட்டு முற்றம் வரையில் குழாய் பொருத்தப்பட்டு சுமார் 2 அடி உயரத்தில் குழாயை உயர்த்தி வைத்து நீர்க்குழாய் பொருத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு பொருத்தப்பட்டுள்ள குழாய்கள் எந்தவொரு ஆதாரமும் இல்லாது உறுதியற்ற நிலையிலேயே காணப்படுகிறது.

குடியிருப்பாளர்கள் குழாயைத் திறந்து நீரை பயன்பாட்டுக்கு பெற்றுக்கொள்ளும்போது வழிந்தோடும் நீர் சென்றடையக்கூடிய வடிகான் வசதியைச் செய்து கொள்ளக்கூடிய சூழல் அங்கு காணப்படவில்லை. இதனால் நீர் அவரவரின் வீட்டு முற்றம் முழுவதும் பரவி தேங்கி சுற்றாடல் மாசடையும் நிலை ஏற்பட்டுள்ளது.

இது 11 லட்சம் ரூபா செலவில் மேற்கொள்ளப்பட்ட குடிநீர்த் திட்டமா என கன்னத்தில் கைவைத்துள்ள குடியிருப்பாளர்கள் மிகவும் தரக்குறைவான முறையில் மேற்கொள்ளப்பட்டு இங்கு பெரும் மோசடி இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இருந்தபோதிலும் இதுபற்றிய தகவல்களை வெளியிடும்பட்சத்தில் தாங்கள் தாக்கப்பட்டு பழிவாங்கக்கூடும் என்ற அச்சம் காரணமாக உண்மையை வெளியிட தயக்கம் காட்டுகின்றனர். இந்த குடிநீர்த்திட்டம் நீடித்து நிலைக்கக்கூடிய ஒரு நிரந்தரத் திட்டம் போலல்லாது தற்காலிக திட்டம் போலவே அமைக்கப்பட்டுள்ளது என்பதை தெளிவாகக் காணக்கூடியதாக உள்ளது.

இது தொடர்பாகவும், அதே தோட்டத்தில் 2ஆம் இலக்க பிரிவில் உலக வங்கியின் உதவித் திட்டத்தின் கீழ் 65 லட்சம் ரூபா செலவில் அமைக்கப்பட்டு குடிநீர் வசதியில்லாத நிலையில் இயங்கிவரும் சிறுவர் அபிவிருத்தி நிலையம், கடல்மண் கலந்து ஆரம்பிக்கப்பட்டதால் குடியிருப்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து இடைநிறுத்தப்பட்ட நிலையில் காணப்படுகிறது.

நியூச்செட்டல், ஹோம் டிவிசன் தனி வீட்டுத்திட்டம், அண்மையில் திறந்து வைக்கப்பட்ட குடிநீர் வசதியில்லாத அரப்பொலகந்த தோட்ட தனிவீட்டுத்திட்டம் குறித்தும் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நம்பிக்கை நிதியத்தின் தலைமை அலுவலகத்தின் தமிழ் அதிகாரி ஒருவருடன் தொடர்புகொண்டு கேட்டபோது, "எல்லாம் செக் பண்ணி பாக்கணும், காலி அலுவலகத்துடன் தொடர்பு கொண்டால் விபரங்களைப் பெற்றுக்கொள்ளலாம் எனக்கூறி விபரம் தருவதைத் தவிர்த்துக்கொண்டார்.

தோட்ட மக்களின் நலன்கருதி மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித் திட்டங்களில் அவர்களுக்கு கிள்ளிக் கொடுத்துவிட்டு மிச்சத்தை அப்படியே சுருட்டி அள்ளி எடுத்துக் கொள்ளப்படுகிறது.

களுத்துறை மாவட்டத்தில் 2014ஆம் ஆண்டில் அப்போதைய கால்நடை, கிராமிய வள அபிவிருத்தி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் 'ட்ரஸ்ட்' நிறுவனத்தின் மேற்பார்வையில் றைகம் மேற்பிரிவு எதிராகல, நியூச்செட்டல், ஹோம் டிவிசன், வோகன், அஷ்க்வெளி, ஹல்வத்துறை, குடலிகம மற்றும் தோட்டங்களில் ஆரம்பிக்கப்பட்ட இதுபோன்ற குடிநீர்த்திட்டங்களில் சில தரக்குறைவான முறையில் மேற்கொள்ளப்பட்டதால் வெற்றியளிக்காது பயனற்றுப் போன நிலையில் கிடப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

ட்ரஸ்ட் நிறுவனத்தின் கடந்தகால செயற்பாடுகளும், இன்றைய செயற்பாடுகளும் எவ்வித வித்தியாசமுமின்றி ஒரே விதமாகவே இடம்பெற்றுவருவதாக தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர். "பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தில் இனி ஊழல் மோசடிகளுக்கு இடமில்லை. கடந்த காலங்களில் இந்த நிதியமானது அரசியல் மற்றும் தொழிற்சங்கம் சார்ந்தே செயற்பட்டது. அதேபோல் நிதியத்தில் பல ஊழல் மோசடிகளும் இடம்பெற்றுள்ளமை குறித்து முறைப்பாடு கிடைத்துள்ளது. அத்தகைய ஊழல் மோசடிகளை விசாரணை செய்வதற்கு சட்டரீதியான நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது. எதிர்வரும் காலங்களில் ஊழலற்ற செயற்பாடுகளை முன்னெடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த நிதியம் சரியான பாதையில் நேர்மையாக அதன் பணியை நிறைவேற்றி வருகின்றதா? என்று தோட்ட மக்களும் சமூக ஆர்வலர்களும், புத்திஜீவிகளும் கேள்வியெழுப்புகின்றனர். அமைச்சினால் தேவையான நிதி ஒதுக்கப்படுகின்றது. அந்த நிதியைக்கொண்டு திட்டங்கள் உரியமுறையில் மேற்கொள்ளப்படுகின்றனவா? ஒதுக்கப்படும் நிதிக்கான வேலைகள் நடக்கின்றனவா என்பது குறித்து ஆராய்ந்து உறுதிப்படுத்தப்படுகின்றதா?

அமைச்சர் பழனி திகாம்பரமும் அமைச்சின் அதிகாரிகளும் இதுகுறித்து ஆராய்ந்து பார்க்க வேண்டியது கட்டாயமாகும்.

Comments