ஜெனீவா தீர்மானத்தை இலங்கை நடைமுறைப்படுத்துவது சந்தேகம் | தினகரன் வாரமஞ்சரி

ஜெனீவா தீர்மானத்தை இலங்கை நடைமுறைப்படுத்துவது சந்தேகம்

மதங்கள் ஊடாக தமிழ் மக்களுடைய தனித்துவத்தை அழிப்பதற்கு அரசாங்கம் விரும்புகின்றது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார். 

தினகரன் வாரமஞ்சரிக்கு வழங்கிய விசேட பேட்டியிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் தெரிவித்த கருத்துக்கள் முழுமையாக...

கேள்வி: அண்மையில் ஏற்பட்ட அரசியல் குழப்பத்தின் போது ரணில் அரசாங்கத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு ஆதரவு வழங்கியிருந்தது. இதன்போது ரணில் அரசாங்கத்திடம் ஏதாவது வாக்குறுதிகள் பெறப்பட்டதா?

பதில்: நாடுகளில் அரசியல் குழப்பங்கள் ஏற்படுவது வழமை. அதுபோன்றுதான் இங்கு ஏற்பட்டது. இதில் இரண்டு அரசியல் கட்சிகளும் பௌத்த சித்தாந்த கொள்கையில் மூழ்கிய இனவாத கட்சிகள்தான். இதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தீர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்கின்ற முக்கிய இடத்தை வகித்தது என்பது யாவரும் அறிவார்கள். இதேவேளை, தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஏதோ ஒரு முடிவினை எடுக்கவேண்டிய கடப்பாட்டுக்குள் தள்ளப்பட்டது. ரணில் அரசுக்கு ஆதரவு வழங்காது விட்டால் மகிந்த அரசுக்கு மறைமுக ஆதரவை வழங்கியதாகவே அமையும். மகிந்தவையும் அவரின் அரசினையும் எமது மக்கள் மறக்கவுமில்லை மன்னிக்கவுமில்லை. அதேவேளை ரணில் அரசுடன் வழிநடத்தல் குழுவின் தொடர்ச்சியான முன்னெடுப்பு எமது மக்கள் முன்னெடுக்கின்ற பிரச்சினைகள் பிரதேச அபிவிருத்தி போன்றவை பேசப்பட்டது. 33நாட்களின் பின்  மக்களின் கருத்து அறிந்துதான் முடிவெடுத்தோம்.

கேள்வி: அண்மையில் மன்னாரில் ஏற்பட்ட மத விவகாரத்தை எப்படிப் பார்க்கின்றீர்கள்?

பதில்: மன்னாரில் ஏற்பட்ட மத விவகாரம் இரு மத பெரியோர்களும் பேசித் தீர்க்கப்பட வேண்டியது. மத விரோத போக்கைக் தூண்டி அரசியல் இலாபம் தேடுவோருக்கு இடமளிக்கவும் கூடாது. இன்றைய சூழலில் எமது மதங்களுக்கிடையிலான ஒற்றுமை இன்றியமையாததாகும். மதங்கள் ஊடாக தமிழ் மக்களுடைய தனித்துவத்தை அழிப்பதற்கு அரசாங்கம் விரும்புகின்றது.

கேள்வி: தற்போதைய அரசாங்கத்தின் காலத்திலும் வடக்கில் பௌத்தமயமாக்கல் இடம்பெறுவதான குற்றச்சாட்டு மக்களிடம் உள்ளது. இதனை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

பதில்: இதை ஏற்றுக்கொள்ள முடியாது. அனைத்து பேரினவாத அரசுகளும் பௌத்த பேரினவாத சிந்தனையில்தான் தமது அரசியல் விஞ்ஞாபனத்தை நகர்த்துகின்றன. அவர்கள் அனைவரின் எண்ணப்பாடுகளும் இலங்கை ஒரு முழுமையான பௌத்த தேசம் என்பதை பறைசாற்றத் துடிக்கிறார்கள். அதற்கமையவே முந்தைய அரசுகளும் இப்போதைய அரசும் இனிவருகின்ற அரசுகளும் அதையே செய்யத்துடிக்கின்றன. அதில் விதிவிலக்கில்லை. இருப்பினும் எமது பூர்வீக தமிழ் தாயகப்பிரதேசத்தில் இவ்வாறான நிலை ஏற்படுத்திடாது தடுத்திட நாம் தீர்க்கமாக எதிர்த்தும் வாதிட்டும் வருகின்றோம். இது தொடர்பில் உரிய தரப்பினருக்கும் சர்வதேசத்திற்கும் அறிக்கையிட்டும் வருகின்றோம். எமது மக்களும் இதற்கெதிராக குரலெழுப்பி வருகின்றார்கள். அத்தோடு ஏனைய தமிழ் அரசியல் கட்சிகள் தமது சுய அரசியல் விஞ்ஞாபனத்தை ஒருபக்கம் வைத்துவிட்டு ஓரணியிலிருந்து குரல் கொடுக்கவேண்டியது இன்றைய காலத்தின் கட்டாயமாகும்.

கேள்வி: காணி விடுவிப்பு மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் தன்னெழுச்சியான போராட்டங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் மக்கள்பின் செல்கின்ற போதும் மக்கள் மத்தியில் அவர்கள் தொடர்பில் அதிருப்தி ஏற்பட்டுள்ளதாக நடந்துவரும் சம்பவங்கள் வெளிப்படுத்தியிருக்கின்றன. இதற்குக் காரணம் என்ன?

பதில்: அரசியல் - மக்களுக்காய், -அரசியலுக்காய் மக்கள் என்ற இரு துருவ அரசியல் செற்பாடுகள் உள்ளன. எமது அரசியல் மக்களுக்கான அரசியல். இவ்வரசியல் சக்கரத்தில் நாங்கள் ஒருபோதும் எம்மை அடையாளப்படுத்தி அரசியல் செய்திட முனையவில்லை. எமது மக்களின் எண்ணங்களையும் அபிலாஷைகளுக்கான ஏக்கத்தையும் புரிந்து எங்களுடைய காணாமல் போன உறவுகளின் நிலையினை கண்டறியவும் விளைகின்றோம். எமது நிலங்களை மீட்டு எமது மக்கள் நிம்மதியாய் வாழ வேண்டும். இதுவே எமது எண்ணம். ஆனால் அரசியலுக்காய் மக்களைப் பணயம் வைத்து தமது அரசியல் அடையாளங்களைப் பெறுவதற்கு கூட்டமைப்பிலிருந்து மக்களை வேறுபடுத்துவதற்கும் பல சக்திகள் முனைப்புக்கொண்டு நிற்கின்றன. அதனால்தான் இவ்வாறான தவறான செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன். இதற்கு காலமும் களமும் விடை சொல்லும்.

கேள்வி: காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் நிறுவப்பட்டுள்ள அலுவலகத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?

பதில்: இந்த அலுவலகம் எமது மக்கள் எதிர்பார்க்கின்ற தீர்வை பெற்றுத்தராது. இருப்பினும் காணாமல் ஆக்கப்பட்டடோர் என்று ஒரு வார்த்தையில் கூறிவிட்டால் அது காற்றோடு கரைந்துவிடும். அது பதிவாகிவிடாது. அரசால் அமைக்கப்பட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் எம்மைப் பொறுத்தமட்டில் ஒரு பதிவாகும். இதில் காணாமல் ஆக்கப்பட்டோர் எத்தனைபேர், எங்கே, எப்போது, எவ்வாறு காணாமல் ஆக்கப்பட்டார்கள் என்பது போன்ற ஆதாரபூர்வமான ஆவணங்களால் அது அமையவேண்டும். இன்ைறய சூழலுக்கு அது நிச்சயம் தேவை. மக்களின் வாக்குமூலத்தினையோ எழுத்துமூலத்தினையோ எவராலும் மாற்றியமைத்திட முடியாது. இவ்வலுவலகத்தை எமது எண்ணக்கருவுக்கமைய சர்வதேசம் முன் கொண்டு செல்வது எமது செயல்திறனில் உள்ளது.

கேள்வி: அந்த அலுவலகத்திற்கு ஆதரவாக தாங்கள் வாக்களித்துமுள்ளீர்கள் தானே?

பதில்: நான் முதலில் கூறியதற்கமைய எனது செயல்பாடு உள்ளது. அதனால் அதை நான் ஏற்றுக்கொள்கின்றேன். இதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. இலங்கையில் யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில் பல்லாயிரக்கணக்கானவர்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டனர் என்பதை உறுதிப்படுத்துவதற்காக அரசின் ஊடாக அதனைப் பதிவு செய்வதற்காகவே இந்த நிறுவனத்திற்கு வாக்களித்தேன்.

கேள்வி: தற்போதைய அரசாங்கத்தின் வரவு செலவு திட்டம் தொடர்பில் உங்களது நிலைப்பாடு என்ன?

பதில்: தற்போதைய வரவு செலவு திட்டத்திற்கு வாக்களித்தாலோ நிராகரித்தாலோ   அது வெற்றி பெறுவது திண்ணம். இதேவேளை இவ்வரசினூடாக எமது மக்களுக்குத் தேவையான அடிப்படை அபிவிருத்திகளைப் பெற்று வழங்குவது சாலச்சிறந்தது. எமது மக்கள் தற்பொழுது இரண்டு விதமான பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றார்கள். சமூக அபிவிருத்தி, தேசிய பிரச்சினைக்கான அரசியல் தீர்வு. இவ்விரண்டையும் நான் இரு கண்களாகப் பார்க்கின்றேன்.

அதனால்தான் தற்போதைய வரவு செலவு திட்டத்தில் பாதுகாப்புக்கு கூடுதலான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதனை எதிர்க்கின்றேன். அதேவேளை எமது தாயகப் பிரதேச அபிவிருத்திகளுக்கு கூடுதலான நிதியைகக் கோரியிருந்தோம் அதற்கமைய கணிசமான நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதனைப் பயன்படுத்தி எமது பிரதேச அபிவிருத்தியினை ஒரு பக்கம் முன்னெடுப்போம். மறுபக்கம் எமக்கான நிரந்தர அரசியல் தீர்வு மற்றும் மனித உரிமை மீறல் தொடர்பான பொறிமுறையில் முனைப்புடன் நிற்போம். அதனால் இந்த வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவு வழங்கியுள்ளோம்.

கேள்வி: ஜெனீவாவின் தற்போதைய நிலைப்பாடு மற்றும் கால அவகாசம் தொடர்பில் உங்கள் கருத்து என்ன?

பதில்: 2015ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட 30/1தீர்மானத்தில் இலங்கையில் நடைபெற்ற யுத்த குற்றத்தை விசாரிப்பதற்கு இலங்கை அரசாங்கம் இணங்கி கைச்சாத்திட்டது. 2017ம் ஆண்டு அதே தீர்மானம் 34/1தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படுமென்று இலங்கை அரசாங்கம் இணங்கி கைச்சாத்திட்டது. ஆனால், இலங்கை அரசாங்கத்தால் அதற்குரிய எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை. அதேபோன்று 2019ம் ஆண்டு 40/1தீர்மானம் அண்மையில் இலங்கை அரசாங்கத்தின் சம்மதத்துடன் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது. இந்த தீர்மானத்தையும் சர்வதேச மேற்பார்வையின் கீழ் இலங்கை அரசாங்கம் முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும்.

ஆனால் இலங்கை அரசாங்கம் இதை நடைமுறைப்படுத்துமென்று நான் நம்பவில்லை. இந்த 40/1தீர்மானத்தை இலங்கை அரசாங்கம் நடைமுறைப்படுத்தவில்லை எனில், சகல தமிழ் கட்சிகளும் சகல புலம்பெயர் அமைப்புக்களும் ஒன்றாக இணைந்து, 24நாடுகளுடைய ஆதரவை பெற்று இலங்கை அரசாங்கம் நடைமுறைப்படுத்தாத விடயங்களை நடைமுறைப்படுத்துகின்ற தீர்மானம் ஒன்றை ஐ.நா.மனித உரிமை பேரவையில் கொண்டு வருவதற்கு முயற்சி செய்ய வேண்டும்.

கி.வசந்தரூபன்

Comments