நியூசிலாந்து தாக்குதல் குடியேற்றவாசிகளுக்கு எதிரானதா? | தினகரன் வாரமஞ்சரி

நியூசிலாந்து தாக்குதல் குடியேற்றவாசிகளுக்கு எதிரானதா?

அதி பயங்கரமான தாக்குதலின் பிரதிமை ஒன்றை தவிர்க்க முடியாது நியூசிலாந்து மக்கள் அனுபவித்துக் கொண்டிருக்கின்றார்கள். கடந்த வாரம் முழுவதும் அதன் துயரம் அந்த மக்களை துன்பப்படுத்திக் கொண்டுள்ளது. அந்த நாட்டின் இளம் பெண் பிரதமர் ஜசின்டா ஆர்டன் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார். நியூசிலாந்து நாட்டின் கிறைஸ்ட்சர்ச் கரில் அமைந்துள்ள அல்நூரா மற்றும் லிஒட்மஸ்ஜித் மசூதியிலும் துப்பாக்கிதாரி நடத்திய தாக்குதலில் 50 இற்கு மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர்.

பலியானவர்களில்  சுமார் 27 பேர் வயோதிபர்கள் என்பது மேலும் துயரமான செய்தியாக அமைந்துள்ளது. அத்தாக்குதலை நடாத்திய பென்ரொன் ஒரு அவுஸ்திரேலியன் என்பதுவும் கவனிக்கப்பட வேண்டியவிடயமாகும். இக்கட்டுரையும் அத்தாக்குதலின் பிரதிமைகளை தேடுவதையே நோக்கமாகக் கொண்டது. 

இத்தாக்குதலை நடாத்தியவர் வழங்கிய தகவலின் படி இரண்டு விடயம் அதிகம் கவனிக்கப்பட வேண்டியதாகும். ஒன்று ஆயுததாரி ஒரு இஸ்லாமிய இயக்கத்தை சேர்ந்தவரென்றும் இது திட்டமிட்ட பயங்கரவாதத் தாக்குதல் என்றும் குறிப்பிடப்படுகின்றது. இரண்டாவது அவரது தகவலின் படி குடியேற்றக்காரருக்கு எதிரான தாக்குதலாகவே தாம் இதனை மேற்கொண்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளமை கவனிக்கத்தக்க விடயமாகும். 

முதலில் இது ஒரு தீவிரவாதத் தாக்குதலாக அமைந்துள்ளமை அக்காட்சிகள் தெளிவாக உணர்த்துகின்றன. அதனை சாதாரண துப்பாக்கிதாரி நிகழ்த்தமுடியாத மாதிரியில் நடந்துள்ளது. நேரம் இத்தகைய தாக்குதல்களை ஐஎஸ் மற்றும் தீவிரவாத சக்திகள் உலகம் முழுவதும் மேற்கொண்டுவருவது அவதானிக்கக்கூடிய அம்சமாகவுள்ளது. ஐரோப்பா எங்குமே இத்தகைய தாக்குதல்கள் பல தசாப்தங்களாக நடைபெற்று வந்தன. தற்போது அது அவுஸ்ரேலியாக் கண்டத்தை நோக்கி நகர்த்தப்பட்டுள்ளது. அது உலகம் முழுவதும் நிகழ்ந்துவரும் தாக்குதலில் ஒன்றாக இதனை ஏற்படுத்த தாக்குதல்தாரிகள் முயன்றிருக்க முடியும்.  

அது தீவிரவாதத்தின் ஒருவகை உபாயமாக அமைந்துள்ளமை தெரிந்த ஒருவிடயம். அதனால் இத்தாக்குதலை ஒரு தீவிரவாதத் தாக்குதலாக வடிவமைக்க முயற்சிக்கப்பபடுகிறது. அதனை அப்படியே கையாள வேண்டுமாயின் நியூசிலாந்தின் தேசிய பாதுகாப்பிலேயே அதிக கவனம் கொள்ள வேண்டும். அவுஸ்ரேலியாவின் தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைக்கு ஒப்பானதாக எதனையும் நியூசிலாந்து மேற்கொள்ளாதபோது எவ்வாறு தீவிரவாதத் தாக்குதல் என அழைப்பது என்பது முதல் கேள்வியாகும். இரண்டாவது இஸ்லாமிய தீவிரவாதமென குறிப்பிடுமளவுக்கு அதனை வரையறுக்க முடியாது. காரணம் பள்ளிவாசல் மீதான தாக்குதலாக அமைந்துள்ளமையாகும். இஸ்லாமியத் தீவிரவாதம் இஸ்லாமியனை கொலை செய்தாலும் அதனை பள்ளிவாசலில் வைத்து நிகழ்த்துமா என்பது பிரதான சந்தேகமாகும். அது மட்டுமன்றி இஸ்லாமியத் தீவிரவாதத் தாக்குதலுக்கு நியூசிலாந்து பிரதமர் எடுக்கும் நடவடிக்கை எதுவும் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையவில்லை. துப்பாக்கிகளின் விற்பனையை நிறுத்துதல். சாதாரண மக்கள் துப்பாக்கியை கொள்ளவனவு செய்யத் தடை ஏற்படுத்தியமை மற்றும் அரசு பின்பற்றி வந்த ஆயுத விநியோக நடவடிக்கையில் மாற்றத்தை ஏற்படுத்தி வருகின்றமை என்பன நிகழ்ந்து வருகிறது. கைது செய்யப்பட்ட துப்பாக்கிதாரியை கைதிகள் போன்று பராமரித்து வருகின்றமை என்பன கவனிக்கத்தக்கது. அது வளர்ந்த நாடுகளின் அரசியல் பண்பாடாக அமைந்தாலும் தீவிரவாதம் பொறுத்து கையாளப்படும் முறைமை மிகவும் இயல்பானதாக அமைந்துள்ளது.  

எனவே தான் இதனை குடியேற்றவாசிகளுக்கு எதிரான தாக்குதலாக பார்க்க வேண்டியுள்ளது. அத்தகைய நடவடிக்கைக்கு ஒன்றான முகாந்திரத்தை தாக்குதலுக்கு சற்று நேரத்திற்கு முன்பு தாக்குதல்தாரி  பிரதமர் உட்பட சிலருக்கு மின் அஞ்சலில் அனுப்பியுள்ளார். பொதுவாகவே குடியேற்றவாசிகளால் பற்றிய சர்ச்சை நியூசிலாந்தில் மட்டுமல்ல உலகம் முழுவதும் ஏற்பட ஆரம்பித்துள்ளது. தொழிவாய்ப்புக்கள் போதிய வசதியின்மைகள் இயல்பான சுதேசிகளின் வாழ்க்கை முறைகள் பொருளாதார மற்றும் வாழ்க்கை செலவீனங்களின் அதிகரிப்பு என்பன பாரிய பாதிப்பினை சுதேசிகளுக்கு ஏற்படுத்திவருகிறது. ஏற்கனவே தமது சுகபோக வாழ்க்கையையும் மனித விழுமியங்களுக்கான சட்டதிட்டங்களையும் பாதிக்குமளவுக்கு குடியேற்றவாசிகளது நடத்தைகள் காணப்படுகின்றன. குறிப்பாக ஐரோப்பாவிலும் அவுஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவிலும் காணப்படும் நலன்பேணும் அரசுகளின் சலுகைகளை அனுபவிக்கும் குடியேற்றவாசிகள் அதிகரித்துள்ளமை சுதேசிகளின் இருப்பினை பாதிப்புக்கு உள்ளாக்குகிறது. அரசுகள் குடியேற்றவாசிகளை அதிகமாக உள்வாங்குவதன் மூலம் தமது தேசங்களின் நலன்களையும் புதிய குடியேற்றங்களையும் சாத்தியப்படுத்த முடியும் என்ற நியாயப்பாடுகளை கடந்து பெருமளவுக்கு அவர்களது வருகையால் சுதேசிகளது வாழ்க்கை முறைமைகள் அதிக பாதிப்பினை ஏற்படுத்தி வருகிறது. குடியேற்றக்காரர்கள் புதிய குடியேற்றங்களை அமைத்து நகரமயவாக்கத்தையும் குறைந்த ஊதியத்திலான தொழில்வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுத்தாலும் அந்த நாட்டு மக்களின் வாய்ப்புக்களை பாதிக்கும் விதத்தில் குடியேறிகள் செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுகிறது. அத்தகைய குடியேற்றவாசிகளது குவிவானது அந்த நாடுகளால் எதிர்கொள்ள முடியாதுள்ளது. இதனால் உலகம் முழுவதும் குடியேற்றவாசிகள் மீதான நடவடிக்கைகள் எதிரானதாக அமைந்துள்ளன. 

இத்தகைய குடியேற்றவாசிகளது குவியலுக்கு பின்னால் வல்லரசுகளது அணுகுமுறைகளே காரணமாக அமைந்துள்ளது எனலாம். காரணம் இராணுவ நடவடிக்கைகளும் தாக்குதல்களும் ஆசிய ஆபிரிக்க நாடுகளை நோக்கி நிகழ்ந்து கொண்டிருப்பதுவும் இந்த நாடுகளது வளங்களை சுரண்டிச் செல்லும் உத்தியுடன் வல்லரசுகள் செயல்படுவதுவும் பாரிய சவாலானதாக அமைந்துள்ளது. பெருமளவுக்கு இஸ்லாமிய நாடுகளில் அமெரிக்கா தலைமையிலான யுத்தங்கள் அந்த நாட்டு மக்களை பாரிய துயரத்திற்குள் தள்ளிவருகிறது. எண்ணெய்வள நாடுகள் முழுவதிலும் முரண்பாட்டையும் மோதலையும் உருவாக்கி அதன் வாயிலாக நிகழ்த்திவரும் அழிவுகளிலிருந்து தப்பிக் கொள்வதற்கான உத்தியாகவே குடியேற்றவாசிகளது ஐரோப்பா நோக்கிய படையெடுப்பு நிகழ்கிறது. அதனையே அவுஸ்திரேலியாக் கண்டம் நோக்கியும் ஏற்படுத்தி வருகின்றன.  

அது மட்டுமன்றி அரசியல் தஞ்சம் கோரி அதிகமான மக்கள் வளர்ந்த நாடுகள் நோக்கி செல்கின்றனர். இதனை ஒரு காலத்தில் ஊக்குவித்த வளர்ந்த நாடுகளின் அரசாங்கங்கள் இப்போது எதிர்கொள்ள முடியாது திணறுகின்றன. இதன் ஒரு கட்டமாகவே மெக்ஸ்ஸிக்கோவுக்கு எல்லைச் சுவர் அமைப்பதில் அமெரிக்கா கவனம் செலுத்துகிறது. இவ்வாறு அமெரிக்காவும் ஐரோப்பாவும் குடியேற்றவாசிகள் பற்றிய சர்ச்சையில் சிக்கியுள்ளன. அது வளர்ந்த நாடுகள் அனைத்துமே எதிர்கொள்ளுகின்ற அரசியல் நெருக்கடியாக மாறியுள்ளது. மீளவும் ஜேர்மனியில் நாசிஸ்ட்டுக்களின் சிந்தனை உணர்வும் அதிகரித்து வருகிறது. ஐரோப்பா முழுவதுவும் குடியேற்றத்துக்கு எதிரான கருத்தாடல்களும் உணர்வுகளும் ஏற்பட்டு வருகின்றமை கவனிக்கத்தக்கது.

இது ஒரு வகை தேசியவாத உணர்வினைத் தூண்டும் விடயமாக மாறிவருகிறது. ஐரோப்பிய தேசியவாதத்திலும் அமெரிக்க மரபிலும் சுதேசிகளது எழுச்சி அதிகரித்துவருகிறது. ஆட்சியாளர்களே அமெரிக்கா அமெரிக்கனுக்குரியது என்ற கோசத்துடன் ஆட்சியை பிடிக்கும் நிலை தவிர்க்க முடியாத சூழலை ஏற்படுத்தியுள்ளது. அதுவே ஐரோப்பாக் கண்டத்தையும் ஆக்கிரமித்து வருகிறது. பிரிட்டன் ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேறும் சிந்தனைக்கு பின்னால் அதன் பொருளாதார இலக்கும் பிரதான விடயமாக அமைந்துள்ளது எனலாம்.  

நட்பு முதலாளித்துவத்தின் ஆதிக்கமும் நவ தராள பொருளாதார பொறிமுறையின் இருப்பும் தனக்குள் சில மாற்றங்களை முதன்மைப்படுத்த தயாராகிவருகிறது. அதன் ஒரு கட்டமாகவே சுதேசத்தின் பொறிமுறையை அடையாளம் காணும் போது அதனை புதிய தளத்தில் வியாபிக்க முனைகிறது. அத்தகைய புதிய தேசியவாத உணர்வுகள் எல்லாம் புராதன கால தேசியவாத சிந்தனைக்கு நிகரானதாக இல்லாத போதும் அத்தகைய அடிப்படைக்குள் ஆட்சியையும் அதன் இருப்பினையும் கொண்டு இயங்குவதற்கான மரபுகளை வழிப்படுத்துவதாக அமைந்துள்ளது.இது வெளித் தோற்றத்தில் பொருளாதார இருப்புப் பற்றியதாக அமைந்தாலும் அரசியல் உறுதிப்பாட்டுக்கும் சட்டவரைபுகளின் பாதுகாப்புக்கும் மனித சுதந்திரத்திற்கும் எதிரான உணர்வுகளை கொண்டதாக அமைந்துள்ளது. இதனை அரசுகளும் அதன் தாக்குதல் சக்திகளும் பங்கு போட்டுக் கொள்ளும் சூழல் ஒன்றின் தாக்கம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இது முழு உலகத்தின் குடியேற்றவாதக் கொள்ளை மீதான புதிய உந்துதலுக்கு அடிப்படையாக அமையவுள்ளது.  

எனவே நீயூசிலாந்து தாக்குதல் குடியேற்றவாசிகளை இலக்கு வைத்துள்ளது. இதன் பிரதிபலிப்பு வளர்ந்த நாட்களின் அடிப்படை நியமங்களை மாற்றத்திற்கு உள்ளாக்கும் என்பது வெகு விரைவில் உணரக்கூடியதாகும்.

கலாநிதி கே.ரீ. கணேசலிங்கம்

யாழ்.பல்கலைக்கழகம்

Comments