ஜெனீவா உணர்வுகள்... உறவுகள்... பொறுப்புகள்... | தினகரன் வாரமஞ்சரி

ஜெனீவா உணர்வுகள்... உறவுகள்... பொறுப்புகள்...

நமது நாட்டின் அரசியலைப் பொறுத்தவரையில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை தலைமையகம் அமைந்திருக்கும் ஜெனீவா, சிங்கள வாசகத்திற்கு அமைய ‘உண்ண வேண்டுமாயின் கபரயனும் உடும்பாகிவிடும்’ என்பதற்கு சமமாகும்.  

88/89ஆண்டுகளில் தென்னிலங்கையில் ஏற்பட்ட சிங்கள கிளர்ச்சியை ஈவிரக்கமின்றி அரச படை அடக்கி ஒடுக்கியபோது தமது மனித உரிமைகள் பறிக்கப்படுவதாக ஒப்பாரியுடன் அன்று ஜெனீவா ஓடிய அதே தென்னிலங்கை சிங்கள சமூகம், அரசுக்கு எதிரான தமிழ் தரப்பின் 30ஆண்டு கால ஆயுத போராட்டம் அதே அரச படையினரால் ஆயுத முனையில் அடக்கி ஒடுக்கப்பட்ட போது அதனால் பாதிக்கப்பட்ட தமிழ் சமூகமே, தமது மனித உரிமைகள் பாதிக்கப்பட்டதாக அழுகுரலுடன் இன்று ஜெனீவா மனித உரிமைகள் தலைமையகத்திற்கு செல்வதை நாட்டின் இறைமையை வெள்ளையரிடம் தாரைவார்த்துக் கொடுப்பதாக குற்றஞ் சுமத்துகின்றது. ஒரே நாட்டை சேர்ந்த இரு இனங்கள் தமக்கு நேர்ந்த ஒரே விதமான அநீதிக்கான பரிகாரம் தேடுவதை இரு விதமாக நோக்குகின்ற பின்னணியிலேயே ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணைக்குழுவின் அமர்வு முன்நகர்ந்து கொண்டிருக்கின்றது. பாதிக்கப்பட்ட சமூகம் என்ற வகையில் தமிழ் சமூகத்திற்கு நியாயம் கிடைக்கும் வரை இவ் அமர்வினை நாடிச்செல்ல வேண்டிய கட்டாயத் தேவை ஏற்பட்டிருக்கின்றது.  

தத்தெடுத்தோர் எத்தனையோ பேர் இருப்பினும் பெற்றவளையே தாய் என்பது வழக்கமாகும். அதேபோல் ஒரு மனிதன் என்னதான் உலகை சுற்றிவந்த போதிலும் அவன் பிறந்த நாடு மட்டுமே அவனுக்கு தாய் நாடாகின்றது. தாய் என்ற சொல்லுடன் இணைந்திருக்கும் பந்தமும் பாசமுமே அதற்கு காரணமாகும். பிறந்த மண் மீது ஒருவனுக்கு இருக்கும் இணைபிரியா உறவே பிறந்த நாட்டை தாய் நாடு, தாயகம் என்றெல்லாம் அழைக்க காரணமாகும். எங்கே எவர் தம்மை மாற்றான் தாய் பிள்ளையாக பார்த்தபோதிலும், ஒருவனை அவன் பிறந்த தாய் நாடு ஒருபோதும் மாற்றான் தாய் பிள்ளையாக பார்க்காது என்பதே இவ்வுலகில் பிறக்கும் எல்லா மனிதர்களினதும் நம்பிக்கையாகும். ஆயினும் இந்த போக்கிற்கு முற்றிலும் மாறான நிலைமைக்கு முகங்கொடுக்கின்ற ஒரு இனம் என்பதற்கு இலங்கை வாழ் தமிழ் இனமே முதன்மை முன்னுதாரணமாக இருந்து வருகின்றது. காலங்காலமாக பிறந்த மண்ணிலேயே பிறத்தியனாக பார்க்கப்படுகின்றமையே தமிழ் சமூகம் முகங்கொடுத்திருக்கும் இனப்பிரச்சினைக்கு அடிப்படைக் காரணமாகும்.  

இந்த யதார்த்தத்தை பின்புலமாகக் கொண்டு நோக்குகின்ற போதே இம்முறை ஜெனீவா சென்ற உயர்மட்ட அரச தூதுக்குழுவின் முக்கிய உறுப்பினராக வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் உள்வாங்கப்பட்டமை முக்கியத்துவம் பெறுகின்றது. இரண்டு தசாப்தங்களைத் தாண்டியிருக்கும் மாகாண சபை வரலாற்றில் முதல் முறையாக ஒரு தமிழரை வட மாகாண ஆளுநராக நியமித்ததன் மூலம் தமிழர் உணர்வுகளை மதிக்க வேண்டுமென்ற எண்ணத்தை கொண்டவர் என்பதை செயற்பாட்டு ரீதியில் நிரூபித்திருக்கும் ஜனாதிபதி அவர்கள் தமது சிறப்பு பிரதிநிதியாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அமர்விற்கு கலாநிதி சுரேன் ராகவனை அனுப்பி வைத்ததன் மூலம் தமிழர்களின் உண்மையான உணர்வுகளை உலகிற்கு எடுத்துக்கூறுவதற்கான வாய்ப்பினையும் ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றார்.  

இந்த வாய்ப்பினை சுரேன் ராகவன் மிக நேர்த்தியாக பயன்படுத்தியிருக்கின்றார் என்பதை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் செயலாளரிடம் அவர் எடுத்துரைத்திருக்கும் விடயங்கள் சான்று பகர்கின்றன.  

‘இன்று நான் வட மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கின்ற போதிலும் அன்றைய ஆடிக் கலவரத்தின் போது அதுவரை நான் மனதார நேசித்து வந்த சகோதர சிங்கள இனத்தவராலேயே அகதியாக்கப்பட்டினால் ஏற்பட்ட வேதனைகளையும் அவஸ்தையையும் நான் நன்கு அறிவேன். அதனால் எமது தமிழ் சமூகம் அனுபவித்து வரும் வேதனைகளையும் சோதனைகளையும் உணர்வுபூர்வமாகவும் அனுபவபூர்வமாகவும் நான் உணர்ந்துள்ளேன்’ அந்தவகையில் மீண்டும் ஒரு மோதல் ஏற்படுவதை தாம் விரும்பவில்லை என்பதை மிகத் தெளிவாக எடுத்துரைத்திருக்கும் சுரேன் ராகவன் தமிழ் சமூகத்தின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதையும் அதேநேரத்தில் நாட்டின் நலன்களை பாதிக்கும் வகையிலான வெளிநாட்டவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க முடியாது என்பதையும் மிகத் தெளிவாக எடுத்துரைத்திருக்கின்றார்.  

மறுபுறத்தில் இதுவரை அரச பாதுகாப்பு படைகள் வசம் இருந்துவந்த நில விடுவிப்பு சம்பந்தமான தகவல்களை இராஜதந்திர முறையில் அறிந்து கொள்வதற்கு பதிலாக ஊடக அறிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையில் தகவல் வெளியிட்டிருப்பதை சுட்டிக்காட்டியிருக்கும் கலாநிதி ராகவன் இதுவரையிலான நிலவிடுவிப்பு பற்றிய உண்மையான புள்ளிவிபரங்களையும் ஆதாரபூர்வமாக எடுத்துரைத்திருக்கின்றார். இதுவரை காலமும் ‘கேப்பாபிலவு’ என்றால் கிலோ எவ்வளவு என்று கேட்கின்றவர்கள் ஐக்கிய நாடுகள் சபையில் வீராப்பு பேச்சு பேசி வந்தமைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கும் சுரேன் ராகவன், தான் வட மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டது முதல் ஜெனீவா செல்லும் வரையிலான இந்த குறுகிய காலத்திற்குள்ளேயே பல தடவைகள் கேப்பாபிலவு சென்று அங்கே தொடர் போராட்டத்தில் இருந்துவரும் மக்களையும் நிலவிடுவிப்பிற்கான அனுகூலத்தை பெற வேண்டிய அரச படைகளையும் நாட்டின் ஜனாதிபதியையும் சந்தித்து பேசி நிலவிடுவிப்பு பிரச்சினையை உண்மையாகப் புரிந்துகொண்டு அதற்கு நியாயமான தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதில் அர்ப்பணிப்புடன் செயற்பட்டுவரும் விபரம் அறிந்த ஒருவர் என்ற வகையில் அவரது பங்கேற்பு இம்முறை ஐ.நா. அமர்வினை அர்த்தபுஷ்டியாக்கியிருக்கின்றது எனலாம்.  

அதேபோல் இறுதி யுத்தத்தின்போது காணாமல் போனவர்களின் உறவினர்களும் காலம் காலமாக தம்மை தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என தமக்கு தாமே பெயர் சூட்டிக்கொண்டிருக்கும் பல அரசியல்வாதிகளும் ஐ.நா.வில் நீங்களே எமது மக்கள் சார்பில் குரல் கொடுக்க வேண்டும் என்று அவையில் கூறவேண்டிய விடயங்களை எழுத்து மூலமாகவே பெற்றுக்கொடுத்ததன் மூலம் கடந்த காலங்களில் ஐ.நா. சென்றவர்களுடன் ஒப்பிடும்போது பொருத்தமான ஒருவரை அரசாங்கம் இம்முறை தமது அங்கத்தவராக அனுப்பி வைத்துள்ளமை தெளிவாகின்றது.  

அந்த வகையில் தமது இனம் சார்ந்த உறவுகளின் உண்மையான உணர்வுகளையும் தாம் வகிக்கின்ற உயர் பதவியின் பொறுப்புக்களையும் சுமந்து ஜெனீவா சென்ற சுரேன் ராகவன், தமிழ் சமூகத்தின் தற்கால அரசியல் பிரச்சினைகள் மீது சர்வதேசம் கொண்டிருக்கும் பார்வையில் ஒரு சாதகமான மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான ஆரம்ப அடியை எடுத்து வைத்திருக்கின்றார் என்றால் அது மிகையாகாது. 

ரவி ரத்னவேல்

Comments