லேக்ஹவுஸ் புதிய நிதிப் பணிப்பாளர் நியமனம் | தினகரன் வாரமஞ்சரி

லேக்ஹவுஸ் புதிய நிதிப் பணிப்பாளர் நியமனம்

முறிகள் சர்ச்சைக்கும் அவருக்கும் தொடர்பில்லை

லேக்ஹவுஸ் நிறுவனத்துக்கு புதிய நிதிப் பணிப்பாளர் ஒருவரை நியமிப்பதற்கு நானே தீர்மானித்தேன். ஸ்தாபகர் டி.ஆர் விஜயவர்தனவுக்கு லேக்ஹவுஸ் நிறுவனத்தை கட்டியெழுப்ப பெரும் உதவி செய்த ஒருவருக்கு நன்றிக்கடன் செலுத்தும் முகமாகவே அனைத்து தகுதிகளையும் கொண்ட அவரது பேரனுக்கு அந்த வாய்ப்பை அளிக்க விரும்பினேன் என ஊடகத்துறை அமைச்சர் ருவன் விஜயவர்தன நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். 

இதேவேளை, சிபாரிசு செய்யப்பட்டுள்ள புதிய நிதிப் பணிப்பாளர் பெர்பட்சுவல் ட்ரசரிஸ் நிறுவனத்தில் பணியாற்றியபோதும் அவருக்கும் முறிகள் சர்ச்சைக்கும் எவ்வித தொடர்பும் இல்லையென்றும் அமைச்சர் மறுத்தார். 

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மஹேந்திரனுக்கு ஆதரவளிப்பதற்கோ அல்லது லேக்ஹவுஸ் நிறுவனத்திலிருந்து திருடுவதற்கோ எனக்கு எந்த தேவையும் இல்லை என்றும் அமைச்சர் பாராளுமன்றத்தில் உறுதியாக கூறினார். 

பாராளுமன்றத்தில் நேற்று சனிக்கிழமை கைத்தொழில், வாணிப அலுவல்கள் , நீண்டகால இடம்பெயர்ந்தோர் மீள் குடியேற்றம் , கூட்டுறவு அமைச்சு மற்றும் வெகுஜன ஊடகத்துறை பற்றிய அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சு மீதான வரவு செலவு திட்ட விவாதம் நடைபெற்றது. இதன்போது அநுரகுமார திசாநாயக்க எம்.பி யின் கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் முகமாகவே அமைச்சர் மேற்படி தெரிவித்தார். 

அமைச்சர் ருவன் விஜயவர்தன தொடர்ந்தும் விளக்கமளித்ததாவது- 

லேக்ஹவுஸ் நிறுவனத்தின் புதிய பணிப்பாளராக ரஞ்சன் ஹுலுகல்லவை நியமிப்பதற்கு நானே தீர்மானித்தேன். இதில் பிறர் எவருடைய தலையீடும் இருக்கவில்லை. அவர் எனது உறவினர் அல்லர். எனினும், அவரது தாத்தாவான எச்.ஏ.ஜி ஹுலுகல்ல எனது தாத்தாவான டி.ஆர் விஜயவர்தனவுக்கு லேக்ஹவுஸ் நிறுவனத்தைக் கட்டியெழுப்ப பெரும் உதவி செய்திருந்தார். அவருக்கு நன்றிக்கடன் செலுத்தும் முகமாகவே அவரது பேரனுக்கு லேக்ஹவுஸ் நிறுவனத்தில் நிதிப் பணிப்பாளர் பதவியை வழங்கத் தீர்மானித்தேன். அதற்கான அனைத்து தகுதிகளையும் அவர் கொண்டுள்ளார். 

நான் சிபாரிசு செய்துள்ள புதிய நிதி பணிப்பாளர் பெர்பட்சுவல் ட்ரசரிஸ் நிறுவனத்தில் பணியாற்றியிருந்தபோதும் அவருக்கும் குற்றம்சாட்டப்பட்டுள்ள முறிகள் மோசடிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை.

விசாரணைகளுக்காகவே நீதிமன்றத்தில் அவரது கடவுச்சீட்டுக்கள் மீளப் பெறப்பட்டுள்ளனவே தவிர எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அவர் குற்றவாளியாக நிரூபிக்கப்படவில்லை. 

தகுதி மற்றும் அவரது தாத்தாவுக்கு செலுத்தும் நன்றிக்கடன் அடிப்படையிலேயே நான் அவரை தெரிவு செய்தேனே தவிர லேக்ஹவுஸ் நிறுவனத்திலிருந்து திருட வேண்டிய அவசியமோ தேவையோ எனக்கில்லை. விஜய பத்திரிகை நிறுவனம் எனது குடும்பத்தால் நடத்தப்பட்டாலும் அமைச்சரென்ற வகையில் நான் லேக்ஹவுஸ் நிறுவனத்துக்கே பொறுப்புடையவராகின்றேன். 

இந்த சிபாரிசு கடிதத்தை நான் ஊடக அமைச்சின் மேலதிக செயலாளருக்கே அனுப்பி வைத்தேன். அவர் அதனை திறைசேரிக்கு அனுப்புவதற்கு பதிலாக தவறுதலாக லேக்ஹவுஸ் நிறுவனத்தின் தலைவருக்கு அனுப்பி வைத்துள்ளார் என்றும் குறிப்பிட்டார். 

சிபாரிசு செய்யப்பட்டுள்ள புதிய நிதிப் பணிப்பாளர் பெர்பட்சுவல் நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் என்பதை அவரது விண்ணப்பபடிவத்தில் குறிப்பிடாதது ஏன் என ஜே.வி.பி பாராளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திசாநாயக்க எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கு முகமாகவே அமைச்சர் ருவன் விஜயவர்தன மேற்படி விளக்கத்தை முன்வைத்தார்.

(லக்ஷ்மி பரசுராமன்)   

Comments