மாற்று வழியை நாம் சிந்திக்க வேண்டாமா? | தினகரன் வாரமஞ்சரி

மாற்று வழியை நாம் சிந்திக்க வேண்டாமா?

பெருந்தோட்டத்துறையின் எதிர்காலம் குறித்ததான ஆய்வு ரீதியிலான முன்னகர்வுகள் எதுவும் எடுக்கப்படுவதாக இல்லை. அரசு மட்டத்தில் கூட இது சம்பந்தமான அவதானம் செலுத்தப்படக் காணோம். நீண்டகால குத்தகைக்கு பெருந்தோட்டங்களை எடுத்துள்ள பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் (கம்பனி தரப்பு) கவனமேதும் கொள்வதாகப்படவில்லை. ஒட்டுமொத்தமாக இத்துறை சார் மக்களைப்போல பெருந்தோட்டங்களும் புறக்கணிக்கப்பட்டு வருவதாகவே தெரிகின்றது.  

இன்று தோட்டக் கம்பனிகளுக்கும் ஈடுபாடு குறைவு. இத்தனைக்கும் அரசு, கம்பனி நிர்வாகம், தொழிலாளர்  ஆகிய முத்தரப்புக்கும் வருமானம் தேடித்தரும் துறை இது. பெருந்தோட்டத்துறை வீழ்ச்சியை நோக்கி பயணிக்கும் நிலைமை இத்துறைசார்ந்த 150000தொழிலாளர்களைப் பொறுத்தவரை அச்சுறுத்தலான சங்கதியே. ஏனெனில் தேயிலைத் தொழிற்றுறை அழிந்துபோகும் நிலையில் அதற்கு மாற்றீடாக எந்தவொரு தொழிலும் இனம் காணப்படாமல் உள்ளது. இதனால் இத்துறையை நம்பி வாழும் மக்கள் கையறு தன்மைக்கு உள்வாங்கப்படுவது அபத்தம். 

இன்றைய நிலையில் இத்துறையை மீளக் கட்டியெழுப்புவது என்பது சாதாரண சங்கதியல்ல. இன்று பெருந்தோட்டங்கள் காடுகளாக காட்சியளிக்கின்றன. தேயிலைப் பயிருக்கு உகந்ததான பெறுமதிவாய்ந்த மரங்கள் வெட்டிக் காசாக்கப்படுகின்றன. ஏகப்பட்ட தேயிலைத் தொழிற்சாலைகள் மூடப்பட்டு விட்டன. ஆளணிப் பற்றாக்குறை அதிரடித் தாக்கம் செலுத்துகின்றது. போதிய ஊதியமின்மையால் பாரம்பரிய தொழில் முறைமையைக் கைவிட்டு வேறு தொழில் தேடி இடம்பெயர வேண்டிய நிர்ப்பந்தம். இதிலிருந்து கவனத்தை திசை திருப்பக்கூடிய திருப்பம் ஏற்படுத்த கம்பனி தரப்பு தயாரில்லை. தட்டிக் கழிப்புகளும் குறைகாணல்களும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. 

பெருந்தோட்ட மக்களின் வரலாறு 200வருடங்களை எட்டியுள்ளது. எனினும் தொழில் ரீதியிலும் சமூக ரீதியிலும் முன்னேற்றமும் அடைந்தபாடில்லை. மானுட வாழ்வியலின் முக்கிய அம்சங்கள் இரண்டு. ஒன்று பொருளாதாரம் அடுத்தது காணி (வாழ்விடம்) உரிமை. இந்த இரண்டுமே இங்கு கைக்கு எட்டியும் வாய்க்கு எட்டாத நிலைமை. நாட்டின் பொருளாதாரத்தை தன் முதுகு மீது தாங்கி நிற்கும் இச்சமூகம் தனது வீட்டின் பொருளாதாரச் சுமையைத் தாங்க முடியாமல் தவியாய்த் தவிக்கின்றது. இதனால் பெருந்தோட்டத்துறையை தொடர்ந்தும் தஞ்சமடைந்து கொண்டிருப்பதில் அர்த்தம் இருப்பதாகத் தெரியவில்லை. 

அதே நேரம் சட்டென இத்துறையை உதறித் தள்ளிவிட்டு வேறு தொழிலைப் பற்றிப் பிடித்திட முன்னேற்பாடும் இல்லை. இப்பொழுது இம் மக்களுக்குத் தேவை தேயிலை தொழிலுக்கு மாற்று ஏற்பாடு. அந்த மாற்று ஏற்பாடு என்பது சுயதொழில் முயற்சிகளில் அவர்களை ஈடுபடுத்துவதுதான். இங்கும் ஒரு சிக்கல் இருக்கவே செய்கின்றது. சுயதொழில் முயற்சிகள் பெரும்பாலும் கெளரவத்துக்குரியவை. விவசாயம், சிறு விற்பனை, கைத்தொழில்கள் இவற்றுள் அடங்கும். உற்பத்தியும் விற்பனையும் ஒரே இடத்தில் இருந்தே நிகழ்வதால் இலாப நட்டத்தை சமன் செய்து கொள்ள முடியும்.

மலையகத்தைப் பொறுத்தவரை சுயதொழில் முயற்சிகளுக்கு ஏற்புடையதான காலநிலை, பெளதீக அமைவு காணப்படுகின்றது. இதன் மூலம் எற்றுமதி விவசாயத்தை மேற் கொள்ளவும் முடியும். தற்போது பெருந்தோட்ட மக்கள் மரக்கறி விவசாயத்தில் ஈடுபட்டுள்ளார்கள். இதன் மூலம் கணிசமான ஆதாயத்தை தேடிக்கொள்ள முடிகின்றது. சிலர்  பண்ணை உற்பத்தியில் ஈடுபாடு கொண்டுள்ளார்கள். இதவும் கூட வருமானம் ஈட்டும் தொழில்தான். இத்துறைகளின் இளைஞர்களை ஈர்த்துக்கொள்ள முறையான திட்டங்கள் இல்லை. ஆலோசனைகள் வழங்கவோ நிதி வழங்கவோ தேசிய ரீதியிலான வேலைத்திட்டங்கள் எதுவும் இங்கு எட்டிப்பார்ப்பது கிடையாது. 

சுயமாக தொழில் செய்து சம்பாதிக்கக்கூய கைத்தொழில்கள் ஏராளம். அரசியல்வாதிகளின் தேர்தல்கால வாக்குறுதியான தொழிற்பேட்டைகள் எல்லாமே கனவுத் தொழிற்சாலைகள். தோட்டப் பிரதேசங்களை மையப்படுத்தி வளங்களை கண்டறிந்து புதிய ஏற்பாடுகளை செய்ய ஆய்வுகள் அவசியம். அரசு சார்பற்ற தொண்டு நிறுவனங்களின் ஆய்வுகள் காகிதத்தாள் பிரகடனங்களாகவே இருக்கின்றன. தவிர ஒவ்வொரு இளைஞனிடமும் பொதிந்து கிடக்கும் ஆற்றலை இனங்காணும் முயற்சியில் இந்நிறுவனங்கள் ஈடுபட்டாலும் முழுமையான பயிற்சிகளை வழங்கவோ தொழில் நிலையங்களைத் தாபிக்கவோ முடியாது. ஒரு அரசு சார்பற்ற தொண்டு நிறுவனம் மலையக இளைஞர்களுக்கு கைத்தொழில் பயிற்சிகளை வழங்க மூடிக்கிடந்த தேயிலைத் தொழிற்சாலை ஒன்றைப்பெற முயன்றும் இறுதிவரை இது ஈடேறவில்லை என்று கவலை தெரிவித்தது. இதுதான் பெருந்தோட்டக் கட்டமைப்பில் காணப்படும் இடையூறு. 

இங்கு கைத்தொழில் விவசாய முயற்சிகளில் ஈடுபடுவதற்கான இடத்தேவை காணப்படுகின்றது. இன்று பெருந்தோட்டச் சமூகம் 18மாவட்டங்களில் செறிந்து வாழ்கின்றது. எனினும் இவர்களுக்கென சொந்தமாக காணி உரிமை இல்லை. இரத்தின பூமி என்ற பெயரில் காணி விநியோகத் திட்டம் ஒன்று உள்ளது. இத்திட்டத்தின் கீழ் பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 20  பேர்ச் காணியும் நகரசபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 10பேர்ச் காணியும் தனி நபருக்கு வழங்கும் அதிகாரம் இருக்கின்றது. இதுதவிர விவசாயத்துக்கு 2ஏக்கர்  காணியும் தொழில்புரியும் தனியொரு ஆளுக்கு 30வருட குத்தகைக்கு காணி விநியோகிக்கவும் இடமுள்ளது. ஆனால் இதனால் பெருந்தோட்ட மக்களுக்கு இதுவரை எந்தவொரு நன்மையும் இல்லை. மஹிந்த ராஜபக்ஷ அரசாங்க காலத்தில் பெருந்தோட்டப் பகுதிகளில் பயிர்ச்செய்கைக்குப் பயன்படுத்தப்படாத 37000ஹெக்டயர் காணி இருப்பதாக கண்டறியப்பட்டது. 2012,   2013ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டங்களில் இத்தரிசு  நிலங்கள் தோட்ட இளைஞர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும். இதன் மூலம் அவர்களுக்கு சுயதொழில் வாய்ப்புகள் பெற்றுக்கொடுக்க முடியும் என்று அப்போது ஜனாதிபதியாக இருந்த மஹிந்த ராஜபக்ஷ கூறியிருந்தார்.  ஆனால் அது நடக்கவில்லை. அவரோடு இணைந்திருந்த மலையகத்  தலைமைகளும்  போதிய கரிசனைக் காட்டவில்லை.  

தற்போதைய அரசாங்கம் கொண்டு வந்த பசுமை பூமி காணி வழங்கும் திட்டமும் உருப்படியாக மேற் கொள்ளப்படாமலே உள்ளது. இத்திட்டத்தின்படி காணியைப் பெற்றவர்கள்  பரிபூரணமான காணி உறுதியைப் பெற முடியாதவர்களாகவே காணப்படுகின்றனர். நில உரிமை என்பது ஒரு நாட்டின் குடிமகனுக்கான அந்தஸ்து. அது கைக்குக் கிட்டாத பட்சத்தில் சுயதொழில் முயற்சிக்கான ஆர்வம் வராது. பெருந்தோட்டத் துறையை குத்தகைக்குப் பெற்றுள்ள கம்பனி தரப்பு இன்று அதன் மீதான ஏகபோகத்தைக் காட்டி நிற்கின்றது. தாம் நினைத்தபடி காணிகளைக் கையாண்டு வருகின்றது. ஆனால் தப்பித்தவறி தொழிலாளியொருவர்  சிறியளவு  காணியைக் கையகப்படுத்தினால் கூட நீதி மன்றம் வரை போக வேண்டியுள்ளது.

விவசாயத்தில் ஆர்வம் கொண்ட ஏற்கனவே சிறிதளவு காணியில் விவசாயம் செய்து ஆதாயம் அடைந்து அனுபவப்பட்ட பலர்  அதனை விரிவாக்கம் செய்ய விரும்பினாலும் காணிவசதி இல்லாமையால் கையைப் பிசைந்து கொள்ள வேண்டியுள்ளது.  

இன்று பெருந்தோட்டத்துறை பயிர்ச்செய்கை  பின்னடைவு கண்ட விவசாயமாக மாறிக்கொண்டிருக்கின்றது. இதனை மீட்க வழிவகைகள் எதுவுமே கண்டறியப்படவில்லை. இதனால் பெருவாரியான கூட்டமொன்று வேலையற்றோர்  பட்டியலில் உள்வாங்கப்படும் அபாயமுள்ளது. இதுதேசிய ரீதியில் பிரச்சினைகளைத் தொற்றுவிக்கவே செய்யும். தவிர அரசியல் ரீதியிலும் சிக்கல்களை ஏற்படுத்தும். பொருளாதாரம் சிறப்புற்றாலே தன் மனாத்துடன் வாழலாம் என்று முன்னாள் இந்தியப் பிரதமர்  ஜவஹர்லால் நேரு கூறினார்.  பெருந்தோட்ட மக்களைப் பொறுத்தவரை இன்று பொருளாதார நிலைமை மிகமிக மோசமான கட்டத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது.

இச் சமூகம் அதிலிருந்து மீள்வதற்கு மாற்று வழிவகைகள் கண்டாக வேண்டியது மலையக தலைமைகளின் பொறுப்பு. வெறும் 50ரூபா அதிகரிப்புக்கே அல்லாடும் நிலையில் பெருந்தோட்டத் துறையை வாழ்வாதார வழியாக தொடர்ந்தும் வலிந்தேற்றுக் கொள்ள வற்புறுத்துவது தொடர்ந்தும் வலிந்தேற்றுத் கொள்ள வற்புறுத்துவது சரியல்ல. கம்பனி தரப்போடு வம்புக்கு நின்று கால விரயம் செய்து கொண்டிருப்பதை விட ஆகக்கூடிய காரியங்களில் அவதானம் செலுத்துவதே புத்திசாலித்தனம். எனவே பெருந்தோட்டத்துறை மக்களுக்கு சுய தொழில் முயற்சிகள் சம்பந்தமான ஆலோசனைகள் வழங்கல், முதலீட்டுக்கான நிதி வசதி எற்படுத்தல். அடித்தள கட்டமைப்புக்கான காணி (இடம்) பெற்றுத்தரல் போன்ற தேவைகளை நிறைவேற்றி தன் மானத்துடன் வாழும் வழி வகைகளை அமைத்துத்தர வேண்டியது சகல மலையக தலைமைகளினதும் தார்மீகக்கடமை.   

பன். பாலா 

Comments