கெப்பிட்டல் இரட்டைக் கோபுர நிர்மாணப் பணிகள் பூர்த்தி | தினகரன் வாரமஞ்சரி

கெப்பிட்டல் இரட்டைக் கோபுர நிர்மாணப் பணிகள் பூர்த்தி

கொழும்பு -02 யூனியன் பிளேசில் அமைந்துள்ள ஐம்பது மாடி இரட்டைக் கோபுரங்களான கெப்பிட்டல் டவர்ஸ் கட்டட நிர்மாண வேலைகள் முடிவடைந்துள்ளன. பெருங்கட்டடங்கள் நிர்மாணிக்கப்படும்போது அதற்கான தளத்தை வெட்டும் (Ground Breaking) வைபவம் சிறப்பாக மேற்கொள்ளப்படும். அதேபோல, அக்கட்டடத்தின் நிர்மாண வேலைகள் முற்றுப் பெற்றதும், வேலை முடிவடைந்தது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கும் ஒரு வைபவத்தை நடத்துவதும் வழக்கம்.

இவ்வகையிலேயே கெப்பிட்டல் டவர்ஸ் இரட்டைக் கோபுரத்தின் நிர்மாணப் பணிகள் முடிவடைந்ததை குறிக்கும் மகிழ்ச்சி வைபவம் கடந்த வெள்ளிக்கிழமை (மார்ச் 15) கட்டட நிர்மாண பணியை கச்சிதமாகச் செய்து முடித்த சன்கன் நிறுவனத்தினால் கட்டடத்தின் 50ஆவது மாடியில் நடத்தப்பட்டது.

ஊடகவியலாளர்கள், கட்டடப் பணியாளர்கள் பயன்படுத்தும் தற்காலிக மின் தூக்கிகளில் ஏற்றப்பட்டு 50ஆவது மாடிக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். அங்கே மகிழ்ச்சி வைபவமொன்றுக்கான சகல ஏற்பாடுகளும், விதவிதமான சிற்றுண்டிகள், ஷெம்பெயின் மற்றும் வைன் வகைகளுடன் மேற்கொள்ளப்பட்டிருந்தன. மேல் தளத்தில் ஒரே ஒரு இடத்தில் மட்டும் மூன்றடி நீளம் இரண்டடி அகலத்தில் இடம் விடப்பட்டிருந்தது. அது இரண்டடி ஆழம் கொண்டதாக இருந்தது. அந்த ஆழத்தை கொன்கிறீட் கலவையில் நிரப்புவதை கட்டட நிர்மாண பொறியியலாளர்கள் ‘Topping up’ வைபவம் என அழைக்கிறார்கள்.

பளு தூக்கியால் கொன்கிறீட் கலவை மேலே. கொண்டுவரப்பட்டு இரும்பு பாத்திரங்களில் கொட்டப்பட்டது. மாலை ஆறரை மணியளவில் சன்கன் நிறுவனத் தலைவர், தலைமைப் பொறியியலாளர் ஆகியோர் சவளையால் கலவையை அள்ளி அச்சிறு குழிக்குள் போட்டனர். இந்த வைபவரீதியான நிர்மாணப் பணிகளை முடிவுக்குக் கொண்டுவரும் வைபவத்தின் பின்னர் உரைகள் இடம்பெற்றன. அதன் பின்னர் கேளிக்கைகள் ஆரம்பமாயின.

இந்த கெப்பிட்டல் டவர்ஸ் நிர்மாணப் பணிகள் குறிப்பிட்ட காலத்தை விட ஏழு மாதங்களுக்கு முன்னரேயே முடிக்கப்பட்டமை குறித்து சிலாகித்து பேசப்பட்டது.

கெப்பிட்டல் டவர்ஸ் அருகருகே இரண்டு கோபுரங்களைக் கொண்டிருப்பதுடன் ஐம்பதாவது மாடியில் ஒரு பாலத்தின் மூலம் இரண்டு கோபுரங்களும் இணைக்கப்படுகின்றன. பாலமொன்றின் மூலம் (Sky Bridge) இரு கோபுரங்கள் இணைக்கப்படுவது இதுவே இலங்கையில் முதல் தடவை.

கெப்பிட்டல் டவரில் 4738 அபார்ட்மெண்டுகள் உள்ளன. இக்கட்டட வேலைகள் 2020 டிசம்பரில் முற்றிலுமாக முடிவடைந்து திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எட்டாவது மாடியில் சிறிய தோட்டம், உடற்பயிற்சி நிலையங்கள், நீச்சல்குளம் போன்றவை அமைந்துள்ளன. 9ஆவது மாடியில் இருந்து 49வது மாடிவரை குடியிருப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு அபார்ட்மெண்ட் 46 மில்லியன் ரூபா முதல் 250மில்லியன் வரை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதோடு இதுவரை ஐம்பது சதவீதமான அபார்ட்மெண்டுகள் விற்றுத் தீர்ந்து விட்டதாகவும் தெரிய வருகிறது.

Comments