அமெரிக்க - சீன வர்த்தகப் போரின் அனுகூலங்களை அனுபவிக்கும் நிலையில் இலங்கை இல்லை! | தினகரன் வாரமஞ்சரி

அமெரிக்க - சீன வர்த்தகப் போரின் அனுகூலங்களை அனுபவிக்கும் நிலையில் இலங்கை இல்லை!

இலங்கை ஆடைத் தொழிலகம்

ஐக்கிய அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் கடந்த ஆண்டில் தொடங்கிய வர்த்தகப் போர் (Trade War) காரணமாக ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த அறிக்கைகள் வெளிவந்த வண்ணம்  உள்ளன. கடந்த ஆண்டு நவம்பரில் புகழ்பெற்ற Economist சஞ்சிகையின் ஆய்வொன்று அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான வர்த்தகப் போர் ஆசியாவின் கைத்தொழில் மயமாக்களுக்கான கதவுகளை திறந்து விடக்கூடுமென தலைப்புச் செய்தி வெளியிட்டது. 

சீனாவின் ஏற்றுமதிகள் மீது அமெரிக்கா விதித்த தீர்வைகளால் சீனாவின் ஏற்றுமதிக் கைத்தொழில்கள் ஏனைய ஆசிய நாடுகளை நோக்கி நகரலாம் எனவும் அதன் மூலம் ஏனைய ஆசியப் பிராந்திய நாடுகளின் கைத்தொழில் மயமாக்கம் விரிவாகும் எனவும் எதிர்வு கூறப்பட்டது. இவ்வாறு விரிவாக்கமடையும் என எதிர்பார்க்கப்பட்ட மூன்று துறைகள் அடையாளப்படுத்தப்பட்டன. 

தகவல் மற்றும் தொலைத்தொடர்பாடல் தொழினுட்பம் (ICT)  

வாகன உற்பத்தியும் வாகன உதிரிப்பாக உற்பத்தியும். 

ஆடை தயாரிப்பும் தைத்த ஆடைகளின் உற்பத்தியும் 

ஆசியப் பிராந்திய நாடுகள் பலவற்றில் உறுதியான தாராள வர்த்தக உடன்படிக்கைகள், விரிவடைந்து செல்லும் உள்நாட்டு சந்தைகள், ஏலவே உள்ள கைத்தொழில் வலயங்களின் மேம்பாடு மற்றும் முன்னேற்றகரமான உட்கட்டுமானங்கள் காரணமாக வெளிநாட்டு மூலதன உள்வருகைகள் அதிகரித்துள்ளன. 

வியட்னாம், மலேஷியா ஆகிய நாடுகள் இவ்வகையில் நன்மைபெறும் நிலையில் உள்ள நாடுகளாகும். மலேஷியாவில் இயங்கும் டெல், சோனி, பனசோனிக் போன்ற கம்பனிகளும் வியட்னாமில் இயங்கும் சம்சுங் மற்றும் இன்டெல் ஆகியனவும் இரு நாடுகளிலும் முதலீடுகளை விஸ்தரித்துள்ளன.  

வியட்நாமில் அமைந்துள்ள சம்சுங் தொழிலகம்

மேலே சொல்லப்பட்ட மூன்று முக்கிய துறைகளில் ஆடை தயாரிப்பு துறையில் இலங்கை ஏலவே முதிர்ச்சி பெற்ற ஒரு நாடாக உள்ளது. எனவே மிகத்தரமான விலை உயர்ந்த ஆடை தயாரிப்பும் ஆடை தயாரிப்பு நுட்பங்களும் முகாமைத்துவ திறன்களும் சந்தைப் படுத்தக்கூடிய நிலையில் இலங்கை உள்ளது.  ஆயினும் GSP+ சலுகை நீக்கப்பட்ட காலப்பகுதியில் இத்துறை மிகப்பெரிய பாதிப்புகளை எதிர்கொண்டது.  சமீப காலமாக  மீண்டும் மீண்டு வருவதை காணமுடிகிறது.  

ஆயினும் சீன ஆடை தயாரிப்பு ஏற்றுமதி சந்தையை பிரதியீடு செய்யுமளவுக்கு இலங்கை செலவும் சிக்கனம் கொண்டதாக காணப்படவில்லை. மாறாக வங்காள தேசம் மற்றும் வியட்னாம் போன்றன ஊழிய வலுமிக்க நாடுகளாகக் காணப்படுகின்றன. எவ்வாறாயினும் பெறுமதிச் சங்கிலியில் விலையுயர்ந்த ஆடை உற்பத்தி தொடர்பில் இலங்கையின் நற்பெயர் சாதகத்தன்மை கொண்டதாகக் காணப்படுகிறது. எனவே இத்துறையில் மேலும் முதலீடுகளை ஈர்க்க எத்தனிக்க முடியும். 

வாகன உற்பத்தி மற்றும் உதிரிப்பாக உற்பத்தி தொடர்பாக இலங்கைக்கு  வாய்ப்பான சூழல் தற்போதைக்கு உள்ளதா என்பதை கணிப்பிட வழிகள் கிடையாது. வாகனங்களை பொருத்தி விற்பனை செய்யும் ஒரேயொரு நிறுவனம் மட்டுமே இலங்கையில் உள்ளது. ஆனால் இலங்கையில் உற்பத்தி செய்யப்பட்ட எந்த ஒரு உதிரிப்பாகத்தையாவது மேற்படி நிறுவனம் பயன்படுத்துகிறதா என்பது மிகப் பெரிய கேள்விக்குறியாகும்.  

வாகன உற்பத்தி நிறுவனமான புகழ்பெற்ற வொக்ஸ்வாகன்  நிறுவனம் சில வருடங்களுக்கு முன்னர்  குளியாப்பிட்டி பகுதியில் வாகன உற்பத்தியில் ஈடுபடும் தொழிற்சாலையை அமைக்க உள்ளதாகவும் அதன் மூலம் பாரிய முதலீடொன்று இலங்கையில் மேற்கொள்ளப்பட்டு அதன் மூலம் தொழில் வாய்ப்பு பெருக்குவதோடு  அந்நியச் செலாவணி அதிகரிப்பும் ஏற்படுமென அறிவிக்கப்பட்டது. ஆயினும் அப்படி ஒரு முதலீடு செய்யப்பட உத்தேசிக்கப்படவில்லை என குறித்த நிறுவனம் அறிவித்தது. 

தற்போதும் கூட அம்பாந்தோட்டைப் பகுதியில் ஓமான் அரசாங்கத்தின் பங்களிப்புடன் மிகப்பெரிய வெளிநாட்டு முதலீட்டில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ஒன்று உருவாக்கப்படுமென்றும் அதன்மூலம் வேலைவாய்ப்புகளோடு ஏற்றுமதி அதிகரிப்பு ஏற்படுமெனவும் அறிவிக்கப்பட்டது. உடனடியாகவே ஒமான் அரசாங்கத்தின் பெற்றோலிய வளத்துறை சார்பில் பேசவல்ல ஒருவர், அப்படிப்பட்ட முதலீடு பற்றி எங்களுக்கு எதுவும் தெரியாது என்றும் அந்த முதலீட்டுக்குரிய காசோலையை  எவர் கையொப்பமிடுவாரோ தெரியாது எனவும் கேலியாகப் பதிலளித்திருந்தார்.  

இவ்விரு சம்பவங்களையும் வெளிநாட்டு முதலீடுகள் தொடர்பிலோ அதற்குரிய சாத்தியங்கள் பற்றியோ உரிய பேச்சுவார்த்தைகள் மேற்கொண்டு முடிவுகளை அடைந்த பின் அதன்பின் அறிவிப்புகளாக மேற்கொள்ளாமல் எழுந்தமானமாக செய்திகளை வெளியிடுவதன் விளைவு என்றே கொள்ள வேண்டும்.

இலங்கையில் வெளிநாட்டு முதலீடுகளை கவர்வதற்கான மிக முக்கியமான தடைகளாக,  

01. அரசாங்க கொள்கைகளின் உறுதியற்ற தன்மை 

02. ஊழிய சந்தையின் இறுக்கத்தன்மை. 

03. நிதி வசதிகளை பெறுவதில் உள்ள  தாமதங்கள் 

04. உட்கட்டுமானக் குறைபாடுகள் 

05. ஊழல் போன்றன காணப்படுகின்றன. 

இலங்கையில் வர்த்தகம் செய்வதற்கான  உரிய உகந்த சூழல் ஒன்றை உருவாக்காத வரையில் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான வர்த்தக போரினால் ஏதேனும் நன்மைகளை அடையக் கூடிய நிலை இருப்பினும் இலங்கையால் அவற்றை அடைய முடியாத நிலையே காணப்படுகிறது. 

மறுபுறம்,  மேற்படி வர்த்தகப் போர் காரணமாக அமெரிக்கப் பொருளாதாரத்தில் ஏற்பட்டு வரும் பாதிப்புகள் பற்றி அண்மையில் வெளியிடப்பட்ட அறிக்கையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. 

மேற்படி நடவடிக்கை காரணமாக அமெரிக்க இறக்குமதியாளரும் அமெரிக்க நுகர்வோரும் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக தீர்வைகள் விதிக்கப்பட்டதனால் 12.3 பில்லியன் அமெரிக்க டொலர்களை நுகர்வோரும், இறக்குமதியாளரும் மேலதிகமாக செலுத்த நேரிட்டுள்ளது. இறக்குமதிகள் வீழ்ச்சியடைந்த காரணத்தால் மேலும் 6.9 பில்லியன் டொலர் இழப்பு ஏற்பட்டுள்ளதாகப் ஆய்வு அறிக்கைகள் மதிப்பிட்டுள்ளன. 

அமெரிக்காவின் மொத்த இறக்குமதிகளில் 12% ஆகிய சுமார் 288 பில்லியன் டொலர் பெறுமதியான இறக்குமதி மீது விதிக்கப்பட்ட தீர்வைகள் மொத்தமாக சுமார் 4.4 பில்லியன் டொலர் இழப்புகளை ஏற்படுத்தியுள்ளது.  

அத்துடன் சீனா அமெரிக்காவின்  தீர்வைகளுக்கு பதிலடியாக அமெரிக்காவிலிருந்தான இறக்குமதிகள் மீது விதித்த தீர்வைகள் காரணமாக 121 பில்லியன் டொலர் பெறுமதியான அமெரிக்க ஏற்றுமதிகள் பாதிக்கப்பட்டன. 

அமெரிக்க அதிபர் அந்நாட்டின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதிகளுக்கு இடையிலான பற்றாக்குறையை குறைக்கவும் அமெரிக்க மக்களுக்கான வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும் நோக்கிலும் வர்த்தக கட்டுப்பாடுகளை விதித்தபோதிலும் கடந்த மார்ச் 6ஆம் திகதி வெளியிடப்பட்ட விபரங்களின் படி கடந்த பத்தாண்டு காலப்பகுதியுடன் ஒப்பிடும்போது டிசம்பர் 2018ல் அமெரிக்காவின் வர்த்தக நிலுவைப் பற்றாக்குறை 19%அதிகரித்து 59.8 பில்லியன் டொலர்களாக வெகுவாக அதிகரித்திருந்தது. 

எனவேதான் அமெரிக்காவும் சீனாவும் ஏலவே தீர்வை விதிக்கப்பட்டுள்ள 200 பில்லியன் டொலர் பெறுதியான வர்த்தகத்தின்

 மீதான தீர்வைகளை மீளப்பெறுவது தொடர்பான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றன. அப்பேச்சுவார்த்தைகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

வர்த்தகத் தடைகள் காரணமாக அமெரிக்க அரசாங்கம் பெற்ற தீர்வை வருமானங்கள், அத்தீர்வைகள் காரணமாக இறக்குமதியாளருக்கும் நுகர்வோருக்கும் ஏற்பட்ட பாதிப்புகளை ஈடுசெய்ய போதுமானதாக இல்லை என்பதே ஆய்வாளர்களின் கருத்தாகும். 

அத்துடன் இந்த ஆய்வுகளின் மூலம், வர்த்தகக் கொள்கைகளில் ஏற்படும் நிச்சயமற்ற தன்மை காரணமாக நீண்டகால முதலீடுகளில் ஏற்படும் பாதிப்புகள்,  சர்வதேச பெறுமதி சங்கிலியில் (Global Value Chain) இணைந்து செல்லும் தன்மையை வெகுவாக பாதிப்பதால் பாரிய இழப்புகள் ஏற்படும் எனவும் கண்டறியப்பட்டுள்ளது.  

இதனால்தான் மேற்படி இரு நாடுகளும் தமது வர்த்தகத் தடைகளை நீக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன என்பது தெரிகிறது. 

மேற்படி வர்த்தக போட்டா போட்டிகாரணமாக ஆசியப் பிராந்திய நாடுகள் நன்மைகளை பெறும் சூழல் காணப்படுமாயினும் கூட அவற்றை உள்வாங்கக் கூடிய நிலைமையில் இலங்கை இல்லை என்பதையும் குறிப்பிட்டேயாக வேண்டும்.   

கலாநிதி எம். கணேசமூர்த்தி,
பொருளியல்துறை, கொழும்புப் பல்கலைக்கழகம்.

Comments