ஜெனீவாவில் நடந்தது என்ன? | தினகரன் வாரமஞ்சரி

ஜெனீவாவில் நடந்தது என்ன?

மனித உரிமை பிரேரணைகள் தமிழருக்கானது மட்டுமல்ல

அரசாங்கத்தின் இணை அனுசரணையுடன் 2015ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்பட்ட பிரேரணை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. 

ஜெனீவாவில் நடைபெற்ற பேரவையின் 40ஆவது கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பில் புதிய பிரேரணையொன்று ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுக் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. 

2015இல் நடைபெற்ற 30ஆவது அமர்வில் 30/1 என்ற பிரேரணை முன்வைக்கப்பட்டபோது அதற்கு இலங்கை அரசாங்கம் இணை அனுசரணை வழங்கியது. அதாவது, பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகளை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையுடன் இணைந்து நடைமுறைப்படுத்துவதென்பதே அது.  

அவ்வாறு இணக்கம் காணப்பட்ட விடயங்களை நடைமுறைப்படுத்துவதில் பின்னடைவு ஏற்பட்டதன் காரணமாகக் கடந்த 2017இல் நடைபெற்ற மனித உரிமைகள் பேரவையின் 34ஆவது அமர்வில் 34/1 என்ற பிரேரணை முன்வைக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்குக் கால அவகாசம் வழங்கப்பட்டது.  

அந்த ஈராண்டு காலம் நிறைவடைந்தும் பிரேரணையை நடைமுறைப்படுத்துவதில் முன்னேற்றம் ஏற்படாததால், மேலும் இரண்டு வருடங்களுக்குக் கால அவகாசம் வழங்குவதற்காக 40ஆவது அமர்வில் 40/1 பிரேரணை முன்வைக்கப்பட்டு ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. 

ஆக, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ​பேரவையினால் முன்வைக்கப்பட்டிருக்கும் பிரேரணைக்கு மூன்றாவது தடவையாகக் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது என்பதே சரியானது.  

இதற்கமைய இலங்கை அரசாங்கம் தனது உறுதிமொழிகளை நிறைவேற்றுவதற்கு 2021ஆம் ஆண்டு வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மனித உரிமைகள் பேரவைக்கு வழங்கப்பட்ட உறுதிமொழிகளை மேலும் காலதாமதப்படுத்தாது நிறைவேற்ற வேண்டும் எனப் பல நாடுகள் இலங்கைக்கு அழைப்புவிடுத்திருந்த நிலையில், புதிதாக முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு ஏகமனதாக ஆதரவளித்தன. எந்தவொரு நாடும் எதிர்ப்பு தெரிவிக்காததால் வாக்கெடுப்பின்றி இப் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது.  

இந்தப் பிரே­ரணையானது ஏற்­க­னவே 2017ஆம் ஆண்டு 34/1 என்ற பெயரில் 2019 ஆம் ஆண்­டு­வ­ரை­யான காலப்­ப­கு­தி­வரை நீடிப்­புக்­கு உட்­பட்­டது. தற்­போது மீண்டும் இரண்­டு ­வ­ரு­ட­கால நீடிப்­புக்கு உட்­ப­டு­கின்­றது. இக்­கா­லப்­ப­கு­தியில் அர­சாங்கம் எவ்­வாறு 2015 ஆம் ஆண்டு பிரே­ர­ணையை அமுல்­ப­டுத்­தப்­போ­கின்­றது என்­பதை சர்­வ­தேசம் கண்­காணிப்பு செய்­வ­தற்­கான ஆணை இந்தப் பிரே­ரணை நிறை­வே­று­வதன் மூலம் கிடைக்­கின்­றது. இது தமிழர் தரப்பிற்குச் சாதகமானதென்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் தெரிவிக்கின்றார். 

புதிய பிரே­ர­ணையில், நான்கு முக்கிய விடயங்கள் உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ளன. அதா­வது, இலங்­கையும் ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையும் பொறுப்­புக்­கூறல் செயற்­பாட்டில் ஒத்­து­ழைப்­புடன் இணைந்து செயற்படவேண்டுமென்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் உண்மையைக் கண்டறிதல், நீதியை நிலைநாட்டுதல், இழப்பீடு வழங்குதல் உள்ளிட்ட செயற்பாடுகளில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையும் இலங்கை அரசாங்கமும் இணைந்து செயற்படவேண்டுமென்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. 

அதேபோன்று எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு பிரேரணை அமுலாக்கம் தொடர்பான இடைக்கால அறிக்கையை ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் வெளியிட வேண்டுமென்றும், 2021 ஆம் ஆண்டு அது தொடர்பான முழுமையான அறிக்கையை வெளியிடவேண்டுமென்றும் இந்த 40/1 என்ற புதிய பிரேரணையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

மனித உரிமைகள் பேரவையில் இலங்கை விவகாரம் விவாதிக்கப்பட்டபோது நீண்டகால பிரச்சினைக்கு விரைவில் முடிவொன்றைக் காண்பதற்காக கால வரையறையொன்றை வழங்குவது தோல்வியை அளிக்கலாம் என்றும், நிலைமாற்றுகால நீதியை நிலைநாட்டுவதற்கு ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் அலுவலகமொன்று இலங்கையில் அமைக்கப்படத் தேவையில்லையென்றும் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன தெரிவித்திருந்தார்.  

அது மாத்திரமன்றி இலங்கையின் நீதித்துறையில் இலங்கை பிரஜைகள் அல்லாதவர்களை இணைத்துக் கொள்வது அரசியலமைப்பு ரீதியாகவும், சட்டரீதியாகவும் முடியாத விடயமாகும் என்பதையும் அவர் தெளிவாகச் சுட்டிக்காட்டியிருந்தார்.  

பொறுப்புக்கூறல் விடயத்தில், மந்தகதியிலான செயற்பாடுகள் இருந்தாலும் காணாமல்போனோர் அலுவலகத்தை அமைப்பது உள்ளிட்ட விடயங்களை சர்வதேச நாடுகள் வரவேற்றிருந்தமையை இங்குக் குறிப்பிடத்தக்கது.  

புதிய பிரேரணையில் இலங்கை அரசாங்கம் சில மாற்றங்களைச் செய்யவிருப்பதாக முன்னர் தகவல்கள் வெளியாகியிருந்தபோதும் எந்தவிதமான மாற்றமும் இன்றி இலங்கை இப்பிரேரணைக்கு இணை அனுசரணை வழங்கியுள்ளமை விசேட அம்சமாகும். புதிய பிரேரணையான 40/1இற்கு இலங்கை உட்பட 33 நாடுகள் இணை அனுசரணை வழங்கியிருக்கின்றன. 

மனித உரிமை விடயத்தில் இலங்கை முன்னெடுத்திருக்கும் நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கையொன்றை 43ஆவது பேரவைக் கூட்டத் தொடரில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் எழுத்துமூலம் சமர்ப்பிக்கவேண்டும் என்றும், அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் நடத்தப்படும் கலந்துரையாடல்களைத் தொடர்ந்து 46ஆவது பேரவைக்கூட்டத் தொடரில் விரிவான அறிக்கையொன்றை அவர் கையளிக்க வேண்டும் என்றும் அறிக்ைகயில் குறிப்பிடப்பட்டுள்ளது.  

உண்மையைக் கண்டறிதல், பொறுப்புக்கூறல், நல்லிணக்கத்தை உருவாக்கல் போன்ற இலங்கையின் செயற்பாடுகளுக்கு ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் தொடர்ந்து தொழில்நுட்ப உதவி உள்ளிட்ட உதவிகளை வழங்க வேண்டும் என்றும் இலங்கை அரசாங்கத்துக்கு ஆலோசனைகளை வழங்கி செயற்பாடுகளைப் பலப்படுத்த வேண்டும் என்றும் புதிய பிரேரணையில் இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் இணக்கம் தெரிவிக்கப்பட்ட விடயங்களை நடைமுறைப்படுத்துவதில் மந்தமான போக்கு காணப்பட்டபோதிலும் முழுமையான அமுலாக்கத்திற்கென்று மேலும் இரண்டாண்டுகளை சர்வதேசம் வழங்கியிருக்கின்றது. 

இது விடயத்தில் தமிழ் மக்கள் மத்தியில் முரண்பாடான கருத்துக்கள் நிலவுகின்றன. இரண்டுவருடகாலம் நீடிக்கப்படவேண்டியதன் அவசியம் இல்லை என்றும் நேரடியாகவே இந்த விவகாரத்தை ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபைக்குக் கொண்டுசெல்ல வேண்டும் என்றும் ஒரு சாரார் கூறிவருகின்றனர். அதேபோன்று கால நீடிப்பு வழங்கப்படுவதன் ஊடாகவே சர்வதேச மேற்பார்வையை ஏற்படுத்திக்கொள்ள முடியும் என்றும் எனவே, அது முக்கியமானது என்றும் மற்றுமொரு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். குறிப்பாகப் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் இந்த விடயத்தை வலியுறுத்திக் கூறியுள்ளார். 

34/1 தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்காவிட்டால், இலங்கை தொடர்பாக கேள்வி கேட்பதற்கான அதிகாரம் மனிதஉரிமை பேரவைக்குக் கிடைத்திருக்காது. அத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டமையாலேயே தற்போது இலங்கை தொடர்பாக கேள்வி கேட்பதற்கும் அது குறித்து அறிக்கைகள் சமர்ப்பிப்பதற்குமான தேவை ஏற்படுகின்றது. ஏற்கனவே மூன்றரை வருடங்களுக்குள் சிலவற்றையாவது செய்வதற்கு காரணம் இந்த மேற்பார்வையேயாகும். இந்த மேற்பார்வை நீடித்தால் தான் இன்னமும் நடைமுறைப்படுத்தாமல் இருக்கும் பல விடயங்களில் சிலவற்றையாவது செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும் என்றும் கூட்டமைப்பின் பேச்­சாளர் சுமந்­திரன் குறிப்­பிட்­டி­ருக்­கின்றார்.  

இவ்வாறு பிரேரணைகள் நிறைவேற்றப்படுவதன் ஊடாக நிச்சயமாக முன்னேற்றங்கள் நிகழத்தான் வேண்டும். காணாமல் போனோரின் அலுவலகம் சம்பந்தமான செயற்பாடுகளில் முன்னேற்றம் இருக்கும் என்று நம்புவதாகவும் உண்மையை வெளிப்படுத்துகின்ற ஆணைக்குழு நியமிப்பதற்கான சட்டவரைபு ஒன்றைத் தயாரித்திருப்பதாகச் சொல்கிறார்கள். அது நிறைவேற்றப்படவேண்டும். பத்து வருடங்களாக நாம் சொல்லிவருகின்ற ஒரு கூற்று உண்மை கண்டறியப்படவேண்டும் என்பதாகும். அந்த உண்மையின் அடிப்படையிலேயே நீதி நிலைநாட்டப்படவேண்டும் எனவும் சுமந்திரன் எம்.பி. குறிப்பிட்டிருக்கின்றார்.  

சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்கிய நீதிப்பொறிமுறையொன்றை அரசாங்கம் நடைமுறைப்படுத்தாவிட்டால், சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அல்லது முழுமையான சர்வதேச நீதிப்பொறி முறையொன்றில் இலங்கையை முன்னிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் சுமந்திரன் எச்சரிக்கைவிடுத்திருக்கிறார்.  

இலங்கையின் நீதிக் கட்டமைப்பில் சுயாதீன சர்வதேச நீதிபதிகளை உள்ளீர்க்க அரசியலமைப்பிலும், நாட்டின் சட்டத்திலும் இடமில்லையென வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கூறியது தவறு. அரசியலமைப்பில் அதற்கு இடமுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.  

யுத்தத்தில் பங்கெடுத்த தரப்பு என்ற ரீதியில் உள்ளக நீதிப்பொறிமுறையில் அரசாங்கம் சுயாதீனமாக செயற்பட முடியாது. இதனாலேயே சுயாதீன சர்வதேச நீதிபதிகளின் பங்களிப்பைக் கோருகின்றோம். இது தொடர்பில் இலங்கை அரசாங்கம் ஒரு தடவையல்ல மூன்று தடவைகள் எழுத்து மூலம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இணங்கியுள்ளது. இருந்தபோதும் இன்னமும் அவர்கள் உறுதிமொழிகளை நிறைவேற்றவில்லையென்றும் சுமந்திரன் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.  

புதிய பிரேரணையில் முதற்தடவையாக பொறுப்புக்கூறல், நிலைமாறுகால நீதிப்பொறிமுறை மற்றும் நல்லிணக்க செயற்பாடுகளை கால அட்டவணையின் அடிப்படையில் நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் இணங்கியுள்ளது.  

இலங்கையின் அரசியலமைப்பின் 111 சரத்தின்படி நீதிபதிகள் பதவிக்கு நியமிக்கப்படுபவர்களின் தேசியம் தொடர்பில் எந்தவிதக் கட்டுப்பாடுகளும் உள்ளடக்கப்படவில்லை. எனவே, சுயாதீன சர்வதேச நீதிபதிகளை உள்ளக நீதிப்பொறிமுறையில் உள்வாங்கிக்கொள்வதில் எந்தவிதமான தடையும் இல்லை. முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவை பலவந்தமாக அகற்றுவதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டபோது, எதிர்க்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினராகவிருந்த விஜயதாச ராஜபக்ஷ, சர்வதேச சுயாதீன நீதிபதிகளை உள்ளடக்கிய விசாரணை குறித்து தனிநபர் பிரேரணையொன்றைக் கொண்டுவந்திருந்தார்.  

இவ்வாறான நிலையில் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன, ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சர்வதேச நீதிபதிகளை உள்வாங்க சட்டரீதியான தடை இருப்பதாகக் கூறியது தவறானது. அவர் அப்படிக் கூறியிருந்தாலும் புதிதாக நிறைவேற்றப்பட்ட பிரேரணையில், 30/1 பிரேரணையில் உள்ளடக்கப்பட்ட விடயங்களை நிறைவேற்றுவதாக இணக்கம் காணப்பட்டிருக்கின்றது. சுயாதீன சர்வதேச நீதிபதிகள், சட்டத்தரணிகளின் பங்களிப்பைக் கொண்ட நீதிப் பொறிமுறைக்கு அரசாங்கம் இணங்கியிருந்தது. இதன் அடிப்படையில் சர்வதேச நீதிபதிகள், சட்டத்தரணிகளின் பங்களிப்புடனான நீதிப்பொறிமுறையொன்றை அமைப்பதற்கு இலங்கை அராசங்கம் மூன்று சந்தர்ப்பங்களில் எழுத்து மூலமாகத் தனது இணக்கப்பாட்டை வெளியிட்டுள்ளது.  

அரசாங்கம் சர்வதேசத்துக்கு வழங்கிய உறுதிமொழிகளுக்கு அமைய இணங்கிய விடயங்களை மேலும் காலதாமதம் இன்றி நடைமுறைப்படுத்த வேண்டும். தவறும் பட்சத்தில் முழுமையான சர்வதேச நீதிப்பொறிமுறையொன்றுக்கு இலங்கையைக் கொண்டுசெல்வதைத் தவிர தமிழ் மக்களுக்கு எந்த மாற்று வழியும் இருக்காது. ஏற்கனவே சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்குச் செல்ல வேண்டும் எனத் தமிழ் மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். கலப்பு நீதிமன்றமொன்றையே நாம் கோரி வருகின்றோம். ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட மூன்று பிரேரணைகளிலும் இணங்கியவாறு சுயாதீன சர்வதேச நீதிபதிகளின் பங்களிப்புடனான நீதிப் பொறிமுறையொன்றை காலவரையறைக்குள் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தெள்ளத் தெளிவாக சுமந்திரன் எம்.பி. விளக்குகிறார். அதாவது, தற்போது அரசாங்கம் முடியாது என்று சொல்லும் பல விடயங்களை நடைமுறைப்படுத்துவதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் 2015 ஆம் ஆண்டு முன்வைக்கப்பட்ட பிரேரணையில் மூலமாக உறுதியளித்துள்ளது. அதேபோன்று 2017 இல் அதே பிரேரணையை நடைமுறைப்படுத்துவதற்கு மேலும் இரண்டு வருட கால அவகாசத்தைப் பெற்றுக்ெகாண்டது. இப்போது அதே பிரேரணையை நடைமுறைப்படுத்த மேலும் இரண்டு வருட அவகாசத்தைப் பெற்றுக்கொண்டிருக்கின்றது. 

உண்மையில், இலங்கை அரசாங்கத்தைப் பொறுத்தவரை அது தற்போது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை எனும் சர்வதேச பொறிக்குள் சிக்கிக்கொண்டிருப்பதாகவே கொள்ள வேண்டியிருக்கின்றது. ஆரம்பத்தில், 2012, 2013, 2014 ஆம் ஆண்டுகளில் மனித உரிமைகள் பேரவை முன்வைத்த மூன்று பிரேரணைகளுக்கும் செவிசாய்க்காததாலேயே, 2015இல் இணை அனுசரணை வழங்க வேண்டிய நிலை உருவாகியிருந்தது. 

எனவே, சர்வதேசம் இலங்கையிடமிருந்து எதிர்பார்ப்பது என்னவென்பதைப் புரிந்துகொண்டோமானால், அதனை நடைமுறைப்படுத்துவதில் கரிசனை உருவாகும் என்கிறார்கள் அரசியல் ஆய்வாளர்கள். ஏனெனில், பிரேரணைகள் முன்வைக்கப்படுவதும் இணக்கப்பாடுகள் எட்டப்படுவதும் வழமையாக இடம்பெறுவதாகும். பின்னர் அவை கிடப்பில் போடப்படுவதும் சர்வ சாதாரணமானது என்பதுதான் இலங்கை அரசாங்கங்களின் சம்பிரதாயம் என்றே தமிழ் மக்கள் நம்புகின்றனர். அவர்களைப் பொறுத்தவரை இலங்கை அரசாங்கத்தைச் சர்வதேச நீதிமன்றத்தில் கொண்டுபோய் நிறுத்துவதைவிடவும் தங்களின் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வொன்று கிடைக்க வேண்டும் என்றே எதிர்பார்க்கின்றார்கள். 

இரண்டு வருடங்களைக் கடந்தும் நில மீட்பு போராட்டத்திற்குப் மீட்சியில்லை. சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் விடுவிக்கப்படவில்லை. இழப்பீடுகள் வழங்கப்படவில்லை, வாழ்வாதாரம் உறுதிபடுத்தப்படவில்லை. மொத்தத்தில் இறுதி யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னமும் முழுமையான ஆற்றுப்படுத்தல் இல்லை. சகல இன மக்களும் சமமான நீதியுடன் வாழ்வதற்கான சூழல் தோற்றுவிக்கப்பட வேண்டும். கடந்த கால சம்பவங்களுக்கான உண்மை கண்டறியப்பட்டு நீதியை வழங்க வேண்டும். நீதிக்குப் புறம்பான செயற்பாடுகள், சித்திரவதைகள், துன்புறுத்தல்கள் போன்றவற்றுக்குக் காரணமானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் போன்ற ஜனநாயகப் பண்புகளை மேம்படுத்துகின்ற யோசனைகளே முன்வைக்கப்பட்டுள்ளன. 

சுருங்கச்சொல்லின், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை முன்வைத்துள்ள பிரேரணை என்பது முற்றிலும் தமிழ் மக்கள் சார்ந்தவை அல்ல என்பதை முதலில் அரசியல்வாதிகள் புரிந்துகொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். அதனை நிறைவேற்றுவதால், நாட்டில் ஜனநாயகம் தழைத்தோங்குவதுடன், அனைத்து இன மக்களும் சௌஜன்யத்துடன் வாழும் சூழல் உருவாகும். தற்போது போராடி முறியடிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள நிர்வாக ஊழல், நேரான பாதைக்குள் கொண்டுவரப்படும் என்றெல்லாம் சுட்டிக்காட்டப்படலாம். 

எனவே, ஐ.நா யோசனையை நாட்டுக்கு எதிரானதென்றோ இராணுவத்திற்கு எதிரானதென்றோ அல்லது முற்றிலும் போர்க்குற்ற விசாரணையை மாத்திரம் கொண்டது என்றோ தவறாகக் கற்பிதம் செய்வதை அரசியல்வாதிகள் தவிர்த்துக்கொண்டால், வீண் முரண்பாடுகளைத் தவிர்த்துக்ெகாண்டு முன்னேற முடியும். அதேநேரம், தமிழ் மக்கள் தவறாக வழிநடத்தப்படுவதையும் தவிர்த்து அவர்களுக்கு இந்த ஜெனீவா பிரேரணையின் தாற்பரியத்தை விளக்கிச் சொல்ல வேண்டியதும் மிக முக்கியமானது. 

நிறைவாக, தற்போது நாட்டின் முன்பாக உள்ள இந்தச் சர்வதேச பொறுப்பினை நடைமுறைப்படுத்துவதற்கு அரசியல் ரீதியாக எவ்வாறு இணைந்து செயற்படலாம் என்பதற்கான வழிவகைகளை ஆராய வேண்டும். கிடைத்திருக்கும் இந்த இரண்டாண்டு அவகாசத்தில் வாக்குறுதிகளை நிறைவேற்றி, நாட்டின் சுபீட்சத்துக்காகப் பாடுபடுவதே அரசியல் தலைவர்களின் தலையாய பொறுப்பாகும். 

விசு கருணாநிதி

Comments