“இப்போதும் அப்போதும்” | தினகரன் வாரமஞ்சரி

“இப்போதும் அப்போதும்”

தொலைக்காட்சியில் நாடகமொன்று போய்க்கொண்டிருந்தது. சியாமளா தனது குழந்தையை மடியில் வைத்துக்கொண்டு நாடகத்தை மெய்மறந்து இரசித்துக் கொண்டிருந்தாள். அவள் கையில் கைபேசியும் இருந்தது. கணவன் கொழும்பில் உத்தியோகம் பார்க்கிறான். சகோதரங்கள், உறவினர்கள், என்று நான்கோ ஐந்தோ வெளிநாட்டில் இருக்கின்றனர். எந்த நேரமென்றில்லாமல் அழைப்பு மணி இராகம் பாடும்! ஆகையால் கைபேசி கையோடு இருக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்! 

சமையலறையில் அம்மா அந்தோனியம்மா நேரத்தை பார்த்து அதற்குள் அடுக்களை வேலைகளை முடிப்பதில் தீவிரம் காட்டினாள். ஏனென்றால் மகள் பார்த்துக் கொண்டிருப்பது முடிந்ததும் தாயவள் பார்ப்பது தொடங்கிவிடும். அலைவரிசையையும் மாற்றவேண்டும். சியாமளா மனம் குமைந்தாலும் அம்மாதானே முகச்சுளிப்பை காட்டுவதில்லை.  

அப்பா இருதயநேசன் வெளித்திண்ணையில் இருந்தபடி பத்திரிகை படித்துக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் தொலைக்காட்சியின் சத்தம் குறைந்து அத்தலாகிவிடும்! சில போது கவனியாது பேரொலியானால், இவர் செருமிக் கொண்டு அதட்டல் குரல் கொடுத்தால் போதும், நாதசுரம் குறைந்துவிடும்! ஆனால் காட்சிகள் மிகத்தெளிவாகவே ஓடிக்கொண்டிருக்கும். ஒருவருக்கும் இடைஞ்சல் இல்லாமல் சீராகவே தொலைக்காட்சிகள் ஓடிக்கொண்டிருக்கும். 

இருதயநேசன் காலையில் எழுந்ததும் முதல் வேலையாக மாதா சணலை (கோலி மேரி) போட்டுவிடுவார். வீட்டில் மற்றவர்கள் துயில் நீங்கினார்களோ இல்லையோ, அவர்கள் தூக்கத்துக்கு ஏக்கத்துக்கு இடையூறோ என்னமோ, அதைப் பற்றி எல்லாம் அவருக்கு அக்கறை இல்லை. எல்லோரும் கேட்க வேண்டும் என்ற வேணவா அவருக்கு, கிறிஸ்தவ கீதங்கள், ஆராதனைகள் பிரசங்கங்கள் இவைகளுக்கேற்ற காட்சிகள் மனதை ஈர்க்கும் விதத்தில் இங்கிதமாக ஓடிக் கொண்டிருக்கும். சும்மா சொல்லக்கூடாது. ஐரோப்பிய நாட்டிலிருந்து வந்த சமயம் இதுவென்றாலும் சமயோசிதமாக நம் நாட்டு கலாசாரத்தையே மேவி நிற்கின்றன! அனேகமான பெண்கள் சேலைக்கட்டி, பூச்சூடி மாலைகட்டி, குங்குமம் இட்டு கலந்துகொள்கின்றனர் பூசை புனஸ்காரங்களில்! அது மட்டுமா பக்தி பாடல்கள், ஆராதனை கீதங்கள் இப்பப்ப அனேகமாக கர்நாடக சங்கீத கலாபனையில் தான் போய்க் கொண்டிருக்கின்றன! ஏன் முக்கிய கொண்டாட்ட நிகழ்வுகளுக்கு (பைலாவோ நியூஸ்ரோ இல்லை) பரதநாட்டியமே அரங்கேறுகிறது. 

இவைகளெல்லாம் இருதயநேசனுக்கு ரொம்பவும் பிடித்துப்போன சங்கதிகள். அவர் கத்தோலிக்கராயிருந்தாலும் மிகவும் தமிழ்ப்பற்றாளர். செய்தி கேட்டால் பத்திரிகை வாசித்தால் தமிழினத்துக்கு ஒரு விமோசனம் வருமா என்ற ஆதங்கமே இருக்கும். தமிழ் மொழி கலாசாரம் சம்பந்தமான எந்த நிகழ்வையும் தவறவிடமாட்டார்! அப்படிப்பட்டவரின் பாதையில் சிறு தடைக்கல்லைத்தானும் போட யாரும் மனதாலும் நினையார்கள். அவர் மாதா ரீ.வீயை பார்த்தும், கேட்டும் கொண்டே தனதும் வீட்டுக்குமான காலைக் கடமைகளை நிறைவேற்றிக் கொண்டிருப்பார். சியாமளாவின் குட்டிபயல் எட்டு வயதில் இருக்கிறான். சுட்டி விளையாட்டு காட்டும் அலைவரிசையை போடுமாறு அடம்பிடிப்பான். ஆனால் பெற்றப்பா விசயத்தில் அவன் கூட அடங்கிவிடுவான். 

சியாமளாவின் தம்பி அவசர அவசரமாக ஈருளியில் வந்து இறங்கினான். அவன் வாட்ட சாட்டமானவன். துடிப்பானவன் மிடுக்கு நடையோடு உள்ளிட்டான்... இடுப்பிலே கையை வைத்து கொண்டு தொலைக்காட்சியை வெறித்துப் பார்த்தான். அப்போது மாமிக்கும் மருமகளுக்கும் வலுவான சண்டை நடந்து கொண்டிருந்தது. தொலைக்காட்சியில்! மாமியார் கொடுமைக்கு இன்று ஒரு முடிவு கட்டியாக வேண்டும் என்று மருமகள் பெரும் புரட்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் விறுவிறுப்பான கட்டம்! அக்காள் மெய்மறந்து கிரகித்துக் கொண்டிருக்கும் நேரம். இவன் மாறிமாறி அமத்தினான். அங்கே கிரிக்கெட் விளையாட்டு அரங்கேறிக் கொண்டிருந்தது! அட்டையுடனும் பந்துடனும் ஓடி ஆடி விளையாடிக் கொண்டிருந்தார்கள் வீரர்கள்! பார்வையாளர்கள் கரகோசமும் ஆர்ப்பரிப்புமாய் இருந்தார்கள்! இவன் பொடியன் முகம் பிரகாசமாகிக் கொண்டிருந்தது! ஆனால் அப்போது சியாமளாவின் முகம் கர்ண கொடூரமாகிக் கொண்டிருந்தது! என்ன தான் நடக்கப்போகிறதோ? 

“டேய், எளிய ராஸ்கல், ஏண்டா மாத்தினனீ? நாங்க எவ்வளவு இன்றஸ்ரா நாடகம் பார்த்தக் கொண்டிருக்கிறம். இந்த நேரம் நாங்க வழமையா ரீ.வீ பார்க்கிற நாங்கள் எண்டு தெரியும் தானே, அதுவும் இப்ப நல்ல விறுவிறுப்பான கட்டம் போய்க் கொண்டிருக்கக்குள்ள இப்படி செய்யுறியேடா பாவி! நீயெல்லாம் பல்கலைக்கழகம் போய் என்னதான் படிச்சு கிழிச்சியோ தெரியாது! வயதுக்கு மூத்தவங்களே எண்டு ஒரு மரியாதை வேண்டாம்!” அவள் பொரிந்து தள்ளினாள். 

இவன் எரிந்து விழுந்தான்... “அக்கா, இது நீ நெடுகப் பார்க்கிற நாடகம்தான். நாளையில இருந்தும் நாள் கணக்காக பார்க்கலாம். ஆனா இது இண்டைக்கு மட்டுந்தான் நடக்கும் உலகப் பிரசித்தி பெற்ற விளையாட்டு! அதுவும் எங்கட ஸ்ரீலங்கா அவுஸ்ரேலியாவோட மோதுது! எங்கட ஸ்ரீலங்க இந்த முறை வெற்றிக்கொடி நாட்டும் போல இருக்கு! கனரன் எடுத்துக் கொண்டு வாறாங்கள்! விறுவிறுப்பா விளையாடிக் கொண்டு வாறாங்க. அங்கால போக்கா, என்னப் பார்க்க விடக்கா!” அவன் கத்தி சத்தமிட்டான். 

அவன் கத்தல் எடுபடவே இல்லை. அக்காள் குழந்தையோடு எழுந்து, ‘றிமோட்டை’ பற்றினாள். இழுபறியாயிருந்தது. ‘மூதேவி சனியன்...' அடுக்களையிலிருந்து அம்மாள் அத்தோனியம்மாள் பதகளித்து கொண்டு வந்தாள்! ‘டேய் சின்னராசா, மட்டுமரியாதையில்லாம நடக்குறியோடா! எங்களுக்கு இதைவிட்டா வேற ரீ.வி இருக்கோடா? உனக்கு எத்தின சினேகிதன்மார் இருக்குறாங்கள், அங்க போய் பாரேன்டா. பக்கத்திலதானே உன்ர ஒன்றவிட்ட சகோதரங்கள் எல்லாம் இருக்கிறாங்கள். என்ர தங்கச்சியிர பொடியன்கள்தானே வீடு முழுக்க இருக்குறாங்கள். நீயும் மச்சான் எண்டு தோள்ள கை போட்டு நல்லாக் கொண்டாடுவியே! போய் அங்க பாரன்!” 

தாயாரும் அக்காவுக்காக வக்காலத்து வாங்கியதால், தன் இனிய தோழர்களை ஞாபகப்படுத்தியதால் அவன் பிடிதளர்ந்து ‘றிமோட்’ கைமாறியது. நாடகக் காட்சிகள் ஒளிப்பரப்பானது! அவன் கைகால்களை விசிறிக் கொண்டு அவசர அவசரமாக மூன்றாவது வீட்டிலிருக்கும் தன் சிறிய தாயார் வீட்டுக்குப் போனான். இவனைக் கண்டதும் நல்ல வரவேற்புக் கிடைத்தது. ‘வா மச்சான் வா வண்ணாரப் பேட்டை’ என்று தோளில் கை போட்டு ஆசனத்தில் அமர்த்தினார்கள். ‘மச்சான் ஸ்ரீலங்கா இந்தமுறை நல்லா விளையாடுறாங்கள் மச்சான்! நல்ல ரன் எடுத்துக் குவிக்கிறாங்கள் மச்சான்! வாவன் வந்திருந்து பாரன்’, அவன் அமர்ந்து கொண்டே இரசித்துப் பார்த்துக் கொண்டே சிறிய தாயாரைப் பார்த்து! ‘அன்ரி, எனக்கொரு பிளைன் ரீ தாங்களன்’ என்றான். 

இங்கே இருதயநேசன் இல்லத்தில் இருந்து நாடகக் காட்சிகளை நிம்மதியாகப் பார்த்துக் கொண்டிருந்தனர்... இருதயநேசன் வீட்டில் நடக்கும் எல்லா நாடகக் கூத்துக்களையும் பார்த்து பார்த்து சலித்து இப்போது இளநகை பூப்பதோடு சரி! 

எல்லோரும் மெய்மறந்து இரசித்துக் கொண்டிருக்கும் போது, ‘அன்ரி’ என்று கூப்பிட்டுக் கொண்டு பெண்ணொருத்தி வந்து நின்றாள்! குரலிலேயே விளங்கிவிட்டது வந்து நிற்பவள் யாரென்று ஒருவரும் தலையசைத்து அவளைப் பார்க்கவில்லை! அவளும் அதை எதிர்பார்க்கவில்லை. நின்ற நிலையில் கொஞ்ச நேரம் பார்த்துக் கொண்டிருந்தவள் தானாகவே ஒரு கதிரையை இழுத்துப் போட்டுக் கொண்டு அமர்ந்து இரசித்துக் கொண்டிருந்தாள்!... விளம்பர இடைவேளை வந்த பிறகுதான் அந்தோனியம்மா சற்று திரும்பி, “என்ன ராணி எப்ப வந்த நீ இப்பதானா? ஏன் உங்கட ரீ.வீ இன்னும் சரிவர இல்லையா? திருத்தக் குடுத்தது எண்டு சொன்னனீ? என்ன ஆச்சுது?”, ”ஐயோ அதை ஏன் அன்ரி கேக்குறீங்கள் அவன் கனகாசு கேக்கிறான்! அதப் பார்க்க புதுசு வாங்கி கொண்டு போகலாம்!” 

 விளம்பரம் முடிந்தது நாடகம் தொடர்ந்தது எல்லோர் கண்களும் அங்கு மேய்ந்தது. சற்று நேரத்தில் ராணி சொன்னாள், ‘அன்ரி இந்த நாடகம் நான் பார்க்கிற இல்ல. கலைஞர் ரீ.விக்கு மாத்துங்களன். சோக்கான நாடகங்கள் அதில வரும் ‘எனக்கு அதிலவாற நாடகங்கள்தான் பிடிக்கும்! இவள் புள்ள சியாமளா என்ன சொல்லுவாளோ தெரியல்ல’ என்றாள் தயங்கியபடி. 

நல்லவேளை சியாமளாவின் கையிலிருந்து கைபேசி அலறியது! அவள் கையோடு அங்கிருந்து அகன்றாள். வெளிநாட்டிலிருந்து கணவன் அட்டகாசமாய் பேசுகிறான் போலும். சியாமளா அடங்கி ஒடுங்கி அனுங்கி முணுங்கி பேசலானாள்... இவர்கள் இப்படி இருக்க சியாமளாவின் மூத்தவன் பன்னிரெண்டு வயதானிருக்கும் அவனொரு கைபேசியை காதில கண்ணில ஒற்றிக்கொண்டு சிறு விரலால் தட்டி விளையாடிக் கொண்டு சொர்க்கத்தை கண்டவன் போல் வேறோர் உலகில் சஞ்சரித்து கொண்டிருந்தான்!  

இப்படியான எத்தனை காட்சி நாடகங்களை அனுதினமும் பார்த்துப் பார்த்து விரக்தியுற்ற இருதயநேசன் நம்மால் ஒரு துரும்பையும் அசைக்க முடியாது. உலகம் போற போக்கை மாற்றவே முடியாது, ஒதுங்கியிருக்க வேண்டியதுதான் என்ற முடிவுக்கு வந்தவர் தனிமையில் போய்க் கிடந்து கொண்டு சிந்தனையில் ஆழ்ந்தார். பழைய கால நினைவுகள் அலை அலையாக வந்து தாலாட்டலாயின! என்ன சுகமான சிந்தனைகள் அவை... 

அன்று திருகோணமலையில் மடத்தடி சந்திக்கு அருகாமையில் எங்கள் குடும்பம் குடியிருந்தது. அப்போது நான் சின்னப்பயல்தான் என்றாலும் நேற்று நடந்தது போல் என் மனதை விட்டு அகலாமல் தொட்டு நிற்கும் நிகழ்வுகள் சம்பவங்கள் தாராளம்!சங்கிக்கோர்வைப் போல் வந்து எழும் நினைவுகளில் மிதப்பதே என்னேசுகானுபவம்! 

நாங்கள் நாலு பேரும் ஆண்பிள்ளைகள் நான் தான் மூத்தவன். எனது தலைமையில் தான் கோவிலுக்குப் போவதென்ன பள்ளிக்கூடம் செல்வதென்ன எல்லாம் நடக்கும். ஒன்றிரெண்டு வயது தான் வித்தியாசம் இருக்கும். ஆனாலும் அண்ணன் என்ற மரியாதை எப்பவும் இருக்கும்! அண்ணாச்சி பெரிய அண்ணாச்சி சின்னாண்ணாச்சி என்ற அழைப்பு முறையோடு உறவாடுதல் நடக்கும்! 

காலை ஏழு மணிக்கு முன்னமே கடற்படைத்தளத்தில் இருந்து விசில் சத்தம் பேரொலி செய்யும்! அதன் பிறகு அந்த ஊரில் எந்த சோம்பேறியும் படுக்கையில் கிடக்கமாட்டான். காலை எழுந்ததும் படுக்கையில் இருந்து கொண்டே பிதா சுதன் போட்டு காலைச் செபம் நடக்கும். அதன் பிறகு முதல் வேலையாக எங்கள் ஐயா அறைக்குள் அழைத்து செல்வார். ஒருவர் பின் ஒருவராக உள்ளிடுவோம். அறை சுவர் குந்துக் கட்டில் எத்தனையோ எண்ணெய்ப் போத்தல்கள் வரிசையாக இருக்கும். அவற்றிலிருந்து ஒன்றை எடுப்பார். அது மீணெண்ணெய் போத்தல். ஒவ்வொரு மேசைக்கரண்டியாக எடுத்து நாலுபேரின் வாயிலும் பருக்கி விடுவார். விரும்பியோ விரும்பாமலோ முண்டி விழுங்கி விடுவோம்! அது அவ்வளவு கசப்பில்லைதான் என்றாலும் நாலுபேரின் முகத்திலும் அருவருப்பு வழியும்! இடைக்கிடை தேவையைப் பொறுத்து ஆமணக்கு எண்ணெயும் பருக்கி விடுவார். அந்த அருவருப்பு அவஸ்தைமாற வெகுநேரம் பிடிக்கும்! 

வீட்டுக்குப் பின்னால் கிணற்றடி இருக்கிறது. துலாக்கிணறு அது. ஐயாதான் வாத்து வாளியை நிரப்பி எங்கள் மேலும் ஊற்றி குளிப்பாட்டி தானும் ஸ்ஞானம் செய்து கொள்வார். சவற்காரம் போட்டு ஊத்தைத் தேய்த்து சுத்தமாக்கி விடுவார்... கிணற்றடியை விட்டு உள்ளிட்டதும், அம்மா பெரிய துவாய்த் துண்டை வைத்துக் காத்துக் கொண்டிருப்பா. உச்சியிலிருந்து உள்ளங்கால்வரை ஒருநீர்க் கோப்பும் வந்துவிடாமல் இருக்க நல்லாகத் துடைத்துவிடுவார். தானே தோய்த்துலர்ந்த கால்சட்டை சட்டைகளை போட்டுவிடுவா. கையைப் பிடித்துக் கொண்டு அறைக்குள் கொண்டு செல்வா, குந்துக்கட்டில் இருக்கும் போத்தல்களில் ஒன்றை எடுப்பா. அது நல்லெண்ணெய் போத்தல். அது வெறும் எண்ணெய் போத்தலல்ல. நற்சீரகம், பெரும்சீருகம், வெந்தயம், மிளகு, கருவப்பிலை என்று பெயர் சொல்லத் தெரியாத எத்தனையோ வேர்கள் எல்லாம் போட்டுக் காய்ச்சிய எண்ணெய் அது! தன் உள்ளங்கையில் எடுத்து தலையில் வைத்து தேய்த்து விடுவா. தானே கன்னப் பகுதியால் வகிடெடுத்து தலை சீவிவிட்டு அழகு பார்ப்பா! தென்னோலையால் வேய்ந்த குசினிக்குள் நால்வரும் உள்ளிடுவோம். நல்ல அரிசிமா குழல்புட்டு. சுளகில் தள்ளியிருக்கும். நல்ல செந்நிறத்தில் புட்டும் தேங்காப்பூவும் பிறகு புட்டும் என்று இருப்பதே கண்கொள்ளக் காட்சி! ஆவி பறக்கும் சுகந்தவாசனை பிறக்கும். அள்ளிவிழுங்கச் சொல்லும்! அப்போதெல்லாம் இடைக்கிடை அமெரிக்கன் மாவிலும் புட்டு அவிபடும். பொன்னிறமாக இருக்கும் மணமோ குசினிக்குள் இழுத்துவரும்! இப்போ இவை எல்லாம் எங்கே போனேதோ? நாகரீகத்தில் அடிபட்டு காணாமல் போனதோ! 

ஐயா வெள்ளன எழும்பி வாய் கொப்பளித்தவுடனேயே அம்மா அவர் முன் முட்டைக் கோப்பியை நீட்டுவார். நல்ல ஊர் கோழி முட்டை. அதை கலக்கி அடிக்கும்சத்தமே உற்சாகத்தைத் தரும் குடித்தால் சொல்லவே வேண்டாம்! மெத்த உசாராக நடந்து செல்வார்... பின்னேரம் பால்க்காரன் பால் தந்துவிட்டுப் போவான். அதைக் காய்ச்சி இறக்கியவுடனேயே ஆடைபிடித்திருக்கும். தேனீரோடு கலந்து குடித்தால் மாலை முழுதும் விளையாட்டுத்தான் வெகு உற்சாகமாக... அப்தெல்லாம் அயலில் இருந்தவர் எவருமே உறவினர் இல்லை சாதி சமயத்தால் வேறுபட்டவரே ஆவர். ஏன் இரண்டு மூன்று சிங்களக் குடும்பங்களும் இருந்தன! எங்கள் விஷேசங்களுக்கு அவர்கள் வருவதும், அவர்கள் கொண்டாட்டங்களுக்கு நாங்கள் கலந்து கொள்வதும் சகஜமாக நடந்தேறும்! எங்கள் வளவு பெரியது நல்ல இடவசதி இருக்கிறது. ஆகையால் அயல்பொடி பொட்டைகள் எல்லாம் இங்கே சங்கமமாகிவிடுவர். கிட்டி விளையாட்டென்ன, யாடி விளையாட்டென்ன வைச்சுக் கொள்ளம்மா வைச்சுக் கொள்’ என்று துள்ளி விளையாடுவதென்ன,‘ பூப்பறிக்க வருகிறோம் வருகிறோம்’ இந்த நேரத்தில் என்று பாடி விளையாடுவதென்ன ‘எவடம் எவடம் புளியடி புளியடி ’என்று கண்ணாமூச்சி காட்டுவதென்ன எல்லாமே இனிமையாய் இங்கீதமாய் நடந்தேறும்! குண்டு விளையாட்டில் எத்தனை விதமிருக்கோ, பந்து விளையாட்டில் என்னரகமிருக்கோ! பட்டங்களில் எத்தனை வண்ணங்கள் உண்டோ, பாண்டி விளையாட்டென்ன நோண்டி விளையாட்டுக்கள் என்ன... அத்தனையும் அரங்கேற்றி களித்தவர்கள் நாம்! அவற்றை எல்லாம் இப்போ எந்த மியூசியத்தில் கலாசார காப்பகத்திலும் காணவே முடியாது! 

வெள்ளிக்கிழமைகளில் அம்மா ‘ப’ வடிவில் உள்ள இரும்பை அடுப்பில் இருந்து எடுத்துக் கொண்டு வருவா. செந்நிறத்தில் அதுதகதகக்கும்! ‘வாங்கடா நாலுபேரும்’ என்பா. எங்களுக்கு விளங்கிவிடும். நாலுபேரின் தலையும் அண்டாச் சட்டியை நோக்கி கவிழும். கனல்க்கும் அந்த இரும்பை சட்டியில் இட்டு தண்ணீரை ஊற்றுவார். இஸ்ஸ்... என்ற பேரொலியோடு புகையாய் கக்கும்! நான்குபேரின் முகங்களும் அதை சகிக்கவியலாமல் அவதியுறும்! ஆனாலும் சம்பிரதாயத்துக்கு பணிந்துதான் ஆகவேண்டும். (கண்ணூற்று எடுக்கும் சடங்கு அது) 

ஒவ்வொரு சனிக்கிழமையும் அம்மா ஊறல் (கருக்கல்) போட்டுத்தருவா. அதில் வேர்க்கொம்பு களச்சிக் கொட்டை சித்திரத்தை கண்டந்திப்பிலி அதிமதுரம், மிளகு, ஓமம் என்று இன்னும் எத்தனையோ பெயர் தெரியாத மூலிகைகளை எல்லாம் போட்டவித்து வடித்த மருத்து நீர்தான் அந்தக் கருக்கல்! மூக்கைப் பொத்திக் கொண்டு குடித்தே தீருவோம்! ஆறுமாதத்துக்கு ஒருக்கா சின்னராசா பரியாரியிற்றப் போய் பேதிமருந்து குடிக்கவேணும்!... இப்படியாக இளமைக் காலத்தில் எந்த நோய் நொடியும் இல்லாமல் வாழ்ந்திருந்தோம்... பெண்கள் பிரசவ வலியால் அவதியுற்றால் இப்போது போல் அவதி அவதியாக ஆசுப்பத்திரிக்கு கொண்டு போவதில்லை அப்போது, வீட்டு அயல் மூத்த பெண்களே சேர்ந்து சுகப்பிரசவமாக்கிவிடுவார்! பக்குவங்களும் சொல்லிக் கொடுப்பார். நாங்கள் நால்வரும் வீட்டிலேயே பிறந்தவர் தாம்! 

ஞாயிற்றுக்கிழமைகளில் தவறாமல் பூசைக்குப் போவோம். வியாகுலமாதா கோவில் எங்கள் பங்குக் கோவிலாக இருந்தது. பூசை எல்லாம் முடிந்து வீடு வந்ததுதம் உடுப்பு கழற்றமுதல், முதல் வேலையாக தாய் தகப்பனுக்கு தோத்திரம் சொல்வோம். வளவில் மூன்று நான்கு உறவினர் குடும்பங்கள் இருந்தன. அங்கெல்லாம் போய் வயதுக்கு மூத்தவர்களுக்கெல்லாம் தோத்திரம் சொல்லி ஆசீர் பெற்றுத்தான் அடுத்த கடமைக்குள் மீள்வோம். 

அப்போதெல்லாம் வளவிலும்தான் வெளியிலிருந்து வரும் உறவினரிலும்தான் பெரியோர் முதல் சிறியோர் வரை உறவுமுறை சொல்லியே உறவாடுவோம்... மாமா, பெரியமாமா, சின்னமாமா, சின்னமாமி, இளையமாமா, மாமி, மாமா, பெரியமாமி, பெரியப்பா, சின்னப்பா ஆசையப்பா, குஞ்சப்பா, அத்தான் பெரியத்தான், சின்னத்தான், பெரியம்மா, சின்னம்மா குஞ்சம்மா... என்று பட்டியல் இருக்கும். இப்படியாக உறவுமுறை சொல்லித்தான் உறவாட்டங்கள் நடக்கும்! எனக்கு இப்பவும் ஞாபகம் இருக்கிறது. எனது பெரியம்மாவின் மகன் ஒன்றுவிட்ட சகோதரன் என்னைவிட ஆறுமாதம் தான் மூத்தவன். அவளை பெயர் சொல்லி அழைத்தேன் ஓர் நாள். விழுந்தது அடி அம்மா கையால்! ‘உன்னைவிட மூத்தவன் எலுவாடா அண்ணன் எண்டு சொல்லுடா’ அப்படியான பண்பாட்டலுவல்கள் பேணிவந்த காலமது ஆனால் இப்போ எல்லாரையும் அன்ரி அங்கிள் மச்சான் என்பதோடு சரி! 

அப்போதெல்லம் இடைக்கிடை வீடு தேடி பிச்சைக்காரர்கள் வருவதுண்டு, சில்லறைக்காசை போடுவார்கள். அந்த செம்பு பித்தளைச் சதங்களின் பெறுமதி இப்போ எவ்வளவு தெரியுமா! சாப்பாட்டு சாமான்களை கொடுத்துவிடுவதும் உண்டு. இலை போட்டு சாப்பிடச் சொல்வதும் உண்டு! இப்போது திரியும் பிச்சைக்காரரில் அநேகம் பேரை கள்ளுத்தவறணையில் காணலாம் பீடி புகையோடு! 

அக்கம்பக்க வீடுகளில் இருந்தோ தெருவுகளில் இருந்தோ சொந்தப்பந்தகள் தெரிந்தவர்கள் சிரித்தமுகத்தோடு வந்து ஒன்றுகூடிவிடுவார். பலகை குத்திகளைப் போட்டுக் கொண்டு அரைவட்டமாகவோ அங்குமிங்குமாகவோ வீற்றிருப்பர்! பலகதைகளும் பேசி மகிழ்வார். அநேகமாக சிரிப்புக்கதைகளும் சில நேரம் துயர பேச்சுக்களும் காற்றில் தவழ்ந்துவரும்! வெற்றிலைத் தட்டம்தான் சுற்றிவரும். தேனீரும் வரும். நன்றாக மனம் விட்டு பேசி மனப்பாரங்களை இறக்குவதாலோ என்னமோ இப்போது போல் பாரிய வருத்தங்களும் அவர்களுக்கில்லை! “அந்தோனியம்மா வாறம் போயிற்று!” 

ஞாயிற்றுக்கிழமை எல்லோருக்கும் விடுமுறை தினம். ஐயா அன்று முழுக்க எங்களோடுதான் வீட்டிலிருப்பார். ஆசைப்பட்டதெல்லாம் திண்டு குடித்து மகிழ்வோம். பின்னோரம் மயங்கும் நேரம் படம் பார்க்க எம்மை எல்லாம் அழைத்துச் செல்வார் படமாளிகைக்கு. திரைப்படம் திரையிடும் முன்னமே விளம்பர அறிவித்தல்கள் அட்டகாசமாய் நடந்தேறும். மாட்டுவண்டியை அலங்காரம் செய்து நடிகர்களை ‘கட்டவுட்’ செய்து அறிவித்தல் பிரசுரங்களை வீசி, மேளதாளம் தட்டி பிரபலமாக்கிவிடுவார். அந்த மாட்டுவண்டிலுக்குப் பின்னால் திரிந்து ஒரு நோட்டீஸ் வாங்கினோமென்றாலே பெரிய மகிழ்ச்சி பிரவாகம்! 

படம் வந்த ஆரம்ப நாள்களில் அங்கே கிட்டவும் நெருங்க முடியாது! முள்ளுக் கம்பியால் அடித்த கியூ வரிசையையும் மீறிக் கொண்டு அட்டகாசமாய் முன்னேறிக் கொண்டிருப்பர் ‘டிக்கற்’எடுப்பதற்கு. சண்டையும் வரும்! ‘போலீசும்’ வரும்! அவ்வளவு கலைவெறி! நாங்கள் கொஞ்ச நாள் பொறுத்து சனம் அடங்கிய பின்னர்தான் புறப்படுவோம். அப்போதென்ன ‘கலரி’ அறுபது சதந்தான். நாங்கள் மூன்றாம் வகுப்புக்குதான் போவோம் அங்கும் அரைடிக்கற் அறுபது தான்! விறுவிறுப்பான கட்டம் வரும்போது விசிலடிப்தென்ன கைதட்டுவதென்ன சேர்ந்து கொல்லென்று சிரிப்பதென்ன, ஏன் சோகக் கட்டங்கள் வரும்போது கண்ணீரைச் சொரிவதென்ன... அவ்வளவு இரண்டறக் கலந்து உணர்வு பூர்வமாகி விடுவார்கள்! எத்தனையோ நாளாகும் அதைப் பற்றிய விமர்சனக் கதை பேச்சு முடிய! அப்போதையக் காலத்தில் திரைப்படத்தில் காணும் சோக கீதங்களை அதிர்ச்சிகளை சொந்த வாழ்க்கையில் கண்டு கேட்டு அறியவில்லைப் போலும்! ஆடல்பாடல் காட்சிகள் வரும். பாடலின் ஒவ்வொரு சொல்லின் அர்த்தத்துக்கேற்ற விதமாய் புலனுறுப்புக்கள் யாவும் அபிநயம் பிடித்து கதை சொல்லும்! எல்லா அங்கலாவண்யங்களும் கதை பேசும்! தாள இசை தப்பாது. தேவலோக நங்கையர் போல் எம்மை எங்கோ கூட்டிச் செல்வார்! 

அப்போது வந்த படங்களின் பாடல்களோ கதை வசனங்களோ, காட்சிகளோ, நடிகர் நடிகைகளோ, பின்னணிப் பாடகர்களோ, ஏன் கதை வசன கர்த்தாக்களோ, டைரக்டர்மாரோ இறவாப் புகழுடனேயே காலமும் வாழ்ந்து வருகின்றனர்! கலியாண வீடுகள் கொண்டாட்டங்களில் படக்கதை வசனங்களும் பாடல்களும் ஒலிபரப்பாவது கட்டாய கடமை! அந்த நேரப் பாடல்களை சீட்டியடித்துக் கொண்டே இன்ப உலகில் மிதிந்தோர் எத்தனையோ பேர்! சிந்தாமணி பைத்தியம் பராசக்திப் பைத்தியம் பிடித்து திரிந்தோரும் உண்டு! அந்தளவுக்கு கலை வசீகரப்படுத்தியிருந்தது அப்போது! ஆனால் இப்போது?

சூசை எட்வேட் -  திருக்கோணமலை

Comments