இனங்களுக்கிடையே புரிந்துணர்வை ஏற்படுத்தும் பெருவிழா! | தினகரன் வாரமஞ்சரி

இனங்களுக்கிடையே புரிந்துணர்வை ஏற்படுத்தும் பெருவிழா!

இலங்கையில் தமிழரும் சிங்களவரும் சித்திரை புது வருடப்பிறப்பினை தமிழ் சிங்கள புத்தாண்டாகக் கொண்டாடுகிறார்கள். சித்திரை மாதம் பிறந்ததுமே இளவேனில்காலம்' என்னும் வசந்த காலம் தொடங்குகிறது.  

வசந்த காலத்தில் மாமரங்களில் மாந்தளிர்களும், மலர்களும் பூத்துக் குலுங்கும். அச்சமயம் வேப்ப மரங்களில் வேப்பம் பூக்கள் பூத்துக் குலுங்கும். மனித வாழ்க்கை இனிப்பும், கசப்பும் கலந்தே இருக்கும் என்பதை எடுத்துக் காட்டும் அம்சமாக இச்செயற்பாடு கருதப்படுகிறது. இக்காலத்தில் குயில்கள் கூவும். குயில்கள் கூவத் தொடங்கியதுமே வசந்த காலம் பிறந்துவிட்டது என்பர். சித்திரைப் புத்தாண்டு காலத்தை பாடசாலை விடுமுறை, அலுவலக விடுமுறை என, இலங்கை வாழ் மக்கள், சந்தோசமாக வரவேற்கின்றனர். இந்தத் காலத்தில், பலரும் உறவினர் வீட்டுப் பயணங்களையும், சுற்றுலாக்களையும் மேற்கொள்ளுகின்றனர்.  

கி.பி 1310இல் இலங்கையை ஆண்ட தம்பதெனியா மன்னன் மூன்றாம் பராக்கிரமபாகுவின் அரசகுருவான தேனுவரைப்பெருமாள் எழுதிய 'சரசோதி மாலை' எனும் நூலே இலங்கையின் மலையகத்தில் வெளியான முதல் நூலாக கருதப்படுகிறது. இதில் வருடப்பிறப்பின் போது செய்யவேண்டிய சடங்குகள் பற்றி விவரிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் புத்தாண்டு பிறக்கும் புண்ணியகாலத்தில், ஆலயத்தில் வழங்கப்படும் மருத்து நீர் எனப்படும் மூலிகைக் கலவையை இளையவர்களின் தலையில் மூத்தோர் வைத்து ஆசீர்வதிப்பர். இம்மருத்துநீர் தாழம்பூ, தாமரைப்பூ, மாதுளம்பூ, துளசி, விஷ்ணுகிராந்தி, சீதேவியார் செங்கழுநீர், வில்வம், அறுகு, பீர்க்கு, பால், கோசலம், கோமயம், கோரோசனை, மஞ்சள், திற்பலி மற்றும் சுக்கு என்பவற்றை நீரிலே கலந்து காய்ச்சப்படும். மருத்து நீர் வைத்து நீராடினால் புத்தாண்டின் நல்ல பலன்களை பெறலாம் என்பது நம்பிக்கை ஆகும். அதன் பின்னர் நீராடி அவர்களிடம் ஆசி பெற்று, குறித்த சுபவேளைகளில் கைவிசேடம் பெறுவர்.  

மூத்தவர்களால் இளையவர்களுக்கு, புத்தாண்டு அன்பளிப்பாக வழங்கப்படும் பணமே கைவிசேடம் எனப்படுகிறது. சித்திரை முதல் நாளன்று பெருவாரியாக மக்கள் கோயில்களுக்கு சென்றும் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டும் மற்றும் பல வகைகளிலும் வருடப் பிறப்பை சிறப்பாக கொண்டாடுவர். நல்ல நேரத்தில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் குடும்பத் தலைவரிடமிருந்தும், வயதில் மூத்தவர்களிடமிருந்தும், அலுவலகங்கள், விற்பனை நிலையங்கள், தொழிற்சாலைகள் என்பவைகளில் வேலை செய்வோர் தங்கள் வேலை கொள்வோரிடமிருந்தும் புதுவருடத்தில் முதல் அன்பளிப்பாக வெற்றிலையில் பாக்கு, நெல்லு காசு என்பவற்றை குத்து விளக்கின் முன்பாக வைத்து கொடுப்பர்கள். பணத்தை கைவிசேடமாக பெற்றுக்கொள்வார்கள். கொடுக்கப்பட்ட எல்லாவற்றையும் எண்ணி (நெல்லு உட்பட) அது ஒற்றை விழுந்தால் நல்ல பலன் என்பது ஐதீகம். கைவிசேடம் பரிமாறிக்கொள்வது என்பது ஒரு பாரம்பரியமான வழக்கமாகும்.  

சித்திரை புத்தாண்டு இலங்கையில் இரு இனங்களால் கொண்டாடப்படுவதால் புரிந்துணர்வு, ஐக்கியம், சமய, சமூக, கலாசார உறவுகள், பண்பாட்டுக் கோலங்கள் என்பவைகளை எடுத்துக் காட்டும் வகையில் பழக்கவழக்கங்களும், நடவடிக்கைகளும் அமைந்துள்ளன. நல்லெண்ணம், நல்லுறவு, ஐக்கியம், அன்புப் பரிமாற்றம், குதூகலம், விருந்தோம்பல் போன்ற மனிதப் பண்பாட்டின் உயர்ந்த அம்சங்களை இது வெளிப்படுத்துகிறது. சித்திரை மாதத்தில் சூரியன் மேஷ ராசியில் மிகவும் உச்சமாக பிரகாசிப்பதால் அன்றைய தினம் பானகம், நீர், மோர், பருப்புவடை ஆகியவற்றை நைவேத்தியம் செய்ய வேண்டும். இனிப்பு, கசப்பு, உவர்ப்பு, புளிப்பு, துவர்ப்பு, கார்ப்பு என அறுசுவை கொண்ட உணவுகளை சமைத்து உண்பர். மதிய உணவில் வேப்பம்பூ பச்சடி, மாங்காய்ப் பச்சடி, பருப்பு வடை, நீர்மோர், பருப்பு, பாயாசம், மசால்வடை போன்றன இடம்பெறுதல் அவசியம். வேப்பம் பூ கசக்கும் என்றாலும் மனித உடலிலுள்ள ரத்தத்தை தூய்மை செய்வதில் வேப்பம் பூவுக்கு நிகராக வேறு எந்த மூலிகையும் இல்லை. இதற்காகவே இந்த உணவு உண்ணப்படுகிறது. அத்துடன் உணவை விருந்தினருடன் உண்டு மகிழ்ந்தால் அந்த ஆண்டு முழுவதுமே குதூகலமாக இருக்கும் என்பது மக்களின் முக்கிய நம்பிக்கையாகும். இதற்காகவே விருந்தினர் வருகையும் விருந்தோம்பலும் நம் பாரம்பரியமாக மாறியது.  

சிங்கள மக்கள் தமது புதுவருடத்தில் புத்தாண்டுக்கான ஏற்பாடுகளை அதற்கான சுபநேரத்தில் அரிசி இடித்து அடுப்புக் கட்டி பலகாரம் சுடுவதுடன் ஆரம்பிப்பது வழக்கமாகும். அடுத்ததாக பழைய வருடத்திற்கான ஸ்நானம் இடம்பெறும். உடலையும் உள்ளத்தையும் சுத்தப்படுத்துவதை நோக்காகக் கொண்டு இடம்பெறும் இந்த குளியில் பழைய வருடத்திற்கான இறுதிக் குளியலாகும். புத்தாண்டுக்கான விசேட நீராடல் சிங்களவர் மத்தியில் வழக்கத்தில் இருந்து வருகின்றது. புத்தாண்டு பிறப்பதற்கு முன் எழுந்து மருந்து எண்ணை வைத்து குளிப்பார்கள். விகாரைக்கு சென்று வழிப்பட்டு புத்தாண்டு பிறப்பு நேரத்தில் பட்டாசு கொளுத்துவர்.

புத்தாடை உடுத்தி பால் பொங்குதல், பால்சோறு சமைத்தல் அத்துடன் தின்பண்டங்கள் தயாரித்தலில் ஈடுபடுவர். அத்துடன் பணியாரம், வாழைப்பழம் மற்றும் தின்பண்டங்களும் வைத்து படையல் இடுவர்கள். இப் படையலில் முக்கியமாக பால்சோறு இருக்கும். இப் புண்ணிய காலம் முடிந்த பின்னர், புத்தாண்டு கலாசார மற்றும் விநோத விளையாட்டுப் போட்டிகளை நடத்துவர். பெண்கள் 'றபான்' அடிப்பர். இது தமிழரிடம் இல்லாத ஒரு வழக்கமாகும். சிலவேளை புண்ணியக்காலம் இரவில் முடிவடையுமாயின், இந்நிகழ்வுகள் அடுத்த நாளிலோ அல்லது அடுத்து சில நாட்களிலோ தமது வசதிக்கேற்ப வைத்துக்கொள்வர். சிங்கள பௌத்தர்கள் சித்திரைப் புத்தாண்டை பகைமை ஒழிப்புக்கான சிறந்த வாய்ப்பாக உபயோகப்படுத்திக் கொள்வது வழக்கத்தில் இருந்து வருகின்றது. நீண்ட காலமாக பகைமை கொண்டிருந்த நண்பர்கள், உறவினர்கள் ஆகியோரை பார்க்கச் சென்று பகைமை தீர்த்துக் கொள்ளப்படும்.  

போர்த்தேங்காய் அடித்தல், சேவல் சண்டை, சடுகுடு, யானைக்குக் கண் வைத்தல், கிளித்தட்டு, ஊஞ்சலாடல், முட்டி உடைத்தல், போன்ற விளையாட்டுகள் எல்லா இடங்களிலும் நடைபெறும் சிறப்பு அம்சங்களாகும்.அத்துடன் ஊஞ்சலாட்டம், கும்மியடித்தல், கொக்கான் வெட்டுதல், பல்லாங்குழி, ராபான் அடித்தல், சொக்கட்டான் போன்ற பெண்கள் கலந்து கொள்ளும் விளையாட்டுகளும் இடம்பெறுவதுண்டு.

அத்துடன் மாட்டு வண்டிச் சவாரி, மரதன் ஓட்டம், சைக்கிள் ஓட்டம், தலையணை சண்டை வழுக்கு மரம் ஏறுதல் போன்ற போட்டிகளும் சித்திரைப் புதுவருடத்தையொட்டி நடைபெறுவது வழக்கம். இது போல நாட்டார் கலைகளான வசந்தனாட்டம், மகுடிக்கூத்து, நாட்டுக்கூத்து முதலானவை இலங்கையின் பாரம்பரிய புத்தாண்டுக் கலையாடல்கள் ஆகும். எனவே புத்தாண்டு இரண்டு இனங்களுக்கிடையே புரிந்துணர்வை ஏற்படுத்தும் ஒரு நிகழ்வாக இலங்கையில் காணப்படுகிறது.    

ஆர். மகேஸ்வரன்...

  நூலகர்

பேராதனைப் பல்கலைக்கழகம்.

Comments