இஸ்ரேலின் பிரதமராக மீண்டும் பெஞ்சமின் நெதன்யாகு? | தினகரன் வாரமஞ்சரி

இஸ்ரேலின் பிரதமராக மீண்டும் பெஞ்சமின் நெதன்யாகு?

இஸ்ரேலியத் தேர்தல் அரசியல் அதிகம் சூடுபிடித்துள்ளது. இரு கட்சிப் பாரம்பரியத்தை கொண்டிருந்தாலும் பலகட்சிகளின் கூட்டு மிகப் பலமான அரசியலாகக் காணப்படுகிறது. யூதர்கள் பற்றி ஒரு பழமொழி உண்டு ‘நான்கு யூதர்கள் ஒன்று சேர்ந்தால் ஐந்து கட்சிகளை உருவாக்குவார்கள் என்பது’ நிஜத்திலும் பல கட்சிப் பாரம்பரியத்தைக் கொண்டவர்கள் யூதர்கள். ஆனாலும் இரு கட்சி அரசியலை அதிகம் பிரதிபலிக்கும் தேசிய அரசியலில் ஈடுபடும் யூதர்கள் 2019தேர்தலையும் அவ்வாறே எதிர்கொள்கின்றனர். பிரதான இரு கட்சிகளும் பல கூட்டுக் கட்சிகளும் தேர்தலில் போட்டியிடுகின்றன. இத் தேர்தலை பற்றிய போக்கினையும் அது இஸ்ரேல்- பலஸ்தீன அரசியலில் ஏற்படுத்தப் போகும் தாக்கங்களையும் விளங்கிக் கொள்ளவதே இக்கட்டுரையின் வெளிப்படாகும்.  

120நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான தேர்தலுக்கு தயாராகும் இஸ்ரேலிய மக்கள் வலதுசாரி லிக்குட் கட்சிக்கும் தொழில் கட்சிக்கும் வாக்களிப்பதற்குத் தயாராகின்றனர். இஸ்ரேலியப் பராளுமன்றமான நெசாட்டுக்கான தேர்தலில் தற்போதைய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிற்கும் முன்னாள் இராணுவத் தளபதியான பெஞ்சமின் கண்டஸூக்கும் இடையில் கடும் போட்டி நிலவுவதாக தகவல்கள் உறுதி செய்கின்றன. இஸ்ரேலிய அரசியலமைப்பின் படி பிரதமர் வேட்பாளர் தேர்தலின்  போதே நிறுத்தப்பட வேண்டும். பிரதமரை முன்வைத்தே கட்சிகள் போட்டியிட வேண்டும் என்ற நிபந்தனை உண்டு. இதன் பிரகாரம் நெதன்யாகு மற்றும் கண்ட்ஸ் இருவரும் பிரதான பேட்டியாளர்களாக விளங்குகின்றனர். இதில் நெதன்யாகு நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பின் படி முன்னிலை வகிப்பதாகவும் நீண்ட காலப்பிரதமர் எனும் பெருமையை அடைவார் என்றும் குறிப்பிடப்படுகிறது. ஏற்கனவே அவர் 13வருடம் ஆட்சி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.  

இத் தேர்தலில் நெதன்யாகு வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு அதிகமாக இருந்த போதும் அவர் மீதான ஊழல் குற்றச்சாட்டுக்கள் அதிக பாதிப்பை ஏற்படுத்துமென ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அத்தகைய புகார்களால் அவரது வெற்றிவாய்ப்பினை பறிக்க முடியாதெனவும் கருத்து நிலவுகிறது. காரணம் அவரது பாகாப்புக் கொள்கை மற்றும் பொருளாதாரக் கொள்கை மட்டுமன்றி வெளியுறவுக் கொள்கை என்பன மிகச்சிறப்பாக அமைந்துள்ளதாக கருதப்படுகிறது. தேசப் பாதுகாப்பே யூதர்களின் பிரதான இலக்காகும். அதனை எந்த வேட்பாளர் அதிகமாகக் கொண்டுள்ளாரோ அவரே யூதர்களின் பிதாமகனாவார். அதிலும் அரபுக்களுக்கும் பாலஸ்தீனர்களுக்கு எதிராக செயல்படும் தலைவரே யூதர்களின் தெரிவாகும். அவர்களின் பாதுகாப்பே உயிர்மூச்சாகும்.

பிராந்திய அரசியலிலும் சர்வதேச அரசியலிலும் எற்பட்டுவரும் மாற்றங்கள் மட்டுமல்ல மேற்காசியாவில் அமெரிக்கா அடைந்து வரும் பின்னடைவு இஸ்ரேலைப் பாதிக்கும் விடயமாக உள்ளது. அதனை சரிப்படுத்தக் கூடிய தலைவர் ஒருவரே அவர்களின் தலைவாராக வேண்டும் என்பது யூதர்களின் எதிர்பார்க்கையாகும். அந்த இடத்தில் நெதன்யாஹூ முதன்மையானவராக காணப்படுகின்றார். யூதர்களுக்கு பாலஸ்தீனர்களை எதிர்ப்பவர் எப்போதும் வேண்டும் என்பது கடந்த கால அனுபவமாகும். அதனை அடையக் கூடிய தலைவர்களையே அவர்கள் தெரிவும் செய்துள்ளனர்.  

நெதன்யாகு பாலஸ்தீனர்களை மட்டும் எதிர்ப்பவராக இல்லை. மிகச்சிறந்த இராஜதந்திரியாகவும் தந்திரோபாயங்களை வெளிப்படுத்துபவராகவும் காணப்படுகின்றார். அவரது வெளிநாட்டுக் கொள்கைக்கு கிடைத்த வெகுமதியே ஜெரூசலம் தலைநகரமான தெரிவாகும். அதனை அமுலாக்குவதில் நெதன்யாகுவின் அணுகுமுறைகள் மிக தந்திரமானதாக அமைந்திருந்தன. திட்டமிட்ட அடிப்படையில் நகர்த்திய போதும் ஒரு தடவை கூட பின்வாங்காது செயல்பட்டமை சிறப்பான தலைமைக்குரிய விடயமாகும். அமெரிக்காவினதும் அதன் ஜனாதிபதியினதும் ஆதரவுக்கு அப்பால் பிற தேசங்களை கையாண்ட விதம் கவனிக்கத்தக்கது. அதனையே யூதர்கள் பெருமையாகவும் நெதன்யாகுவின் கொள்கைமீதான பலம் என்றும் கருதுகின்றனர். அவ்வாறு கருதுவது ஒருவகையில் யூதர்கள் பக்கம் சரியான பார்வையாகும். அதனால் மிகச்சிறந்த தலைவராக கருதுவதற்கு அவரது அணுகுமுறைகளே காரணமாகும்.  

யூதர்களின் கருத்துநிலையை புரிந்து கொண்ட நெதன்யாகு தாம் வெற்றி பெற்றால் மேற்கு கரையிலுள்ள சர்ச்சைமிக்க குடியிருப்புப் பகுதிகளை இஸ்ரேலுடன் இணைக்கப்போவதாக அறிவித்துள்ளார். இது யூதர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது. அகண்ட இஸ்ரேல் என்பதன் இலக்கை நோக்கி நகரும் நெதன்யாகுவுக்கு ஆதரவு அதிகரித்துவருகிறது. இதனை அமெரிக்கா ஏற்றுக் கொள்ளும் என்பதில்  அதிக நம்பிக்கை யூதர்களுக்கு உண்டு. காரணம் ட்ரம்ப்-நெதன்யாகு நெருக்கமேயாகும். எவ்வாறு ஜெரூசலத்தை தலைநகராக அறிவித்தாரே அவ்வாறே மேற்கு கரைப்பகுதியையும் கையாளுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ஆனால் நெதன்யாகுன் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால் ஏற்படப் போகும் ஆபத்து பிராந்திய அரசியலில் முதன்மையானதாக அமையும். காரணம் மேற்காசியாவிலிருந்து அமெரிக்கா வெளியேற்றம் இஸ்ரேலின் தனிமை என்பன  தனித்து யுத்தத்தினால் தீர்வை எட்டமுடியாது என்பதை உணர்த்துவதாக உள்ளது. அதன் பிரதமர் ஒரு மிதமான அதே நேரம் கடும்போக்கற்றவராக அமைவதே இஸ்ரேலுக்கு நன்மை பயப்பதாக அமையும். ரஷ்யாவின், சீனாவின் ஆதிக்கம் மேற்காசியாவில் அரபுக்களின் எழுச்சிக்கு வழிவகுக்கும். ஏற்கனவே அத்தகைய நிலை வளர்ந்துள்ளது. ஈரான், சிரியா என்பனவற்றின் வளர்ச்சி இஸ்ரேலுக்கு ஆபத்தானதாக அமையும். இச்சந்தர்ப்பத்தில் போர்க் குணமிக்க தலைமை ஆட்சியை கைப்பற்றுவது போருக்கு, வழிகாட்டுவதாகவே அமையும். இஸ்ரேலின் உயிர்வாழ்வு போராக இருந்தாலும்  அதனால் உலகத்தையோ ஏனைய நாடுகளையோ கட்டமைக்க முடியாது.  

புதிய உலக ஒழுங்கு உருவானபோது அப்படியான சூழல் ஏற்பட்டது. ஆனால் அதில் யூதர்களின் தலைமை மிகச் சரியான கையாளுகையை மேற்கொண்டு நிலமையை சரிப்படுத்தியது. துரதிஸ்டவசமாக யூதர்களின் சிறந்த தலைமையான சிமொன் பெரசை இழந்தது. அதே காலகட்டம் தற்போது மீண்டும் ஏற்பட்டுள்ளது. இதனை எதிர்கொள்ளும் தலைமைகள் இஸ்ரேலியரிடம் அரிதாவே உள்ளமை கவனிக்கத்தக்கது. இதனை கையாளும் திறன் நெதன்யாகுவிடம் மிக அரிதானது என்பதைவிட அரபுக்களும் இஸ்லாமிய நாடுகளும் அதன் தலைமைகளும் பலமாக உள்ளனர் என்பதே முக்கியமானது. அத்துடன் இஸ்ரேலின் அணுகுமுறையை நன்கு தெரிந்தவர்களாக இஸ்லாமிய தரப்பு உள்ளது. ஈரானின் அணுவாயுத பலத்தை இஸ்ரேல் பலதடவை நிர்மூலமாக்கினாலும் அவர்கள் அதனை தயாரிக்கும் திறனுடையவராக மாறியுள்ளனர் என்பது கவனிக்கத்தக்கது. முன்னாள் பிரதமர் பென்கூரியர் குறிப்பிட்டது போல் அதாவது குறிப்பிட்ட தொகை டொலரும் அழகான பெண்களும் அரபுத்                   தலைவர்களை கையாள போதுமானது என்ற நிலை தற்போது இல்லை. அதனால் இஸ்ரேலியர் அதிக நெருக்கடிக்குள் பிரவேசிக்கின்றனர் என்பது மறுக்கமுடியாத செய்தியாகும்.  

இச்சந்தர்ப்பத்தில் தீவிர வலதுசாரிகளை விட மிதமான வலது சாரிகளே இஸ்ரேலின் இருப்புக்கு இலாபகரமானதாக அமையும். இத்தகைய கடும் போக்கானவர்கள் நெருக்கடியான சூழலை கையாள்வதற்கு போரை மட்டுமே தெரிவு செய்பவர்களாக விளங்குவர். அதனால் அது பிராந்தியத்தை கடந்து செயல்பட வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உரியதாக மாறுமாயின் அது முழு நீள யுத்தமாக அமையும்.

அது பலஸ்தீனர்களை மட்டுமன்றி அரபுக்களையும் அதிக பாதிப்புகளுக்கு உள்ளாக்கும். பலஸ்தீன மக்களுக்கு மீண்டும் ஒரு துயரம் காத்திருக்கிறது என்பதை நெதன்யாகுவின் வெற்றி தீர்மானிக்கும். மறுபக்கமான விளைவையும் தரக்கூடியதாக அமைந்துவிடும். அதாவது நெதன்யாகுவின் அணுகுமுறையானது உலகம் தழுவிய விதத்தில் போராக அமையும் சந்தர்ப்பத்தில் பாலஸ்தீனர்களின் இருப்புக்கு பாதகம் ஏற்படவும் வாய்ப்புள்ளது.

ரஷ்யா-_ சீனா சிரியா_ ஈரான் கூட்டு பலமானதாக அமையும் வரை பலஸ்தீனர்களுக்கான பாதுகாப்பு சாத்தியமானதாக அமையவாய்ப்புள்ளது. இதன் எதிரொலிப்பே தற்போது மேற்காசிய அரசியல் மாற்றம் என்பதை இதே பத்தியில் பல தடவை குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால் மேற்காசியாவின் அரசியலிலிருந்து இஸ்ரேலின் நட்பு நாடான அமெரிக்கா ஒதுங்கியிருப்பது ஆரோக்கியமானதாக இஸ்ரேலுக்கு அமைய வாய்ப்பில்லை எனக் கூறலாம்.  

எனவே நெதன்யாகுவின் வெற்றியானது யூதர்களின் அரசியல் பொருளாதார இராணுவத்தில் அதிக பாதுகாப்பானது என்பது மறுக்கமுடியாது. ஆனால் அவரது தீவிரம் மேற்காசிய களத்தையும் உலகளாவிய போக்கினையும் கையாளப் போதுமானதாக அமையாது என்பதே இஸ்ரேலுக்கான நெருக்கடியாகும். அவரது அணுகுமுறைகள் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பை மையப்படுத்தியதாக அதிகம் அமைந்திருந்தது. அதில் மாற்றம் ஏற்பட்டால் அதன் விளைவுகள் அனைத்தும் இஸ்ரேலைப் பாதிக்கக் கூடியது. ஒபாமா நிர்வாகத்தில் எத்தகைய நெருக்கடியை இஸ்ரேல் சந்தித்ததோ அதனை மீளவும் அனுபவிக்கும் நிலை ஏற்பட வாய்ப்புள்ளது.  

இஸ்ரேலின் தேர்தல் போக்கினை மதிப்பிட்டால் அதிக பெரும்பான்மை வெற்றியை நெதன்யாகு எட்டாது விட்டாலும் வெற்றி உறுதியானது என்பது தெளிவாக அமைந்துள்ளது. கருத்துக் கணிப்பில் முன்னணியில் நெதன்யாகுவே உள்ளமை குறிப்பிடத்தக்கது. அது மட்டுமன்றி அதற்கான பிரச்சாரத்தை தொடர்கின்றவராக அவர் காணப்படுகின்றார்.

அரச தரப்பு என்பதாலும் பிரதமர் என்பதாலும் அதிக வாய்ப்பு அவருக்கு உரியதாகும். எதிரணியின் வேட்பாளர் அதிகம் தெரிந்தவராகவோ பிரபலமான இராணுவத் தளபதியாகவோ செயல்படாதவர் என்பதுவும் நெதன்யாகுவுக்கு வாய்ப்பானதாக அமைந்துள்ளது. ஆனால் அவரது வருகை இஸ்ரேல் பலஸ்தீன முரண்பாட்டினை தீவிரப்படுத்தும். அதனால் அந்நிலம் மட்டுமல்ல மேற்காசியா முழுவதும் இரத்தம் சிந்தப்படுவதுடன் உலகத்தையும் பாதிக்குமா என்பதே பிரதான கேள்வியாகும். அக் கேள்வி தவிர்க்க முடியாததாகும். 

கலாநிதி

கே.ரீ. கணேசலிங்கம்

யாழ்.பல்கலைக்கழகம்

 

Comments