காணாமல் போனோர் தொடர்பான 2ஆவது பிராந்திய அலுவலகம் மன்னாரில் | தினகரன் வாரமஞ்சரி

காணாமல் போனோர் தொடர்பான 2ஆவது பிராந்திய அலுவலகம் மன்னாரில்

15ஆயிரம் முறைப்பாட்டுக் கோவைகள்
 
பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில்  விசாரணைகளை மேற்கொள்வதற்காக அமைக்கப்பட்டுள்ள காணாமல் போனோர் அலுவலகத்தின்  இரண்டாவது பிராந்திய அலுவலகத்தை மன்னாரில் அமைப்பதற்குத்  தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், மொத்தமாக இந்த அலுவலகத்திற்கு 15ஆயிரம்  முறைப்பாட்டு கோவைகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அறிய முடிகிறது. யாழ்ப்பாணம்,  கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா, மட்டக்களப்பு திருகோணமலை,  அம்பாறை, கண்டி, குருநாகல், மொனராகலை, மாத்தறை ஆகிய 12 மாவட்டங்களில்  காணாமல்போனோர் அலுவலகத்தின் பிராந்திய அலுவலகங்களை அமைப்பதற்கு ஏற்கனவே  முன்மொழிவுகள் இடம்பெற்றிருந்தன. இதன் முதலாவது பிராந்திய அலுவலகம்  மாத்தறையில் அமைக்கப்பட்டுள்ள நிலையிலேயே இரண்டாவது பிராந்திய அலுவலகத்தை  மன்னாரில் அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன் அடுத்த  பிராந்திய அலுவலகத்தை யாழ்ப்பாணத்தில் அமைப்பதற்கும்  தீர்மானிக்கப்பட்டுள்ளது. இம்மாத இறுதியில் இதன் அங்குரார்ப்பண நிகழ்வு  இடம்பெறவுள்ளது.
 
அத்துடன், இந்த பிராந்திய அலுவலகத்தின் பணிகளுக்காக 250  பேர் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர். இவ்வாறு இணைத்துக்கொள்ளப்படவுள்ள 250  பேரில் காணாமல்போனோரின் பிள்ளைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படவுள்ளது.  இதேவேளை, 2019ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டத்தில் காணாமல்போனோரது  குடும்பத்தாருக்கு இழப்பீடுகளை வழங்கும் முகமாக 500 மில்லியன் ரூபாய்  ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 
 
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு,  மன்னார், வவுனியா, மட்டக்களப்பு திருகோணமலை, அம்பாறை, கண்டி, குருநாகல்,  மொனராகலை, மாத்தறை உட்பட நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் காணாமல்போனோர்  தொடர்பிலான அலுவலகம் விசாரணைகளை மேற்கொண்டு இடைக்கால அறிக்கையை ஏற்கனவே  சமர்ப்பித்துள்ளது. 
அலுவலகத்திற்கு கிடைக்கப்பெற்றுள்ள 15ஆயிரம்  முறைப்பாட்டு பயில்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு இறுதி  அறிக்கையையும், சிபாரிசுகளையும் சமர்ப்பிப்பதற்கான நகர்வுகள் இடம்பெற்று  வருவதாகவும் அறிய முடிகிறது.
 
சுப்பிரமணியம் நிஷாந்தன்
 

Comments