சித்திரை மகளே வருக வருக | தினகரன் வாரமஞ்சரி

சித்திரை மகளே வருக வருக

சித்திரை மகளே வருக வரும் – இத் 

  தரையில் பிறந்து வாழ்க்கை இதிகாசத்தை 

இலைகளோடும், இளம் தளிர்களோடும் 

  எழுதிக்கொண்ட எங்கள் மலையகத்தார் 

வாழ்வில் எழுச்சியை தந்துவிடு – மன 

  உளைச்சலை இறக்கி வைத்துவிடு 

தோல் அழுத்தும் கூடையின் பாரங்களோடு 

  தொலைதூர வெளிச்சத்தில் வாழ்க்கையை 

தொலைத்துவிட்டு தேடித்தேடியே 

  தேகம் இளைத்த மலையகத்தார் வாழ்விலும் 

மலர்ச்சிபெற மலர்ந்திடு சித்திரையே 

  விழிகளில் வியர்வையால் விடியலைத்தேடி  

வீண் லட்சியக்கனவுகளோடு லயங்களிலே 

  காலமெலாம் போராடும் கன்னியர் பலரின் 

கலியாணக் கோலங்கள் கண்டிட 

  விரைந்து நீ வந்திடு சித்திரையே 

புழுதிப்படுக்கையில் புதைந்த எம்மக்களை 

  புதுமனையில் குடிபுக புறப்பட்டு வாமகளே 

அழுது அழுது தினம் ஆட்டம் கண்ட வாழ்வு 

  விடியலைத்தேடி வெற்றி மாலை சூடிநிற்க 

வந்திடு மகளே நீ வளம் பெற்ற சித்திரையாக... 

பசறையூர் 

ஏ.எஸ். பாலச்சந்திரன்

Comments