அதிகார பகிர்வு மூலம் தீர்வு காண முயற்சி | தினகரன் வாரமஞ்சரி

அதிகார பகிர்வு மூலம் தீர்வு காண முயற்சி

இருதரப்பும் உத்தரவாதம்; மாற்று வரைபு அரசிடம் கையளிப்பு

இன்னொரு ஜனாதிபதி தேர்தலுக்கு ஆயத்தமாவது மக்கள் ஆணையை மீறும் செயலாகும்

இனப் பிரச்சினைக்குத் தீர்வுகாணும் வகையில் முன்னெடுக்கப்பட்டு வரும் புதிய அரசியலமைப்புக்கான முயற்சிகள் தோல்வியடைந்தால், அதிகாரப் பகிர்வையேனும் உறுதி செய்வதற்கு இரு தரப்பும் உத்தரவாத மளித்திருப்பதாகத் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தினகரன் வாரமஞ்சரிக்கு வழங்கிய விசேட பேட்டியில் தெரிவித்தார்.

அதிகாரப் பகிர்வு குறித்த மாற்று வரைபொன்றை தயாரித்து தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்திடம் சமர்ப்பித்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார். நாட்டில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடிகளின் பின்னர் அரசாங்கம் மீள அமைக்கப்படுவதற்கு சில பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்ததாகவும் அதனடிப்டையிலேயே ஐக்கிய தேசிய கட்சி தனித்து ஆட்சியமைக்க தாம் ஆதரவளித்திருந்தாகவும் தெரிவித்த சுமந்திரன் எம்.பி., அந்த இணக்கம் அல்லது உடன்பாடு தொடர்ச்சியாக இருக்கிறது. அதாவது ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கமாக இருக்காவிட்டால், அதற்கு மாறாக மகிந்த ராஜபக்‌ஷ ஆட்சிக்கு வருவதைத் தடுப்பதற்கே  ஆரவளிப்பதற்கு முக்கிய காரணம் என்றும் கூறினார்.

அதேநேரம் நாட்டில் அரசியல் சூழ்ச்சி இடம்பெறுவதற்கு முன்பாக, நிதியமைச்சுடன் சில விடயங்களைப் பேசி அதில் இணக்கம் காணப்பட்டிருந்தது. அந்தவகையில் முன்னர் இணங்கிய விடயங்கள் இதில் புதுப்பிக்கப்பட்டுள்ளன.

மேலும், வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டால், அரசாங்கம் உடனடியாக பதவியிழக்கும் என அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே, இந்த அரசாங்கம் பதவியிழந்தால் மகிந்த ராஜபக்ஷவே பதவியில் வருவார். அதற்கு இடமளிக்க முடியாது போன்ற காரணங்களினாலேயே வரவு செலவுத்திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தோம்  என்றும் சுமந்திரன் எம்.பி. குறிப்பிட்டார்.

புதிய அரசியலமைப்பு காணாமல் போகவில்லை. அதற்கான இரண்டாவது அறிக்கையோடு வரைபொன்று ஜனவரி 11ஆம் திகதி வெளிவந்திருக்கிறது. அது ஒரு பொதுவான வரைபாகவே வந்திருக்கிறது. நிபுணர்கள் அனைவரதும் கருத்தையும் உள்வாங்கி வெளி வந்திருக்கிறது. ஆகவே, அதனை நிறைவேற்றுவதற்கு ஜனாதிபதி பிரதமருடன் கூட்டாக பேச்சுவார்த்தை நடத்தியிருந்தோம். அது தொடர்பாக சில முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், புதிய அரசியலமைப்பாக வராவிட்டாலும் கூட இனப் பிரச்சினைக்கு தீர்வாக அதிகார பகிர்வு தொடர்பான விடயத்தை செய்வோம் என்று இரு தரப்பினரும் உறுதியளித்திருக்கிறார்கள். அதற்கான மாற்று வரைபொன்றையும் செய்து சமர்ப்பித்திருக்கின்றோம். ஆகவே இந்த தேர்தல்கள் எதுவும் வருவதற்கு முன்பதாகவே அந்த மாற்றங்களை நாங்கள் செய்வதற்கு எத்தனிப்போம் என்று கூறினார்.

ஜனாதிபதி தேர்தல் குறித்து நாங்கள் ஜே.வி.பி யுடன் இரண்டு தடவைகள் பேசியிருக்கின்றோம். 2015ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தின் போது ஒன்றாக இருந்த சிவில் சமூக பிரதிநிதிகளோடும் இது தொடர்பாக பேசியிருந்தோம். அதேபோல் இரு தரப்பினருடனும் ​சேர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியிருக்கின்றோம். மைத்திரிபால சிறிசேனவுக்கு கொடுக்கப்பட்ட ஆணை நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறையை ஒழிக்க வேண்டும் என்பதாகும். அந்த ஆணையை தாம் முதலாவது ஆணையாக செயற்படுத்துவேன் என பல தடவைகளில் கூறியிருக்கின்றார்.

இந் நிலையில், அவ்வாறு செய்யாமல் இன்னொரு ஜனாதிபதி தேர்தலுக்கு ஆயத்தப்படுத்துவது மக்கள் கொடுத்த ஆணையை மீறுவது என்பதே எங்களது நிலைப்பாடு. இவ்வாறான நிலையில், உடனடியாகப் புத்தாண்டு நிறைவடைந்த பிற்பாடு நாடு பூராகவும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கான வேலைத்திட்டத்தை நாமும் ஜே.வி.பியும், பல சிவில் சமுகப் பிரதிநிதிகளும் கையிலெடுப்போம் என்று தெரிவித்த அவர், தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்துடன் சேர்ந்து இயங்குவதாக ஒரு குற்றச்சாட்டு உள்ளது. இந்நிலையில் மக்களின் பிரச்சினைகள், போராட்டங்களுக்குத் தீர்வுகாண முடியவில்லையே என்ற அதிருப்தி மக்கள் மத்தியில் உள்ளதே? என்ற கேள்விக்குப் பதில் அளித்த சுமந்திரன்,

அரசாங்கத்தில் இரண்டு பகுதிகள் உள்ளன. ஒன்று ஜனாதிபதி.மற்றையது பாராளுமன்றத்தில் ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம். இங்கு ஐக்கிய தேசிய கட்சி ஜனாதிபதியோடு சேர்ந்து இயங்கிய போதும் சில முக்கியமான அதிகாரங்கள் ஜனாதிபதியின் கையிலேயே காணப்பட்டன.

காணாமல் ஆக்கப்பட்டவர்களது விடயம் தொடர்பாக ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் ஒரு சட்டமூலத்தை கொண்டு வந்து நிறைவேற்றியது. ஆனால், ஒரு வருடத்துக்கு மேலாக அந்த சட்டத்தை ஜனாதிபதி நடமுறைக்கு கொண்டு வரவில்லை. அதற்கு அவர் மாத்திரமே பொறுப்பாகும்.  தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்துடன் சேர்ந்து பயணிப்பதாகக் கூறுகின்ற போது அது ஜனாதிபதியுடன் சேர்ந்து பயணிப்பதாக இருக்க முடியாது. அவ்வாறிருந்தும் நாம் ஜனாதிபதியோடு பகைத்துக்கொள்ளாது கூடிய விரைவில், அவருடன் பேச்சுவார்த்தை நடத்தவே தீர்மானித்துள்ளோம் என்றார்.

மாகாண சபைகள் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டியமை தொடர்பாக கூட்டமைப்பு எத்தகைய அழுத்தத்தை கொடுக்கின்றது என்று கேட்டதற்குப் பதில் அளித்த அவர்,  

மாகாண சபைகள் தேர்தல் உடனடியாக நடத்தப்பட வேண்டும். அதற்குப் பல அழுத்தங்கள் கொடுத்திருக்கின்றோம். மாகாண சபைகள் தேர்தல் நடத்தப்படுவது முக்கியமே தவிர, அது எந்த விதத்தில் நடத்தப்பட வேண்டும் என்பது முக்கியமல்ல என்பதையும் பல தடவைகள் நாம் வலியுறுத்தியுள்ளோம். இப்போதிருக்கும் சட்டச் சிக்கல் காரணமாக உடனடியாக பழைய முறைக்கு தேர்தலை நடத்த முடியும். அதற்கான வழிகளையும் கூறியிருக்கின்றோம். ஆகவே, அதனை நடமுறைப்படுத்த வேண்டியது அரசாங்கம். தேர்தலை பிற்போடுவதை நாம் எந்தக் காலத்திலும் அனுமதிக்க முடியாது என்றார்.

 ஜனாதிபதி வடக்கில் 90வீதமான காணிகளை விடுவித்துவிட்டதாகக் கூறுகின்ற அதேநேரம் தற்போது யாழ்ப்பாணம், முல்லைத்தீவு உள்ளிட்ட இடங்களில் பொது மக்களின் காணிகள் படைத்தரப்புக்காக சுவீகரிக்கப்படுகின்றதே? என்று கேட்டதற்கு,

மண்டைதீவில் காணி சுவீகரிப்பு இடம்பெற்றபோது பாதுகாப்பு செயலாளர், இரா.சம்பந்தனுடன் பேசியிருந்தார். இதன்போது அவை அனைத்தையும் உடனடியாக நிறுத்துமாறு ஜனாதிபதி செயலணியிலும் தாம் கூறியதாக சம்பந்தன் தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து பாதுகாப்பு செயலாளரின் உத்தரவினையடுத்து அனைத்துக் காணி சுவீகரிப்பு நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்டுள்ளது.

மேலும், இக் காணி சுவீகரிப்புக்கள் தொடர்பாக பாதுகாப்பு செயலாளர் நேரடியாக யாழ்ப்பாணத்துக்கு எதிர்வரும் 29ஆம் திகதி சென்று அங்கு இரா.சம்பந்தனைச் சந்தித்து  கூட்டம் நடத்தி அதனைத் தொடர்ந்தே மேற்கொண்டு தீர்மானங்கள் எடுக்க  இணங்கியு ள்ளார்கள்.

ஆனால், ஜனாதிபதியின் செயலணி நடைபெற்ற போது, இவை அனைத்தையும் நிறுத்தியும் எம்மோடு பேசுமாறு நாம் ஜனாதிபதிக்கு கூறியிருந்தோம். ஆனால் அதற்கு ஜனாதிபதி நேரடியாக பதில் எதுவும் கூறாமல் இப்படியான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார் என்றார்.

(தேவராசா விரூஷன்)

Comments