தமிழ், சிங்கள மக்களின் தொன்மைமிகு வரலாற்றுப் பண்டிகை சித்திரை | தினகரன் வாரமஞ்சரி

தமிழ், சிங்கள மக்களின் தொன்மைமிகு வரலாற்றுப் பண்டிகை சித்திரை

இலங்கையின் வரலாற்றுத் தொன்மை மிகுந்த இரு பெரும் இனத்தவர்களான தமிழர்களும் சிங்களவர்களும் ஒருமித்துக் கொண்டாடும் விழாக்களில் சித்திரைப் புத்தாண்டு மிகவும் முக்கியமானதாகும். இவ்விரு இனங்களின் கலாசார, மரபுரீதியான பாரம்பரிய சம்பிரதாய நிகழ்ச்சிகள், சடங்குகள் இப்புத்தாண்டு காலத்தில் பிரதிபலிக்கின்றன.

இந்துக்களின் பிரபவ முதல் அட்சய வரையிலான தமிழ் வருடங்கள் அறுபதுக்குள் 33வது வருடமான 'விஹாரி' வருடம் இன்று பிறக்கிறது. பிரம்மா உலகைப் படைத்து ஆரம்பித்த நாள் இன்றைய தினம் என்று இந்த வருடப் பிறப்பை ஆன்றோர் கூறுவர்.

வருடப் பிறப்பு:

தமிழர்களின் 60வருட சுற்றுவட்டத்தின் 33வது வருடமாகிய புதிய விஹாரி தமிழ்வருடப் பிறப்பு வாக்கிய பஞ்சாங்கப்படி இவ்வருடம் ஏப்ரல் 14ஆம் திகதி (சித்திரை -01) ஞாயிற்றுக்கிழமை பி.ப 1.12மணிக்கு உதயமாகிறது.

இன்று ஞாயிறு மு.ப 9.12மணி முதல் பி.ப  5.12மணிவரை விஷூ புண்ணிய காலமாகும். இக்காலப் பகுதியில் சிரசில் ஆலிலையும் காலில் இலவமிலையும் வைத்து மருத்துநீர் தேய்த்து ஸ்நானம் செய்து வழிபாடு இயற்ற வேண்டும்.

வெள்ளைநிறப் பட்டாடை அல்லது வெள்ளை சிவப்புக் கரை அமைந்த பட்டாடை இவ்வருடத்துக்கான ஆடையாகும்.

திருக்கணித பஞ்சாங்கத்தின்படி புதுவருடம் இன்று 14ஆம் திகதி பிப 2.09மணிக்குப் பிறக்கிறது. இன்று ஞாயிறு மு.ப.10.09மணி முதல் பி.ப 06.09மணிவரை விஷு புண்ணிய காலமாகும். இக்காலப் பகுதியில் சிரசில் இலவமிலையும்  காலில் விளாஇலையும் வைத்து மருத்துநீர் தேய்த்து ஸ்நானம் செய்து வழிபாடியற்ற வேண்டும்.

வெள்ளை சிவப்புக் கரை அமைந்த பட்டாடை இவ்வருடத்துக்கான ஆடையாகும்.

கைவிசேடம் விஷு புண்ணிய காலத்திலும் செய்யலாம். ஞாயிறு இரவு 10.31முதல் 11.15வரையுமான காலப் பகுதியிலும் செய்யலாம். அல்லது 17ஆம் திகதி புதன் பகல் 10.16முதல் 11.51வரையும் 18ஆம் திகதி பகல் 9.47முதல் 11.46வரையான காலப் பகுதியிலும் செய்யலாம்.

மிதுனம், கன்னி, மகரம்,கும்பம் ராசிக்காரர்களுக்கு இலாபமான வருடம். மேடம், விருச்சிகம், இடபம், துலாம், கர்க்கடகம் ராசிக்காரர்களுக்கு சமசுகமும் சிம்மம், தனு,மீனம் ராசிக்காரர்களுக்கு நஷ்டமும் ஏற்படும் வருடம்.

புதுவருட பலனாக நற்பலன்கள் நான்கும் தீயபலன்கள் மூன்றும் காட்டப்படுகின்றன.

சித்திரை மாதம் முதலாம் திகதி(14.04.2019) சூரிய பகவான்  மீன ராசியில் இருந்து மேட ராசிக்குள் பிரவேசிக்கும் காலமாகும். சூரியன் மேடராசியில் பிரவேசித்து வடக்கே செல்லும் காலம் உத்தராயண காலம் ஆகும். இதனை வசந்த காலமென அழைப்பர்.இலங்கையில் வசந்த காலம் இந்த சித்திரை மாதம். நுவரெலியாவில் வசந்த காலம் சித்திரை மாதத்திலேயே கொண்டாடப்படுவது தெரிந்த விடயமே.

இயற்கை அதற்கான ஆயத்தங்களை செய்கின்ற அதேவேளை மனிதர்களும் ஏனைய உயிரினங்களும் கூடவே புதுவருடத்திற்கான ஆயத்தங்களைச் செய்து வருவதை அற்புதமாகப் பார்க்கலாம்.

இயற்கை வசந்த காலத்தைத் தோற்றுவித்ததும் குயில் கூவ ஆரம்பிக்கிறது. மரம்,செடி,கொடிகள் புத்துணர்ச்சி பெறுகின்றன. புள்ளினங்கள் ஒழுங்கிலே பறப்பதும் கீச்சிடுவதும் ஒன்றும் புதிதல்ல.

தமிழரின் புதிய ஆண்டு பிறப்பு சித்திரை 14அல்லது 15இல் தொடங்குகிறது. அதற்கமைவாகவே மகாவம்சம் நூலில் குறிக்கப்பட்டிருக்கும் ஆண்டின் தொடக்கமும் அதே நாளைக் குறிக்கிறது. இங்கே சித்திரை 14அல்லது 15ம் திகதியில் ஆண்டு தொடக்கமாகக் கொள்ளும் முறை தமிழர்களுடையது என்பதை தெளிவாக்கிக் கொள்ளலாம்.

அதற்கமைவாக தமிழ் ஆண்டு தொடக்கமான சித்திரை முதலாம் திகதி (ஏப்ரல் 14அல்லது 15) புத்தாண்டு கொண்டாடப்படுகின்றது. தமிழ் காலக்கணிப்பீட்டு முறையை ஆரம்பம் முதலே சிங்களவர்கள் பயன்படுத்தி வந்த வழக்கின் காரணமாகவே இன்றும் சிங்கள மக்கள் சித்திரைப் புத்தாண்டை  தமிழ்_சிங்களப் புத்தாண்டு எனக் கொண்டாடுகின்றனர்.

இப்புத்தாண்டுக்கு சிங்களவர் கொடுக்கும் விளக்கம் 'சூரியன் மேச இராசியில் பயணத்தை தொடரும் நாள்' என்பதாகும். இந்தியப் பண்பாட்டுத் தாக்கத்தால் இது உருவானதாகக் கூறுவோரும் உள்ளனர். இதைத் தவிர வேறு விளக்கங்களோ, காரணங்களோ  சிங்கள மக்கள் மத்தியில்  இருப்பதாகத் தெரியவில்லை.

இதன் அடிப்படையில் தமிழரின் பண்பாட்டு அடையாளங்களில் ஒன்றான 60ஆண்டுகள் சுழற்சி முறையில் கணக்கிடப்படும் (பிரபவ – அட்சய) காலக் கணிப்பீட்டு முறை இலங்கையில் இருந்துள்ளதை அறியலாம். இதைத் தவிர பழந்தமிழர்களிடம் பிரமிக்க வைக்கும் கணக்கியல், கூட்டல் எண்கள், அளவைகள் போன்றவைகளும் இருந்துள்ளதை அறிய முடிகின்றது.

எனவே, பழந்தமிழர் பயன்படுத்திய காலக் கணிப்பீட்டு முறையே இலங்கையில் இருந்தாகக் கொள்ளலாம். இதனை சான்றுகளுடன் நிரூபிக்க கூடிய தடயங்கள் எதுவும் இல்லை என்றாலும் யாரும் மறைக்க முடியாத சான்றாகவே இன்றும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் தொடர்வதை உணரக் கூடியதாக உள்ளது.

தமிழர் காலக்கணிப்பீட்டு முறைகள் இன்று பல தமிழ் இணையத் தளங்கள், செய்தித் தாள்கள், திருமண அழைப்பிதல்கள்,கோயில் உற்சவங்கள், பஞ்சாங்கம் பார்த்தல்,நேரம் குறித்தல் போன்றவற்றில் பயன்படுவதைக் காணலாம். சில கிராமங்களில் தமிழ் மாதப் பெயரிகளிலே தை, மாசி,பங்குனி என காலங்களை குறித்துப் பேசுவோரும் உள்ளனர்.

இலங்கையில் பௌத்த பிக்குகள் நேரம் குறித்தல்,பஞ்சாங்கம் கணித்தல் போன்றவற்றில் தமிழ் காலக் கணிப்பீட்டு முறையைப் பயன்படுத்துவதை சில இடங்களில் காணலாம்.

இதேசமயம், சிங்கள மக்களினதும் தமிழ் மக்களினதும் புத்தாண்டுக் கொண்டாட்டங்களில் பல்வேறு ஒற்றுமைகள் காணப்படுகின்றன.

1. புத்தாண்டு பிறக்கப் போகிறது என்றால் வீடுகளுக்கு வர்ணம் பூசுதல் தமிழர்களின் பழக்கங்களில் ஒன்றாகும். சிங்கள மக்களும் அப்படியே.

 2. புத்தாண்டுக்கு முந்திய நாட்களில் வீட்டை சுத்தம் செய்தல் போன்றவற்றையும் தமிழர் போன்றே சிங்களவர்களும் செய்கின்றனர்.(சாணம் இட்டு வீடுகளை மெழுகும் வழக்கம் திராவிடரின் பழக்கவழக்கங்களில் ஒன்றாகும்.)

3. புத்தாண்டு பிறப்பிற்கு சில நாட்களுக்கு முன்பிருந்தே புத்தாண்டு நிகழ்வுகளை பஞ்சாங்க நேரக் கணிப்பீட்டின்படியே தமிழர்கள் செய்வது வழக்கம். சிங்கள மக்களும் அப்படியே செய்கின்றார்கள். பஞ்சாங்கம் எனும் சொல் சிங்களவர்களால் 'பஞ்சாங்க' என்று 'ம்' எழுத்தின் ஒலிப்பின்றி பயன்படுத்துகின்றனர். இச்சொல் தமிழரின் வழக்கில் இருந்து சிங்களத்திற்குச் சென்றதாகக் கொள்ளலாம். (பஞ்சாங்கம் என்பது தமிழில் வழங்கும் வடமொழிச்சொல்)

4. தமிழர்களின் புத்தாண்டில் முதன்மையானவற்றுள் ஒன்றாக இருப்பது பட்சணமும் வாழைப்பழமும் ஆகும். சிங்களவர்களிடமும் அவைகளே முக்கிய அங்கம் வகிக்கின்றன. புத்தாண்டிற்கு சில நாட்களுக்கு முன்பே வாழைக் குழைகள் பழுக்க வைக்கப்படுவதுண்டு.

 5. புத்தாண்டிற்கு சில நாட்களுக்கு முன்பே பட்சணங்கள் மற்றும் தின்பண்டங்கள் செய்து புத்தாண்டு நாள் பாவனைக்காக மண் பாத்திரங்களில் பத்திரப்படுத்தும் வழக்கம் பழந்தமிழர் தொட்டு இருக்கின்றது. இதுவும் சிங்களவர்களிடம் உண்டு.

தமிழர்களின் புத்தாண்டில் முக்கியமாக பலகாரம் மற்றும் பாசிப்பயறு பலகாரம் இருக்கும். சிங்களவர்களிடமும் அப்படியே. சிங்களவர்கள் தயாரிக்கும் கொண்டைப் பலகாரம் தமிழரின் பழக்கத்தில் இல்லாத ஒன்று. ஆனால் கொண்டைப் பலகாரம் என்பது தமிழர்கள் தயாரிக்கும் சாதாரணப் பலகாரம் போன்றே சுவை ஒன்றுதான். வேறுபாடு அதன் வடிவமைப்பில்தான்.

பாசிப்பயறு பலகாரம் தமிழர்களது போன்றே சிங்களவர்களும் தயாரிக்கின்றனர். இதன் சுவையிலோ தோற்றத்திலோ வேறுபாடுகள் இல்லை.

புத்தாண்டு கலாசார மற்றும் விநோத விளயாட்டுக்கள் எல்லா இடங்களிலும் ஒரே நேரத்தில் நிகழ்வதில்லை. சில இடங்களில் புத்தாண்டு அன்றே நடைபெறும். அநேக இடங்களில் தத்தமது வசதிக்கேற்ற நாட்களில் வைத்துக் கொள்வர். இது ஒரு மாதகாலத்திற்கு நீடிக்கும் சந்தர்ப்பங்களும் உண்டு.

புத்தாண்டையொட்டி மரதன் ஓட்டம், சைக்கிள் ஓட்டம் என்பன வருடப் பிறப்பிற்கு முன்னரே நடைபெறத் தொடங்கும். நாடு பூராக இனமத பேதமின்றி இப்போட்டிகளில்  சகலரும் பங்கேற்பார்கள்.

விளையாட்டு நிகழ்ச்சிகள் ஒருபுறம் இசை நிகழ்ச்சிகள் மறுபுறம் விடிய விடிய கொண்டாட்டங்கள் இடம்பெறும். இக்காலப் பகுதியில் மக்கள் ஒரே குதூகலத்தில் திளைப்பார்கள்.

தமிழர் மற்றும் சிங்களவர்களின் புத்தாண்டு கலாசார மற்றும் விநோத விளையாட்டுக்களில் சில வருமாறு:

வழுக்கு மரம் ஏறுதல், தலையணைச் சமர், கண்கட்டி முட்டி உடைத்தல்,கயிறு இழுத்தல், கிடுகிழைத்தல்,தேங்காய் துருவுதல், யானைக்கு கண் வைத்தல்,ஊர் சுற்றி ஓட்டப் பந்தயம்,மிதிவண்டி ஓட்டப்போட்டி,அழகுராணி தேர்வு (சிங்கள கலாசார உடையில்),பெண் குழந்தைகளின் அழகுராணிப் போட்டி

விஹாரி புதுவருட பலனாக நற்பலன்கள் நான்கும் தீயபலன்கள் மூன்றும் காட்டப்படுகின்றன.

இவ்வருட பலாபலனின்படி அற்ப மழை, பயிரழிவு, பஞ்சம், நோய் உண்டாகும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அதற்கு கட்டியம் கூறுவது போல் தற்போதைய தகிக்கின்ற வெப்பம் அதனாலுண்டாகும் நோய்கள் என்பனவற்றைச் சொல்லலாம்.

இம்முறை 02.07.2019இல் பூரணசூரிய கிரகணம் இடம்பெறும். ஆனால் இது இலங்கையில் தோற்றாது என்று தமிழ் வானியல்நிபுணர்கள் இன்றே சொல்லி விட்டார்கள்.  16.07.2019இல் சந்திர கிரகணமும்  26.12.2019இல் கங்கண சூரிய கிரகணமும் இலங்கையில் தோன்றும் என்று துல்லியமாக தமிழர்கள் கூறி விட்டார்கள்.

இவ்வாறு புத்தாண்டின் சிறப்புகள் மகத்துவம்  மிக்கவை. அவற்றை ஆழமாக அறிந்து கடைப்பிடிக்கின்ற போது நாம் புத்துணர்ச்சி பெறுவது மட்டுமல்லாமல் முன்னெச்சரிக்கையாக வாழ்க்கையை வளம்படுத்திக் கொள்ளலாம்.

Comments