தரமுயரும் கிளிநொச்சி பொது வைத்தியசாலை | தினகரன் வாரமஞ்சரி

தரமுயரும் கிளிநொச்சி பொது வைத்தியசாலை

தெற்காசியாவிலேயே சிறந்த மருத்துவ சேவைகளை வழங்கி வரும்  நாடுகளின் பட்டியலில் முதன்மையில் உள்ளது இலங்கை. அந்த நிலைமையை அடைவதற்காக  இலங்கையின் சுகாதாரத் துறையினர் மேற்கொண்ட அர்ப்பணிப்புகள் அனேகம். அந்த  அர்ப்பணிப்புகளின் பலனாகவே இலங்கையின் அனேக பொது வைத்தியசாலைகள் அனைத்து  நவீன வசதிகளையும் தம்முள் உள்ளடக்கியவையாக நிமிர்ந்து நிற்கின்றன.  

அந்தவகையில் யுத்தத்தினால் அதிகளவில் பாதிக்கப்பட்ட  கிளிநொச்சி மாவட்டத்தின் பொது வைத்தியசாலை இன்னமும் 3வருடங்களுக்குள்  தரமுயர்த்தப்பட்டுவிடும் என்ற செய்தி பெரும் ஆறுதலைத் தருகின்றது.  

வட மாகாணத்திற்கான விசேட பெண்ணோயியல் மகப்பேற்று வைத்திய சேவை  நிலையம் மற்றும் சீ ரீ ஸ்கான் வசதியுடனான அவசர  விபத்துச் சேவைப்பிரிவு  என்பவற்றுடன் கூடிய ஒரு வைத்திய சாலையாக எதிர்வரும் மூன்று  வருடங்களுக்குள் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலை அமையும் என  மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்திருப்பது நம்பிக்ைக தருவதாக உள்ளது.  

இவ்வாறான  நவீன வசதிகள் கொண்ட வைத்தியசாலை அமைவதற்கும்  அதன் தொடர் வளர்ச்சிக்கும் பல்வேறு தரப்பட்டவர்களின் அயராத உழைப்பும்  அர்ப்பணிப்பும் பின்னால் உள்ளன.  

வட மாகாணத்தில் போரினால் கடும் பாதிப்புக்களுக்கு உள்ளாகிய  கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டகளைச் சேர்ந்த சுமார் இரண்டு இலட்த்திற்கும்  அதிகமான மக்களின் மருத்துவத்தேவையை நிறைவு செய்யவேண்டிய ஒரேயொரு  வைத்தியசாலையாக இந்த வைத்தியசாலை காணப்படுகின்றது.  

கிளிநொச்சி மாவட்டப் பொது வைத்தியசாலையானது கடந்த யுத்த  காலத்தின் போது மக்களுக்கான மருத்துவத் தேவைகளை, பொருளாதாரத்தடை,  மருத்துப்பொருட்களுக்கான தடை,  இடப்பெயர்வுகள் என பெரும் நெருக்கடிகளுக்கு  மத்தில் உரியவாறு வழங்கியிருந்தது.   1996ம் ஆண்டுக்  காலப்பகுதியில் கிளிநொச்சியில் ஏற்பட்ட யுத்தம்  காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் வாழ்ந்த மக்கள் முழுமையாக இடம்பெயர்ந்த  நிலையில் இங்கே இயங்கிய சிவில் நிர்வாகக் கட்டமைப்புக்கள் மற்றும்  வைத்தியசாலை என்பனவும் ஏ-9வீதிக்கு கிழக்கு புறமாகவும் மேற்குப்புறமாகவும்  மாற்றப்பட்டன.  

இதன்போது கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையும்  மாற்றமடைந்து அக்கராயன் வைத்தியசாலையுடன் இணைந்த வைத்தியசாலையாக ஐந்து  வருடங்கள் கட்டட வசதிகள், ஆய்வுகூட வசதிகள் எதுவுமற்ற நிலையில்  ஓலைக்கொட்டில்களிலும் மரநிழல்களிலும் இயங்கியது.  

இந்தக்காலப்பகுதியில் யுத்தத்தின் போது காயமடைந்தவர்கள்,  இடம்பெயர்ந்த மக்களிடையே ஏற்படுகின்ற தொற்று நோய்த் தாக்கங்கள்  எல்லாவற்றையும் விட, அப்போது அதிகளவிலே காணப்பட்ட மலேரியா வயிற்றோட்டம்,  போன்ற பல்வேறுபட்ட நோய்களுக்கான சிகிச்சைகளை பெரும் நெருக்கடிகளுக்கு  மத்தியில் வசதி வாய்ப்புக்கள் இன்றிய நிலையிலும் தனது சேவைகளை இந்த  வைத்தியசாலை வழங்கியிருந்தது.  

அப்போது இங்கே கடமையாற்றிய வைத்திய நிபுணர்கள் வைத்தியர்கள்,  வைத்தியசாலை உத்தியோகத்தர்கள்,  இடம்பெயர்ந்து ஏ-9வீதிக்கு  கிழக்குப்புறமாக உள்ள வட்டக்கச்சி, விசுவமடு புதுக்குடியிருப்பு ஆகிய  பகுதிகளில் தங்கியிருந்த நிலையில் எந்தவித போக்குவரத்து வசதிகளும் இல்லாத  அப்போதைய சூழலில் பல கிலோ மீற்றர் துரம் துவிச்சக்கர வண்டிகளில் தினமும்  பயணித்து தமது அர்ப்பணிப்பான சேவைகளை வழங்கினர்.  

இதனைத்தொடர்ந்து 2001ம் ஆண்டு ஏற்பட்ட சதாரண சூழலைத்தொடர்ந்து  கிளிநொச்சி பொதுவைத்தியசாலை மீண்டும் கிளிநொச்சியில் இயங்க தெடங்கியது.   2003ம் ஆண்டு சுமார் 600கட்டில்களுடன் கூடிய அதி நவீன  வசதி கொண்ட மருத்துவமனைக்கான திட்டம்  ஆரம்பிக்கப்பட்டிருந்த நிலையில்  கடந்த 2006ஆம் ஆண்டு அப்போதைய சமாதானப் பேச்சுவார்த்தை முறிவடைந்த நிலையில்  இதன் பணிகளும் அரைகுறையாக நிறுத்தப்பட்டிருந்தன.  

2008ஆம் ஆண்டில் 200கட்டில்களுடன் இயங்கிய இந்த  வைத்தியசாலை 2009ம் ஆண்டுமுதற் கட்டமாக 10  கட்டில்களுடன் மீளவும் இயங்கத் தொடங்கியது.   2010ம் ஆண்டிலிருந்து மீளவும் 200படுக்கை வசதிகளுடன்  இவ்வைத்தியசாலை தனது சேவையினைத் தொடர்ந்தாலும் இடையில் தடைப்பட்டு போன  கட்டுமாணப் பணிகளை மீளவும் முன்னெடுப்பதற்கான தொடர் முயற்சிகள் தற்போதே   மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.   இதற்கு கடந்த 2010ம் ஆண்டு முதல் பல முட்டுக்கட்டைகள் திரை  மறைவில் போடப்பட்டதுடன் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலை மற்றும்  மருத்துவ துறை வளர்ச்சியடைவதை பலர் தடுத்து வந்தனர்  

நல்லாட்சியின் பின்னர் 2016ம் ஆண்டில் மாகாண சுகாதார  அமைச்சின் சுகாதாரத் திணைக்கள அதிகாரிகள், கிளிநொச்சி பொறியியல் பீடாதிபதி  தலைமையில் உருவாக்கப்பட்ட நிபுணர் குழுவினர் மற்றும் மத்திய சுகாதார  அமைச்சின் உயரதிகாரிகள் அனைவரும் இணைந்து சுமார் நான்காயிரத்து 474  மில்லியன் உத்தேச மதிப்பீட்டில் சகல வசதிகளுடனும் கூடிய கிளிநொச்சிப் பொது  வைத்தியசாலையுடன் இணைந்த மகப்பேற்றியல் விசேட வைத்திய மையத்தினை உள்ளடக்கிய  கட்டம் இரண்டிற்கான முன்மொழிவினை வழங்கியிருந்தனர்.

ஐந்து பகுதிகளாக 36மாதங்களில் கட்டி முடிப்பதற்குத்  திட்டமிடப்பட்ட மேற்படி அபிவிருத்தித் திட்டம்  2017ம் வருடம் வைகாசி  மாதம் தேசிய திட்டமிடல் திணைக்களத்தினால் அங்கீகரிக்கப்பட்டதனை தொடர்ந்து  அண்மையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவால் அடிக்கல் நாட்டப்பட்டு  ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்த நிலையில் கடந்த முதலாம் திகதி கிளிநொச்சி  வைத்தியசாலைக்கு வருகைதந்த நெதர்லாந்து மற்றும் ஆஸ்திரிய நாட்டின்  கட்டடப் பொறியியலாளர்கள் மற்றும் வரைகலை நிபுணர் குழுவினர் அந்த நாடுகளின்  உதவியுடன் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ள வைத்தியசாலையின் கட்டம் 02, பகுதி  01ற்கான இறுதிக்கட்ட நில அளவை மற்றும் எல்லையிடும்  பணிகளை மேற்கொண்டுள்ளதாகத் தெரியவருகிறது.  

இதன்மூலம் அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் கிளிநொச்சி  வைத்தியாலையில் வடமாகாணத்திற்கான விசேட பெண்ணோயியல் மற்றும் மகப்பேற்றியல்  மையம் இயங்கத்தொடங்குவதுடன் சீ ரீ ஸ்கான் வசதியுடனான அவசர விபத்துச்  சேவைப்பிரிவும் தனது சேவையினை வழங்கக்கூடியதாக இருக்கும் என மருத்துவமனை  வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.   முதற் கட்டமாக 1974மில்லியன் ரூபா செலவில்  மேற்கொள்ளப்படவுள்ள இந்த நிர்மாணப் பணிகள் எதிர்வரும் ஆடி மாதத்திலிருந்து  ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் தெரியவருகிறது.  

 யுத்தம் காரணமாக  குறித்த வைத்தியசாலை  தருமபுரம் வைத்தியசாலையிலும்  அதற்குப் பின்னர் உடையார்கட்டு மகாவித்தியாலயத்திலும் என  இப்படியே  வாரத்திற்கு ஒரு இடம்,  காலையில் ஒரு இடம் மாலையில் ஒரு இடம்  என்று  பல  நெருக்கடிகளையும் இடப்பெயர்வுகளையும் இழப்புக்களையும் இவ்வைத்தியசாலையும்  இவ்வைத்தியசாலையில் கடமையாற்றிய வைத்தியர்கள், உத்தியோகத்தர்கள்,  பணியாளர்களும் எதிர்கொண்டனர்.  

தற்போது கிளிநொச்சி மாவட்டத்தில் வாழுகின்ற சுமார் ஒன்றரை  இலட்சம் மக்களுக்கும் முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை  கிழக்கு துணுக்காய்,  ஒட்டுசுட்டான், விசுவமடு,  ஆகிய பிரதேசங்களில் வாழுகின்ற சுமார்  நாற்பதாயிரத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கும், இதேவேளை பல்வேறு தேவைகள்  கருதியும் தொழில் வாய்ப்புக்கள் கருதியும் தங்கியிருக்கின்ற இரண்டு இலட்சம்  மக்களுக்கும் இன்று சேவைகளை வழங்கவேண்டிய ஒரு வைத்தியசாலையாகவும், இது உள்ளது.

நாளாந்தம் சுமார் 700தொடக்கம் 900வரையான நோயாளர்கள்  வெளிநோயாளர் பிரிவிலும் சுமார் 200தொடக்கம் 250வரையான நோயாளர்கள்  விடுதிகளிலும்தங்கி சிகிச்சை பெறுகின்றனர்.  

இதைவிட மருத்துவச் சான்றிதழ்களைப் பெறுவோர்,  மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்ளச்செல்வோர் என்று இந்த எண்ணிக்கை  அதிகரித்தே செல்கின்றது.  

ஒரு மாவட்டப்பொதுவைத்தியசாலையில் ஒவ்வொரு  சிகிச்சைப் பிரிவிலும் இரண்டிற்கும் மேற்பட்ட விடுதிகள் இருக்கவேண்டிய  போதும் தற்போது பொதுமருத்துவம், சத்திரசிகிக்சை, பெண்நோயியல்,  உளநல சிகிச்சைப்பிரிவு, கண் சிகிச்சைப்பிரிவு, தோல் சிகிச்சைப்பிரிவு, என்பன  போதிய விடுதி வசதிகள் இன்றி இயங்கி வருகின்றன.  

இந்த நிலையிலும் இங்கு பணியாற்றும் வைத்தியர்கள், வைத்திய நிபுணர்கள் உத்தியேகத்தர்கள் தமது பணிகளை முன்னெடுத்து வருகின்றனர். 

குறிப்பாக எலும்பு முறிவு சிகிச்சைப் பிரிவிற்கான விடுதி  வசதிகள் இல்லை என்று  தேவைகள் ஏராளமாக நீண்டு செல்கின்றது.  வடக்கு  கிழக்கிற்கான பிரதான போக்குவரத்து மார்க்கமாகக் காணப்படுகின்ற ஏ-9  வீதியில் வவுனியா வைத்தியசாலையிலிருந்து 74கிலோமீற்றர் தொலைவிலும்  யாழ்ப்பாணம் வைத்தியசாலையிலிருந்து 68.5கிலோமீற்றர் தொலைவிலும்  அமைந்திருக்கின்ற கிளிநொச்சி பொதுவைத்தியசாலையில் ஒரு விபத்துப்பிரிவு  என்பு முறிவு சிகிச்சைப்பிரிவு என்பது இல்லையென்பது பாரிய குறைபாடாக  காணப்படுகின்ற நிலையில் இவ் அபிவிருத்திப்பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.  

எதிர் வரும் மூன்று வருடங்களுக்குள் பெண்ணோயியல் மகப்பேற்று  வைத்திய நிலையம் மற்றும் சீ ரீ ஸ்கான் வசதியுடனான அவசர விபத்துச்  சேவைப்பிரிவு என்பவற்றுடன் கூடிய ஒரு வைத்தியசாலையாக அமைய வேண்டும்  என்பதற்காக மத்திய மற்றும் மாகாண சுகாதாரத்துறை சார் அதிகாரிகள் மாவட்ட  பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்,  வைத்திய சாலைப் பணிப்பாளர்,  மாவட்டத்தைச் சேர்ந்த வைத்தியர்கள் நலன் விரும்பிகள் எனப் பலரின் உழைப்பு  பக்க பலமாக அமைந்துள்ளது.  

ஜது பாஸ்கரன்  

Comments