நுவரெலியாவில் களை கட்டும் வசந்தகால கொண்டாட்டங்கள் | தினகரன் வாரமஞ்சரி

நுவரெலியாவில் களை கட்டும் வசந்தகால கொண்டாட்டங்கள்

நுவரெலியா மாநகர சபையின் ஏற்பாட்டில் ஒவ்வொரு வருடமும் நடத்தப்படும் ஏப்ரல் வசந்தக் காலகொண்டாட்டங்கள் இம் முறை கடந்த முதலாம் திகதி திங்கட் கிழமையே ஆரம்பமாகியவிட்டது. எதிர் வரும் ஏப்ரல் 30ஆம் திகதி வரை வசந்தகால கொண்டாட்டங்கள் நீடிக்கும். 

கடந்த முதலாம் திகதி திங்கட்கிழமை காலை 9மணிக்கு நுவரெலியா நகர பிரதான வீதியில் பாடசாலை மாணவ மாணவியரின் பேண்ட் வாத்திய அணிவகுப்பு மரியாதையுடன் ஏப்ரல் வசந்தகால நிகழ்வுகள் கோலக்காலமாக ஆரம்பமாகின. 

நுவரெலியா மாநகர முதல்வர் சந்தன லால் கருணாரட்ன தலைமையில் நடைபெற்ற இவ் வைபவத்தில் பிரதம அதிதியாக விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன், நுவரெலியா மாநகர பிரதி முதல்வர் யதர்ஷனா புத்திரசிகாமணி, நுவரெலியா மாவட்ட செயலாளர் எம்.பீ.ஆர்.புஸ்பகுமார, முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் ஆர். இராஜாராம் உட்பட நுவரெலியா மாநகர சபை உறுப்பினர்களும் அரச உயர் அதிகாரிகளும் பொது மக்களும் கலந்துக்கொண்டனர். 

 ஏப்ரல் வசந்த காலத்தை முன்னிட்டு நுவரெலியா பொது மைதானத்தில் கிரிக்கெட், கரப்பந்தாட்டம், கால்பந்தாட்டப் போட்டிகளும், மாநகர விளையாட்டு உள்ளரங்கில் மேசை பந்து (டேபள் டெனிஸ்) பூப்பந்தாட்டம் மற்றும் வலைப்பந்தாட்டப் போட்டிகளும் நடைபெற்றுவருகின்றன. 

நுவரெலியா குதிரைப்பந்தய திடலில் எதிர்வரும் 20ஆம் திகதி குதிரைப்பந்தயப் போட்டியும், அதனை சுற்றியுள்ள பிரதான பாதையில் எதிர்வரும் 27, 28ஆம் திகதிகளில் மோட்டார் காரோட்டப் போட்டியும், நுவரெலியா கிறகரி வாவியில் படகோட்டப் போட்டியும், கிறகரி வாவி கரையில் எதிர்வரும் 16ஆம் திகதி காரோட்டப் போட்டியும் நடைபெற ஏற்பாடாகியுள்ளது. நுவரெலியா மாகஸ்தோட்ட ஹில் கிளைம்பிங் (மலைப்பாதை காரோட்ட போட்டி) போட்டி கடந்த 5ஆம் திகதி நடைபெற்றது. 

நுவரெலியா விக்டோரியா பூங்காவில் எதிர்வரும் 18, 19ஆம் திகதிகளில் மலர் கண்காட்சி போட்டி நடைபெறும், பொது நூலகத்தில் ஓவியக் கண்காட்சியும் நடைபெறவுள்ளது. தினந்தோறும் களியாட்டு நிகழ்வுகளும் இசைநிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளன. 

 நுவரெலியாவிற்கு வருகைதரவிருக்கும் சுற்றுலா பயணிகளுக்கு தேவையான அடிப்படைத் தேவைகளை கவனிப்பதற்கான வேலைத்திட்டத்தை நுவரெலியா மாநகரசபை மேற்கொண்டுள்ளது.விசேட பாதுக்காப்பு ஏற்பாடுகளை நுவரெலியா பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.  தற்பொழுது நுவரெலியா மாநகர பொது மைதானத்திலும் நுவரெலியா கிறகரி வாவிக் கரையிலும் களியாட்டம் நடைபெற்றுவருகிறது. கிறகரி வாவியின் கிழக்கு கரையில் இலங்கை இராணுத்தினரின் உணவு விற்பனை நிலையங்களும் திறக்கப்பட்டுள்ளன. 

ஏப்ரல் வசந்தக்கால தற்காலிக கடைகள் கிறகரி வாவி கரையில் அமைக்கப்பட்டுள்ளன. 

கடந்த வருடங்களைவிட இவ்வருடம் பெருந்தொகையான சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள் என வசந்தகால ஏற்பாட்டு குழுவினர் தெரிவிக்கின்றனர். 

Comments