பலாங்கொடை பிரதேச சபை உறுப்பினர் எஸ். விஜயகுமாருடன் ஒரு நேர்காணல் | தினகரன் வாரமஞ்சரி

பலாங்கொடை பிரதேச சபை உறுப்பினர் எஸ். விஜயகுமாருடன் ஒரு நேர்காணல்

'கோவில்களை நிர்ணயிப்பது, புனருத்தாரணம் செய்வது, கும்பாபிஷேகம், திருவிழா நடத்துவது என்று இளைஞர்கள் செலவிடும் பெருந்தொகைப்பணம் குறித்து அவர்கள் யோசிக்க வேண்டும். கோவில்களை மையப்படுத்திய செலவு சமூகத்தில் பொருளாதார ரீதியான தாக்கத்தை ஏற்படுத்தவே செய்யும். கல்விக்காக மாணவர்கள் ஏங்கும்போது வீண் விரயம்      செய்யலாமா?'

'வேலையில்லாதோர் பட்டியலில் படித்த இளைஞர்களை மட்டும் உள்வாங்குவது தவறான பார்வை. பெருந்தோட்டப் பகுதிகளில் படிப்பறிவற்ற அல்லது போதிய கல்வித்தகைமையற்ற பலரும் உள்ளனர். அவர்களையும் பட்டியலில் சேர்த்துக்கொள்ள வேண்டும்'

"இன்று இலங்கை சிறைச்சாலைகளில் இருப்போர்  தொகை 39ஆயிரம் பேர். இதில்  ஒருவருக்கு தினசரி 671ரூபா செலவிடப்படுகின்றது. மாதாந்தம் மொத்தமாக  2,61,69,000ரூபா  விரயமாகின்றது. இது வருடமொன்றுக்கு 350கோடியை எட்டுகிறது. இதே நேரம் சிறைச்சாலைகளில் இருப்பவர்களும் மனிதர்களே. இவர்களுக்கு மனிதாபிமான ரீதியில் வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என்று சில அரசியல்வாதிகள் வலியுறுத்தி வருகின்றார்கள். ஆனால் சிறைச்சாலையில் இருப்போருக்குச் செலவிடப்படும் தொகை பற்றி இதுவரை எவருமே கவலைப்பட்டது கிடையாது. அதேவேளை 200வருடங்களாக இந்நாட்டுக்காக  உழைத்துவரும் பெருந்தோட்ட மக்களுக்கான 50ரூபா  சம்பள அதிகரிப்பு வழங்குவதில் ஆயிரம் கெடுபிடிகள்.  

இப்படி அங்கலாய்க்கின்றார்  பாலாங்கொடை பிரதேச சபையின் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் உறுப்பினரும் பாரதி சமூக மேம்பாட்டு மன்றத் தலைவருமான எஸ். விஜயகுமார்.   

தினகரன் வாரமஞ்சரிக்கு  வழங்கிய சிறப்பு நேர்காணல்.   

பலாங்கொடை பெட்டியாகலையச் சேர்ந்த சுப்பிரமணியம், தையல் நாயகி அம்மாள் தம்பதிகளின் புதல்வரான இவர் பலாங்கொடை இந்துக் கல்லூரியின் பழைய மாணவர்.  அரசியல் சமூகவியலில் ஆர்வமும் துடிப்பும் கொண்ட இவர் 1997ஆம் ஆண்டு முதல் இதுவரையில் இடம்பெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் அனைத்திலும் போட்டியிட்டு வெற்றியை தனதாக்கிக் கொண்டுள்ளார்.  முன்னாள் தொழில் அமைச்சர் எம்.எல்.எம். அபுசாலியின் ஆசீர்வாதத்துடன் அரசியலில் தடம் பதித்த விஜயகுமார் பலாங்கொடை பிரதேச சபையின் உபதலைவராகவும் எதிர்க்கட்சி தலைவராகவும் இருந்தவர்.

கேள்வி --:  பெருந்தோட்ட மக்களுக்கு 50ரூபா சம்பள அதிகரிப்பு போதும் என்று நினைக்கின்றீர்களா? பதில் --:  நிச்சயமாக இல்லை. கூட்டு ஒப்பந்தத்தில் ஒரு சிறுதொகையே அதிகரிக்கப்பட்டது. இது போதாது என்ற காரணத்தினாலேயே த.மு.கூட்டணி 140ரூபா வழங்க வேண்டும் என்று பிரதமரிடம் கோரியது. அவர்  50ரூபா கிடைக்க அனுமதி வழங்கியிருக்கிறார்.  உண்மையில் அரசாங்கம் இதனோடு இன்னும் 50ரூபாவைச் சேர்த்து 100ரூபாவாக வழங்க முன்வந்திருக்கலாம். ஆனால் அப்படி நடக்கவில்லை. இதேவேளை பெருந்தோட்ட முதலாளிமார்  சம்மேளனம் பெருந்தோட்ட மக்களை  தக்க வைத்துக்கொள்ள இன்னுமொரு 100ரூபாவை அதிகரித்திருக்கலாம். தோட்ட மக்களின் ஆதரவு இதில் சம்பந்தப்படும் சகல தரப்புக்கும் கிடைத்திருக்கும்.  கம்பனி தரப்பு ஒன்றும் இலாபமின்றி தோட்டங்களை நடத்தப்போவது கிடையாது. அரசு மானியமும் அதற்கு கிடைக்கவே செய்கின்றது.  

கேள்வி-- : வெளியார் உற்பத்தி முறைமை சாத்தியப்படும் என நம்புகின்றீர்களா?

பதில் --:  இரத்தினபுரி  மாவட்டத்தில் இந்த புளொக்  முறைமை நடைமுறையில் உள்ளது. பாலங்கொடை பிரதேசத்தை பொறுத்தவரை சொந்தக் காணி (தற்காலிக) என்ற பெருமிதத்தோடு மாதந்தம் 25ஆயிரம்  ரூபா வரை சம்பாதிப்பவர்கள் இருக்கின்றார்கள். ஒரு ஞாயிற்றுக்கிழமை குடும்பத்தோடு தமது புளொக்கில் கொழுந்து பறிக்க செல்பவர்கள் 3000ரூபாவை பெற முடிகின்றது. இதனால் இவர்களுக்கு வேறு தொழில்களிலும் ஈடுபட நேரம் கிடைக்கின்றது. கம்பனி வசமுள்ள காணிகளில் பெயருக்கு கொழுந்துப் பறிக்கவும் அனுமதிக்கப் படுகின்றது. இப்படி கொழுந்துப் பறிக்கச் செல்லும் நாளில் புளொக்கிலும் கொழுந்து பறிக்க வேண்டியிருந்தால் இரண்டு மணிக்கே வேலையை முடித்துக் கொண்டு வெளியேறவும் அனுமதிக்கின்றது தோட்ட நிர்வாகம்.  

இன்று தேயிலைக் கொழுந்து கிலோ 55ரூபாவுக்கு மேல் கொள்வனவு செய்யப்படுகின்றது. இத்துடன் தேயிலை மலையை ஓய்வு நேரங்களில் துப்புரவு செய்ய முடிவதால் அதற்காக தனியே நேரம் ஒதுக்க வேண்டிய அவசியமில்லை. இத்திட்டம் கூட்டு ஒப்பந்தத்துக்குள் முறைப்படி உள்வாங்கப்படாததால் தொழிற்சங்கங்கள் இது குறித்து விமர்சிக்க வேண்டியுள்ளது. தொழிற்சங்கங்களின் அனுசரணையோடு இத்திட்டம் முன்னெடுக்கப்படுமானால் வெற்றிகரமான ஒரு முயற்சியாக அமைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. தற்போதைய சம்பள முறைமைக்கு மாற்றுப் பொறிமுறையாகக்கூட இதனைக் கொள்ளலாம்.  

கேள்வி : -- தேயிலைத்துறையையே இன்னும் எத்தனை காலத்துக்கு நம்பியிருப்பது?

பதில் :-- சிந்திக்க வேண்டிய விடயம் தான். ஆனால் மாற்றுத் தொழில் முறைக்கு இன்னும் மார்க்கம் ஏதும் கண்டுபிடிக்கவில்லையே. ஏனெனில் இதுவரை எமக்குக் கிடைத்த வாய்ப்புகளை சரியாக நாம் பயன்படுத்திக் கொண்டோமா? சுய விமர்சனம் தேவைப்படுகின்றது.

முன்பு பெருந்தோட்டப் பகுதிக்கு அறிமுகப்படுத்தப்பட்ட கால்நடை அபிவிருத்தித் திட்டம் எதிர்பார்த்த பெறுபேறுகளைத் தரவில்லை. இன்று கிராமப்புறங்களில் அத்திட்டம் சிறப்பாக செயற்படுத்தப்படுகின்றது. இதற்கான காரணங்கள் கண்டறியப்பட வேண்டும். பால் பண்ணைகள், கோழிப்பண்ணைகள், சிறு கைத்தொழில் முயற்சிகளை ஊக்குவித்தால் மாற்றம் காணலாம். போகப் பயிர்ச் செய்கைக்கு மலைப்பிரதேசம் உகந்ததல்ல. ஆனால் இங்கு ஏராளமாக தரிசு நிலங்கள் உள்ளன. வேலையில்லாதோர்  பட்டியலில் படித்தவர்களை மட்டும் உள்வாங்குவது தவறு. தோட்டப் பகுதிகளில் கல்வியறிவு பெறாத ஆயிரக்கணக்கான இளைஞர்  யுவதிகள் உள்ளார்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.  

கேள்வி-- : எதிர்காலங்களில் மாகாணசபை ஜனாதிபதி தேர்தல், ஏன் பொதுத் தேர்தலுக்குக் கூட வாய்ப்பு இருக்கின்றது. மலையக அரசில் களம், மலையக மக்களின் மனநிலை எவ்வாறு இருக்கின்றது? இருக்க வேண்டும்?  

பதில் --: இன்று எல்லாமே அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளது. எனவே அரசியலில் எமது பங்கை நாம் கட்டாயம் உறுதி செய்து கொள்ள வேண்டியது முக்கியம். இல்லாவிட்டால் நாம் அநாதைகளாக்கப்படும் ஆபத்தும் உண்டு. தற்போதைய அரசாங்கம் மலையக அபிவிருத்திக்கென நல்ல பல திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றது.    

இவை த.மு. கூட்டணியின் சாணக்கியத்தால் கிடைத்தவை. வீடமைப்புத் திட்டம், காணி விநியோகம், பிரதேச சபைக்கூடான சேவைகளைப் பெறுவதில் இருந்த தடை நீக்கம், பிரதேச சபைகள் அதிகரிப்பு, அதிகார சபை என்பன இவற்றுள் அடங்கும். எதிர்கால தேர்தல்களில் ஏதாவது மாற்றம் நிகழ்ந்தால் இத்திட்டங்கள் தொடருமா என்னும் குழப்ப நிலையில் இருக்கின்றார்கள் மக்கள்.  

பெரும்பான்மையின கட்சிகள் எல்லாமே பொதுவாக பேரினவாத போக்குடையவை தாம் ஆனால் தீவிர பேரினவாதம் ஆபத்தானது. மஹிந்த ராஜபக்ச நல்லவராக இருக்கலாம். எனினும் அவர்  இன்று அரசியல் நெருக்குவாரங்களுக்குள் சிக்கிக் கொண்டுள்ளார். அவரின் பெயரைப் பயன்படுத்தி சில அரசியல்வாதிகள் சிறுபான்மையினங்களின் அரசியல் இருப்பை சிதறடிக்கும் திட்டங்களை உள்ளரங்கமாக வகுத்துள்ளதாக தெரிகின்றது. இதில் ஒன்றுதான் மலையகப் பகுதிகளில் உள்ள தரிசு நிலங்களில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை மேற்கொள்வது. இதன் மூலம் மலையக மக்களின் வாக்குகள் பிரதேச ரீதியாக பிளவுண்டுப் போகும்.

இது தேசிய ரீதியில் ஆட்சி மாற்றம், தலைமை மாற்றம் ஏற்பட பங்களிப்புச் செய்யும் மலையக மக்களின் வாக்கு பலத்தை பலவீனமாக்கும். ஏனெனில் மஹிந்த தரப்பு சிங்கள வாக்குகளிலேயே தங்கி நிற்கின்றது. இதே வேளை இரத்தினபுரி மாவட்ட தமிழ் மக்கள் இன்று அரசியல் அநாதைகள் போல ஆகியிருக்கின்றார்கள். இம்மக்களைப் பிரதிநிதித்துவப் படுத்த மாகாண சபையிலோ, பாரளுமன்றத்திலோ எவருமே இல்லை.  

கடந்தத் தேர்தலில் த.மு. முன்னணி சார்பில் போட்டியிட்ட சந்திரகுமார்   30.000வாக்குகளை பெற முடிந்தது. இதன் மூலம் தமக்கும் ஒரு பிரதிநித்துவம் வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் மக்கள் இருப்பது புரிகின்றது. முன்பு இவ்வாறான குறையை நீக்க அமரர் செளமியமூர்த்தி தொண்டமான் ஏ.எம்.டி ராஜனை நியமித்திருந்தார்.   இவர்  சமூர்த்தி உத்தியோகத்தர்கள், மருத்துவமனை சிற்றூழியர்கள் நியமனம், சமூர்த்திப்  பயனாளிகள் உள்வாங்கல் என்று சேவைகளை வழங்கியிருந்தார்.   தேர்தல் மூலம் ஒரு பிரதிநிதித்துவத்தை பெறமுடியாத சூழ்நிலையில் போனஸ் ஆசனம் மூலமாவது இக்குறை நிவர்த்தி செய்யப்பட வேண்டும். சுழற்சி முறையிலாவது (இரண்டு வருடங்களுக்கு ஒரு முறையாவது) இந்தச் சந்தர்ப்பம் கிடைக்கும் வகையில் எதிர்காலத்தில் காய் நகர்த்த வேண்டியது த.மு.முன்னணியின் பொறுப்பாக இருக்கின்றது. மலையக மக்கள் புத்திசாலித்தனமாக சிந்திக்க ஆரம்பித்து விட்டார்கள். இனவாத ரீதியில் அரசியல் செய்வோருக்கு இது சாதகமாக அமையப் போவது கிடையாது.  

கேள்வி: மலையக இளைஞர்கள் மாற்றத்துக்கு தயாராகி வருவதாக நம்புகின்றீர்களா?  

பதில் --: நிச்சயமாக! இது தேவையானது. பிற சமூகங்களிடையே அரசியலில் இளைஞர் சமூகங்களின் பங்களிப்பு எப்போதோ ஆரம்பித்து விட்டது. இங்கு கொஞ்சம் தாமதமான ஆரம்பம் தான். நல்லத் தலைமைத்துவ பயிற்சிகள் கிடைக்க வேண்டியுள்ளது. இன்று அரசியல் ஈடுபாடு என்று அரசியல் வாதிகளின் பின்னால் வரும் சில இளைஞர்கள் கிரிக்கெட் உபகரணங்களையே கோருகின்றார்கள். கிரிக்கெட் விளையாடுவது, போட்டிகளை நடாத்துவது, முச்சக்கர இருசக்கர வண்டிகளில் உலாவருவது மட்டுமே இளைஞா்களின் உத்வேகத்தை அடையாளப்படுத்தாது. இவா்களின் ஆற்றல் திறமைகள் தமது சமூக அபிவிருத்தி பணிகளில் அர்ப்பணமாக வேண்டும். தவிர தேர்தல் மட்டுமே அரசியல் அல்ல. இந்த இடத்தில் இன்னொரு விடயத்தை சொல்லியாக வேண்டும். மலையக மக்கள் குறிப்பாக இளைஞர்கள் இன்று கோயில்களை நிர்மாணிப்பது, புனருத்தாரணம் செய்வது, கும்பாபிஷேகம், திருவிழா நடத்துவது என்று செலவிடும் பெரும்தொகை பணம் குறித்து யோசிக்க வேண்டியுள்ளது. கோயில்களுக்கான செலவு சமூக ரீதியில் பெரும் பொருளாதார தாக்கத்தினை ஏற்படுத்தவே செய்கின்றது. கல்வித் தேவைகளுக்காக மாணவ சமூகம் ஏங்கும்போது ஆன்மிகம் என்ற பெயரில் ஆகும் வீண் விரயத்தை கட்டுப்படுத்தலாம். இது குறித்து இளைஞர் சமூகம் சிந்திக்க வேண்டும்.  

இதை உணர்ந்து கொண்டவர்களாய் மலையக புத்திஜீவிகள் மாற்றத்துக்கு தம்மை தயார்படுத்தி வருகின்றார்கள். பலாங்கொடை பிரதேசத்தைப் பொறுத்தவரை பாடசாலை அதிபர்கள் மாணவர்களின் கல்வி தரத்தையும் பாடசாலை வளங்களையும் அதிகரிக்க  திடசங்கற்பம் கொண்டுள்ளார்கள். 2025 காலவரைக்குள் கல்வி அபிவிருத்தியில்  நுவரெலியா மாவட்ட தரத்துக்கு நிகராக இரத்தினபுரி மாவட்டத்தை கொண்டு வருவதே இவர்களின் இலக்கு. இதற்கு எமது பாரதி சமூக மேம்பாட்டு மன்றம் கடந்த பலவருடங்களாகவே ஒத்துழைப்பு வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. தற்போது யாழ். பல்கலைக்கழக (மருத்துவ பீடம்) மாணவர் பீ.ஏ. ஜெனிஃபர்,  யாழ்.பல்கலைக்கழக கிளிநொச்சி வளாக (கணினி பொறியியல் பீடம்) மாணவர் வி. வினோத்ராஜும் மலையக பட்டதாரி ஒன்றியம் என்ற அமைப்பை நிறுவியுள்ளார்கள். கணிதவியலில் காத்திரமான பெறுபேறுகளைப் பெறக்கூடிய வகையில் மாணவர்களை உற்சாகப்படுத்தும் முயற்சிகளை முடுக்கி விட்டுள்ளார்கள். கணித சூப்பர்  ஸ்டார்களை உருவாக்குவதே இவர்கள் இலக்கு. பலாங்கொடையை மையப்படுத்தி இந்த அமைப்பு ஆரம்பிக்கப்பட்டிருந்தாலும் இரத்தினபுரி  மாவட்டம் முழுவதையும் உள்ளடக்கியதாக இதன் சேவைகள் விரிவுபடுத்தப்படவுள்ளது. தாம் கற்க வேண்டும் என்ற துடிப்பு நீட்சிபெற்று தன்னைப் போல தமது சமூகமும் கல்வியில் மேம்பாடு காண வேண்டும் என்ற துடிப்பாக சுடர்விடுவதையே இது உணர்த்துகின்றது. என்னை பொறுத்தவரை இது வரவேற்க வேண்டிய மாற்றமே.    

நேர்கண்டவர் :  

தி. பாலசுப்ரமணியம்

Comments