மட்டக்களப்பு மாவட்டத்தின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் தொழில் வழிகாட்டி நிறுவனம்... | தினகரன் வாரமஞ்சரி

மட்டக்களப்பு மாவட்டத்தின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் தொழில் வழிகாட்டி நிறுவனம்...

உள்நாட்டு யுத்தத்தினால் சமூக மற்றும் பொருளாதார ரீதியில் மிக மோசமாக பாதிக்கப்பட்டு அதனால் பின்நோக்கி தள்ளப்பட்ட இரு மாகாணங்களில் ஒன்றாக இருந்துவரும் கிழக்கு மாகாண மக்களின் இயல்பு வாழ்க்கையை சரியான திசைக்கு திருப்பும் நோக்கில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பிரத்தியேக நிதி ஒதுக்கீட்டில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி செயற்திட்டங்களில் முதன்மை நிலையில் இருந்துவரும் கிராமசக்தி வேலைத்திட்டத்தின் மூலம் 2018ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்திற்கென 42மில்லியன் ரூபாவும் அம்பாறை மாவட்டத்திற்கு 66மில்லியன் ரூபாவும் திருகோணமலை மாவட்டத்திற்கு 33மில்லியன் ரூபாவும் என பாரிய நிதி ஒதுக்கீட்டை பெற்றுக்கொடுத்த ஜனாதிபதி, அதன் பெறுபேறுகளை ஆராய்வதற்காக கடந்த பெப்ரவரி மாதம் 08ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வருகை தரவிருந்தார். ஆயினும் தவிர்க்க முடியாத காரணங்களினால் அன்று தடைபட்டுப்போன அவரின் அந்த விஜயத்திற்கு பதிலாகவும் கிழக்கு மாகாண மக்களின் குறைகளை தீர்க்கும் வகையில் கடந்த ஏப்ரல் 08ஆம் திகதி முதல் நடைபெற்று வந்த நிகழ்ச்சிகளின் இறுதி அங்கமாக இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொள்ளும் வகையிலும் மாவட்டத்தின் இளைஞர் சமுதாயத்தின் வேலையில்லா பிரச்சினைகளுக்கு பதிலைப் பெற்றுக்கொடுக்கக்கூடிய இலங்கை தொழில் வழிகாட்டி நிறுவனத்தை ஆரம்பித்து வைக்கும் வகையிலுமே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான இந்த விஜயம் அமைந்தது.  

மாவட்டங்கள் தோறும் வாழ்ந்துவரும் பெருமளவு இளைஞர்களும் யுவதிகளும் தாம் பெற்ற கல்வி மற்றும் தொழிற்பயிற்சிகளுக்கமைய தமக்கு வேலைவாய்ப்பினை பெற்றுத்தர வேண்டிய பொறுப்பை அரசாங்கமே கொண்டிருக்கின்றது என்ற எண்ணத்தை கொண்டிருக்கின்றார்கள் என்பதை பாலர் வகுப்பு முதல் பல்கலைக்கழக பட்டப்படிப்பு வரை பொதுமக்களின் வரிப்பணத்தைக் கொண்டு அரசாங்கத்தினால் வழங்கப்படும் இலவசக் கல்வியின் மூலம் பட்டம் பெற்ற மாணவர்கள் கூட வேலையற்ற பட்டதாரிகள் சங்கங்களை அமைத்துக்கொண்டு வீதிப் போராட்டங்களில் இறங்கி உழைக்கும் வர்க்கத்தினரின் உழைப்பையும் பொதுமக்களின் பொறுமையையும் இழக்கச் செய்து நாட்டுக்கு நட்டத்தை ஏற்படுத்திவரும் கலாட்டா கலாசாரத்தை மாற்றியமைக்க வேண்டுமாயின், இந்த நாட்டின் இளம் சமுதாயத்தினர் மத்தியில் பல்வேறு முன்னுதாரணங்களைக் கொண்டு வாழ நினைத்தால் வாழலாம். வழியா இல்லை இந்த பூமியில்? என்ற யதார்த்தத்தினை செயற்பாட்டு ரீதியில் நிரூபித்துக்காட்ட வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கின்றது.  

இத் தேவையினை உணர்ந்து இளைஞர் சமுதாயத்திற்கு தொழில் ரீதியான வழிகாட்டுதல்களை வழங்கும் வகையிலேயே மட்டக்களப்பு மாவட்டத்தின் இலக்கம் 05, கிரீன் வீதி, மட்டக்களப்பு என்ற முகவரியில் ஜனாதிபதியின் எண்ணக்கருவிற்கு அமைய உருவாக்கப்பட்டுள்ள தொழில் வழிகாட்டி நிறுவனம், ஜனாதிபதியின் முன்னாள் பிரத்தியேக செயலாளரும் Smart Srilanka செயற்திட்டத்தின் பணிப்பாளருமாகிய பொறியியலாளர் எரிக் வீரவர்தனவின் தலைமையில் வழிநடத்தப்படுகின்றது.  

அறிவும் ஆற்றலும் இருப்பினும் கூட தமக்கென ஒரு வர்த்தகத்தை ஆரம்பிக்க முடியாது திண்டாடுபவர்களின் அடிப்படை பிரச்சினையாக இருந்து வருவது மூலதனம் இல்லாமையே ஆகும். இதனை புரிந்துகொண்டு அதற்கு பரிகாரம் அளிக்கும் வகையிலேயே பல்வேறு விரிவான கிராமிய கடன் உதவி திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. பெரிய அளவிலான பால் உற்பத்தி அபிவிருத்திக் கடன் திட்டம், சுயதொழில் ஊக்குவிப்பு கடன் திட்டம், சுவசக்தி கடன் திட்டம், செளபாக்கியா கடன் திட்டம் உள்ளிட்ட பல்வேறு கடன் திட்டங்கள் செயற்படுத்தப்படுவதுடன், இளம் பட்டதாரிகளுக்கான நிதியுதவி கடன் திட்டமும் அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டிருப்பதுடன் இலங்கையின் முதல் தர அரச மற்றும் தனியார் வங்கிகளின் மூலம் இந்நிதியுதவிகளை பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருக்கின்றன. இவற்றில் அநேகமான கடன் வசதிகளுக்கு 07சதவீதத்திற்கும் குறைவான வட்டி வீதங்களை அறவிடும் அதேவேளை, பெருந்தொகை நிதியினை கடனாகப் பெற்றுக்கொடுக்கும் மிக சில கடன் வகைகளுக்கு மாத்திரம் 11சதவீத வருடாந்த வட்டி அறவிடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். இக்கடன் உதவிகளை திருப்பி செலுத்துவதற்கான கால எல்லை 270நாட்களில் இருந்து 10வருடங்கள் வரை வழங்கப்படுகின்றன.  

வர்த்தக செயற்பாடொன்றினை ஆரம்பிப்பதற்கு தேவையான வாய்ப்புகளைத் தேடி அடையாளம் காணுதல், அவ்வாறு அடையாளம் காணப்பட்ட வர்த்தகத் துறையை சிறந்த முறையில் திட்டமிடுதல், அதற்கு தேவையான வளங்களை சேகரித்தல், அதற்கமைய தமது வர்த்தகத் துறையை நடைமுறைப்படுத்துதல் என அனைத்து கட்டங்களிலும் தேவையான வழிகாட்டல்களை வழங்குவதற்கான நிபுணத்துவ வசதிகளுடன் இந்த தொழில் வழிகாட்டி நிறுவனம் தயாராக இருக்கின்றது.  

அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் காணப்படும் பல வணிக வாய்ப்புகள் இவ்வாறு இனங்காணப்பட்டிருக்கின்றன. வேளாண்மை துறையின் கீழ் காளான் வளர்ப்பு, வெள்ளரிக்காய் மற்றும் மூலிகை பயிர்ச்செய்கை, விவசாயப் பண்ணைகள், பாற் பண்ணைகள், மீன் வளர்ப்பு ஆகியனவும் விளை பொருட்கள் என்ற வகையில் கழிவு முகாமைத்துவப் பொருட்கள், பனை சார்ந்த உணவுப் பொருட்கள், பனை சார்ந்த கைவினைப் பொருட்கள், கைத்தறி ஆடைத் தயாரிப்பு, மட்பாண்ட தயாரிப்பு, தச்சு வேலை, தேங்காய் நார் தயாரிப்பு, நகை தயாரிப்பு, செங்கல் தயாரிப்பு, முருங்கை இலை பொடி தயாரிப்பு, மீன்பிடித் துறை சார்ந்த உற்பத்திகள், சீமெந்து மூலமான கைவினைத் தயாரிப்புகள், உணவு வகைகளைப் பதனிடும் வீட்டுக் கைத்தொழில், மசாலா தயாரிப்பு, இனிப்பு பண்டங்கள் தயாரிப்பு ஆகியனவும் சேவைகள் என்ற வகையில் சிகையலங்கார நிலையம், குழந்தை பராமரிப்பு நலன்பேணல் சேவை, பயிற்சி நிலையங்கள், தனியார் போக்குவரத்து சேவை, குடிசைக் கைத்தொழில், மொத்த மற்றும் சில்லறை கொள்முதல் மற்றும் விற்பனை என தமது வசதிகளுக்கும் வாய்ப்புகளுக்கும் ஆர்வத்திற்கும் ஏற்ப பல்வேறு தொழில்வாய்ப்புகள் அரச மற்றும் தனியார் தொழில் நிறுவனங்களின் உதவிகளுடனும் ஒத்துழைப்புடனும் முன்னெடுப்பதற்கான ஏராளமான வாய்ப்புகளை இம்மாவட்ட இளைஞர்களுக்கும் யுவதிகளுக்கும் பெற்றுக்கொடுக்க காத்திருக்கும் தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் வழிகாட்டலைப் பெற்றுக்கொள்வதும் இந்நிறுவனத்தின் உதவிகளைப் பெற்று ஒரு படி முன்னேறியவர்கள் தனக்கு ஒருபடி கீழே இருக்கும் தமது சகாக்களுக்கு தாம் பெற்ற பலனைப் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகளுக்கு வழிகாட்டுவதன் மூலம் தனிப்பட்ட வகையில் தமக்கும் தாம் சார்ந்த சமூகத்திற்கும் நன்மை பயக்கும் ஒரு வரப்பிரசாதமாக மட்டக்களப்பு மாவட்ட தொழில் வழிகாட்டி நிறுவனத்தை வளர்த்தெடுக்க வேண்டியது இம்மாவட்டத்தினதும் மக்களினதும் பொறுப்பாகும்.

ரவி ரத்னவேல்

Comments