மட்டக்களப்பு மாவட்ட விவசாயச் செய்கையின் அபிவிருத்தியும் தேவைகளும் | தினகரன் வாரமஞ்சரி

மட்டக்களப்பு மாவட்ட விவசாயச் செய்கையின் அபிவிருத்தியும் தேவைகளும்

ஒரு மாவட்டத்தின் அபிவிருத்திக்கு அந்த மாவட்டத்தை முன்னிலைப்படுத்தி நிற்கின்ற தொழில் பிரதானமானது. கிழக்கில் விவசாயத்துறையில் அரசோச்சுகின்ற மாவட்டங்களில் முதன்மை இடத்தை மட்டக்களப்பு மாவட்டம் பெறுகிறது. ஆங்கிலேயர்கள் தங்களளது ஆட்சிக் காலத்தில் இம் மாவட்டத்தை தானியக் களஞ்சியம் என அழைத்தார்கள். இங்கு நெல், தானியம், கிழங்குவகை, மரக்கறிவகை, என்பனவற்றோடு முந்திரிகை, தென்னை, என்பனவும் செய்கை பண்ணப்பட்டு வருகின்றன. இவற்றில் நவீனத்துவ தொழில் நுட்பங்கள் உட்புகுத்தப்பட்ட வண்ணம் இருந்து வருகிறது. 83091விவசாயிகள் பயிர்ச் செய்கையில் ஈடுபடுவதாகவும் அப்போதைக்கு அப்போது அவர்கள் பயிர்ச் செய்கையில் சந்திக்கின்ற நோய்த் தாக்கங்களையும், பீடைகளையும் கட்டுப்படுத்த கிழக்கு மாகாண விவசாய விரிவாக்கல் பிரதிப் பணிப்பாளர் வி. பேரின்பராஜாவும் அவரது உத்தியோகஸ்தர்களும் களத்தில் இறங்கி முழுமூச்சாக பணியாற்றிவருவதை காணக்கூடடிதாக இருக்கிறது.  

படைப்புழுத் தாக்கம் 

சமீபத்தில் நமது நாட்டில் பரவிய படைப்புழுத் தாக்கத்தை மட்டக்களப்பு மாவட்டத்தில் பரவாமல் தடுத்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த திறமை அத் திணைக்களத்தையும் அதன் தலைவர் பேரின்பராஜாவையும் சாரும். இதனால் சோளச் செய்கையில் ஈடுபட்டிருந்த விவசாயிகள் பாதிப்பில் இருந்து தப்பித்துக் கொண்டார்கள் பிரதிப் பணிப்பாளர் மட்டக்களப்பு மாவட்ட விவசாய அபிவிருத்தி பற்றி கருத்தத் தெரிவிக்கையில் பயிர்ச்செய்கையில் மாத்திரம் 70986ஹெக்ரயார் நிலங்கள் உள்வாங்கப்பட்டுள்ளன. விவசாயிகளின் சிரமங்களை குறைக்க வேணடும். அதனை இலகுவாக்க இயந்திர சாதனங்களின் பாவனையை கையாளவைக்க வேண்டும். ஒவ்வொரு பயிர்ச் செய்கையும், ஒவ்வொரு துண்டுக் காணியும் அதிஉயர் உச்ச விளைச்சலைப் பெறவேண்டும், அதற்காக நீர்ப்பாசன வசதி இன்னுமின்னும் புதிதாக உருவாக வேண்டும். உற்பத்திச் செலவுகள் குறைக்கப்பட வேண்டும். கிருமி நாசினியற்ற உற்பத்திகள் உருவாக வேண்டும் இவை  அனைத்திற்குமான பொறிமுறைகளை விவசாயிகளிடத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். அப்போதுதான் அவர்கள் விளைச்சலில் உயர்ச்சியை ஏற்படுத்துவார்கள். இது எனது அனுபவம் கண்டறிந்த உண்மை நான் இதனை தொடர்ந்த வண்ணம் இருக்கிகிறேன் அதனால் என் மனம் திருப்தியடைகிறது என்றார். 

விவசாய உற்பத்திகள் 

மட்டக்களப்பு மாவட்டத்தில் வருடமொன்றக்கு 313138மெ. தொன் நெல் உற்பத்தியும், மாம்பழம் 430மெ. தொன்னும், மேட்டு நில பயிர்ச் செய்கை மூலம் மரக்கறி 3618மெற.தொன்னும், கிழங்கு வகையில் 3618மெற் தொன்னும் தானிய வகையில் 497மெ.தொன் உறபத்தியாவதோடு 5லட்சத்து 18ஆயிரம்பழங்களும் உற்பத்தியாகின்றதென புள்ளி விபரங்கள் காட்டுகின்றன  

இயந்திராதிகள் 

விவசாயிகளின் சிரமத்தையும் கஸ்ரத்தையும் குறைப்பதற்காக பல்வேறு பொறிமுறைகளை இத்திணக்களம் செய்து வருகிறது நெல் அறுவடை இயந்திரம், களை பிடுங்கும் இயந்திரம், நிலக்கடலையை பிடுங்கி அதன் தோலை அகற்றும் இயந்திரம் என்பவகை அவற்றில் முதலிடம் பிடிக்கின்றன. இவற்றில் அனேக இயந்திரங்கள் மானிய அடிப்படையலும் இனமாகவும் அரசால் வழங்கப்படுகின்றன. இருந்தும், வழங்கப்படும் எண்ணிக்கைகள் போதாதிருக்கின்றன. அவை காலப்போக்கில் அதிகரிக்கப்பட வேண்டும். 

பயிர்களுக்கான கிளினிக்குகள் 

மனிதர்களுக்கு நோய் ஏற்படும்போது மருத்துவ கிளினிக்கை நாடுகிறார்கள். அதேபோல, பயிர்களுக்கான நோய்களையும், பீடைகளையும் கட்டுப்படுத்தவும், இல்லாது ஒழித்து பயிர் முகாமைத்துவத்தை மேம்படுத்தும் நோக்கில் பயிர்களுக்கான கிளினிக்குகள் ஒவ்வொரு விவசாயப் போதானாசிரியரின் அலுவலகத்திலும் நடாத்தப்பட்டு வருகின்றன விவசாயிகள் பாதிப்படைந்த பயிர்களை அங்கு காட்டி அந்தந்த நோய்க்கான கட்டுப்படுத்தும் முறையையும் அது எதனால் உருவாகிறது என்ற விளக்கங்களோடு, அதற்கான இயற்கை மருந்துகளையும், இரசாயன மருந்தகளையும் அறிந்து கொள்ள முடியும். 

 விவசாயச் செய்கையில் பயிற்சிகள் 

பயிச்சி வகுப்புக்கள் மாதமொருமுறையும் அல்லது வேண்டிய வேளைகளிலும் ஒவ்வொரு விவசாயப் போதனாசிரியர் அலுவலகத்திலும் நடைபெறுகின்றன. அதில் கலந்து கொள்கிற விவசாயிகளுக்கு விவசாயச் செய்கையில் சிறந்த செய்முறைப் பயிற்சியும், சிந்தனைத் தெளிவையும் ஏற்படுத்தக்கூடய பயிற்சிகளும் வழங்கப்பட்டுவருவதை காணக்கூடியதாகவுள்ளது. இதனால் மக்கள் விவசாயச் செய்கையில் உத்வேகம் பெறுவார்கள். அவர்களுக்கு ஏற்படவிருக்கும் நட்டம் இல்லாமற் போய்விடும், உற்பத்தி பெருகும்.  

பாடசாலைகளில் சிறு தோட்டங்கள். 

இதைவிட பாடசாலைகள் தோறும் சிறு சிறு தோட்டங்கள் உருவாக்கப்பட்டு அங்கு பயிர்ச் செய்கை பண்ணப்படுகிறது மாணவர்களே அதனை செய்கிறார்கள். மாணவர்கள் அதிலிருந்து ஏற்படும் விளைச்சலை கண்ணால் காணும்போது, அவர்கள் அதை வீட்டில் செய்வார்கள். இந்தப் பழக்கம், அவனது வளர்ச்சியோடு ஒட்டிக்கொள்ளும். இதற்காக விவசாய உபகரணங்கள் பாடசாலைகளுக்கு இனாமாக வழங்கப்பட்டு வருகின்றன. இதனால் ஒவ்வொரு கிராமத்திலும் வீட்டுத் தோட்டமும் அதனூடான உற்பத்தியும் வீட்டுத் தேவையை பூர்த்தி செய்யும்  

கறடியனாறு விவசாயப் பண்ணை 

இப்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் கறடியநாறு விவசாயப் பண்ணை இயங்கி வருகிறது. அது பல தரப்பு உத்தியோகஸ்தர்களுக்கும், விவசாயிகளுக்கும் சேவைக்காலப் பயிற்சியை வழங்கி வருகிறது விதை நெல் உறபத்திசெய்யப்படுகிறது. விவசாய ஆராய்ச்சி மையம் செயற்படுகிறது. இவைகள் ஒன்றிணைக்கப்பட்டு சிறந்த முகாமைத்துவம் அங்கு பேணப்பட வேண்டும். இப் பண்ணைக்கான ஆளணி அங்கீகரிக்கப்படவில்லை. இதனை மாவட்ட நிர்வாகத்தின் கீழ்வைத்திருப்பது பொருத்தமில்லை. கிழக்க மாகாண சபையின் நேரடி நிர்வாகத்தின் கீழ் கொண்டுவருவதே பொருத்தமானது. அதனால் மிகமிக வினைத்திறன் மிக்கதாக அது மாறும். அதுதான் எமக்குத் தேவை.  

இடைத்தரகர்கள், தொழிற்சாலைகள்  

இம் மாவட்டத்தின் விளையும் விவசாய உறபத்திகளை பெறுதி சேர் பண்டங்களாக மாற்றுவதற்கான பொறிமுறை மிக அவசியமானது. உதாரணத்துக்கு மாம்பழ உற்பத்தியை பார்ப்போம், வருடமொன்றுக்கு 430மெற்.தொன் உற்பத்தியாகிறது. இதனை வைத்து இலாபம் பெறுவது உற்பத்தியாளனில்லை, இடைத்தரகர்கள்தான். நியாய விலையில் விவசாய உற்பத்திகளை விவசாயிகளிடமிருந்து வாங்க பொருத்தமான பொறிமுறையை அரசு உருவாக்க வேண்டும். மட்டக்களப்பில் ”ஜேம்” உற்பத்தித் தொழிற்சாலையை உருவாக்க முடியாதா? இதே போன்று நெல் உற்பத்தியை எடுக்கலாம் வருடமொன்றுக்கு 313138மெற் தொன் உற்பத்தியாகிறது. அதனை அரிசியாக்கவோ, அல்லது அரிசியிலிருந்து மாவாக்கவோ ஒரு அரிசி ஆலை கூட அரசால் நிறுவப்படவில்லை. நெல்லை விவசாயிகளிடமிருந்து தனியார்களே கொள்வனவு செய்து கொள்ளை இலாபமடிக்கின்றனர். அடுத்தது, விதைநெல், நாம் இன்னமும் சுத்தமான விதை நெல்லுக்கு வெளி மாவட்டங்களையே நம்பி நிற்கிறோம். இதற்காக கரடியனாறு விவசாயப் பண்ணை விரிவுபடத்தப்பட வேண்டியுள்ளது.   

 

 

 

 

Comments