விஹாரி' புது வருட பலன்கள் | தினகரன் வாரமஞ்சரி

விஹாரி' புது வருட பலன்கள்

மேஷம்.  

மலரும் விஹாரி வருஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு விடிவுகளைத் தரும் வகையிலேயே அமையும்.  

குரு பகவான் ஒன்பதில் வந்தமைய, அவர் ஐந்தாம் பார்வையாக முதலாம் இடத்தையும், ஏழாம் பார்வையில் மூன்றாம் வீட்டையும், ஒன்பதாம் பார்வையாக ஐந்தாம் இடத்தையும் பார்ப்பது சுப பலன்களை அள்ளித் தரும். காத்திருந்தவைகள் கனிய, நினைத்தவைகள் நெருங்கி வந்து சுகங்களைத் தரும். தடுமாற்றங்கள் நீங்கவும், தெளிவான சிந்தனையோடு முயற்சிகளைத் தொடங்கவும், தொடரவும் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். பெரியோர் ஆசீர்வாதங்கள், உத்தியோகத்தர்களுக்கு மேலதிகாரிகளின் சகாயங்கள் கிடைக்கும். திருமணத்தில் இருந்து வந்த தடைகள் நீங்கவும், புதிய உறவுகள், தொடர்புகள் உண்டாகவும் இடமுண்டு. எப்படியானாலும் சமூகத்தில் நினைத்துப் பார்க்க முடியாத நல்ல அங்கீகாரம் நிச்சயமாக வந்து சேரும். தொழில் விருத்தியாகும், வேற்றுத் தொழில்களைத் தொடங்கவும் சந்தர்ப்பங்கள் உண்டு.  

பெண்களுக்கு மனதில் இருந்து வந்த ஆதங்கங்கள் மறையவும், கல்வி, தொழில், உறவுகள், காதலில், திருமணத்தில் இருந்த எதிர்மறையான விளைவுகள் குறையவும், அல்லது இல்லாமல் போகவும், மனதில் தெளிவும், நிம்மதியும் வர வாய்ப்புகளே அதிகம்.  

இடபம்.  

பல விஷயங்களில் குரு பகவானின் பார்வை உங்களுக்குச் சாதகமாகவே உள்ளது. சுப செலவினங்களை கொண்டு வரும் குரு பெயர்ச்சி அதற்கேற்ற வருமானங்களையும் தருவாரே. கோவில், சுவாமி தரிசனங்கள் மனதிற்கு சாந்தியை அளிக்கும். சான்றோர்களின் சந்திப்புகள் வாழ்க்கையில் வசந்தங்களைக் கொண்டு வரும். தேக ஆரோக்கியம் சற்று பாதிக்கப் பட்டாலும், குடும்பத்தில் இருந்து வந்த பகைகள், உறவினர்களுடனும், நண்பர்களுடனும் நிலவிய தவறான புரிதல்கள் நீங்கி சகஜமான நிலை உண்டாகும். வீடு வாகனங்களில் உள்ள குறைகள் விலக சுமுகமான நிலை ஏற்படும். அன்னை வழியில் சுகவீனம் அடைந்திருந்தவர்கள் குணப்படுவார்கள். தொழில் துறைகளில் பங்காளிகள் இருந்தால் பணம் கேட்டுத் தொல்லைகள் தருவார்கள். பொறுமையை அனுசரிப்பதைத் தவிர வேறு வழியில்லை. குடும்பத்தில் சாதகமான  நிலையே நிலவும். சத்துருக்கள் விலகி நின்று தொல்லைகள் தருவார்கள். கடைசியில் காணாமல் போவார்கள்.  

பெண்கள் கணவருடன் வம்புகளுக்குப் போகாமல் இருப்பது நலம். அது சச்சரவுகளைத் தரும். வீண் மனஸ்தாபங்கள் நன்மையளிக்காது. கன்னிப் பெண்கள் அவதானமாகவே மற்றவர்களிடம் பழக வேண்டும்.  

மிதுனம்.  

சங்கடங்களுடன் சந்தோஷமாக வாழும் வருஷம் பிறந்திருக்கிறது. பிரச்சினைகள் இல்லாமல் இல்லை, வராமலும் இருக்கப் போவதும் இல்லை ஆனால் அவைகளை மிக எளிதாகச் சமாளித்து மன நிம்மதியோடு வாழக் கிடைக்கும்.  

தொழில் தொல்லைகளுடனேயே நடக்கும். தாராளமாகத் தேவையான வருமானமும் வரும், ஏராளமான சிக்கல்களும் செலவுகளும் தொடர்ந்தே வரும். குடும்பத்தில் சண்டைகளும் சந்தோஷங்களும் மாறிமாறி வந்து சிரிப்பதா அல்லது சிந்திப்பதா என்று குழப்பும். அலட்டிக் கொள்ளாமல் அன்றையப் பொழுதைக் கழித்தால் அடுத்த நாள் ஆனந்தமாகவே நடக்கும்.  

கல்யாண முயற்சிகள் மட்டும் நல்ல பலனைத் தராது. எதிர்பார்த்த பெண் கிடைக்க மாட்டாரா என்றே நினைக்கத் தோன்றும். உறவுகளும், குடும்பமும் ஏற்றுக் கொள்ளும் பெண் உங்களுக்கு அவ்வளவு எளிதில் கிட்டாது. பொறுத்திருங்கள், பொன்னான பெண் தானாகவே வந்து சேருவார். கல்வியும், உத்தியோகமும் பல பிரச்சிளைகளுக்குப் பின்னரே சரிவரும். மனதை ஒருமைப் படுத்தினால் மட்டுமே வெற்றிகளைச் சந்திக்கலாம்.  

பெண்கள் தாம் கற்கும் கல்வியிலும், செய்யும் தொழிலும், தெய்வத்தின் மீதும் கவனம் செலுத்துவதே சாலச் சிறந்தது.  

கடகம்.  

இது ஒரு நல்ல வருஷமே. வாயைத் திறந்து பேசாமல், பேசுவதைக் கேட்டு வாழ முயற்சி செய்ய வேண்டிய காலம். தாராளமாகச் செலவுகள் வந்து சேரும். அதில் அநாவசியச் செலவுகளே அதிகமாக இருக்கும். கவனமாக இருந்தால் கவலைகளில் இருந்து தப்பலாம். உத்தியோகம், தொழில் வேண்டியளவு வீணான பிரச்சினைகளைக் கொண்டு வரும். ஆனால் புத்தி கூர்மையுடன், குறைவாகப் பேசி வெல்ல வாய்ப்புகளே அதிகம் இருக்கிறது. பொருள் தேடும் முயற்சியில் நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம். உறவுகள், நண்பர்கள் பெரிதாக உதவ மாட்டார்கள். தூர நின்று வேடிக்கை பார்க்கும் அளவிலேயே நிலைமை இருக்கும். போதாக் குறைக்கு நோய்களும் உங்களைத் தட்டிப் பார்க்கும். உங்களை ஒன்றும் செய்ய முடியாவிட்டால் குடும்பத்தில் மற்றவர்களையும் சீண்டிப் பார்க்கும். ஆனால் இவையெல்லாம் காலத்தால் கணிக்கப்படும்.  

பெண்களுக்கும் சற்று சோதனையான காலம் தான். திருமணப் பேச்சுக்கள் வெற்றியாக முடியாது. எதிர்பாரத்த தகுதிகள் இல்லாதவர்களே வந்து நிற்பார்கள். தூர உறவுக்காரர்கள் என்று சொல்லப்படுபவர்கள் எல்லாம் மிகவும் தூரத்து உறவுக்காரர்களே.  

சிம்மம்.  

ஆளவும், அதிகாரத்தைக் காட்டவும் முன்னிற்கும் அன்பர்களே உங்களுக்கு ஏற்ற வருஷமே இது.  

என்னென்ன திட்டங்கள் தீட்டி மனதில் வைத்திருந்தீர்களோ அவைகளை நடை முறைப்படுத்த நல்லதோர் சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. தொழிலாக இருந்தாலும், அல்லது அதை விருத்தி செய்வதாக இருந்தாலும், புதியன ஆனாலும் வெற்றி உங்கள் பக்கமே. தொழிலை விரிவாக்கும் பணிகளுக்கு, புதிதாகத் தொடங்குவதற்குத் தேவையான பொருளாதார உதவிகள் விரைவாக, எளிதில் கிடைக்கும். பெரியோர்களின் மனமுவந்த ஆசிகளும், சகாயங்களும் வந்து சேரும். அரச மேலதிகாரிகளும் உதவுவார்கள். மனமும் அறிவும் தெளிவாக இயங்கி, முயற்சிகளைச் சாதனையாக்கும். பணமும், புகழும் வரும். தேக ஆரோக்கியம் துணைபுரியும்.  

கல்வியில் முன்னேற்றம் காண விரும்புவோர் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. கல்யாணத்தைப் பற்றிக் கனவுகள் வேண்டாம் அன்பர்களே காரியத்தில் இறங்குங்கள். இளைய சமூகத்தினர் துணிவாகச் செயல்பட்டு முன்னேற்றம் காணலாம்.    கன்னிப் பெண்களுக்கும் இது நல்ல காலமே. முன்பு ஆசைப்பட்டவர்களை அடைய இருந்த தடைகள் நீங்கும். புதிதாக உறவுகளும், அறிமுகங்களும் உருவாகும்.  

கன்னி.  

அழகும், சுறுசுறுப்பும், கண்டவரைக் கவரும் காந்த சக்தியும் வாய்ந்த கன்னி ராசிக்காரர்களே இந்த வருஷம் நற் பலன்களைப் பெற்றுத் தர வாழ்த்துகிறோம்.  

தொழில் துறையில் ஏற்பட்டிருக்கும் சிக்கல்கள் மாறி சுமுக நிலை தோன்றும். பங்காளிகளோடு சேர்ந்து வியாபாரம் நடத்தியோர்களின் சிரமங்கள் முடிவுக்கு வரும். கருத்து வேறுபாடுகளினால் தனித்துப் பிரிந்து போகவும் வாய்ப்புகள் உண்டு. தனியாகத் தொழில் புரிந்தோர் இலகுவில் கடன்களை அடைத்து நிம்மதியைப் பெறுவார்கள்.  

குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும். நோய்த் தொல்லைகள் வந்த வேகத்தில் மறைந்து போகும். குழப்பங்களை உண்டாக்கிய உறவினர்கள் விலகி விடுவார்கள். தேக ஆரோக்கியத்தில் பெரிதாகச் சிக்கல்கள் தோன்றாது. எதிரிகள் எப்போதும் குறிவைத்தே செயல்படுகிறார்கள் என்பதை மனதில் கொள்வது உத்தமமே. திருமணம் போன்ற சுப காரியங்களுக்கு ஏற்ற சூழ்நிலைகள் வருவது நிச்சயமில்லை. பெண்களுக்குத் திருமண சம்பந்தங்களில் சாதகமான நிலை வாய்க்க வழி குறைவே. குடும்பப் பெண்கள் சற்று நிதானமாக நடந்து வீட்டில் அமைதியை நிலை நாட்டுவதே சாலச் சிறந்தது.

(தொடரும்...)

Comments