5 ஆம் தரப் பரீட்சையை அம்மாமார் விடுவார்களா? | தினகரன் வாரமஞ்சரி

5 ஆம் தரப் பரீட்சையை அம்மாமார் விடுவார்களா?

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கு ஒருவாறு முடிவு கிடைத்துவிட்டது என்கிறார் நண்பர். எங்கே முடிவு கிடைத்துவிட்டது? என்று கேட்கிறார் நண்பி. இருவருக்கும் வாக்குவாதம்!

ஒண்டில் இந்தப் பரீட்சையை ரத்துச் செய்திருக்க வேண்டும். இல்லாவிட்டால், வறிய பிள்ளைகளுக்கு மாத்திரம் கட்டாயம் என்று சொல்லியிருக்க வேணும். கட்டாயம் இல்லை என்றால், யார்தான் கேட்பார்கள். ஒரு முறை முயற்சித்துப் பார் என்றுதான் பிள்ளையைச் சொல்லப்போகிறார்கள் என்பது நண்பியின் வாதம்.

இல்லையே...விரும்பினால் மட்டுந்தானே எழுத வேண்டும்!

விரும்பினால் மட்டும் எழுதலாம் என்ற சுதந்திரம் தனியார் பள்ளிகளில் படிக்கும் பிள்ளைகளுக்கு ஏற்கனவே இருக்கிறது. இருந்தும் அம்மாமார் விடுகிறார்கள் இல்லையே! புலமைப்பரிசில் கிடைக்கின்றதோ இல்லையோ, அவர்கள் கௌரவத்திற்காகப் பிள்ளைகளை வதைக்கின்றார்கள். முதலாந்தரத்தில் இருந்தே பிள்ளைகளுக்கு வதை கொடுக்கத் தொடங்கிவிடுகிறார்கள். அதனால்தான் சொல்கிறேன், இந்தப் பரீட்சை ஏழைப் பிள்ளைகளுக்கு அதாவது வறுமை கோட்டிற்குக் கீழே உள்ள பிள்ளைகளுக்கு மாத்திரம் கட்டாயம் என்று சட்டமாக்கியிருக்க வேண்டும் என்று சொல்கிறார் நண்பி.

அதோடு பாருங்கள், நாலாம் வகுப்பிலிருந்தே ஆசிரியர்மார் புத்தகம் அச்சடிக்கத் தொடங்கிவிடுகிறார்கள். ரியூஷன் நடத்த ஆரம்பித்து விடுகிறார்கள். சில நற்பணி மன்றத்தினர் ஊர் ஊராகச் சென்று 'செமினர்' நடுத்துகிறார்கள். 'செமினர்' நடத்துவதற்குக் கூட்டிச் செல்லப்படும் சில ஆசிரியர்மார் பிள்ளைகளைக் கடிக்காத குறையாகக் கதைத்துக் குதறுவார்கள். பிள்ளைகள் பயந்து விடும். ஆகவே, இதில் பாதிக்கப்படப்போவது அப்பாவி ஏழைப் பிள்ளைகள்தான். பரீட்சையை ரத்துச் செய்துவிட்டால் ஒரு பிரச்சினையும் இல்லை என்ற கருத்து பரவலாக இருக்கத்தான் செய்கிறது.

'ரியுஷன்' என்றதும்தான் நினைவிற்கு வருகிறது, ஓர் ஆசிரியர் சொன்னது. சில பிரதேசங்களில் படிப்பிக்கும் ஆசிரியர்கள் வகுப்பில் படிப்பிப்பது இல்ைலயாம். அதுவும் இரத்தினக்கல் விளையும் பகுதியில் தெம்பிலிப்பிட்டி பிரதான பாதைக்கு அருகே அமைந்துள்ள இந்தப் பாடசாலையில், ஆசிரியர்கள் செய்யும் அநியாயம் 'கிருஷ்ணருக்ேக' பொறுக்காது என்கிறார்கள்.

காலையில் வகுப்பு நேரங்களில் படிப்பிக்காமல், அந்தப் பிள்ளைகளை மாலை வரை பாடசாலையில் வைத்திருந்து வகுப்பு நடத்துகிறார்களாம். அதற்குக் குறிப்பிட்ட ஒரு தொகை பணம் வழங்க வேண்டுமாம். வகுப்பில் படிப்பித்தால், பிள்ளைகளை இரவு வரை மினக்ெகடுத்த வேண்டியதில்லைதானே! பிள்ளைகளை வதைப்பது இருக்கட்டும், அவர்களுக்கு வருவாய் கிடைக்காதே! அரசாங்கம் வழங்குகின்ற சம்பளத்தில் ஆசிரியர்மார் என்னதான் செய்ய முடியும்? அதனால்தான் பாருங்கள் சில ஆசிரியர்மார், சிங்கள உத்தியோத்தர்களுக்கு இரண்டாம் மொழி தமிழைப் படிப்பிப்பதற்கு எத்தனை பாடுபடுகிறார்கள் என்று சொல்கிறார் நண்பர். தமிழை ஒழுங்காகப் பேசமாட்டார்கள், ஆனால், சிங்களவர்களுக்குத் தமிழ் படிப்பிப்பார்கள். அதேநேரம், சிங்களவர்கள் தமிழ் பேசுவதைவிட இவர்கள் நன்றாகச் சிங்களம் பேசுவார்கள். பேசியும் ஒரு பயனும் இல்லை. "அதிங் நான் குடுத்தது...அவேங் வந்ததிங்" என்று தமிழ் பேசுவோருக்குப் பதவி உயர்வு சம்பள உயர்வு எல்லாம் இருக்கிறது. இரண்டாம் மொழி பேசும் ஆசிரியர்மாருக்கு எந்தப் பதவி உயர்வோ, ஊக்குவிப்போ கிடையாது என்று அழுத்துக்ெகாள்கிறார் ஓர் ஆசிரியர். அதற்குக் காரணம் முயற்சி!

அப்படி முயற்சி எடுத்ததால்தான் ஹற்றன் ஹைலண்ட்ஸ் கல்லூரியில் சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள்ல 99.9வீதமானோர் சித்தியடைஞ்சிருக்கிறார்கள். இன்னும் விளக்கமாகச் சொல்வதென்றால், 195பேர் பரீட்சைக்குத் தோற்றி, 194பேர் உயர்தரத்திற்குத் தெரிவாகியிருக்கிறார்கள். அதிலும் 19பிள்ளைகளுக்கு 9பாடத்திலும் 'ஏ' சித்தி. ஆனால், அந்தச் செய்தி பேப்பர்கள்ல உட்பக்கத்திலைதான் வந்திருந்தது. கொழும்பு ஸ்கூல்கள்ல 14, 15பேர் 9 'ஏ' சித்தி எடுத்தாலும் முன்பக்கத்திலை போடுறாங்கள் என்று குறைபடுகிறார் நண்பர். இப்பிடி விடயங்கள் வெளியில் வராததால்தான் அமுதன் அண்ணாமலை போன்றவர்கள், இன்னும் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலையைச் சொல்லிக்ெகாண்டிருக்கிறார்கள். அவர் படிச்சதும் ஹைலண்ட்ஸ் கல்லூரிதான். ஒரு காலத்தில் கலையோ, கவிதையோ, பாடலோ பெரிதாகக் களைகட்டவில்லை. அங்கு அவற்றுக்கான ஒரு களமோ, ஒரு தளமோ இருக்கவில்லை. அவர்களது பிரச்சினை வாழ்வாதாரம். அதற்கும் அப்பால் எதனைப் பற்றியும் அவர்கள் சிந்திக்கவில்லை என்பது அமுதன் அண்ணாமலையாரின் கருத்து.

என்றாலும், இந்தக் கருத்து ஒட்டுமொத்த மலைப்பகுதிக்கும் பொருந்தாது என்பது நண்பரின் வாதம். மலையகம் என்பது உழைப்பாளர்களின் உறைவிடம் மட்டுமல்ல. அங்குப் பல முதலாளிகள் இருக்கிறார்கள். ஆசிரியர்கள் இருக்கிறார்கள், படித்துப் பட்டம் பெற்றுப் பல்வேறு பதவிகளில் உள்ளவர்களின் வாழ்வாதாரம் என்பது அமுதன் அண்ணை சொல்லும் நிலையில் இல்லை. அங்கிருந்து வந்த பலரால்தான் கொழும்பின் பொருளாதாரம் செழிப்படைந்துள்ளது, என்கிறார் நண்பர்.

அவரது பேச்சை மறுத்துப் பேச முடியாவிட்டாலும், ஒரு விடயத்தைச் சொல்ல வேண்டும், பலருக்குக் கல்லாபெட்டி நிறைந்திருக்கிறது; மனம் நிறையவில்லை. மனம் இல்லாவிட்டால், பணமிருந்தும் பிரயோசனமில்லை. பணத்தை வைத்துக் ெகாண்டு என்ன செய்வதென்பதை அறியாதவர்களாகத் திண்டாடுகிறார்கள் என்று சொல்கிறார் மஸ்கெலியாவில் இயங்கும் ஒரு தொண்டு நிறுவனத்தில் பணியாற்றும் ஒரு பட்டதாரி தம்பி! தம்பி சொல்வதையும் அண்ணாமலையார் சொல்வதையும் மெய்ப்பிக்கும் வகையில் ஆசிரியர்மார் செயற்கூடாது.

தாங்கள் பொருளாதாரத்தில் வளர வேண்டும் என்று நினைப்பதில் தவறு இல்லை. தம்மிடம் பயிலும் மாணவர்களும் எதிர்காலத்தில் சிறந்து ஒளிர வேண்டும் என்பதையும் உறுதிசெய்ய வேண்டும்; செய்தால் நல்லது!

Comments