மனித உழைப்பு வீண் விரயமாகி விடக்கூடாது | தினகரன் வாரமஞ்சரி

மனித உழைப்பு வீண் விரயமாகி விடக்கூடாது

விரலுக்கேற்ற வீக்கத்தோடு பண்டிகைகள் கொண்டாடப்பட வேண்டும்

‘1970 – 77காலப்பகுதியில் பொருட்களுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவியது. பண்டிகைக்கால பொருட்களை பெற்றுக்கொள்ள  சங்கக் கடை அல்லது கூப்பன் கடை வாசலில் வரிசையில் நிற்க வேண்டும். சீத்தை, பொப்ளின், பிஜாமா துணிகளில் மண்ணெண்ணெய் வாடை வீசும். கருவாட்டில் இருந்து துர்நாற்றம் வீசும்’

சித்திரைப் புத்தாண்டு இலங்கை வாழ் மக்களில் மிகப்பெரும்பான்மையோரினால் கொண்டாடப்படும் ஒரு விழாவாகும். வசந்தகால விழா என்பதால் இயற்கையின் செழுமையும் புதுமையும் குயில்களின் கூவலும் மரங்கள் துளிர்விட்டு பூத்துக்குலுங்கும் காலம். 

தமிழர் தம் நாட்காட்டியின்படி வருடப் பிறப்பைக் கொண்டாடினாலும் சிங்கள மக்களும் தமது வருடப்பிறப்பாக இதனைக் கொண்டாடி வருகின்றனர். தத்தமது சாஸ்திர சம்பிரதாயங்களுக்கு அமைவாக வருடப்பிறப்பை அனுஷ்டித்து வருவதைக் காணமுடியும்.  

சர்வதேச வலைப்பின்னலோ (Internet) தொலைக்காட்சிகளோ கையடக்கத் தொலைபேசிகளோ இல்லாத சுமார் 30வருடங்களுக்கு முன்னைய காலத்தில் இலங்கையில் இத்தகைய விழாக்களே மக்களுக்கு மகிழ்ச்சியையும் சமூக ஊடாட்டத்தையும் நெருக்கத்தையும் ஏற்படுத்தின. உறவினர் நண்பர் வீடுகளுக்கு செல்லுதல், பண்டப் பரிமாற்றங்கள் செய்தல் ஊடாக தொடர்புகள் வலுப்பெற்றன. கைவிஷேடம் போன்ற நிகழ்வுகள் குடும்ப உறவுகளிடையே பிடிப்பினையும் நெருக்கத்தையும் ஏற்படுத்தின. 

பொருளாதார ரீதியாக மக்கள் மத்தியில் வசதிகள் போதியளவு இல்லாவிட்டாலும் தமது சக்திக்கு உட்பட்டாற்போல தம்மால் முடிந்ததைச் செய்து மக்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். இலங்கையில் இப்பண்டிகைக் காலப் பகுதியே மக்களால் பெருமளவு கொள்வனவுகள் மேற்கொள்ளப்படும் காலப்பகுதி ஆகையால் வர்த்தகர்களும் இக்காலப் பகுதியை இலக்குப் படுத்தியே தமது வர்க்க நடவடிக்கைகளை விஸ்தரிப்பர். 

மேற்குலகில் நவம்பர் தொடக்கம் ஜனவரி வரையில் பொதுவாக பண்டிகைக் காலமாக பார்க்கப்படுகிறது. நன்றி சொல்லும் நாள் (Thanks giving day) தொடங்கி கிறிஸ்துமஸ் பண்டிகை வரையும் அதன் பின் வருடப்பிறப்பு எனவும் அக்காலப் பகுதி முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படும். 

இலங்கையைப் பொறுத்தமட்டில் இக்காலப் பகுதியில் கொண்டாட்டங்கள் இடம்பெற்றாலும் சித்திரைப் புத்தாண்டு காலப்பகுதிகளை போல அது களை கட்டுவதில்லை. 

பண்டிகைகள் கொண்டாட்டங்கள் என்று வரும்போது மகிழ்ச்சியும் நேர் எண்ணங்களும், நன்மையான விடயங்களுமே முன்னிற்கும். ஆயினும் இந்த முறை இப்புத்தாண்டு சற்று இயற்கைக்கு மாறானதாகவே உள்ளதை அவதானிக்க முடிகிறது. முக்கியமாக வசந்த காலத்திற்கு உரிய அறிகுறிகளான செழுமையையும் பச்சைப்பசேலென்ற காட்சிகளையும் காணமுடியாதுள்ளது. தொடர் வரட்சி, தண்ணீர்ப் பற்றாக்குறை, போதாக் குறைக்கு மின்சாரத்தடை என வசந்தகால வருகைக்குரிய எந்த அறிகுறியும் இல்லாத ஒரு கடும் கோடை காலமாகவே இந்த வருடப்பிறப்பைக் காணவேண்டியுள்ளது. அவ்வப்போதைக்கு சில குயில்கள் மட்டும் “கொஹு கொஹு” என்று ஈனஸ்வரத்தில் கூவிவிட்டுப் போகின்றன.  

வீட்டுக்குள்ளோ அல்லது காரியாலயத்திற்குள்ளோ மின்விசிறியின் துணையின்றி இருக்க முடியவில்லை. வெளியே இறங்கினால் போரணைக்குள் புழங்குவதைப்போல உள்ளது. உச்சி மண்டையில் வெயில் பளீரென அடிக்கிறது. போதாத குறைக்கு வானிலை அதிகாரிகளோ சூரியன் உங்கள் மண்டைக்கு மேலே உச்சம் கொடுக்கிறது. வெளியே போக வேண்டாம். போதியளவு நீர் பருகுங்கள் என்று எச்சரிக்கிறார்கள். அன்றாடங் காய்ச்சிகளும், வெளியே வீதியில் இறங்கி தொழில் பார்க்க வேண்டியவர்களும் என்ன செய்வார்கள்? வீட்டுக்குள்ளே உட்கார்ந்திருந்தால் அவர்களது வண்டி ஓடுமா? 

பொதுவாகவே ஏப்ரல் மே மாதங்கள் வெயில் அதிகமான சூடு கூடிய மாதங்கள் தான். ஆனால் இது போன்ற ஒரு சூட்டை கண்டதில்லை என அனுபவசாலிகள் அங்கலாய்க்கிறார்கள்.   இலங்கையில் பொதுவாக அவதானிக்கப்படும் வெப்ப நிலையை விட கூடுதலான வெப்பநிலை பதிவு செய்யப்படுவதாக அறிய முடிகிறது. உலகம் வெப்பமயமாதலின் (Global warming) விளைவுகளிலிருந்து இலங்கையும் தப்ப முடியாது என்பதை இன்றைய வானிலை கற்பித்துச் சொல்கிறது.  

வெகுசீக்கிரம் அரபு நாடுகளைப்போல உஷ்ணம் அதிகரித்து பாலை வனமானாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இந்தக் கொளுத்தும் வெய்யிலிலும் “அவுறுது உத்ஸவ” அலப்பறைகளை காணக்கூடியதாக உள்ளது. மண்டைகாயும் வெயிலிலும் விளையாட்டுப் போட்டி, சைக்கிளோட்டப்போட்டி என கொல்கிறார்கள். இந்தக் கொடுமையில் ஸ்ரீமான் குடிமக்கள் பகலிலும் ‘போட்டு விட்டு’ அலைகிறார்கள். மலையகப் பகுதிகளிலும் வரட்சி, தண்ணீரில்லை. வயிற்றோட்டம் உள்ளிட்ட நோய்கள் பரவி வருகின்றன. வடக்கு கிழக்குப் பகுதிகளில் நீர்நிலைகள் வற்றி நிலம் பாளம் பாளமாக வெடித்துப் போயுள்ளது. நீர் பற்றாக்குறையால் கால் நடைகளும் செத்து மடிகின்றன. 

இதே சமயம் அறுவடை செய்யப்பட்ட நெல் அனுராதபுர போதி மரத்துக்கு 'பூஜா' செய்யப்படுகிறது. இம்முறை அதிகளவு நெல்விளைச்சல் கிட்டியுள்ளதாக பத்திரிகைச் செய்தி சொல்கிறது. அதிக மழை காரணமாக நெல்வயல்களில் நீர் தேங்கி பயிரழிவு ஏற்பட்டது கடந்த வருடத்தில். வெய்யில் போட்டுக் கொளுத்தினாலும் கொழுத்த நெல் அறுவடை கிடைத்துள்ளதாக அமைச்சர்கள் சொல்கிறார்கள்.  

இலங்கையின் தலா வருமானம் சுமார் 4068டொலர்கள். இன்றைய மதிப்பில் இலங்கையர் ஒருவரின் சராசரி மாதாந்த வருமானம் சுமார் 60,000ரூபாய் ஆனால் மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் மாதாந்தம் சுமார் 12,000இலங்கை ரூபாவையே வருமானமாகப் பெறுவதாக இன்னொரு சர்வதேச மதிப்பீடு சொல்கிறது. இலங்கை அரசாங்கப் புள்ளிவிபரங்கள் வறுமைக் கோட்டுக்கு கீழே வாழும் குடும்பங்களின் சதவீதம் 4.820எனக் கூறுகிறது.

அதேவேளை நாட்டின் குடித்தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் சமூர்த்தி பயனாளிகளாக உள்ளனர். அதனை மேலும் ஆறு லட்சம் பேரை உள்ளடக்கியதாக விஸ்தரிக்கவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் புள்ளி விபரங்கள், வெளிப்படுத்தும் விடயங்களில் எதுசரி எது பிழை என்று விடைகாண ஒருவர் முயற்சி செய்வாராயின் தலையைப் பிய்த்துக் கொள்ள வேண்டியிருக்கும். கவலை வேண்டாம். விடை கிடைக்காது! எனினும் இப்புள்ளி விபரங்கள் எல்லாமே சரியாக இருக்க வாய்ப்பில்லை. 

வருமானப் பங்கீடு சரியாக இல்லாததால் இந்த ஏற்றத் தாழ்வுகள் ஏற்படுவதாக சமாதானம் கூறலாம். வறுமை கணிசமான அளவு குறைந்துள்ளதாக சந்தோசப்பட்டுக் கொள்கிறோம். அப்புறம் ஏன் குடித்தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் சமுர்த்திப் பயனாளிகளாக உள்ளனர்? ஏன் இன்னும் 600,000பேரை புதிதாக பயனாளிகளாக இணைக்க வேண்டும்? இதற்கு பின்புலத்தில் அரசியல் காரணங்கள் இருக்க வாய்ப்பிருக்கிறது. 

“பாவப்பட்ட ஜென்மங்களுக்கு அரசாங்கம் உதவி செய்யப்போகிறது அதை ஏன் தடை செய்ய வேண்டும், பிழை காணவேண்டும்?” என ஒரு நியாயமான கேள்வி எழலாம். உங்கள் பொக்கற்றில் உள்ள பணத்தை அடித்துத்தான் அரசாங்கம் அந்தச் சமுர்த்தி செலவையும் மேற்கொள்ள வேண்டியிருக்கும், பரவாயில்லையா? 

பணமில்லாமல் பண்டிகை சாத்தியமா? முன்பெல்லாம் பெரும்பான்மை இன மக்கள் குருவி சேர்ப்பதைப்போல வருடம் பூராகவும் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து வைத்திருப்பார்கள். சித்திரைப் புத்தாண்டு காலப்பகுதியில் அத்தனையும் செலவழித்துவிடும் போக்கு முன்பெல்லாம் இருந்தது. குறிப்பாக ஸ்ரீமா அம்மையாரின் ஆட்சிக் காலமாகிய 1970 – 77காலப்பகுதியில் பொருட்களுக்கு பெரும் தட்டுப்பாடு இருந்தது. பண்டிகைக்காலத்தில் பொருட்களை பெற்றுக் கொள்ள 'சங்கக் கடை அல்லது கூப்பன் கடை' வாசலில் வரிசையில் நிற்க வேண்டியிருக்கும். சங்கக் கடை லொரி ஒரு மைலுக்கு அப்பால் வருகிறதென்றால் நாய் மாதிரி மோப்பம் பிடித்தே சிலர் சொல்லிவிடுவார்கள். சீத்தை, பொப்பளின் பிஜாமா போன்ற துணிகளில் இருந்து வரும் மண்ணெண்ணெய் நாற்றமும் அழுகிப்போன கருவாட்டில் இருந்து வரும் துர்நாற்றமும் அதைக்காட்டிக் கொடுத்து விடும். கூப்பன் கார்டுகளுக்கே இவையெல்லாம் பகிர்ந்தளிக்கப்படும். 

பெருநாள் சந்தை என்று ஊர்களில் சந்தை கூடும் உருளைக்கிழங்கு, செத்தல் மிளகாய், சீனி, மா, பயறு, வெங்காயம் உள்ளிட்ட பொருட்களுக்கு அதிகூடிய கேள்வி நிலவுவதால் நெருப்பு விலைக்கு அவை விற்கப்படும். அச்சாறு போடுவதற்காக வினாகிரி போத்தல்கள் ஊர்ச் சந்தைகளுக்கு வரும். பிளாஸ்டிக் போத்தல்கள் இல்லாத காலம் அது.

கண்ணாடிப் போத்தல்களில் வினாகிரி கொளுத்தும் வெய்யிலில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் போது ஒன்றிரண்டு படாரென வெடிக்கும். வெளியேறும் வினாகிரியின் நாற்றமும் வெங்காயம் உள்ளிட்ட ஏனைய பொருட்களின் நாற்றமும் புழுதியும் கலந்து சந்தையை நாறடிக்கும். ஒரு மரத்துக்கு கீழ் பெரிய ஐஸ் கட்டியை மரத்தூள் கொட்டி மூடிவைத்திருப்பார்கள்.

அதிலிருந்து சிறுதுண்டுகளை வெட்டி கலர்களோடு கலந்து 'சர்பத்' விற்றுக் கொண்டிருப்பார் ஒருவர். சுத்தமானதா சுகாதாரமானதா என்பது பற்றியெல்லாம் அக்காலத்தில் யாரும் கவலைப்படுவதில்லை. கொளுத்தும் வெய்யிலுக்கு ஜில்லென்று சர்பத் இறங்குவதும் அதில் போடப்பட்டுள்ள அன்னாசிப் பழத்துண்டுகளும் கசகசாவும் கடிபடுவதும் மட்டுமே நினைவில் நிற்கும். வியாபாரிகளுக்கு கொழுத்த இலாபம்தான் அப்போதும் கூட சாராயக் கடைவாசலில் கூட்டத்திற்கு பஞ்சமில்லை. சரக்குத்தான் இருக்காது. அரசாங்க கட்டுப்பாடுகள் காரணமாக கேள்விக்கு ஏற்ற நிரம்பல் இல்லை. எனவே கசிப்புக்கு ஏக கிராக்கி இருக்கும். அவ்வப்போது ராலஹாமிகள் சைக்கிள்களில் வருவதைக் கண்டால் சாரத்தை தூக்கிக் கொண்டு தலைதெறிக்க ஓடும் ‘குடி’ மக்களையும் காணலாம். அந்தத் கட்டுப்பாடுகள் இப்போது இல்லை. 

பணம் இருந்தால் நாளும் பெருநாள் தான், பண்டிகைதான். போதாத குறைக்கு மத்தியதர வகுப்பு மக்களுக்கு ‘கிரடிட் காட்’ என்ற ஒரு சாபம் வந்திறங்கியுள்ளது. கடனுக்கு வாங்குதல் இப்போதெல்லாம் பெஷனாகி விட்டது. பத்திரிகையை பிரித்தால் நெடுவாழ்வுக்கு நுகர்வுப் பொருள்கள் கழிவுவிலைகளிலும், மாதாந்த கொடுப்பனவுக்கும் வழங்கப்படுவதாக கவர்ச்சிகரமான விளம்பரங்கள்! தொலைக்காட்சியை போட்டாலும் அதே தொல்லைகள்! ஆகவே பெருநாள் காலப்பகுதியில் பெரும் எண்ணிக்கையிலானோர் கடனாளிகளாக மாறுகின்றனர்.  

இப்போது, ஏப்ரல் மாதம் முதலாம் திகதி தொடக்கம் போக்குவரத்து செய்வது கடினமாகிவிட்டது. பாதைகளில் வாகன விரிசல் அதிகம். பெருநாள் காலத்தில் கொழும்பு பெரும்பாலும் வெறிச்சோடி விடும். சுமார் இரண்டு வாரங்களுக்கு எந்தக் காரியமும் நடக்காது அது அரச நிறுவனமாக இருந்தாலும் சரி தனியார் நிறுவனமாக இருந்தாலும் சரி. 'அவுறுதுவுக்கு'  லீவில் போய்விட்டார்கள் என்பார்கள் அதன் பின்னர் ‘வெசாக்” வரும் 'பொசன்' வரும். லீவு எடுப்பதில் குறைவு இருக்காது.  இன்றைய சூழ்நிலையில் இலங்கையின் உற்பத்தித்திறனை அதிகரிக்க வேண்டிய கட்டாயதேவை ஏற்பட்டுள்ளது. எனவே மனித உழைப்பு வீண்விரயமாக்குவது ஏற்புடையதல்ல. அத்தோடு கேளிக்கைகள் வினோதங்கள் போன்றவற்றிற்காக அதிக பணம் வீண்விரயம் செய்யப்படுகிறது.

போக்குவரத்து நெரிசல்கள் விபத்துக்கள் என்பனவும் வெடி கொளுத்துவதால் ஏற்படும் விரயங்களும் விபத்துகளும் அதிகம்.  அளவோடு செலவழித்து வருடப்பிறப்பைக் கொண்டாட வேண்டுமே தவிர வீண்விரயங்களோடு கடன் பட்டு அதனை கொண்டாடவேண்டிய தேவை இல்லை. 

மறுபுறம் கேளிக்கை வினோதங்களுக்கு செலவிடும் நேரத்தையும் பணத்தையும் சமூகப் பிரக்ஞயோடு வருடப்பிறப்பை கொண்டாடும் வகையில் தமது செயல்களை வடிவமைத்துக் கொள்வது அவசியம்.  போதையிலிருந்து விடுபட முயற்சிக்கும் ஒரு நாடு என்றவகையில் மதுபானப் பாவனையையும் இயன்ற வகையில் குறைத்து வருடப்பிறப்பின் உண்மையான அர்த்ததுடன் சமய, கலை, கலாசாரங்களுக்கு முன்னுரிமை கொடுத்து செயற்படவேண்டியது மிகவும் அவசியம். 

வடக்கு, கிழக்கு வாழ் சகோதரர்களும் மலையக சகோதரர்களும் இது விடயத்தில் சற்றேனும் விழிப்புணர்வை பெறுவார்களாயின் புத்தாண்டுக்கு ஓர் உண்மையான அர்த்தம் கிடைக்கும்.

பழையன கழிதலும் புதியன புகுதலும் புத்தாண்டு சங்கற்பமாக அமையட்டும்.

கலாநிதி 

எம். கணேசமூர்த்தி  

பொருளியல்துறை,  

கொழும்புப் பல்கலைக்கழகம்.   

Comments