புது வீடு | தினகரன் வாரமஞ்சரி

புது வீடு

சித்திரை கோடையை விலக்கி வைக்கும் விதமாக மெல்ல, மெல்ல மழை தூறிக் கொண்டிருந்தது வைகறைப் பொழுதில்.  

மனிதர்கள், விலங்குகள், பட்சிகள் என்பன உட்பட இப்புவிக்கிரகத்தை வீடாகக் கொண்ட பலவிதமான ஜீவன்களும் உறக்கமெனும் ஓய்வில் உறைந்துகிடக்கும் கடைசிச் சாமம்.  

பூப்பூக்கும் ஓசை கூடக் காதுகளில் கேட்கும் அளவிற்கு எவ்விதமான கவனக் கலைப்பானுமில்லாததோர் அமைதிப் பொழுது. நிசப்த வேளை.  

அப்பொழுது ஸ்ரீ முருகனாலயக் கண்டாமணி யோசனை கணீர்.... கணீர்... என்றொலிப்பது அதிகாலை நான்கு மணியென்பதை அவ்வூர் வாசிகளுக்குமட்டுமல்லாது, அயற்கிராம மக்களுக்கும் துலாம்பரமாகப் பறைசாற்றிக் கொண்டிருக்கின்றது.மொத்த ஊரும் சித்திரையைக் கொண்டாடி வரவேற்கத் தயாராகிறது. ஆனால், வேலீஸ்வரனுக்குக் கடந்த வாரம் அதிகாலையில் நடந்த சம்பவம் மனத்தை இன்னும் வருத்திக் ெகாண்டிருக்கிறது. எழுந்துவிட வேண்டும் என்றவருக்குத் தாம் முதன் முதலில் கடமையேற்ற தினத்தன்று நடந்த விடயங்கள் நிழற்படமாகத் தெரிகின்றன.

அன்றும் இதே அதிகாலைப் பொழுதில் அருள்மிகு ஆலய மணி யோசையின் அதிர்வு இதமானதென்றற் காற்றில் பறந்து வந்து, தன் செவிப்பறைகளில் சங்கமமாவதை உணர்ந்த வேலீஸ்வரன் ஓம் முருகா...ஓம் முருகா... ஓம் முருகா... என்ற முருக நாமத்தைத் தான் உதடுகளால் அட்சர சுத்தமாக உச்சரித்தவாறு படுக்கையை விட்டு எழும்புகிறார். அவ்வாறு எழும்பியவர் எறும்பின் சுறுசுறுப்பைத் தனக்குள் உருவேற்றியவராய் காலைக் கடன்களை நிறைவேற்றுகிறார். பின் யோகாசனத்தின் பிரதானமான பிராணாயாமப் பயிற்சியை வழமைபோல் ஆரம்பிக்கின்றார். அவர் அப்பயிற்சியை இனிதே நிறைவேற்ற முடிப்பதற்கும் அவரது வயல் வேலையாள் முல்லைக்காரன் வீட்டின் முன்னறையில் பொருத்தப்பட்டிருக்கும் மின்சார அழைப்பு மணியை அழுத்துவதற்கும் சொல்லி வைத்தாற் போல் நேரம் சரியாயிருந்தது.  

அழைப்பு மணியோசை கேட்டதும் வேலீஸ்வரன் வீட்டிற்குள்ளிருந்து வந்து வெளிவறாந்தாவில் கால் வைக்கிறார்.  

அந்நேரம் ஒருவர் ‘குட்மோனிங் சேர்’ என்று கூறியபடி தன் எஜமானனுக்குச் சிறு பணியாள் ஒருவர் கும்பிடுபோட்டு வணக்கம் சொல்வது போல் மரியாதை செலுத்துகிறார்.  

வந்தவர் பேசத் தொடங்குகிறார். “நான் தான் மட்டக்களப்புப் பிரதேச செயலக அலுவலக உதவியாளர் உலகநாதன். முதலில் மட்டுநகர் மண்ணின் மைந்தனாகிய நீங்கள் பிறந்த பிரதேசத்திற்குப் பாசத்தோடு பணியாற்ற வந்திருப்பதற்கு மிக்க மகிழ்ச்சி. எனது சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்ள ஆசைப்படுகிறேன் ஐயா...! செயலக வெளிக்கேற் திறப்பைத் தந்தால் நான் திறந்துவிடுவேன் ஐயா” எனக் கூறியபடி குனிந்து நிற்கிறான்.  

ஒரு புறம் தனது தாயதவயலிலே பாரம்பரியமாய் வேலைசெய்யும் முல்லைக்காரன் நிற்கிறான். மறு புறம் தான் புதிதாய்க் கடமையேற்கவிருக்கும் செயலகச் சிற்றூழியன் நிற்கிறான்.  

ஆதலினாலே, யாரோடு முதலில் பேசத் தொடங்குவது என்ற தடுமாற்றத்திலே மறுகணத்திலே தெளிவுகொண்டு தீர்மானமெடுத்தவராய்.  

“ஹாய்...! ஆகா...! முதலில் உங்களது வாழ்த்துக்கு நன்றி உலகநாதன். எப்படியிருக்கிறீங்க. செயலகப்பணிகளெல்லாம் நல்லா நடக்குதா”  

“சிவனே சிவ... சிவ வெண்டு நான் சுகமாயிருக்கிறேன் சேர்...செயலகக் கடமைகளும் நாளொரு வண்ணமும், பொழுதொரு மேனியுமாக நல்லாவே நடக்குது சேர். நீங்க சுகமாயிருக்கிறியளா சேர்.”  

“ஓம்... ஓம்... நான் நல்ல சுகமாக இருக்கிறன். ஒரு கொஞ்சம் நில் உலகநாதன் நான் திறப்பை எடுத்துக்கொண்டு வாறன்” எனக் கூறிய வேலீஸ்வரன் திரும்பியவாறு வீட்டுக்குள்ளே செல்கிறார்.  

மறு நிமிடம் செயலகக் கேற் திறப்பைக் கையோடு கொண்டு வந்த அவர் அத் திறப்புக் கோவையை அவனிடம் கையளித்து விட்டு “எல்லாத்திறப்புகளும் இக் கோவையிலேயே இருக்கு... திறப்புக் கோவை கவனம்... நீ போய் திற, நான் இன்னும் ஓர் அரை மணித்தியாலயத்தில் வாறன்” எனக் கூறினார்.  

வேலீஸ்வரன் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான தொழினுட்ப சிறப்புப்பட்டதாரி. தன் பட்டப்படிப்பை வெற்றிகரமாக நிறைவேற்றிவிட்டு ஆசிரியராகக் கடமையாற்றத் தொடங்கினார். அக்காலத்திலேயே இலங்கை நிருவாக சேவை உத்தியோகத்தர்களைத் தெரிவுசெய்வதற்கான போட்டிப்பரீட்சைக்குத் தோற்றி அதிலே தன் சுய நுண் மதிப் பயிற்சியினால் முதல் ஆளாகத் தெரிவு தெரிவு செய்யப்பட்டு நியமிக்கப்பட்டிருந்தார். அவர் முதன் முதலில் வெளிமாவட்டமொன்றில் உதவிப் பிரதேசச் செயலாளராக நியமனம் பெற்றுச் சுமார் பன்னிரண்டு வருடங்க வருடங்கள் கடமையாற்றி மக்களின் நன்மதிப்பைப் பெற்றிருந்தார். தற்போது தனது சொந்த மாவட்டமான மட்டக்களப்புப் பிரதேசத்திற்குப் பிரதேசச் செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.  

அலுவலக உதவியாளிடம் செயலகக் கேற்றைத் திறப்பதற்கான திறப்புக் கோர்வையைக் கொடுத்தனுப்பிய அவர், அவசர அவசரமாக வெளிக்கிட்டுவிட்டு அரச வரிச்சலுகையிலே கொள்வனவு செய்யப்பட்ட தனது புத்தம் புதிய மோட்டார் வண்டியிலே செயலகம் விரைகிறார்.  

“உன்னைத் திருத்து உலகம் திருந்தும்” என்ற பழமொழிக்கேற்ப, செயலக நேரத்துக்குச்சரியாக அரைமணித்தியாலயம் முன்னதாகவே செயலக வாயிலை வந்தடைந்துவிட்டார் அவர்.  

காரிலிருந்த படியே செயலகக் கட்டடத்துக்கு முன்னாளுள்ள, குடைவிரித்தாற்போல் அழகாக, எழிலாக, ஒயிலாக வானோங்கி நிற்கும் வாகை மர மலர்கள் நிலத்தில் விழுந்து பரவிப் பரந்து நிலம் தெரியாதவாறு பொற்கம்பளம் விரித்தாற்போல் கிடப்பதைக் கண்டு களித்தவாறு இறங்கி நடந்து வருகிறார்.  

அவரை வரவேற்கச் செயலக முன்றலிலே மங்கல ஆராத்தியுடன் வரிசையில் எதிர்பார்த்துக் காத்திருந்த உத்தியோகத்தர்கள் அன்னாருக்கு ஆராத்தி எடுத்து, மலர் மாலையிட்டு வரவேற்கின்றனர்.  

உத்தியோகத்தர்களுடன் கைகுலுக்கியவாறு அவர்களின் தமிழ்ப் பண்பாட்டுடனான வரவேற்பை அடக்கமாக ஏற்றுக்கொள்கின்றார்.  

மட்டற்ற மகிழ்ச்சியோடு வரவேற்ற உத்தியோகத்தர்களோடு செயலகத்திற்குள்ளே சென்றவர், தனக்குரிய அறையிலே அமர்ந்து தனது வரவைப் பதிவு செய்கிறார்.  

பின்னர் அனைத்து அலுவலர்களையும் அழைத்து ஒன்று கூட்டி உடனடியாகவே தனது முதலாவது பணியாளர் மாநாட்டை நடத்துகிறார்.  

அப்பணியாளர் மாநாட்டிற்குத் தலைமைதாங்கும் அவர், ஒவ்வொரு உத்தியோகத்தரையும் அவரவரைப்பற்றி ஒரு சுய அறிமுகத்தைச் செய்யுமாறு, கேட்டுக் கொள்கிறார்.  

பிரதேச செயலாளரின் வேண்டுகோளுக்கிணங்க, அக் கட்டளையை ஏற்றுக்கொண்ட உத்தியோகத்தர்கள், ஒவ்வொருவராக எழுந்து நின்று தம்மைப் பற்றிய சுய அறிமுகத்தைச் செய்கின்றனர். எனினும், ஓர் உத்தியோகத்தர் மாத்திரம் தன்னை அறிமுகம் செய்யாதது மட்டுமல்ல தன்னிருக்கையில் இருந்தபடியே மேசையில் தலைசாய்த்துக் குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டிருக்கிறார்.  

பிரதேசச் செயலாளர் உணர்வற்றுத் தூங்கிக் கொண்டிருப்பவரைக் கண்ணுற்றதும், அவ்வாறு நித்திரை செய்பவர் யார்...? என விசாரிக்கிறார்.  

 அவர் தான் சேர்..! உறங்கும் உத்தியோகத்தர் எனப் பெயர் பெற்றிருக்கும் முகாமைத்துவ உதவியாளர் சாணக்கியன்” எனக் கூட்டத்தினரிடையே ஒரு குரல் துலாம்பரமாக ஒலிக்கிறது.  

“சாணக்கியனுக்கு உடம்புக்கு ஏதும் முடியலையோ...? அவரைத்தட்டி எழுப்புங்க பாப்பம்” எனக் கட்டளையிடுகிறார்.  

அவரது வினாவுக்கு விடையாக சாணக்கியனுக்கு அப்படியேதும் வாத, வருத்தம், பீடை பிணி எதுவும் இல்லை சேர். இந்தாள் இப்படித்தான் காரியாலயத்துக்கு வருகை தந்து, தினவரவுப் பதிவுப் புத்தகத்தில் கையெழுத்து வைத்துவிட்டுத் தூங்கி வழிவதுதான் வேலை...’ என்றவாறு இன்னொரு குரல் கூட்டத்தினரிடையேயிருந்து அமைதியாக ஒலிக்கிறது.  

இக்குரல் எழுந்தொலித்து ஓய்வதற்குள் கூட்டத்திலிருந்து அனைத்து உத்தியோகத்தர்களும் பப்படம் பொரிவது போல் கொல்லென்று சிரிக்கின்றனர். இச் சிரிப்பொலி தன் காதில் விழுந்ததோ அல்லது ஒரு கண்ணுக்குத்தூங்கி எழுந்து விட்டாரோ தெரியவில்லை. அந்த உறங்கும் உத்தியோகத்தர் விழிகள் பிதுங்கப்பிதுங்கச் சோகமே உருவானவராய் ஒருவித இனம்புரியாத கூச்ச உணர்வோடு எழுந்துநின்று சிரம் தாழ்த்திக் கரம் கூப்பி மன்றாடியபடியே நிற்கிறார்.  

சலவை செய்து கனநாளாய்ப் போன பழுப்பேறிய கந்தலாகிய சேட்டும், இரண்டு மூன்று இடங்களில் கிழிந்து ஒட்டுபோட்டுத்தைக்கப்பட்ட ஜீன்ஸ் காற்சட்டையும், கலைந்த கேசமும், பலநாளாய்ச் சவரம் செய்யப்படாத முகத்தாடியும் அவரோர் அரச உத்தியோகத்தராய் இருந்த போதிலும் கூட அவரைப் பரம ஏழையென உள்ளங்களை நெல்லிக்காயென இனங்காட்டிற்று.  

“ஹலோ.... சாணக்கியன்... காரியாலய நேரத்தில் ஏன் தூங்கி வழிகிறீர்...?” எனக் கேட்டார் பிரதேசச் செயலாளர்.  

“மௌனம்... மௌனம்... தொடர்ந்து மௌனம் சாதித்தான் சாணக்கியன். அவனுக்கு ஏதோ பேசவேண்டும் போல் தோன்றியதெனினும், அவன் கூற விழைந்தது ஊமை கண்ட கனவாய் அவனுக்குள்ளேயே சங்கமமாகிற்று.  

சாணக்கியன்... உன்னைத்தான் கேட்கிறேன்... இவ்வளவு நேரமும் உன்னோடுதான் கதைத்துக் கொண்டிருக்கிறேன்... நான் கதைப்பதெதுவும் உனக்குக் கேட்கவில்லையா...? எதையும் பேசினால் தானே உன் நிலைமை எனக்குப் புரியும்.. என மீண்டும் பிரதேசசெயலாளர் பேச்சுகொடுத்தார்.  

அதற்கும் கூட அவனிடமிருந்து எதிராகவோ அல்லது சாதகமாகவோ எவ்வித பிரதிபலிப்பும் வெளிப்படவில்லை.  

பிரதேச செயலாளர் பேசுவதெல்லாம் சாணக்கியனின் செவிகளில் விழாது “செவிடன் காதில் ஊதிய சங்காய் காற்றோடு காற்றாய்ப் போவதைப் புரிந்து கொண்ட அவருக்குக் கோபம் பொத்துக் கொண்டு வருவதை அவரது முகம் பிரதிபலித்தது. எனினும், அவர் சந்தர்ப்ப முகாமைத்துவத்தில் யப்பானிலே விசேட பயிற்சி பெற்றிருந்ததால், அக்கோபம் அவருக்குள்ளேயே அடங்கிப்போனது.  

அத்துடன் அவர் அவ்வேளையிலே தனக்கேற்பட்ட இக்கட்டான எதிர்பாராத, விரும்பத்தகாத சூழ்நிலையை நாசூக்காகச் சுதாகரித்துக்கொண்டு “இத்துடன் இக் கூட்டம் நிறைவு பெறுகின்றது” எனக் கூறிக் கூட்டத்தை முடித்துவைத்தார்.  

அனைத்து உத்தியோகத்தர்களும் எழுந்து சென்று அவரவர் அலுவல்களைக் கவனிக்கின்றனர். பிரதேசச் செயலாளரும் எழுந்து போய்த் தன்னறையில் அவரது அலுவல்களைக் கவனிக்கிறார்.  

சில நிமிடங்கள் நகர்கின்றன... பிரதேசச் செயலாளர் தனது சிற்றூழியரை அழைத்து, சாணக்கியனைக் கையோடு கூட்டிக்கொண்டுவருமாறு கட்டளையிடுகிறார்.  

அக்கட்டளையைச் சிரமேற்கொண்ட சிற்றூழியர்  சாணக்கியனை தன்னுடன் அழைத்துக் கொண்டுவருகிறார்.  

பிரதேசச் செயலாளரின் முன்வந்து நின்ற சாணக்கியன் கண்களிலிருந்து கண்ணீர் தாரை தாரையாக வழிய அழுது புலம்புகிறான்.  

அவன் எதனையோ பறிகொடுத்தவனைப்போல் அழுது புலம்புவதைக்கண்ட பிரதேசச்செயலாளர்...” என்ன இது சாணக்கியன்... குழந்தையைப்போல அழுகிறாய்... சரி... சரி... அழுவதை நிறுத்து... என்ன பிரச்சினை உனக்கு...? அதனை என்னிடம் சொல்... அப்பதான் அதற்கு என்ன செய்யலாம் என்று யோசிக்கலாம்...” எனப்பிரதேசச் செயலாளர் ஓர் உத்தரவாதம் வழங்கியும் கூட அவன் அழுவதை நிறுத்தியதாகத் தெரியவில்லை.  

தொடர்ந்து அவன் அழுது அழுது கண்ணீர் வடிக்கும் சோகமேயுருவான சத்தமேயன்றி அவ்வறைக்குள் மயான அமைதி நிலவுகிறது.  

“ஐயா... ஐயா... என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்...” எனக் கூறுவதைக் கேட்ட பிரதேசச் செயலாளர்.. சற்று வெளியிலே போய் நிற்குமாறு சிற்றூழியருக்குக் கட்டளையிடுகிறார்.  

அப்போது அவன் “ஐயா நான் இரவு நித்திரை செய்யவில்லை ஐயா...” என்கிறான்.  

“ஏன் சாணக்கியன் நித்திரை செய்யவில்லை”  

“நான் இராத்திரி பூராவும் இறால் பிடித்ததால் கந்தோரிலே என்னை நித்திரை அமட்டியது. எங்களது புளியந்தீவு ஆற்றிலே இறால் கரை விழுந்தது. அவ்வாறு இறால் கரைவிழும் போதெல்லாம் நான் இறால் பிடிப்பது வழமை ஐயா...”  

“ஏன’ உனக்குச் சம்பளம் போதாதா...?”  

“ஐயா... நான் ஓர் அபாக்கியசாலி அது மட்டுமல்ல இன்று நான் ஓர் அநாதையாக்கப் பட்டுள்ளேன். அத்துடன் எனக்கு ஒரு தங்கையும் இருக்கிறாள். எங்களைப் பெற்று வளர்த்து ஆளாக்கிய எங்களது பாசத்தாயும், அன்பு அப்பாவும் கடந்த காலத்தில் நிகழ்ந்த பொல்லாத போரின் போது காணாமல் போய்விட்டனர். இற்றைவரை எவரிடம் செல்லவேண்டுமோ. எங்கெங்கெல்லாம் போகவேண்டுமோ அவ்வவரிடமெல்லாம் சென்றும்.... அங்கங்கெல்லாம் போயும் மனுக்கொடுத்தோம்.... மன்றாடினோம் பலனொன்றும் கிடைக்கவில்லை. அம்முயற்சியெல்லாம் ஆற்றிற் கரைத்த புளியாகவே போய்விட்டன. ஆகையால், அம்முயற்சியைக் கைவிட்டு என்னுயிரிலும் மேலான என் தங்கையை வாழவைக்க வேண்டிய முயற்சியில் ஈடுபட்டுள்ளேன். ஐயா...” என்ற போது பிரதேசச் செயலாளரின் தொண்டை கட்டிவிட்டது. தொடர்ந்து எதுவும் பேச அவரால் முடியவில்லை. என்றாலும் ஒருவாறு சமாளித்துக் கொண்ட அவர்” உன் இலட்சியக் கனவைப் பாராட்டுகிறேன்... நீ அழுவதை விட்டு முதலிலேயே இவ்வளவையும் கூறியிருக்கலாமே...” என்றார்.  

“தங்கச்சி ஓ. எல்லுக்குமேல் படிக்கவில்லை. அவளுக்குக் கலியாணம் பேசிச் சென்ற போது மாப்பிள்ளை விட்டார், புது வீடு சீதனமாய்க் கேட்கிறார்கள். எங்கள் தாய் வீடு போரிலே இரு பக்கமும் வீசிய செல்களினால் உடைந்து சின்னாபின்னமாகிவிட்டது. நான் அரச உத்தியோகம் பார்ப்பதால், மீள்குடியேற்ற வீட்டுத்திட்டத்திலே வழங்கப்படுகின்ற வீடும் எங்களுக்கு இல்லை என்கிறார்கள். அதனால் ஐயா... நான் எடுக்கிற சம்பளத்தில புதுவீடு கட்ட முடியாது. என் தங்கையை வாழவைப்பதற்காகவே நான் கொஞ்சம், கொஞ்சம் பணம் சேர்த்துப் புது வீடு கட்டு வதற்காகவே இந்த இறால் பிடிக்கும் பிழைப்பை மேற்கொண்டேன்.  

இன்றைய நாட்களில் வீடும், கலியாணமும் என்பது சாமான்ய முகாமைத்துவ உதவியாளர் உத்தியோகம் பார்ப்பவர்களால் நினைத்துக் கூடப் பார்க்க முடியாதளவு பாரிய விடயங்களாகும். வீட்டைக்கட்டிப்பார், கலியாணத்தை முடித்துப் பார் என்ற மட்டக்களப்புப் பழமொழிகள் அவற்றின் கனதியைத் துலாம்பரமாக்குகின்றன. எனத்தனக்குள் தான் எண்ணியவாறு “முதலில் அழுகையை நிறுத்து... உனது தங்கைக்காக வீடுகட்டும் உன்னுடைய இலட்சியக்கனவை நான் நிறை வேற்றித்தருகிறேன். ஓரிரு நாட்கள் பொறுத்திரு...” எனக் கூறி அவனை அனுப்பிவைக்கிறார்.  

ஒரு நாள்,  

இரு நாள்  

மூன்று நாள்  

நான்கு நாள் என்றவாறு பிரதேச செயலாளர், சாணக்கியனுக்குப் புதுவீடு கட்டித்தருவதாக வாக்குறுதி அளித்து அன்று ஐந்தாம் நாள் ஆகிவிட்டது.சித்திரையும் பிறந்துவிட்டது. கொஞ்சம் முயற்சி எடுத்திருந்தால், இந்தச் சித்திரைப் பரிசாக அவனுக்கு வாக்குறுதியை நிறைவேற்றிக்ெகாடுத்திருக்கலாம். அவருக்குச் சித்திரை சித்திரவதை செய்தது.

  இரண்டொரு தினங்களுக்குப் பின்னர் ஒரு நாள் பிற்பகல், இரண்டரை மணியளவில் செயகத்துக்கு வருகை தந்த பிரதேச செயலாளர் சாணக்கியனைத் தன்னுடைய அறைக்கு அழைத்து அன்பாகப்பேசுகிறார்.  

“இன்று காலையில் கச்சேரியில் மாவட்ட ஒருங்கிணைப்புக் கூட்டம் நடைபெற்றது. அதிலே உன்னுடைய தங்கையின் திருமணத்திற்காக அரச உத்தியோகத்தரான நீ “புதுவீடு” அமைப்பதற்காகப்படும் பாட்டை அமைச்சரிடம் விளக்கினேன். அவர் உன்னை மெச்சியதோடு, மீள் குடியேற்ற வீட்டுத்திட்டத்திலே உன் தங்கையின் பெயரிலே ஒரு “புதுவீடு” அமைப்பதற்கு அனுமதி வழங்கினார். கூட்டத்தினர் அனைவரும் அதனை ஏகமனதாக ஏற்றுக்கொண்டனர்” என்றார்.

கலாபூஷணம்

வேலுப்பிள்ளை புவனேஷ்வரன் 

Comments