இயற்கை வள பாதுகாப்புக்காக நாம் இணையும் தருணமிது! | தினகரன் வாரமஞ்சரி

இயற்கை வள பாதுகாப்புக்காக நாம் இணையும் தருணமிது!

மனிதனுக்கும் நிலத்துக்குமான இடைத் தொடர்புகளால் வளங்கள் மீது அதிக அழுத்தம் பிரயோகிக்கப்பட்டு வருகின்றமை தவிர்க்க முடியாத நிலைமையாகி விட்டது. அதிலும் நீரானது மிகவும் மோசமாக முகாமை செய்யப்படுகின்றமை அறியப்பட்டுள்ளது. ஒரு காலத்தில் தண்ணீர் பஞ்சம் என்ற வார்த்தையைக் கேள்விப்பட்டேயிருக்காத பகுதிகளில் வசிக்கும் மக்களெல்லாம் சில தசாப்தங்களின் பின்பு நீரைத் தேடி இடம் பெயரும் நிலைக்கே தள்ளப்படுகின்றமையையும் அவதானிக்க முடிகிறது.   
 
நீரைப் பொறுத்தவரையிலே தற்போதைய நுகர்வுப் பாங்கு தொடருமேயானால் உலக சனத்தொகையின் இரண்டில் மூன்று பங்கினர் நீர் பற்றாக்குறை மிகுந்த நாடுகளில் வசிக்கத் தலைப்படுவர் என எதிர்வு கூறப்படுகிறது. உலகின் பல பகுதிகளில் உற்பத்தியை மட்டுப்படுத்தும் காரணியாக நிலத்தை விட நீரே காணப்படுகிறது.   
 
நீர்ப் பாதுகாப்புள்ள நாட்டைக் கட்டியெழுப்புவதென்பதொன்றும் இலகுவான காரியமல்ல. பாதுகாப்பான குடி நீர் தொட்டு சுத்தம், சுகாதாரம், நிலைத்து நிற்கும் முகாமைத்துவம், நீர் வளங்களை அபிவிருத்தி செய்தல், நீர் வாழ் உயிரியல் வளங்களைப் பாதுகாத்தல், கழிவு நீர் முகாமைத்துவம், நீரின் தரம் என அனைத்தும் நீர்ப்பாதுகாப்பு என்ற ஒற்றைப் பதத்துக்குள் அடங்கி விடுகின்றன.   
 
விவசாயம், கைத்தொழில், நகரங்கள் என போட்டிமிக்க அனைத்து துறைகளுக்குமிடையில் நீர்ப் பகிர்வு சிறப்பாக இருக்க வேண்டுமென்றால் வெளிப்படையான விளைதிறன் மிக்க ஆட்சிப் பொறிமுறைகளின் வகிபாகம் அத்தியாவசியமானதாகும். துறைகளுக்கிடையே சகல மட்டங்களிலும் நீருக்கான ஒத்துழைப்பு காணப்பட வேண்டும். ஆர்வமுடைய அனைவரையும் உள்ளடக்கியதாகவே நாடொன்றின் நிலைத்து நிற்கும் நீர் முகாமைத்துவ செயற்றிட்டம் அமைய வேண்டும்.   
 
நீரானது எங்ஙனம் முகாமை செய்யப்பட வேண்டும் என்பதில் கொள்கைகளும் சட்டங்களும் நிதி அளவீடுகளும் பெருந்தாக்கத்தைச் செலுத்துகின்றன. சக்தி வளங்களின் விலை, மானியங்கள், வர்த்தக உடன்படிக்கைகள், சூழல் தொகுதிகளைப் பேணல் ஆகியவற்றையும் உள்ளடக்கியதாகவே நீர் முகாமைத்துவம் காணப்படுகிறது.   
சுத்தமான நீரை விநியோகம் செய்வதில் காடுகளின் பங்கு அளப்பரியது. தரமற்ற நீர் கடலை அடையும் போது வாழ் உயிரினங்களின் புகலிடமாகவும் மீன்களின் இனப்பெருக்க வாழிடமாகவும் காணப்படும் சேற்று நிலத் தொகுதிகளின் தரம் மிகவும் பாதிப்படையும். விவசாயத்துக்கான நீரை குறி வைத்து மேற்கொள்ளப்படும் முதலீடுகளால் நீரின் நிலைத்திருக்கும் தன்மையில் பாரிய பாதிப்பை ஏற்படுத்தும்.   
 
சிறு விவசாயிகள், பொதுவாக சிறிய ரக நீர்ப்பாசனத் திட்டங்கள் மீதான முதலீட்டையே நாடத் தலைப்படுவர். அதற்கு காணிக்குரிய நியாயமான அணுகல் காணப்பட வேண்டும், நீருக்கான அணுகல் உறுதி செய்யப்பட வேண்டும். உள்ளீடுகளுக்கும் சந்தைகளுக்குமான அணுகல் மேம்படுத்தப்பட வேண்டும். பாதுகாப்பான நீர் உரிமைகளும் உறுதி செய்யப்பட்ட விநியோகமும் மீனவர்களுக்கு காணப்பட வேண்டும்.   
 
விவசாயத்துறையில் நீரின் வினைத்திறன் அதிகரிக்கப்பட வேண்டியது மிக அவசியமானது. அதற்கு சகல துறைகளிலும் இயலளவு விருத்தி காணப்பட வேண்டும். மேம்படுத்தப்பட்ட அறிவு, ஆய்வு, புத்தாக்கத்துடன் நிலைத்து நிற்கக் கூடிய வகையிலே நீரின் பாவனை அமைய வேண்டும். அல்லாவிடில் எதிர்காலத்தின் எரிபொருள், உணவுத் தேவையைப் பூர்த்தி செய்ய இயலாது.   
 
சூழல் தொகுதி ஆரோக்கியமாக இருக்க வேண்டுமாயின் அதன் பிரிக்க முடியாத அங்கமாகிய உயிர்ப்பல்வகைமை காணப்பட வேண்டும். இது உணவு உற்பத்தியை அதிகரிப்பதற்கும் வாழ்வாதாரங்களை நிலைத்து நிற்கச் செய்வதற்கும் மிக அத்தியாவசியமானது. 
 
வீடுகளிலே வளர்க்கப்படும் தாவர, விலங்கினங்களைப் பயன்படுத்துவதாலும் அவற்றைப் பேணுவதாலும் கால நிலை மாற்றத்தை எதிர் கொள்ளும் வல்லமையை அதிகரிக்க முடியும். அது மட்டுமன்றி புதிது புதிதாக உருவாகும் நோய்கள், இடம் மாறும் சந்தைத் தேவைகள், அத்தியாவசிய வளங்கள் மீதான அழுத்தங்கள் ஆகியவற்றை எதிர்கொள்ளவும் உதவும். சூழல் தொகுதியின் சேவைகள் கிடைக்கப்பெறும் போது விவசாயத்தின் வினைத்திறன் அதிகரிப்பதோடல்லாமல் மேலதிக உள்ளீடுகளுக்கான தேவையும் குறைவடைகிறது.   
 
தற்போது சூழலுக்கும் மனிதனுக்குமான இடைத் தொடர்புகள் அபரிமிதமாக அதிகரித்து விட, உலகின் செழிப்பான விவசாய உயிர்ப்பல்வகைமைப் பாரம்பரியம் அச்சுறுத்தலுக்கு ஆளாகியிருக்கிறது. நிலப்பயன்பாட்டு மாற்றம், நிலம் தரமிழத்தல், சூழல் மாசு, ஆக்கிரமிக்கும் இயல்புடைய தாவர இனங்களீன் பரம்பல், தரமிழக்கும் வாழிடங்கள், கால நிலை மாற்றம், கடல் நீர் அமில மயப்படுதல் போன்ற காரணங்களால் இனங்களின் எண்ணிக்கை குறைவடியந்து வருகின்றமை கண்டறியப்பட்டிருக்கிறது. அது மட்டுமன்றி அவற்றின் மரபணுக்களின் பல்வகைமையும் அழிவடைந்து சூழல் தொகுதிகள் மீது அதிகளவிலான அழுத்தங்கள் பிரயோகிக்கப்படக் காரணமாகி விடுகின்றன. அடிப்படையில் உயிர்ப்பல்வகைமை என்பது இன ங்களின் பல்வகைமை, அவற்றின் மரபணுக்களின் பல்வகைமை மற்றும் சூழல் தொகுதிகளின் பல்வகைமை ஆகியவற்றைக் குறிப்பதாகும்.   
 
அதேவேளை உணவு உற்பத்தி முறைமைகளும் தமது பல்வகைமையை இழந்து வருகின்றன. உலகில் 95 சதவீதமான மக்களின் உணவு-சக்தித் தேவையைப் பூர்த்தி செய்வன 30 பயிர்கள் மாத்திரமே. அவற்றுள்ளும் நெல், சோளம், கோதுமை, வரகு, மக்காச் சோளம் ஆகிய 5 பயிர்களும் 60 சதவீத இடத்தைப் பிடித்து விடுகின்றன. மாடு, செம்மறி ஆடு, ஆடு, பன்றி, கோழி என்ற ஐந்து வகை விலங்கினங்களும் மாத்திரம் உலகளாவிய ரீதியில் தினமும் உட்கொள்ளப்படும் புரத உணவின் ஒன்றில் மூன்று பங்கை வழங்குகின்றன. இந் நிலைமை உருவாவது விவசாய முறைமைகளின் பாதிக்கப்படும் தன்மையை அதிகரிப்பதோடு உணவுப் பாதுகாப்பை அச்சுறுத்தலுக்குள்ளாக்க வல்ல நிலைமையாகவே காணப்படுகிறது.   
 
விவசாயத்தில் உயிர்ப்பல்வகைமைக்கு முக்கியத்துவம் கொடுத்தல் என்பது பல உலகளாவிய உடன்படிக்கைகளில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட விடயமாகும்.   
உயிர்ப்பல்வகைமையையும் மரபணுப் பல்வகைமையையும் பேணுவதற்காக அதிக முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும், அதன் மூலம் உணவு மற்றும் விவசாயத் துறைகளிலே உயிர்ப்பல்வகைமை முன்னிலைப்படுத்தப்பட வேண்டும். அதை அடிப்படையாகக் கொண்டு நிலைத்து நிற்கும் அபிவிருத்தி இலக்குகளை அடையவும் உணவுப்பாதுகாப்பை அடையவும் உதவி புரியும் சகல துறைகளிலும் உட்யிர்ப்பல்வகைமை முன்னிலைப்படுத்தப்பட வேண்டும்.   
 
மரபணு வளங்களை முகாமை செய்ய தேசிய நிறுவகங்களும் சட்டங்களும் அமைக்கப்பட வேண்டும். இலங்கைக்கே உரித்தான பல தாவர மரபணுக்களுக்கான காப்புரிமை காணப்படுவது அமெரிக்க, ஜப்பனிய, சீன தனியார் மருந்துக் கம்பனிகளிடம் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? இவை எல்லாம் மரபணுக்கள் பற்றிய விழிப்புணர்வு எமது நாடுகளில் உருவாக முன்னர் நடைபெற்றவை.   
 
தாவர, விலங்குகளின் உயிர்ப்பல்வகைமையைத் தொடர்ந்து அவதானித்து வர வேண்டும். அவை அழியும் ஆபத்தில் இனப்பெருக்கத்தை மேற்கொள்கின்றனவா எனத் தெளிவாக அறிய வேண்டும். மரபணு வங்கிகளின் பதிவேடுகள் பேணப்பட வேண்டும். இனப்பெருக்க மதிப்பீடுகளும் மேற்கொள்ளப்பட வேண்டும். அப்போதுதான் தாவர விலங்குகளின் உயிர்ப்பல்வகைமையின் தன்மை, அச்சுறுத்தல் மட்டம் பற்றி எம்மால் அறிந்து கொள்ள முடியும். உணவு மற்றும் விவசாயத்துக்கான தாவர மரபணு வளங்களின் சர்வதேச சமவாயம் தனது பிரகடனத்தில் அனைவருக்கும் அணுகல் உள்ள 64 மிக முக்கியமான பயிர்கள் பற்றிக் குறிப்பிடுகிறது.   
 
இயற்கை வாழிடங்கள் தரமிழந்து போவதை மாற்றுவதும் மிக அவசியமானதாகும். குறிப்பாக மலைகள், காடுகள், நன்னீர், கடல் சூழல்கள் ஆகியவற்றில் பாதுகா க்கப்பட்ட பிரதேசங்களை உருவாக்குவதன் மூலம் அவற்றைப் பேண முடியும்.   
 
நேபாள தேசம், இமாலய மலைத்தொடர்களுக்கிடையே சிறைப்படுத்தப்பட்ட தேசம் என வர்ணிக்கப்படும். உலகின் வறுமையான, மிகவும் பின் தங்கிய நிலைகளுள் ஒன்றாக நேபாள தேசமும் காணப்படுகிறது. தரமிழந்து தள்ளாடும் வளங்களுக்கு மத்தியின் அங்கு காணப்படும் வன வளமானது கிராமிய வாழ்வாதாரத்தின் அடிப்படையாகக் காணப்படுகிறது. கால் நடைகளுக்கான இலை குழைகள் தொட்டு மண் வளம் பேணல், காடுகளின் காப்பின் கீழ் விவசாயத்துக்கு பொருத்தமான நிலங்களைத் தேர்வு செய்தல், அரிமரம் அல்லாத பொருட்களைச் சேகரித்தல் வரை வனங்களை அவர்கள் பயன்படுத்துகிறார்கள்.   
 
சமூகம் சார் உரித்துள்ள வனவியல் நேபாளதேசத்தில் பிரபலமானது. அதாவது சிறு சமூகங்களுக்கு வனங்கள் மீதான உரித்து வழங்கப்பட்டு அவர்கள் குழுக்களாக உரிய வனம் தொடர்பில் தீர்மானங்களை மேற்கொண்டு, அதனைக் கண்காணித்து முகாமை செய்வார்கள். காடழிப்பையும் நிலங்கள் தரமிழத்தலையும் கைக்கொள்ள நேபாள தேசம் பாவிக்கும் முன்னணி உத்தி இதுவாகும். இது நேபாள தேசத்தில் ஏறத்தாழ 2 தசாப்த காலத்துக்கு முன்னர் தோன்றியது. தர மிழந்த நிலங்களில் காடுகளை மீள் உருவாக்கம் செய்தல், கிராமிய வறுமையை ஒழித்தல் ஆகிய இரண்டு நோக்க ங்களையும் அடிப்படையாகக் கொண்டு இது ஆரம்பிக்கப்பட்டது. இம்முறைமையின் கீழ் அரசுக்குச் சொந்தமான வனப்பகுதிகள் வறுமை மிகு சிறு குழுக்களுக்களாக ஒழுங்கமைக்கப்பட்ட குடும்பங்களுக்கு குத்தகைக்கு வழங்கப்படும். அந் நிலப்பகுதிகள் மேலும் தரமிழந்து போகாமல் பாதுகாக்க வேண்டியது அக்குடும்பங்களாது பொறுப்பாகும். அத்துடன் அவர்கள் அந் நிலத்தில் பொருளாதார ரீதியாகத் தமக்கு நன்மை பயக்கக் கூடிய தாவரங்களைப் பயிரிட்டு வளார்க்க முடியும். அதே வேளை வனப்பகுதி மீண்டும் பழைய நிலையை அடைவதற்காக தானாகவே இயற்கையாக மீளுருவாக அனுமதிப்பதுடன் தேர்வு செய்யப்பட்ட சுதேச தாவர இனங்களையும் நாட்டிப் பேணுவர். நேபாள தேசத்தைப் பொறுத்தவரையிலே குத்தகையடிப்படையிலான வனவியல் பெரு வெற்றியை அளித்திருக்கிறது. தரமிழந்த நிலங்கள் மீட்கப்பட்டிருக்கின்றன. வறுமை மிகு மக்களின் சமூக பொருளாதார நிலைமையும் நல்வாழ்வும் முன்னேற்றம் கண்டிருக்கின்றன. இத்தகையவெற்றிக்குப் பின்னால் பல காரணிகள் இருக்கின்றன.   
 
குத்தகையடிப்படையிலான வனவியலின் மூலம் வாழ்வாதாரத்தை மேம்படுத்தக் கூடிய குறுகிய கால வருமானம் கிடைக்கும் அதேவேளை வனப்பகுதியை மீளுருவாக்கம் செய்வதன் மூலம் நீண்டகால பொருளாதார, சுற்றுச் சுூழல் நன்மைகளும் கிடைக் கப்பெற்றன. நேபாள தேசத்தின் வறுமை மிகு சமூகங்களின் தேவைகள் தொடர்பில் செவிகள் பல சாய்ந்தன. எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு பங்குபற்றல் மேம்படுத்தப்பட்டது. குழுக்களுக்குக் கிடைக்கும் வருமானத்தில் கணிசமான பகுதி கிராமிய அபிவிருத்தி நடவடிக்கைகளில் முதலீடு செய்யப்பட்டது. சமாந்தரமாக வேலை செய்யும் அமைப்புகள், நிறுவனங்களுக்கிடையில் ஒருங்கிணைவு உருவாகத் தலைப்பட்டது. பெண்கள் வலுப்படுத்தப்பட்டனர். அவர்கள் தீர்மானங்களை மேற்கொள்ளும் வல்லமை படைத்தவர்களாக மாறினர். வனவியல், கால் நடை வளர்ப்பு, விவசாயம் ஆகியவை ஒருங்கிணைந்த, நிலைத்து நிற்கக் கூடிய உற்பத்தி முறைமைகள் உருவாகின. விளைவாக எந்த நோக்கத்துக்காக இம்முறைமை ஆரம்பிக்கப்பட்டதோ அதை நோக்கி நேபாள தேசம் மிகவும் துரிதகதியில் பயணிக்கத் தொடங்கியிருக்கிறது.   
 
விவசாயத்தின் மூலாதாரமே இயற்கை வளங்கள் தான். அவை அழிவடைந்து போகாமல் நிலைத்து நிற்க வேண்டுமாயின் ஆர்வமுடைய சகல தரப்பினருடைய பங்குபற்றலுடன் உருவாக்கப்படும் முகாமைத்துவ நடவடிக்கைகளே பெரும்பாலும் வெற்றியளித்திருக்கின்றன என்பதைப் பல ஆய்வுகள் நிரூபித்துக்கொண்டிருக்கின்றன. அதற்காகத்தான் ஒஸ்ரம் என்ற பெண் பொருளியலாளர் நோபல் பரிசையும் பெற்றிருந்தார்.     
 
சாரதா மனோகரன் 

Comments