இலங்கையின் பொருளாதாரத் திட்டங்கள் கற்பனாவாதமும் நிதர்சனமும் | தினகரன் வாரமஞ்சரி

இலங்கையின் பொருளாதாரத் திட்டங்கள் கற்பனாவாதமும் நிதர்சனமும்

லங்கையை ஒரு டிஜிட்டல் பொருளாதார மையமாக மாற்றுவோம். அறிவுசார் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவோம். நான்காம் கைத்தொழிற்புரட்சிக்கு தயாராவோம். மாணவர்களுக்கு (TAB) ‘டெப்’ உபகரணங்களை வழங்குவோம் என்று பெரிய எடுப்பில் அரசியல்வாதிகள் இலங்கையை ஒரு சொர்க்கா புரியாக நாளைக்கே மாற்றிவிடுவதைப்போல பேசிக்கொண்டிருக்கிறார்கள்.  

சுதந்திரம் பெற்ற நாள் தொடக்கம் கீறல் விழுந்த பழைய இசைத்தட்டுப்போல மீண்டும் மீண்டும் 'அபிவிருத்தி... அபிவிருத்தி' என்றே ​ெஜபம் பண்ணுகிறார்களே ஒழிய உருப்படியாக ஒன்றையும் செய்து கிழித்ததைக் காணோம்.  

விரலுக்கேற்ற வீக்கம் என்பார்கள். தனது தகுதிக்கேற்ப ஒவ்வொரு நாடும் தனது பொருளாதாரக் கொள்கைகளை வடிவமைத்து செயற்பட வேண்டியது கட்டாயம். அகலக் கால் வைப்பது போல நாட்டின் வளங்களுக்கும் திறன்களுக்கும் அப்பாற்பட்ட கனவுலகத் திட்டங்களை நடைமுறைப்படுத்த விரும்பினால் நிரந்தரமாகவே கனவுலகிலேயே சஞ்சரிக்க வேண்டியது தான்!  

சுதந்திரம் பெற்ற காலம் முதல் தொடர்ச்சியாக ஐந்தாண்டு திட்டங்களை நடைமுறைப்படுத்திக் கொண்டு வருகிறது இந்தியா. 1956ல் பதவிக்கு வந்த இலங்கை அரசாங்கம் ஒரு குழுவை இந்தியாவின் திட்டமிடல் அனுபவங்களை கற்றுவர அனுப்பியது. காமினி கொரயா என்னும் பிரபல திட்டமிடல் நிபுணர் அதற்கு தலைமை தாங்கினார். இந்திய அனுபவங்களை அடிப்படையாக வைத்து பத்தாண்டு திட்டத்தை உருவாக்கினார்கள். இலங்கையில் ஒரு அரசாங்கத்தின் ஆயுட்காலமே நான்கு அல்லது ஐந்து ஆண்டுகள் தான். இந்த லட்சணத்தில் ஒரு பத்து ஆண்டுத் திட்டம் அகலக்கால் வைப்பதல்லாமல் வேறென்னவாக இருக்க முடியும்? பண்டாரநாயக்கவை ஒரு பௌத்த பிக்கு சுட்டுக் கொன்ற பின்னர் அந்த பத்தாண்டுத் திட்டம் பாடையிலே போய்விட்டது. அதன் பின்னர் வந்த பொது முதலீட்டுத் திட்டங்களாகட்டும் 2001ஆண்டில் வந்த ‘Regaining Srilanka’ இலங்கையின் வாய்ப்புக்களை மீளப்பெற்றுக் கொள்ளல் கொள்கைத் திட்டமாகட்டும் 2005ல் வந்த மகிந்த சிந்தனை மற்றும் 2010ல் வெளிவந்த 'மகிந்த சிந்தனை முன்னோக்கிய பயணம்' உள்ளிட்ட திட்டங்கள் கற்பனாவாத இலக்குகளை அடிப்படையாகக் கொண்டவைகளாகவே அமைந்திருந்தன. (2005 - _ 2014) ஒன்பதாண்டு காலப்பகுதியில் அந்த அரசாங்கம் பதவியில் அமர்ந்திருந்த போதிலும் மேற்படி இருதிட்டங்களின் இலக்குகளில் எத்தனை சதவீதம் எய்தப்பட்டன என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாகவே உள்ளது. அது பற்றிய மரணப் பரிசோதனை செய்யப்பட வேண்டியது அவசியமாகும். ஏனெனில் இலங்கையில் அமுல் செய்யப்பட்ட இரு முக்கிய கொள்கை திட்டங்களாக அப்போதைய அரசாங்கம் இவற்றைக் கருதியது. அத்துடன் அவற்றுக்காக மிகப் பெருந்தொகை நிதியும் செலவிடப்பட்டது எனவே அத்திட்டங்களின் மூலம் நாட்டுக்கு கிடைத்த பொருளாதார ரீதியான நன்மைகள் பேரிலான மண் பரிசோதனை அவசியமாகிறது.  

மறுபுறம் 2015ல் பதவிக்கு வந்த அரசாங்கம் ஹாவர்ட் பல்கலைக் கழக அறிவாளிகளின் ஆலோசனைகளால் வழிநடத்தப்படுவதாக நினைத்துக் கொள்கிறது. அதன் குழந்தைப் பிள்ளையாக உருவாகிய விஷன் 2025 (Vision 2025) மற்றுமொரு கற்பனாலோகத்திற்கு நம்மை அழைத்துச் செல்கிறது. அதில் குறிப்பிடப்பட்ட பொருளாதார இலக்குகளை குறித்த காலப்பகுதிக்குள் ஒரு போதும் எய்த முடியாது என்பது அதனைத் தயாரிப்பவர்களுக்கு நன்கு தெரியும். தயாரிக்கச் சொன்ன அரசியல்வாதிகளுக்கும் தெரியும் முன்னாள் இந்திய ஜனாதிபதி அப்துல் கலாம் , இளைஞர்களைக் கனாகக்காணச் சொன்னார். அந்த கனாக்களை நனவாகக் முயற்சிக்கச் சொன்னார்.  

ஆனால் கனவுலகிலேயே வாழச் சொல்லவில்லை. ஒரு அரசாங்கமும் தனது ஆட்சிக்காலத்தில் நாட்டை இப்படியெல்லாம் முன்னேற்ற வேண்டும் என்று கனாக் காண்பதில் பிழையில்லை. ஆனால் தனிநபர்களைப் போலன்றி ஒரு அரசாங்கம் நனவாக்க முடியாத கனவுகளை காணக்கூடாது. ஏனெனில் அந்த நனவாக்க முடியாத கனவுக்காக செலவிட்ட வளங்கள் பொதுமக்களுடையவை. கூட்டுப் பொறுப்புக்கு உட்பட்டவை. எனவேதான் நடைமுறைப்படுத்த முடியாத உயர் கனாக்களை காணவிழைவது நாட்டுக்கு நன்மை தராது என்று கூறுகிறோம். ஆனால் இந்த நாட்டைப் பொறுத்தவரையில் 'பொறுப்புக் கூறல்' என்பது பூச்சிய நிலையில் உள்ளது. ஒரு திட்டம் உருவாக்கப்பட்டு அமுல்படுத்தப்பட்டு உரிய பிரதிபலனை பெறமுடியாத இடத்து அதற்கு யாரும் பொறுப்பு ஏற்க முன்வருவதில்லை. மத்தளை விமான நிலையமாகட்டும், அம்பாந்தோட்டை துறைமுகமாகட்டும். அதன் தோல்விகளுக்கு பொறுப்பேற்க. எந்த அரசியல்வாதி முன்வந்தார்? எந்த அதிகாரி முன்வந்தார்? எந்த பொறிமுறை இப்பொறுப்புக் கூறலுக்காக நடைமுறையில் உள்ளது?  

இவ்வாறான பொறுப்புக் கூறல் பொறிமுறை இல்லாதவிடத்து எவரும் கனாக்காணலாம். அரசியல்வாதிகள் தமது கனவுகளில் பொதுப்பணத்தை செலவிட்டு சஞ்சரிக்கலாம். ஆமாம் சாமி போடும் அதிகாரிகளும் அது நடைமுறையில் சரிவராது என்று தெரிந்தும் கூட அதற்கு தாளம் போடலாம் மக்களின் பணத்தை அதன்பொருட்டு விரயம் செய்யலாம்.  

இப்போது இலங்கை மக்களை டிஜிட்டல் உலகில் இணைக்க கனவு காணப்படுகிறது. ஏலவே ஜி 5 (G5) தொழினுட்பம் தென்னாசியாவிலேயே முதல் முறையாக இலங்கையில்தான் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எல்லா கொடுக்கல் வாங்கல்களையும் டிஜிட்டல் முறையூடாக செய்யுமாறு அரசாங்கம் அறிவுறுத்துகிறது. வரிபிடிப்பதற்காகத்தான் இந்த டிஜிட்டல் ஜிமிக்ஸ் என்பது தெரியாத அளவுக்கு இலங்கை மக்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்லர். நான்காம் கைத்தொழில் புரட்சி என்றொரு வார்த்தை அடிக்கடி சில அரசியல்வாதிகளால் மெல்லப்பட்டு வருவதை கேள்விப்பட்டிருப்பீர்கள்.  

நான்காம் கைத்தொழில் புரட்சி ஒரு புறமிருக்கட்டும் அதற்கு முந்திய மூன்று புரட்சிகளும் என்னவாயின? ஆடைக் கைத்தொழில் புரட்சி என்றால் என்ன என்று ஸ்ரீமான் பொதுஜனம் தலையை சொறிவது புரிகிறது. புரியாத சொற்களை பயன்படுத்தி கனவு கண்டால் தானே பொதுமக்களை இலகுவில் மயக்கலாம்!  

நீராவி இயந்திரம் கூட இல்லாத காலப்பகுதியில் 1730க்கு முன்னர் இங்கிலாந்தின் பருத்தி நெசவு உற்பத்தி மனித கரங்களின் வலுவைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டது. பின்னர் நெசவுத் தொழிலை ஓடும் நீரில் சக்கரங்களை இணைத்து இராட்டையை இயக்குவதன் மூலம் இயந்திரமயமாக்கப்பட்டது. முதலாம் கைத்தொழில் புரட்சி. அடுத்து வந்த 150ஆண்டு காலப்பகுதியை முதலாம் கைத்தொழிற் புரட்சிக்கமைய அடையாளப்படுத்துவர். நீராவி எந்திரத்தின் வருகை, எந்திரவியற்கைத் தொழிலின் உருவாக்கம் என்பன இணைந்து கனரகக் கைத்தொழிலாக அது மாற்றம் பெற்றது.  

1830- 1915காலப்பகுதி இரண்டாம் கைத்தொழில் புரட்சி காலப்பகுதியாகும் மின்சாரத்தின் வருகை அதன் உபயோகம் அதிகரித்தாலும் ஒரு பொருளை பகுதி பகுதியாக பிரித்து உற்பத்தி செய்து இணைக்கும் (Conveyer belt) பிரிவுகள் ஊடாக உற்பத்தியில் பாரிய அதிகரிப்பு இக்காலப்பகுதியில் ஏற்பட்டது.  

1969 _ - 2010காலப்பகுதி மூன்றாம் கைத்தொழிற் புரட்சிக் காலப்பகுதியாகும். கணனிகளும் புரோகிராம் செய்யப்பட்ட தானியங்கி இயந்திரங்களும் இணைய வழி சர்வதேச தொடர்பாடல் தொழில்நுட்ப முறைகளும், அணுசக்தி வளப்பயன்பாடும் இக்கால பகுதிக்குரிய சிறப்பியல்புகளாகும்.  

2010இன் பின்னரான காலப்பகுதிய நாலாம் கைத்தொழிற் புரட்சிக் காலமாக அடையாளப் படுத்தப்படுகிறது. சைபர் பௌதீக முறைமைகள் ஊடாக செயற்கை நுண்னறிவு (Artificial intelligent) செயற்பாடுகள் விரிவாக்கமும்.  

பெறுமதிச் சங்கிலியில் டிஜிட்டல் மயமாக்கம், பொருட்கள் சேவைகள் உற்பத்தி மற்றும் விநியோகத்தில் டிஜிட்டல் மயமாக்கம். வியாபார நடைமுறைகள் மற்றும் நுகர்வோரைச் சென்றடைவதற்கு டிஜிட்டல் முறைமைகளைப் பயன்படுத்தல் அதாவது இலத்திரனியல் வர்த்தக விரிவாக்கம் என்பன இக்காலப் பகுதியின் பண்புகளாகும்.  

எனவே இந்த நாலாந்தலைமுறை கைத்தொழில் மயமாக்கலை விரிவுபடுத்த வேண்டும் என்று விரும்புகிறது இலங்கை. ஒரு குழந்தை வளர்ந்து பெரியவனாக படிமுறைகள் உண்டு. குழந்தை வளர்ந்து பிள்ளையாகவும் பிள்ளை இளைஞனாகவும் மாறவேண்டுமே ஒழிய குழந்தைப் பிள்ளைக்கு மீசைவைக்க முயற்சித்தால் நன்றாகவா இருக்கும்?  

அடந்த மீசையோடு ஒரு குழந்தை தவழ்ந்து வருவதை கற்பனை செய்து பாருங்கள்.  

இலங்கை அதைத்தான் செய்ய விழைகிறது. பிஞ்சிலே பழுத்தது என்று சொல்வார்கள்.  

வெம்பல் என்பது அதன் பெயர்.     இலங்கையின் பொருளாதாரத் திட்டங்கள் :

கலாநிதி

எம். கணேசமூர்த்தி 

பொருளியல்துறை, 

கொழும்புப் பல்கலைக்கழகம். 

Comments