சாரதிகளே, ஏனையோர் உயிரை துச்சமாக கருதலாமா? | தினகரன் வாரமஞ்சரி

சாரதிகளே, ஏனையோர் உயிரை துச்சமாக கருதலாமா?

வாழ்வாதாரமா சேதாரமா

போக்குவரத்து சேவைகள் ஒரு நாட்டின் அபிவிருத்தியில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஏற்றுமதி இறக்குமதி என்பதை விட தொடர்பாடலுக்கும் அது மிக முக்கியம். ஏன்னதான் நவீன சாதனங்கள் வந்துவிட்டாலும் நேரடித் தொடர்பு என்பது இன்றியமையாதது என்பதற்கு இப்போதுள்ள ஒன்லைன் வியாபாரங்கள் கட்டியம் கூறி நிற்கின்றன. நினைத்த இடத்துக்கு நினைத்தமாத்திரத்தில் போய்வரக்கூடிய வசதிகளும், வாய்ப்புகளும், இப்போதிருக்கலாம் ஆனாலும் சுமார் இருபது வருடங்களுக்கு முன்னர் நாம் எப்படி பயணங்களை மேற் கொண்டோமோ அதே உணர்வுடன்தான் இப்போதும் பயணிக்க வேண்டியுள்ளது. 

வாகனங்களுக்கான உதிரிப்பாகங்களே அப்போதில்லை. எரிபொருளைப் பற்றி சொல்லவே வேண்டாம் பிரதான எரிபொருளாக மண்ணெய்யே பயன்பாட்டில் இருந்தது. உந்துருளிகளை காலால் அடித்து ஸ்ராட்செய்வதன்முன் அதற்கு சூப்பி வழியாக பெற்றோலில் சில துளிகளை அதன் காபரேட்டருக்குள், பாவித்து கழற்றிய சேலைன் குழாய் வழியாக செலுத்துவோம். சிங்கர்  மெசின் ஒயில் வந்த வெற்றுக்குப்பிகளே சூப்பியாகும். இந்த காபரேட்டருக்கான குழாய் அமைப்பு எல்லா உந்துருளிகளுக்கும் செய்து வைத்திருந்தோம். ஆக, பெற்றோலை விட்டு தொடக்கியதும் மண்ணெய்யில்அது  தொடர்ந்து ஓடும். ஏன்ன அடிக்கடி புளக்கில் காபன் பிடித்துக் கொள்ளும். வன்னிக் காட்டுவழியில் தீப்பெட்டிகள் கொண்டே செல்வோம் அங்கங்கே புளொக்கை கழற்றி காட்டுச்சுள்ளிகளில் நெருப்பு மூட்டி சுட்டு காபன் தட்டி மீண்டும் உந்துருளியில் பூட்டி ஓடுவோம் இந்த வித்தை ஆண் பெண் வேறுபாடின்று அனைவருக்கும் தெரிந்திருந்தது.  

மழைகாலம்  வந்துவிட்டாலோ வான்பாயும் காட்டாறுகள் வழியாக உந்துருளியை கையைப்பிடித்து அழைத்து கடப்போம். வெளியே வரும்போது சைலன்ஸர் முதல் எஞ்சின் பகுதிகளும் நீரைக்குடித்து விடும். அதை தூக்கி நிமிர்த்தி வாந்தியெடுக்கவைத்து துடைத்து மறுபடி ஓட்டுவோம். இதே திரு விழாக்கள் பேருந்துகளுக்கும் சிற்றூர்திகளுக்கும் இருந்தது.  

ஒழுங்கான டயர்கள் கிடையாது அடிக்கடி டீசல் புளொக் இவற்றை விட அவை ஓடும் பாதைகள். மிகமிக ஆபத்து நிறைந்தவையாக இருந்தன. வட்டக்கச்சியின் வயல்பாதை உழவுயந்திரங்களும் கனரக வாகனங்கள் அறுவடைக் காலத்திலும் அதாவது கோடையிலும் பயணிக்கக்கூடியது. இந்த பாதையில் தினமும் பல பேருந்துகளும் சிற்றூர்திகளும் யுத்தகள வாகனங்களும் ஓடி ஓடி அந்த வீதி இட்டிலிக்கு கரைத்த மாவுபோல பதமாகி இடையிடையே பெரும் கிடங்குகளையும் தன்னுள்ளே மறைத்து வைத்திருக்கும். இரணைமடுக்குளக்கட்டின் மீது பேருந்து ஏறி குளக்கட்டு வழியாக ஓடி மறுபக்கம் இறங்கும் போது படு பயங்கரமாக இருக்கும். இரண்டு தடவைகள் பேருந்துகள் குளக்கட்டிலிருந்து பள்ளத்தில் உருண்டு விபத்தாகியுமுள்ளன. 

காரணம் கிளிநொச்சியில் அப்போது ராணுவம் நிலை கொண்டிருந்தது. அப்படியே இரணைமடுச்சந்தி கடந்து முறிகண்டி கடந்து கொக்காவில் சந்தியடியே திரும்பி புத்துவெட்டுவானுக்கு திரும்ப முதுகு கூசும். காரணம் பின்னாலிருந்து ஒரு சன்னம் எமது முதுகை ஊடுருவலாம். அல்லது திடீரென விமானங்கள் தாக்கலாம். அப்படி ஏலவே தாக்கி எரிந்த இடங்கள் பீதியைத்தரும்.  

எல்லாம் கடந்து போகும் என்பது போல இதுவும் கடந்து போனாலும் எமது உயிர்ப்பயம் மட்டும் இப்போதுள்ள வாகன சாரதிகளால் அப்படியே இருக்கிறது. சண்டாளப்பாவி உந்தப்போனை எப்பன். கீழ வைக்கிறானோ பார் அவன் ஒரு கையால மடக்கி மடக்கி உவள பெரிய வாகனத்தில இருக்கிற இவள சனத்தையும் கொல்லப்போறானடி. 

இது அண்மையில் பேருந்தில் பயணித்த ஒரு மூதாட்டியின் புலம்பல். நான் பயணித்த விசுவமடு பேருந்தில் இதேபோல அதன் சாரதி ஓமந்தையிலிருந்து மாங்குளம் கடக்கும்வரை போனை காதைவிட்டு எடுக்கவேயில்லை. போதாததற்கு வெற்றிலையை மென்று மென்று அடிக்கடி எட்டி எட்டி யன்னல் வழியே துப்ப அது பின் இருக்கைகளில் இருந்த பணிகள்மேல் தூவானமாகியது. நான் யன்னலை மூடினேன்.  

இப்போது பேருந்துகளில் சனம் குறைவுதான் அந்த கொஞ்ச நஞ்ச சனத்தையும் தனது பேருந்திலேயே அப்பிவிட போட்டிக்கு ஓடும் சாரதிகள் மிக அதிகம் குறித்த நேரத்தில் தாம் போய்ச் சேர வேண்டும் என்றுதான் கதையளப்பார்கள் பார்த்தால் கிளிநொச்சி வைத்தியசாலையருகேயும் மாங்குளம் சந்தியிலும் வெகுநேரம் இந்த ஆள்பிடித்தலுக்காக காத்திருப்பார்கள். ஒன்றன்பின் ஒன்றாக பேருந்துகள் இருக்கிறதே வருபவர்கள் எதிலாவது வருவார்கள்தானே. ஏனைய பயணிகளை ஏன் காக்க வைக்கிறார்கள். இதில் தில்லுமுல்லு ஒன்றும் நடக்கும். எங்காவது போக்குவரத்து கண்காணிப்பு பொலீஸார் சோதனையில் நின்றால் அவர்களே ஏதாவது மரங்களின் மறைவில்தான் நிற்பார்கள். ஆனால் கடந்து வரும் வாகனச்சாரதி, முன்னே வரும் அனைத்து சாரதிகளுக்கும் லைற்றை போட்டோ கையாலோ சைகை செய்து காப்பாற்றி விடுகிறார். இது சாரதிகளின் தார்மீகக் கடமையாம். போங்கடா நீங்களும் உங்கட கடமையும் எப்பிடித்தான் இவர்கள் திருந்தப்போகிறார்கள்.  

ஒரு தடைவ புதிதாக வந்த ஒரு பேருந்தை சாரதி ஓட்டிக்கொண்டே அதன் சிறப்புகளை தன் மிதிபலகையில் பயணம் செய்த நண்பனுக்கு பீற்றிக் கொண்டு வந்தான். இது எவ்வளக்கு போகும் லாஸ்ட்டில விட்டுப்பார்  என்றான் அவன்.  

சாரதி உடனே தன் திறமையைகாட்ட வாகனத்தின் வேகத்தை கூட்ட வாகனம் உள்ளேயே அதிரத்தொடங்கியது. அதாவது செல்லடித்துக் கொண்டிருக்கும் பகுதியினூடாக குண்டும்குழியுமான வீதியில் பறந்த எனக்கே குலைநடுங்கியது. புளியங்குளம் வந்தபோது இரு பயணிகள் இறங்கிக் கொண்டனர். நாங்கள் வேற பஸ்ஸில வாறம் எங்கட காசைத்தா என்று பிடிவாதமாக நின்று வாங்கிக் கொண்டனர். இதுவே நீண்ட தூரப்பயணமானாலும் தொடர்கிறது. என்னதான் விபத்துகள் அதிகமாகி வருகிறது என்று பேசப்பட்டாலும் இப்படி பொறுப்பற்ற சாரதிகளும் இருக்கவே செய்கிறார்கள். அவர்களது மனைவி பிள்ளைகளின் படங்களை வாகனத்தில் தொங்க விடவேண்டியது மிக அவசியம். ஒவ்வொரு சாரதியும் தனது வாகனத்தில் உள்ள பயணிகளை மதிக்காமல் போனாலும், அல்லது தன்மீது அசாத்திய நம்பிக்கையை வைத்திருந்தாலும், தானும் ஒரு குடும்பத்தலைவன்தான் என்பதையும், தன்னுடைய இழப்போ, உறுப்பிழப்போ தன் குடும்பத்தை எந்தளவுக்கு பாதிக்கும் என்பதை ஏன் மறக்கிறார்கள். என்றுதான் மாறப்போகிறார்கள் வாழ்க்கை வாழத்தானே இதில் மற்றவர்களின் உயிர்மீது உங்களுக்கென்ன சவால்.

 

Comments