'விஹாரி' புது வருட பலன்கள் | தினகரன் வாரமஞ்சரி

'விஹாரி' புது வருட பலன்கள்

துலாம் 

நடு நிலைமையும் நேர்மையும் செயல் திறமையும் வாய்ந்த இந்த அன்பர்களுக்கு குரு பெயர்ச்சியானது நற்பலன்களை வழங்க இறைவனைப் பிரார்த்தித் கொண்டு தொடர்வோம்.  

மூன்றாம்,ஆறாம் இடங்களுக்கு அதிபதியானவர் தனது சொந்த வீட்டில் அமர்வது யோகந்தான். அங்கிருந்து ஏழாம் ராசியையும், ஒன்பதாம் ராசியையும், பத்தாம் ராசியையும் நோக்குவதால் விளையும் சுப பலன்களைப் பார்ப்போம்.    ஏழாம் வீடு, ஆகா கல்யாண ராசியாச்சே. திருமண எண்ணங்களும், சந்தர்ப்பங்களும் மேலெழுந்து பல கனவுகளைத் தரும். முயற்சி செய்யுங்கள், மகிழ்ச்சியாகவே எல்லாம் நடக்கும்.  

 கலவரங்கள் இருக்கும் குடும்பங்கள் அமைதி காணும். கணவன் மனைவி சாந்தமடைவார்கள். காதலர்கள் ஒருவருக்கு ஒருவர் தாராளமாகவே விட்டுக் கொடுப்பார்கள். கொஞ்சம் பொருளாதாரப் பக்கம் பார்த்தால் பங்காளித் தகராறுகள் இருக்கும் இடங்களில் ஒற்றுமை ஏற்படும். புரிந்துணர்வுகளோடு தொழிலை நடத்தலாம். மனதிற்கு பெரும் நிம்மதி கிடைக்கும். பெரியவர்களின் சகாயங்கள், ஆசீர்வாதங்கள் வந்தமையும். சிற்சில விவகாரங்களில் சான்றோர் உதவிகள் புரிவார்கள் அல்லது நல்வழி காட்டுவார்கள். பூர்வீகச் சொத்துக்கள் சம்பந்தமாகத் தொந்தரவுகள் இருந்தால் அவைகளை சாதுரியமாகத் தீர்த்துக் கொள்ள நல்ல சந்தர்ப்பங்கள் உருவாகும். அசையாச் சொத்துக்கள் பல நல்ல முறையில் திரும்பப் பெற ஏது உண்டு. மூத்த சகோதரங்கள் தோள் கொடுத்துத் துணை புரிவார்கள். பல வகைகளில் உதவிகளும் பெற்றுக் கொள்ளலாம்.வருஷம் முழுவதும் மகிழ்ச்சியாகவே இருக்க வாழ்த்துகள்.  

விருச்சிகம்  

இனிமையாகவும், எளிமையாகவும் வாழவேண்டும் என்பதற்காக அயராமல் பாடுபட்டு உழைக்கத் தயங்காத விருச்சிக ராசி அன்பர்களுக்கு உங்கள் விருப்பம் போல் வாழ்வமைய வாழ்த்துகள்.  

 குரு பகவான் இரண்டிற்குப் போவார், பின்னால் ராசிக்கும் வருவார் என்ன பலன் என்று யோசிக்க வேண்டிய அவசியமே இல்லை. உங்களுக்கு நல்ல ஆதிபத்தியத்தைக் கொண்டவர். நன்மைகளையே செய்வார். நோய் நொடிகள் இருந்தால் அவை காணாமல் போய்விடும். சொல்லியவற்றைக் காப்பாற்ற பெரும் முயற்சிகள் தேவையில்லை. அது பொருளாதாரமாய் இருந்தாலும், வேறு விஷயங்களாயினும் எல்லாம் நன்றாகவே முடியும். தட்டுப்பட்டுப் போன கல்யாண விவகாரங்கள் மீண்டும் தலை தூக்கும். அசட்டையாக இருந்து விடாதீகள். அங்கேதான் உங்கள் தலையெழுத்து அமையும். நல்ல குடும்பம்தான், ஒதுங்கிப் போக வேண்டாம். உற்ற, சுற்றங்களின் உறவுகளில் விரிசல் இருந்தால் சரி செய்து கொள்ள சந்தர்ப்பங்கள் இதுதான். முறைத்துக் கொண்டால் உறவுகள் சிதைத்துப் போகும். தொழில் வகைகள் நல்ல விருத்தியைக் காட்டும். வருமானங்கள் நன்றாகவே இருக்கும். உதவிகளை எதிர் பார்க்காமலே துணிந்து தொழில் செய்யலாம். தேகம் திடமாக அமைய மனமும் வேகமாக இயங்க வாழ்க்கை நன்றாகவே இருக்கும். நடக்கும் திசையில் உள்ள நால்வரும் மதிக்க வாழ வாழ்த்துக்கள்.  

தனுசு  

தனுசு ராசியில் அல்லது லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு குருப் பெயர்ச்சி மிகவும் உத்தமமான பலன்களை வழங்கும். கடந்த பன்னிரண்டு வருஷங்களாக கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் தயங்கியும், மயங்கியும் வாழ்ந்துகொண்டிருக்கும் உங்கள் அனைவருக்கும் இது யோக காலத்தின் ஆரம்பமே. வரப்போகும் காலங்களில் எல்லா நலன்களும் பெற்று நிறையான வாழ்வைப் பெற மனமார வாழ்த்துகிறோம்.  

அன்பர்களே, குரு பகவான் தனியாக லக்கினத்தில் இருக்கப் பிறந்தவர்களும், சந்திரன் இருக்கப் பிறந்தவர்களும் ஏராளமான ஏமாற்றங்களைச் சந்தித்திருப்பீர்கள். அதிலும், முக்கியமாகக் கல்யாண விஷயங்கள் கை கூடாமலே கனவாகவே போயிருக்கும். ஆனால் இந்த வருஷம் சிறிது முயன்றாலே வெற்றிகளை நிச்சயமாகப் பெறலாம். விரும்பியவரை வென்று வாழக் கிடைத்திருக்கும் இந்த வாய்ப்பினால் நலம் பெற வாழ்த்துகிறோம்.  

தொழில் அமையவில்லை என்று தடுமாறிக் கொண்டிருப்போருக்கு வேண்டிய தொழில் அமையும். பொருளாதார உதவிகளும், பெரியோர்களின் வழிகாட்டல்களும் கிடைக்கப்பெறும். இதுவரை நீங்கள் உருவாக்கியிருந்த நற்பெயருக்குப் பெரும் நன்மைகள் கிடைத்தே தீரும். சில பல சங்கடங்களினால் குடும்பத்தில் இருந்து விலகி வாழ்ந்தோருக்கு மறுமலர்ச்சி அமையும். அங்கீகரிக்கப்பட்ட மனிதராக உயர்வைப் பெறுவீர்கள். மனதில் அமைதியும், எதையும் சீர்தூக்கிப் பார்க்கும் வல்லமையும் பெருகும். உங்களுடைய வாக்கு பிறரிடம் எடுபடுவதோடு அச் சொற்களுக்கு மதிப்பும் மரியாதையும் வரும். தந்தை வழியில் உள்ள பெரியவர்கள் தேடி வந்து நலம் செய்வார்கள். ஒரு பெறுமதிமிக்க வாழ்க்கையை நடத்திச் செல்ல வழி பிறக்கும் வாழ்த்துகள்.  

மகரம்  

 மனிதாபிமானம் கொண்டவர்களும், பிறர் தவறுகளைப் பெரிதுபடுத்தாமல் மன்னிக்கும் மகான்களாக வாழும் அன்பர்களே உங்கள் வாழ்வில் சுபீட்சம் சூழ வாழ்த்துகிறோம். குரு மாற்றத்தால் விளையப் போகும் சுபாசுப பலன்களை இனிமேல் பார்ப்போம். செலவுகள் என்னும் பெரும் புயல் வீச, தோல்விகள், தொல்லைகள் என்ற கடலும் பொங்கி எழுந்து மூழ்கடிக்கச் செய்வதறியாது திண்டாடும் அன்பர்களே உங்களுக்கு எப்போது எப்படி விடிவு மார்க்கம் தென்படும் என்பதே கேள்விக் குறியாகும். அன்னை வழியில் ஆதரவுக் கரம் நீண்டு காப்பாற்றும். நம்பிக்கையின் ஒளி ஆதவன் நிச்சயமாகத் தோன்றுவார். பொருளாதாரப் பிரச்சினைகளும், மனதளவிலான சிக்கல்களுக்கும் மருந்தும் கிடைக்கும். மன உறுதியும், நம்பிக்கையும் மெல்ல மெல்ல உதயமாகும். இதற்கு ஏற்றாற்போல் மனைவி வழி உறவுகளும் கை கொடுக்க தொல்லைகள் இல்லாமல் ஒழிய சந்தர்ப்பங்கள் உண்டாகும். நீங்கள் தோற்றுப் போகப் போவதில்லை, கண்டிப்பாகக் கரையைக் கடந்து முன்னேறுவீர்கள். தொழிலும், வருமானமும் இப்படியாகத் தலையை நிமிர்த்த, பீடித்திருந்த துன்பங்களும், பிணிகளும் விலகி வாழ்வை வளமாகக்கும். திருமணம், புதிய முயற்சிகளை ஒத்திப் போடுங்கள். இருக்கும் நிலையை உறுதிப் படுத்திக் கொள்ளுங்கள். உத்தியோகம் செய்பவர்கள் நிதானமாக நடந்து கொள்ளுங்கள். திருமணம் இதுவரை ஆகாத ஆண்களும் பெண்களும் பொறுமையாக இருங்கள். காதல் வேண்டவே வேண்டாம். தீராத துன்பங்கள் நிச்சயம். மாணவர்கள் படிப்பில் முழுக்கவனத்தையும் செலுத்துங்கள். துன்பங்கள் விலக இறைவனின் இரக்கத்தினை வேண்டுங்கள்.  

கும்பம் 

எந்தப் பிரச்சினைக்கும் முடிவு காணலாம் என்ற அசைக்க முடியாத துணிவின் சிகரங்களே உங்களுக்கு வெற்றிகளே உரிமையாகட்டும் என்று வாழ்த்துகிறோம். கண்ணெதிரே தாராளமாகச் சந்திக்கவேண்டிய சிக்கல்கள் காத்திருக்கின்ற போதிலும், அலட்டிக் கொள்ளாமல் முகம் கொடுத்து முன்னேற்றம் காணக் கிடைக்கும். தொழிலாய் இருந்தாலும், வேறு விஷயங்களாய் இருந்தாலும் எதையும் எதிர்கொள்ளும் சாணக்கியமும் வளரும். தொழில் அபிவிருத்தி, வருமானங்களில் வளர்ச்சி என்பது தடையில்லாமல் நடந்தேறும். வீடு வாகனங்கள் செலவுகளைக் கொண்டு வந்தாலும் அவைகள் சுபச் செலவாகவே இருக்கும். பூர்வீகச் சொத்துக்களில் இருந்து வரும் பிரச்சினைகள் தற்போது தீர வழியில்லை. எதிரிகள் பலம் வாய்ந்தவர்கள். முட்டிக்கொள்வதைவிட எட்டி   நிற்பது நற்பயனே. அசையாச் சொத்துக்களில் உள்ள ஆர்வத்தை ஒத்திப் போடுங்கள். மூத்தவர்கள் மனம் திரும்பும் வரை காத்திருப்பதே உகந்தது. நினைத்தவரை மணம் முடிக்கக் கிடைப்பது அபூர்வமே, வருவது பிரச்சினை இல்லையென்றால் நல்ல இடத்தில் திருமணமும் சாத்தியமே. குடும்பஸ்தர்களுக்கு அமைதியாக வாழ்க்கை நடக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சி அமையும் சந்தர்ப்பங்கள் வரும்.  

உத்தியோகம் பார்ப்பவர்கள் இடமாற்றம், பதவி உயர்வு என்பனவற்றில் ஆர்வம் காட்டலாம். மேலே செல்ல சந்தர்ப்பங்கள் உண்டு. மாணவர்கள் கல்வியில் சாதனைகள் புரியலாம்.  

மகர லக்கினப் பெண்கள் மனம் விட்டுப் பேசுவதையும், பழகுவதையும் குறைத்துக் கொள்வது அல்லது நிறுத்திக் கொள்வது சாதகமாக அமையும். சகிக்க முடியாக தொல்லைகளை விலக்கிக் கொள்ள உதவும்.  

மீனம்  

நுண்ணிய அறிவாற்றலில் சிறந்தவர்களும், பொறுமையுடன் செயல்பட்டு வெற்றிகளைக் குவிப்பவர்களுமாகிய மீன ராசி அன்பர்களுக்கு சுபமாக வாழ்வமைய வாழ்த்துக்கள். தொழில் மாற்றங்கள், முன்னேற்றங்கள், அபிவிருத்திகள் என்பன படிப்படியாக வந்தடையும். வீடு, வாகன வசதிகள் பெருகவும், அந்த செலவினங்கள் யாவும் சொத்தாகவே மாறும்.

நண்பர்கள், உறவினர்கள் எல்லோரும் ஒத்துழைப்பார்கள். உடல் உதவியும், பொருளாதார சகாயங்களும் குறைவின்றிக் கிடைக்கும். நிலையான வருமானங்கள் செல்வச் செழிப்பைத் தரும். எளிதாக சமுதாயத்தில் தமது செல்வாக்கைப் பலப்படுத்திக் கொள்வார்கள். ஆன்மீக விஷயங்களில் அதிக ஈடுபாட்டைக் காட்டுவதினால் சான்றோர்களின் நட்பை இலகுவில் ஈட்டிக் கொள்வார்கள். சொத்து சுகங்கள் தாமாக வந்துசேரும். குடும்ப வாழ்க்கை இனிதாக இருக்கும். திருமணமாகாத ஆண்கள் பெண்கள் இருபாலருக்கும் சுப காரியங்களுக்கு இடமுண்டு. காதலிக்கத் தேவையில்லை. பேசி முடிக்கும் சம்பந்தங்களே அதிகமாக இருக்கும். இனிமையாகப் பேசி எல்லோருடனும் சுமுகமாகப் பழகி புகழ் பெறுவார்கள்.  

கல்வித் துறையில் உள்ளவர்கள் பட்டங்கள் பெற்று உயர் நிலையைப் பெறுவார்கள். உத்தியோகத்தர்கள் புதிய, விரும்பிய இடங்களுக்கு மாற்றங்களைப் பெற முயற்சிக்கலாம்.  

அரச பதவிகளுக்கு விண்ணப்பிப்போர் வெற்றிகளை அடையலாம். வழக்கம் போல் நிதானமாகச் செயல்பட்டால் வாழ்வில் வசந்தம் வீசும்.  

குருஜி லோகேஸ்வரி சிவராஜ்

   

Comments