மலையகத்தில் இதுவரை 7ஆயிரம் புதிய வீடுகள் மக்களிடம் கையளிப்பு | தினகரன் வாரமஞ்சரி

மலையகத்தில் இதுவரை 7ஆயிரம் புதிய வீடுகள் மக்களிடம் கையளிப்பு

மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சால் இதுவரை முழுமையாக பூர்த்தியடைந்த 7000வீடுகள் மக்களிடம் கையளிக்கப்பட்டுதாக அறிய முடிகின்றது.

இதில், மலைநாட்டு அமைச்சின் நிதியொதுக்கீட்டில் 6000வீடுகளும், இந்திய அரசாங்கத்தின் நிதியொதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்ட 1000இற்கும் அதிகமான வீடுகளும் மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டுள்ளன.

2015ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆட்சிமாற்றத்தின் பின்னர் உருவாக்கப்பட்ட மலைநாட்டு புதிய கிராமங்கள்

உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சு, மலையகத்தில் தனிவீட்டுத் திட்டங்களை அறிமுகப்படுத்தியது. 2021,2022ஆம் ஆண்டுகளாகும் போது 25ஆயிரம் வீடுகளை கட்டிமுடிக்கும் வகையிலான அதன் எதிர்கால திட்டமிடல் அமைந்துள்ளது.

கடந்த 2015ஆம் ஆண்டு முதல் இதுவரை 6500வீடுகள் மலைநாட்டு அமைச்சால் மலையகமெங்கும் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. 2015ஆம் ஆண்டில் 338வீடுகளும், 2016இல் 1500வீடுகளும், 2017இல் 2500வீடுகளும், 2018இல் 2000வீடுகளும் கட்டப்பட்டு மக்கள் பாவனைக்குக் கையளிக்கப்பட்டுள்ளன. 2019ஆம் ஆண்டில் 2000வீடுகளை நிர்மாணிப்பதும் அமைச்சின் இலக்காகவுள்ளது.

இதேவேளை, இந்திய அரசாங்கத்தின் நிதியொதுக்கீட்டில் 14ஆயிரம் வீடுகள் மலையகத்தில் நிர்மாணிக்கப்படுகின்றன. இதில் ஆரம்பத்தில் உறுதியளித்திருந்த 4ஆயிரம் வீடுகளை நிர்மாணிக்கும் பணி துரிதமாக இடம்பெற்று வருகிறது. 4ஆயிரம் வீடுகளில் 1134வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு மக்களிடம் கையளிக்கப்பட்டு விட்டன. இதில் டன்சினன் தோட்டத்தில் 404வீடுகளும், டயகவில் 150வீடுகளும், பொகவந்தலாவையில் 150வீடுகளும், எல்பட மற்றும் லெஜவத்தையில் 203வீடுகளும் அமைக்கப்பட்டுள்ளன. அத்துடன், எஞ்சியுள்ள 2866வீடுகளின் கட்டுமானப் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளன.

இந்நிய வீடமைப்புத் திட்டத்தில் எஞ்சியுள்ள 10ஆயிரம் வீடுகளை நிர்மாணிப்பதற்கான ஆரம்பகட்ட பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும், காணிகளை தெரிவுசெய்யும் விடயத்தில் தோட்ட முகாமைத்துவத்திடமே அதிக சவாலை எதிர்கொள்ள வேண்டியுள்ளதாகவும் மலைநாட்டு அமைச்சு தினகரன் பத்திரிகையிடம் தெரிவித்தது.

அத்துடன், கடந்த காலங்களில் நுவரெலியாவுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டிருந்த வீடமைப்புத் திட்டங்களும், அபிவிருத்திகளும் மலையக மக்கள் வாழும் 11 மாவட்டங்களிலும் முன்னெடுப்படுவாகவும் அந்த அமைச்சு வட்டாரம் கூறியது.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

 

Comments