கௌரவம் | தினகரன் வாரமஞ்சரி

கௌரவம்

கல்முனையில் பிரபல பாடசாலை ஒன்றில் கந்தையா மாஸ்டர் தமிழ் ஆசிரியராக கடமையாற்றி வருகிறார். இவர் சிறந்த நல்லொழுக்கத்துடன் வாழ்வதோடு, சமூகத்தாலும் நன்கு மதிக்கப்பட்ட ஒருவர் இவருக்கு ஆனந்தன் என்ற மகனும், ஆனந்தி என்ற மகளும் இருக்கிறார்கள். இவ்விருவரையும் தமிழிலும் ஆங்கிலத்திலும் புலமை பெற்றவர்களாக உருவாக்க வேண்டும் என்பதே அவரது பேரவா.  

கல்முனையில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் ஜோன்சன் என்பவர் வங்கி முகாமையாளராகப் புதிதாக இடமாற்றம் பெற்று வந்தார். இவர் தன் இளம் மனைவி கோகிலாவுடன் வசிப்பதற்காக கல்முனை உடையார் வீதியில் வீடொன்றை வாடகைக்குப் பெற்று வசித்து வந்தார்.  

ஜோன்சன் காலை ஏழு மணிக்கு வங்கிக்குக் கடமைக்குச் சென்றால் மாலை ஏழு மணிக்குப் பின்னரே வீடு திரும்புவார். இவரது மனைவி தன்னந்தனியாகவே இவ்வீட்டில் வசித்து வந்தாள்.  

இந்நிலையில் ஜோன்சனின் மனைவி கோகிலா, நாள் முழுவதும் தனியாக இருப்பது கஷ்டமென்றும் ஏதாவது தொழிலை தேடினால் வருமானம் கிடைக்கும். தனியாக வாழ வேண்டிய தேவையும் இருக்காது எனப் பலமுறை எடுத்துக் கூறியுள்ளாள்.  

ஜோன்சனுக்குத் தன் மனைவி தொழிலுக்குச் செல்வதில் உடன்பாடு இல்லை. தான் ஒன்றரை இலட்சம் ரூபா பணம் சம்பாதிக்கும் போது உன்னைத் தொழிலுக்கு அனுப்ப வேண்டிய தேவை எனக்கில்லை என்றும் குடும்பத்தைக் கவனிக்கும் பொறுப்பை மட்டும் ஏற்றால் போதும் எனக் கூறினான். அத்தோடு, தனது மனைவி தொழில் பார்க்க வேண்டுமென்ற கோரிக்ைகயை நிராகரித்து விட்டான்.  

ஜோன்சன் தன் மனைவியிடம் வேலைக்குச் செல்லக் கூடாது எனக் கண்டிப்பாகக் கூறியதனால் கோகிலாவுக்கு மனஞ்சலித்து விட்டது. அதனால் அன்று முழுவதும் அவள் நிம்மதியற்றவளாகக் காணப்பட்டாள்.  

அன்று, மாலை வழமைக்கு மாறாக இரவு ஒன்பது மணிக்ேக ஜோன்சன் வீட்டுக்கு வந்தான். தனது வரவுக்காகக் காத்துக் கிடக்கும் மனைவியை காணவில்லை. "கோகிலா! கோகிலா!!" என அழைத்துக் கொண்டே வீட்டுக்குள் புகுந்தான் ஜோன்சன்.  

கோகிலா கட்டிலிலே உறங்கிக் கொண்டிருந்தாள். இதைக் கண்டதும் ஜோன்சன் பயந்து விட்டான்.  

"கோகிலா! ஏன் கட்டிலிலே படுக்கிறாய்? ஏதும் காய்ச்சலா?" எனக் கூறிக் கொண்டே அவளின் உடம்பைத் தொட்டுப் பார்த்தான் ஜோன்சன்.  

உடம்பெல்லாம் குளிராக இருந்தது காய்ச்சலுக்கான எந்த அறிகுறியும் உடம்பிலே காணவில்லை.  

மனநிம்மதி அடைந்தவனாக ஜோன்சன் உடையை மாற்றிக் கொண்டு கோகிலாவின் அருகில் படுத்துக் கொண்டான்.  

கோகிலா முகத்தை மறுபுறம் திரும்பி சரிந்தபடி படுத்தாள்.  

ஜோன்சன் அவளின் தோள்களைப் பற்றித் தன் பக்கமாக உடம்பைச் சரித்தான்.  

"கோகிலா! என் மீது உமக்குக் கோபமா? வேலை செய்து அலுத்துக் களைத்து வந்த எனக்கு ஒரு பால் தேனீரைக் கூடத் தரமாட்டாயா?" எனக் கெஞ்சிக் கேட்டான் ஜோன்சன்.  

இதைக் கேட்டதும் கோகிலாவின் கோபமெல்லாம் சூரியனைக் கண்ட பனிபோல மறைந்து விட்டது.  

கோகிலா சமையல் அறைக்குள் சென்று பால் தேனீரைத் தயாரித்து ஒரு ஜக் முழுவதும் ஊற்றிக் கொண்டு வந்து கொடுத்தாள்.  

"என்ன கோகிலா! இன்றைக்கு விஷேடமாக இருக்கிறது. ஒரு கிளாஸ் பால் தேனீரை மட்டுமே கொண்டு வந்து தருவாய். இன்று மூன்று கிளாஸ் தேனீரை பெரிய ஜக் ஒன்றில் ஊற்றிக் கொண்டு வந்துள்ளாய்?" எனக் கிண்டலாக மனைவியைப் பார்த்துக் கேட்டான் ஜோன்சன்.  

"இல்லங்க! அவசரத்தில் என்னையறியாமலே பால் தேனீரை அதிகமாக போட்டுவிட்டேன். அதை வீணாக்கக் கூடாது என்றுதான் ஊற்றிக் கொண்டு வந்துள்ளேள்" என ஜோன்சனைப் பார்த்துக் கூறினாள் கோகிலா.  

"உண்மையாகவா?" எனச் சந்தோஷத்துடன் மனைவியைப் பார்த்துக் கேட்டான் ஜோன்சன்.  

"ஓமோம்!" எனக் கூறியபடி தனது தலையை ஆட்டினாள் கோகிலா.  

"அதுசரி! நீ பின்னேரம் தேனீர் குடித்தாயா?" எனக் கோகிலாவைப் பார்த்துக் கேட்டான் ஜோன்சன்.  

"இல்லை?" என நறுக்ெகனப் பதிலளித்தாள் கோகிலா.  

"ஏன் குடிக்கவில்லை?" என் மீது கொண்ட கோபத்தினால் தானே நீ குடிக்கவில்லையா" எனத் துருவிக் கேட்டான் ஜோன்சன்.  

"இல்லை? இன்றைக்கு எனக்குப் பசிக்கவில்லை? அதனால்தான் இன்று தேனீர் குடிக்வில்லை?" எனக் கூறினாள் கோகிலா.  

"உண்மையைச் சொல்லு? என் மீது கொண்ட கோபத்தினால்தானே நீ தேனீர் குடிக்கவில்லை?" என உண்மையைக் கண்டறியும் நோக்கத்திற்காகக் கேள்வியைத் தொடர்ந்தாள்.  

"ஆமாம்! உங்கள் மீது கொண்ட கோபத்தினாற்றான் நான் தேனீரை குடிக்கவில்லை. இப்பொழுது உங்களுக்குச் சந்தோஷம்தானே?" என வெடுக்ெகன பதிலளித்தாள் கோகிலா.  

"அப்படியா? சரிவா, இருவரும் தேனீரைப் பகிர்ந்து சாப்பிடுவோம்?" என ஜோன்சன் கூறினான்.  

"சரி! நீங்கள் அரைவாசியைக் குடித்துவிட்டு எனக்குத் தாருங்கள். நான் குடிக்கின்றேன்" எனக் கோகிலா கூறினாள்.  

இதைக் கேட்டதும் சந்தோஷ மிகுதியால் ஜோன்சன் தேனீரில் முக்கால் பங்கைக் குடித்து விட்டான்.  

"ஐய்யய்யோ! பாவம். அரை வாசிக்கும் குறையத்தானே உனக்கு இருக்கிறது. அடுத்த தடவை குடிக்கும் போது கூடத் தருகின்றேன். கோவிக்க வேண்டாம்?" எனக் கூறிக் கொண்டே ஜக்ைக கோகிலாவிடம் நீட்டினான் ஜோன்சன்.  

கோகிலா ஜக்ைக வாங்கி அதனுள்ளிருந்த தேனீர் முழுவதையும் மடமடவென இடைவிடாது குடித்து முடித்தாள்.  

"பார்த்தாயா? உனக்கு எவ்வளவு பசி என்று? இதை நீ கூறாவிட்டாலும் உன்னுடைய செயலில் இருந்து நான் கண்டு கொண்டேன்" எனச் சிரித்துக் கொண்டே கூறினான் ஜோன்சன்  

இதைக் கேட்டதும், கோகிலா தன் முகத்தை உம்மொன்று வைத்துக் கொண்டிருந்தாள்.  

ஜோன்சன் அவளின் கோபம் இன்னும் தீரவில்லை என்பதை மட்டும் நன்கு உணர்ந்து கொண்டான்.  

கோகிலாவைப் பொறுத்த வரை தான் ஒரு சிறைக்ைகதியாக இருப்பதாகவே நினைத்துக் கொண்டிருந்தாள். அவள் எண்ணத்திலும் எதுவித தவறுமில்லை.  

ஜோன்சன் வங்கி முகாமையாளராகக் கடமையாற்றியமையால் அவனுக்கு காலை முதல் மாலை வரை தொடர்ந்து வேலை செய்ய வேண்டிய அவசியமிருந்தது. அத்துடன், விசேடமாக மாதமிருமுறை கொழும்புக்குச் செல்ல வேண்டும். மேலும் அவன் கடமையாற்றிய வங்கி வருடம் முழுவதும் திறந்திருக்கும் வங்கி என்பதால், அவனால் வங்கியை விட்டு வெளியில் செல்வது கடினமாக இருந்து. அத்துடன் லீவு எடுப்பது இதனைவிடக் கடினமானது. விசேட காரணத்துக்காக விடுமுறை பெறுவதாயினும் அத்திபூத்தாற் போல ஆறு அல்லது ஏழு மாதங்களுக்குகொரு முறை தான் பெறலாம். இது தனியார் வங்கி என்பதால் கட்டுப்பாடுகளும் அதிகம்.  

இந்நிலையில் கோகிலா வெளியிற் செல்லவோ நண்பர்களுடன் உறவாடவோ முடியாத நிலை காணப்பட்டது. அதனால் அவள் மாதக்கணக்கில் வீட்டிலேயே முடங்கிக் கிடந்தாள். அதன் வெளிப்பாடுதான் இந்த மனக்கசப்புக்குக் காரணம் என்பதை ஜோன்சன் உணர்ந்து கொண்டான்.  

எனவே, கோகிலாவைத் திருப்திப் படுத்தவும், அவளுடைய தனிமையைப் போக்கவும் அவளை மீண்டும் ஆசிரியைத் தொழிலில் ஈடுபட அனுமதிக்க வேண்டுமென விரும்பினான்.  

கோகிலா ஆங்கில மொழியில் கலைமானிப்பட்டம் பெற்றவள். அவள் ஆங்கிலம் போதித்துப் பல மாணவர்களை திறமைசாலிகளாக உருவாக்கியவள். ஜோன்சனைத் திருமணஞ் செய்வதற்கு பின்பு கூட அவள் தனது ஆசிரியைத் தொழிலைவிட விரும்பவில்லை. எனினும் ஜோன்சனின் கட்டிப்பான உத்தரவுக்கிணங்கவே தனது ஆசிரியத் தொழிலை இராஜினாமாச் செய்தாள்.  

ஜோன்சன் தனது முடிவைக் கூறியதும், கோகிலாவின் சந்தோஷத்துக்கு அளவே இல்லை. உடனடியாக ஆங்கிலத் தனியார் வகுப்பை ஆரம்பித்தாள். புது இடம் என்பதாலும், அவளுடைய திறமையைப் பற்றி எவரும் அறியாததாலும் மாணவர்களின் வரவு மிகவும் குறைவாகவே காணப்பட்டது. மாணவர்களின் வரவு குறைவாக இருந்தாலும் பரவாயில்லை. காலத்தையாவது கடத்தலாம் என் ற நிலையில் மிகவும் ஆவலுடன் கற்பிக்கத் தொடங்கினாள் கோகிலா.  

இந்நிலையில் கந்தையா மாஸ்டரின் மகன் ஆனந்தன் தென் கிழக்குப் பல்கலைக்கழகத்திலே படித்துக் கொண்டிருந்தான். அவன் தனது ஆங்கில அறிவை மேலும் விருத்தி செய்ய கோகிலாவிடம் வந்தான். கோகிலாவும் மிக்க ஆர்வத்துடன் அவனுக்குக் கற்பித்து வந்தாள்.  

ஆனந்தன் கல்வி கற்கும் போது, அவளின் அழகில் மயங்கியவனாக அவளையே வைத்தகண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான். இதனை அவதானித்த கோகிலா அவனைப் படிப்பிலே கவனஞ் செலுத்தும்படி பலமுறை கண்டித்திருக்கிறாள். ஆனால் அவள் அவளைத் தனக்குள் ரசித்து பூரிப்படைந்து கொண்டிருந்தான்.  

இதனால் கோகிலாவுக்கு அவன் மீது வெறுப்பேற்பட்டு விட்டது. வளர்ந்தவன் என்று கூடப் பார்க்காமல் பலமுறை பிரம்பால் அடிததிருக்கின்றாள். அதற்காகப் பல தடவைகள் வருத்தப்பட்டுமுன்னாள்.  

ஆனந்தன் கோகிலாவின் மீது கொள்ளை ஆசை கொண்டவனாகக் காணப்பட்டான். இதனால் தனது பிரத்தியே வகுப்பு முடிந்தாலும் ஒருசில மணித்தியாலங்கள் அவளுடன் அளவளாவி ஆனந்தமடைவான்.  

இவ்வாறு இருவரும் நீண்ட நேரம் கதைத்து வந்ததால் அவர்களிடையே நட்பு உருவானது. இது நாளடைவில் அன்பையும் பாசத்தையும் ஏற்படுத்தியது. இதனால் இருவரும் அடிக்கடி சந்தித்து வந்தனர்.  

இந்தச் சந்திப்பு நாளடைவில் காதலாக மாறியது. இதனால் இருவரும் நெருங்கிப் பழகத் தொடங்கினார்கள்.  

இந்த உறவை ஜோன்சனும் அறியவில்லை. அவனுக்குத் தொழில் மீது அதிக ஈடுபாடு. தனது மனைவி ஒழுக்க சீலியாகவும், பண்புள்ளவளாகவும் காணப்பட்டதால் அது பற்றிச் சிந்திக்க வேண்டிய அவசியமும் அவனுக்கு ஏற்படவில்லை.  

ஒருநாள் எதிர்பாராதவிதமாக ஜோன்சன் தனது வீட்டுக்குச் சென்னான். அங்கே கோகிலாவும், ஆனந்தனும் அறைக்குள் கதைத்துக் கொண்டிருந்தார்கள்.  

கோகிலா ஜோன்சனைக் கண்டதும் தன்னை ஒருவாறு சமாளித்துக் கொண்டு வெளியில் வந்தாள் ஆனந்தனும் படபடப்புடன் அவ்விடத்தைவிட்டு ஓடுச் சென்றான். இது ஜோன்சனுக்குப் பெரிய அதிர்ச்சியாக இருந்தது.  

கோகிலாவின் பயமும், பதற்றமும் ஜோன்சனுக்கு மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தியது.  

ஆத்திரங் கொண்ட ஜோன்சன் கோகிலாவைப் பலமுறை அறைந்தான். தன் கைகள் வலிக்கும் வரை மாறிமாறி அறைந்தான். அவளும் அசையவில்லை. கடைசியாக அவளை வெளியில் இழுத்துச் சென்று வீட்டைவிட்டு ஓடுமாறு கத்தினான்.  

கோகிலாவுக்கு ரோசம் பிறந்து விட்டது. அவளும் வீட்டை விட்டு விறுவிறுவென நடையைக் கட்டினாள். ஆனந்தனுக்குத் தொலைபேசியினூடாக நடந்த விடயத்தைக் கூறினாள். ஆனந்தன் உடனடியாக வந்து கோகிலாவை அழைத்துக் கொண்டு ஒலுவிலுக்குச் சென்றுவிட்டான்.  

ஒலுவிலில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அவளை அமர்த்தினான். அவளோடு அவனும் தொடர்ந்து வசித்து வந்தான். ஒலுவிலில் கல்வி கற்கும் மாணவப் பட்டாளங்கள் ஆங்கிலக் கல்விக்காக ஏங்கிக் கிடந்தார்கள். காலை தொடக்கம் மாலை வரை தொடர்ச்சியாக ஆங்கிலக் கல்வியைப் புகட்டினாள். இதனால் அவளுக்கு இலட்சக்கணக்கான பணம் மாதாந்தம் கிடைத்தது.  

இந்நிலையில் கந்தையா மாஸ்டருக்கு தனது மகனின் செயற்பாடுகள் காதுக்குள் எட்டின. இதனால் மிகவும் ஆத்திரம் அடைந்த கந்தையா மாஸ்டர் தனது மகனை ஒருநாள் கல்முனைக் கடற்கரைக்கு அழைத்துச் சென்றார்.  

"நீ! கோகிலாவுடன் சேர்ந்து வாழுவதாகக் கேள்விப்பட்டேன். அது உண்மையா?" என நேரடியாகவே தன் மகனைப் பார்த்துக் கேட்டார்.  

எந்தவித பதற்றமுமின்றி "ஆமாம்!" என அமைதியாகப் பதிலளித்தான் ஆனந்தன்.  

இதைக் கேட்டதும் கந்தையா மாஸ்டருக்குக் கோபம் புட்டுக் ெகாண்டு வந்தது. எனினும் தனது கோபத்தை சமாளித்துக் கொண்டு மீண்டும் தொடர்ந்தாள்.  

"எனது கௌரவம், எனது குடும்ப கௌரவம் எல்லாம் உனக்குத் தெரியுந்தானே?"  

"ஆமாம்!" என ஒரு வார்த்தையில் பதிலளித்தான் ஆனந்தன்.  

"இப்படிப்பட்ட எனது கௌரவத்தை உனது செயலால் அழித்தொழிக்கப் பார்க்கிறாய்? இதனை உடனடியாக நீ கைவிட வேண்டும்" எனக் கூறிச் சீறிப்பாய்ந்தார் கந்தையா மாஸ்டர்.  

"கோகிலாவைக் கைவிட்டு என்னால் ஒரு நிமிஷம் கூட வாழ முடியாது? எந்தக் கௌரவத்தையும் காட்டி எங்களைப் பிரிக்க முடியாது?" என நேரடியாகவே மறுப்பைத் தெரிவித்தான் ஆனந்தன்.  

"டேய்! நீ ஒரு குமரியைக் காதலித்திருந்தால் நான் அதற்கு மறுப்புத் தெரிவிக்க மாட்டேன். நீ ஒருவனின் மனைவியைத் திருட்டுத்தனமாகக் களவாடி உறவாடுவதை என்னால் எப்படிப் பொறுத்துக் கொள்ள முடியும்? நீ உடனடியாக அவளை விட்டு வெளியே வா. இல்லாவிட்டால் விபரீதமான முடிவை நான் எடுக்க வேண்டிவரும்" எனத் தன் நிலைப்பாட்டை ஆணித்தரமாக நிலை நிறுத்தினார் கந்தையா மாஸ்டர்.  

"அப்பா! நீங்க என்ன சொன்னாலும் நான் கோகிலாவை விட்டு வெளியே வரமாட்டேன். கோகிலாதான் என் காதலி. அது மட்டுமல்ல. அவள் இப்பொழுது என் மனைவியுங் கூட. இந்நிலையில் உங்கள் கௌரவத்துக்காக இதனை விட்டுக் கொடுக்க நான் தயாரில்லை?" வெடுக் ெகனப் பதிலடி கொடுத்தான் ஆனந்தன்.  

இதைக் கேட்டதும் கந்தையா மாஸ்டருக்குக் கோபம் உச்சிக்கு ஏறிவிட்டது.  

"டேய்! நீ கீழ்த்தரமான காரியத்தைச் செய்வாய் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை. நீ என்ர மானத்தை மட்டுமல்ல, எமது குடும்பக் கௌரவத்தையும் கெடுத்து விட்டாய்? உன்னைக் கொன்றுவிட்டு நானும் செத்துப் போறதுதான் இதற்குத் தீர்வு" எனக் கத்தினார்.  

இதைக் கேட்டதும் ஆனந்தன் சீறிப் பாய்ந்தான்.  

"எனக்கு வயது இருபது. என்னை யாரும் கட்டாயப்படுத்தவோ, தண்டிக்கவோ முடியாது? என் இஸ்டப்படியே என் வாழ்க்ைகயைத் தீர்மானிப்பேன். எனக்கு என் குடும்ப கௌரவத்தைவிட என் வாழ்க்ைகயே முக்கியம். இதில் யாரும் தலையிட வேண்டிய அவசியமில்லை?" என விடாப்பிடியாக எதிர்த்து வாதிட்டான் ஆனந்தன்.  

" டேய்! உன்னால் எனது குடும்ப மானம் போய்விட்டது? அதுதான் போனாலும் பரவாயில்லை. உனது தங்கையின் எதிர்கால வாழ்க்ைகயை நினைத்தாவது நீ அவளை மறுத்துவிட வேண்டும்" எனக் கெஞ்சினார் கந்தையா மாஸ்டர்.  

"என்னை மலைபோல நம்பித்தான் கோகிலா வந்துள்ளாள். அவளைக் காப்பாற்ற வேண்டிய தார்மீகக் கடமை எனக்குண்டு. இதில் தயவுசெய்து தலையிடாதீர்கள்?" என ஆனந்தன் தன் நியாயத்தை மீண்டும் வலியுறுத்தினான்.  

"மகனே! நான் உனது கால்களைப் பிடித்து கெஞ்சுக் கேட்கிறேன். எமது குடும்ப கௌரவத்தைக் காப்பாற்றுடா? இது உனது கைகளில்தான் இருக்கிறது? எனக் கூறிக் கொண் அவளின் கால்களைப் பற்றினார் கந்தையா மாஸ்டர்.  

"நான் செத்தாலும் சொத்துப் போவேன் ஆனால் கோகிலாவை மட்டும் பிரிந்து வாழ மாட்டேன். தயவுசெய்து என்னை வாழ விடுங்கள்" என ஆணித்தரமாக கூறினான் ஆனந்தன்.   

கந்தையா மாஸ்டருக்கு மீண்டும் கோபம் புட்டுக் ெகாண்டு வந்தது, "அதையாவது செய்து தொலைடா? அதனாலாவது எனது குடும்ப கௌரவம் காப்பாற்றப்படட்டும்?" என ஆத்திரத்தோடு கூறினார்.  

ஆனந்தன் கந்தையா மாஸ்டரைப் பார்த்து மீண்டும் கேட்டான் "நான் செத்துப் போகட்டா?"  

கந்தையா மாஸ்டர் எதையும் யோசிக்காதவராக, "செத்துத் தொலைடா? அதனாலாவது நிம்மதியாக வாழலாம்?" எனக் கூறினார்.  

இதனைத் தொடர்ந்து இருவரும் எழுந்து தனித்தனியாகச் சென்றனர்.  

ஆனந்தன் அன்று இரவு முழுவதும் மனநிம்மதியற்றவனாக மனக்குழப்பத்துடன் காணப்பட்டான்.  

அடுத்தநாள் காலை அவனது உடல் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தது. இதனால் கந்தையா மாஸ்டரின் கௌரவம் காப்பாற்றப்பட்டதா?  

அருள் அரசன் 

Comments