எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த மக்களை! | தினகரன் வாரமஞ்சரி

எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த மக்களை!

பெருந்தோட்ட துறையிலிங்கு பிழைகள் பல நேர்ந்ததாலே வருமானம் குன்றித் தோட்டம் வரட்சி நிலை காணுவதால் நிர்வாகப் பொறுப்பில் உள்ள நிர்வகிப்புத் தன்மையெல்லாம் பொதுவான மாற்றம் கண்டு  புதிய நிலை உருவாகியதால் தொழிலாளர் வேலையற்று தொல்லைகள் பல ஏற்றார்

பெருந்தோட்டத் துறையின் இன்றைய பேரவல நிலைதனை ஒரு சில வரிகளில் ஓங்கி ஒலிக்கச் செய்யும் நடைப்பா சித்திரத்தின் நயமான கவி இது.

பெருந்தோட்டத்துறை தோல்வி கண்டுவரும் தொழிற்றுறையாக மாறியுள்ளது. அச்சாணியாகத் திகழ்ந்த பல்வேறு அம்சங்கள் ஆட்டம் கண்டுள்ளன. இதனால் இத்துறைக்கே அர்ப்பணமான சமூகமொன்றின் காலத்துக்கு ஏற்புடையதான மாற்றம் ஏற்படுவதில் ஏகப்பட்ட தடைகள் ஏற்றுக்கொள்ள முடியாத இடையூறுகள்...

இத்தனைக்குமிடையில் இம்மக்கள் நம்பியிருக்கும் ஒரே வாழ்வாதார துறையாக தேயிலையே காணப்படுகின்றது. இத்துறையின் வீழ்ச்சி ஒட்டுமொத்த மலையகத்துக்கும் தொழில் ரீதியான சவாலாகவே விளங்குகின்றது. இன்றைய நிலையில் சுமார் 1,40,000பேர் வரை இத்துறையில் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்கு சட்டென வேறு ஒரு வாழ்வாதார பொறிமுறையை உருவாக்கிக் கொள்வது சாத்தியப்படாத சங்கதி. மெல்ல மெல்லவே மாற்றுத் தொழில் அறிமுகம் இடம்பெற முடியும். தற்போதுள்ள பெருந்தோட்டக் கட்டமைப்பு என்பது நம்பகத்தன்மையிலான நகர்வுகளை மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்க முடியாது. ஏனெனில் பெருந்தோட்ட மக்களையும் சர்வதேச சமூகத்தையும் ஏமாற்றும் காரியங்களிலேயே பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் ஈடுபட்டு வருவதாக தெரிகிறது.

ஒரு வகையில் இந்த நடவடிக்கைகள் அன்றைய பிரித்தானிய ஏகாதிபத்தியம் இலங்கையில் நடந்து கொண்ட முறைக்கு ஒப்பானதே. இலங்கை தோட்டத் தொழிலாளர்கள் மனிதாபிமான ரீதியிலும் சர்வதேச தொழில் நியதிகளுக்கு உட்பட்ட வகையிலும் நடத்தப்படுவதாகக் காட்டிக்கொள்ள சட்டங்கள் இயற்றுவதில் அந்நியர் ஆட்சி கண்ணாயிருந்தது. ஆனால் உண்மையில் தோட்டத் தொழிலாளர்கள் அடிமைகளாகவே நடத்தப்பட்டனர். இது தான் வரலாறு. இன்றும் கூட அந்த அடிமைத்தனம் என்ற வார்த்தையையே பாவிக்க வேண்டியிருக்கின்றது. என்னே பரிதாபம்! இதை நாம் சொல்லவில்லை. அண்மையில் பெருந்தோட்டப் பகுதிகளுக்குச் சென்று தோட்ட மக்களின் வாழ்வியல் சம்பந்தமான ஆய்வுகளை மேற்கொண்ட லிசாஃபுளர் என்னும் ஆய்வாளர் வெளிப்படுத்தியுள்ள தகவலே இது. இந்த ஆய்வு விபரம் சர்வதேச ஊடகமான ​ேராய்ட்டர்ஸ் மூலம் பொதுவெளியில் பரவியுள்ளது. இதுசம்பந்தமான விபரங்களை நமது நாட்டு தமிழ், ஆங்கில ஊடகங்கள் பிரசுரித்துள்ளன.

இலங்கைத் தேயிலைக்கு சர்வதேச ரீதியில் நிலைபேறான ஒரு சந்தை வாய்ப்பை ஏற்படுத்திக்கொள்ள சர்வதேச சான்றுகளைப் பெறும் முயற்சியாக தோட்டத் தொழிலாளர்கள் சிறப்பாக நடத்தப்படுவதாகவும் தேயிலையின் தரமும் உயர்ந்து காணப்படுவதாகவும் விளம்பரப்படுத்திக் கொள்ள வேண்டிய தேவையுள்ளது. நிறுவனக் கட்டமைப்பும் உற்பத்தி முறைமையும் உயரிய தரத்தில் இருப்பதை உறுதிசெய்தே இத்தர சான்றுகள் வழங்கப்படுகின்றன. பொதுவாக உற்பத்தி மற்றும் ஏற்றுமதி வர்த்தகத்தில் ஈடுபடும் நிறுவனங்கள் இவ்வாறு சர்வதேச தர நிர்ணய சான்றுகளைப் பெற முயற்சிப்பது வழமையான சங்கதியே. அந்த வகையில் இவ்வாறான தரச்சான்றுகளை வழங்கும் சர்வதேச அங்கீகாரம் பெற்ற இரண்டு நிறுவனங்கள் தான் ரெயின்ஃபொரஸ்ட் மற்றும் ஃபெயா்ட்ரேட் நிறுவனங்கள். இத்தரச் சான்றுகள் இலங்கைப் பெருந்தோட்டக் கம்பனிகளுக்குக் கிடைத்திருப்பதாக ஆய்வாளர் லிசாஃபுளர் வெளியிட்டுள்ள தகவல்கள் அவதானிகள் மத்தியில் ஆச்சரியத்தை வெளிப்படுத்தியுள்ளன.

இந்தச் சான்றுகள் தோட்டத் தொழிலாளர்கள் சிறப்பாக நடத்தப்படுவதை உறுதிப்படுத்துகின்றது. ஆனால் லிசாஃபுளரின் நேரடி ஆய்வு பெருந்தோட்டத் தொழிலாளர்கள் பல்வேறு விதமாக இன்னும் அடிமைப்படுத்தப்பட்ட நிலையிலேயே இருப்பதை உறுதிசெய்கின்றது. இதனால் பொருந்தோட்டக் கம்பனிகள் பொய்யான தகவல்களைக் கூறி போலியான சான்றுகளைப் பெற்று வந்திருக்கின்றன என்ற இரகசியம் அம்பலமாகியுள்ளது. ஏனெனில் பெருந்தோட்ட மக்களின் அவல வாழ்வுநிலை அகன்று போயுள்ளதாக நம்மவர்கள் கூட பீற்றிக்கொண்டு அறிக்கை விடும் இந்நாட்களில் இந்த வெளிப்படுத்தல் அதி கவனத்துக்கு உள்ளாகவே செய்யும்.

தவிர சர்வதேச ரீதியில் இலங்கைப் பெருந்தோட்டக் கம்பனிகள் போலியான சான்றுகளைப் பெற்றுள்ளமை உறுதிப்படுத்தப்படுமானால் இலங்கைத் தேயிலை ஏற்றுமதியில் சரிவும் வருமானமும் இழப்பு ஏற்பட இடமுண்டு. மனித நேயம் குறித்து கரிசனை காட்டும் நாடுகள் இலங்கைக்கு அழுத்தத்தைப் பிரயோகிக்கத் தயங்காது. இதனால் கம்பனிகளுக்கும் நெருக்கடி ஏற்படும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். இதுவரை காலமும் கூட்டு ஒப்பந்தம் மூலம் அதிக நன்மையடைந்த பெருந்தோட்டக் கம்பனிகள் கூட்டு ஒப்பந்தம் பற்றிய விமர்சனங்கள் அதிகரித்ததையடுத்து மாற்றுத் திட்டம் ஒன்றுக்குத் தயாராகும் பின்புலத்திலேயே இவ்வாறான சர்வதேச தேயிலை இறக்குமதி நாடுகளை ஏமாற்றும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வந்திருக்கின்றன என்பது இப்போது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. இது தோட்ட முதலாளிமார் சம்மேளனத்தின் செயற்பாடுகள் குறித்ததான அவநம்பிக்கையை அதிகரிக்கச் செய்கின்றது. உற்பத்தி முறைமை சம்பந்தமான கம்பனி தரப்பின் உத்தரவாதங்கள் கூட கேள்விக்குட்படுத்த வேண்டியுள்ளது. ஏனெனில் இந்த வெளியாள் உற்பத்தி முறைமை தற்போதைய சம்பள முறைக்கு மாற்றுப் பொறிமுறை என்ற வியாக்கியானம் செய்கின்றது கம்பனி தரப்பு. ஆனால் இது தோட்டத் தொழிலாளர்களது வாழ்க்கையை நடத்துவதற்குப் போதுமானதாக இருக்குமா? என்பது இங்கே முக்கியமான கேள்வி.

தேயிலைக் காணிகளையே பகிர்ந்தளிப்பதாக தோட்டக் கம்பனிகள் கூறுகின்றன. ஆனால் உண்மையில் பகிர்ந்தளிக்கப்படுவது தேயிலைச் செடிகளே என்றும் கூறப்படுகின்றது. அந்த வகையில் இந்த வெளியாள் உற்பத்தி முறைமை கூட பொய்யுரை கலந்த ஏமாற்றுதலும் சுரண்டலுமே என்று விமர்சனம் முன்வைக்கப்படுகின்றது.

தவிர 'புளொக்கு'கள் ஒப்பந்த முறையில் வழங்கப்பட்டாலும் கம்பனி நினைத்த நேரத்தில் அவைகளை மீளப் பெறக்கூடியதாக இருக்கும் என்றும் சொல்லப்படுகின்றது. கூடியவகையில் பெருந்தோட்டத்துறை இன்று வீழ்ச்சியடைவதற்கான முழுப்பழியையும் தோட்டத் தொழிலாளர்கள் மீது சுமத்துவதே கம்பனிகளின் வழக்கமாகப் போய்விட்டது. இன்று தோட்டங்கள் காடுகளாகி வருவதற்கு ஆளணிப்பற்றாக்குறையே அடிப்படைக் காரணம் என்று அங்கலாய்க்கும் கம்பனி, தொழிலாளர் வெளியேற்றத்தைத் தவிர்க்கவோ அல்லது அவர்களைத் தக்கவைத்துக் கொள்ளவோ இதுவரை என்ன செய்திருக்கின்றது என்ற கேள்வி எழுகின்றது. தொழிலைக் கூலி வேலை என்று குறிப்பிடும் நிலையை மாற்றி அதைக் கெளரவப்படுத்துவதே தமது நோக்கமென்று கூறிக்கொள்ளும் கம்பனிகள் மறுபுறம் சர்வதேசத்தை ஏமாற்ற தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரம் மேம்பாடு அடைந்திருப்பதாக காட்டிக் கொள்ள முனைகின்றன.

கூட்டு ஒப்பந்தத்துக்குள் முறையாக உள்வாங்கப்படாவிட்டாலும் கடந்த 2016ஆம் ஆண்டு கூட்டு ஒப்பந்தத்தில் சூட்சுமமாக இவ்விடயம் நுழைக்கப்பட்டிருந்தது. இந்த வருடம் செய்து கொள்ளப்பட்ட கூட்டு ஒப்பந்தத்தில் கூட இது சம்பந்தமாக வெளிப்படையாக எதுவும் கூறப்பட்டிருக்கவில்லை. தவிர ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும், கைச்சாத்திடாத தொழிற்சங்கங்களைக் கலந்தாலோசிக்காமல் தான்தோன்றித்தனமாக இந்த வெளியாள் தொழில் முறைமையைப் புகுத்திவருவதால் தம் பங்குக்கு தொழிற்சங்கங்கள் விமர்சிப்பதில் ஈடுபடுவதோடு நின்றுவிடுகின்றன.

தற்போதுதான் இந்த வெளியாள் உற்பத்தி முறைமை அமுலாகக்கப்படுவதன் ஊடாக உள்ளூர் (தோட்ட) தொழிலாளர்ககள் பாதிக்கப்படுவதாக பகிரங்க விவாதங்களுக்குத் தயாராகின்றன. மலையக தொழிற்சங்கங்கள். 1980களிலேயே இம்முறைப் பரீட்சார்த்தமாக அறிமுகப்படுத்தப்பட்டு தொழிற்சங்கங்களின் கடுமையான எதிர்ப்பால் கைவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது. தற்போது இதன் சாத்தியத் தன்மை குறித்து ஆராய நியமிக்கப்பட்டிருந்த செயற்குழு தமது அறிக்கையைக் கையளித்துள்ளதாக தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

வெளியாள் உற்பத்தி முறைமையில் பொதுவான வரைமுறை ஒன்றை எற்படுத்தி தொழிலாளர்களுக்கு பாதிப்பு இல்லாத வண்ணம் அதனை அமுலாக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள பெருந்தோட்டக் கம்பனிகள் இணங்கியிருப்பதாக இ.தொ.கா தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கான யோசனைகள் தொழிற்சங்கங்களுக்கு வழங்கப்பட்டு இறுதித் தீர்மானம் ஒன்று எட்டப்படலாம் என்றும் தெரியவருகின்றது. எது எப்படியிருந்த போதும் கம்பனி தரப்பின் சர்வதேசத்தை ஏமற்றும் மோசடி ஆய்வாளர் லிசாஃபுளருக்குத் தெரிந்திருக்கும் நிலையில் மலையக தொழிற்சங்கங்கள் எதற்குமே தெரியாமற் போனமை ஆச்சர்யத்திலும் ஆச்சர்யமே!  

பன். பாலா 

Comments