தமிழ் முற்போக்குக் கூட்டணியும் களுத்துறை மாவட்டத் தமிழ்ச் சமூகமும் | தினகரன் வாரமஞ்சரி

தமிழ் முற்போக்குக் கூட்டணியும் களுத்துறை மாவட்டத் தமிழ்ச் சமூகமும்

2018ஒக்டோபர் 26ல் ஏற்பட்ட திடீர் ஆட்சி மாற்றத்தால் நல்லாட்சி முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. இந்த மூன்றரை வருட காலப்பகுதியில் நடந்தது என்ன என்பது பற்றி ஆராய வேண்டியுள்ளது.  

இக்காலப்பகுதியில் மலையக மக்களுக்கு கிடைத்த நன்மைகள் என்ன? அவர்கள் எதிர்பார்த்தவை கிடைக்கப்பெற்றதா? நிறைவேற்றி வைக்கப்பட்டதா? நல்லாட்சி குறித்து அவர்கள் திருப்தியடைந்துள்ளார்களா? மலையக அமைச்சர்களாக இருந்தவர்கள் மக்களின் மனங்களை வென்றெடுக்கும் வகையில் நடந்து கொண்டார்களா?  

2015தேர்தலின்போது முன்வைக்கப்பட்ட தோட்டத் தொழிலாளருக்கான 7பேர்ச் காணி தனி வீட்டுத் திட்டம், காணி உறுதி குறித்து திருப்திகொள்ள முடியுமா? கல்வி மற்றும் சுகாதாரம் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளதா? இவ்வாறு பல கேள்விகளுக்கு விடை காணப்பட வேண்டியுள்ளது.  

தோட்டத் தொழிலாளர் வசித்து வரும் லயன் முறையை இல்லாதொழிக்கு முகமாக மலையகத்தின் பல பகுதிகளிலும் ஆரம்பிக்கப்பட்ட தனி வீட்டுத் திட்டம் ஏற்கனவே அமைக்கப்பட்ட வீட்டுத் திட்டங்கள் இவற்றிற்கு பெற்றுக் கொடுக்கப்பட்ட வீட்டுறுதி குறித்து ஓரளவு திருப்தியடையக்கூடியதாக இருந்த போதிலும் பெரும்பாலும் மலையகத்தின் குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டுமே பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளன.  

அதேபோன்று கூரைத் தகடுகள், ஆலயங்களுக்குத் தேவையான ஒலிபெருக்கிச் சாதனங்கள், சமையல் பாத்திரங்கள், கூடாரங்கள் மற்றும் உதவிகளும் கூட குறிப்பிட்ட இந்த பிரதேசங்களுக்கே பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளன.  

களுத்துறை, இரத்தினபுரி, கேகாலை போன்ற மாவட்டங்களில் இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரியவில்லை.  இந்த மாவட்டங்களில் தமிழ் மக்கள் சார்பாக குரலெழுப்புவதற்கு மக்கள் பிரதிநிதிகள் எவருமே இல்லாமையே இதுபோன்ற நிலைமை ஏற்படுவதற்கு காரணமாக அமைந்து விடுகிறது.  

களுத்துறை மாவட்டத்தைப் பொறுத்தவரையில் கடந்த மூன்றரை வருட காலம் குறித்து மக்கள் அதிருப்தியடைந்தவர்களாகவே உள்ளனர். 100நாள் ஆட்சியில் களுத்துறை மக்களுக்கு எதுவுமே செய்யமுடியாமற் போய்விட்டது. நிரந்தர ஆட்சியில் களுத்துறை மக்களுக்கு முழுமையான சேவை பெற்றுக் கொடுக்கப்படும் என தமிழ் முற்போக்கு கூட்டணி தெரிவித்திருந்தது.  எனினும்  கடந்த மூன்றரை வருட காலத்தில் இந்த மாவட்ட மக்களுக்கு நன்மை கிடைத்துள்ளதா என்பது குறித்து விரிவாக ஆராயப்பட வேண்டியுள்ளது.  

களுத்துறை மாவட்டத்தில் தனி வீட்டுத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டதாக இல்லை. 2016ல் மத்துகம, பள்ளேகொட தோட்டம் மேற்பிரிவில் ஏற்பட்ட தீ விபத்தினால் பாதிப்புக்குள்ளான பத்து குடும்பங்களுக்கு அமைச்சர் பழனி திகாம்பரம் தலைமையில் அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டு அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் தலா ஆறரை இலட்சம் ரூபா செலவில் வீட்டுத் திட்டம் அமைக்கப்பட்டு பயனாளிகளிடம் இலவசமாக கையளிக்கப்பட்டது.  

இந்த வீட்டுத் திட்டம் ஒன்றே அமைச்சர் பழனி திகாம்பரம் தலைமையில் முதன் முதலாக திறந்து வைக்கப்பட்ட வீட்டுத்திட்டமாகும். இதனையடுத்து 2017மே மாதத்தில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண் சரிவினால் பாதிப்புக்குள்ளான வோகன் கீழ்ப் பிரிவு (36) டெல்கித் இலுப்புவத்த (21)  பிரிவு, நியூச்செடடல் ஹோம் டிவிசன் (31) கொபவெல (21) ஆகிய தோட்டங்களில் ஏழு பேர்ச் காணியில் மலைநாட்டு புதிய கிராமம் உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் தலா 10இலட்சம் ரூபா செலவில் ஆரம்பிக்கப்பட்டு வரும் வீட்டுத் திட்டங்கள் மந்த கதியிலேயே இடம்பெற்று வருகின்றன.  

இந்த வீட்டுத் திட்டங்களில் பூர்த்தி செய்யப்பட்ட 29வீடுகளைக் கொண்ட அரப்பொலகந்த தோட்டம், லிஸ்க்லேன் பிரிவு வீட்டுத்திட்டம் என்பன கடந்த ஜுலை 1ஆந் திகதி அமைச்சர் ராஜித சேனாரத்ன தலைமையில் திறந்து வைக்கப்பட்டது. இருந்த போதிலும் இங்கு 17இலட்சம் ரூபா செலவில் ஆரம்பிக்கப்பட்ட குடிநீர்த் திட்டம் முழுமையாகப் பூர்த்தி செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்  

புரொசெல்படார் கோவின்னகந்த பிரிவில் பூர்த்தி செய்யப்பட்ட 18வீடுகளைக்கொண்ட வீட்டுத் திட்டம் திறந்து வைக்கப்படாத நிலையில் பயனாளிகள் குடியேறியுள்ளனர். இந்த வீட்டுத் திட்டம் 5இலட்சத்து 20ஆயிரம் ரூபா கடனாகவும், 4இலட்சத்து 20ஆயிரம் உதவியாகவும் வழங்கப்பட்டு ட்ரஸ்ட் நிறுவனத்தின் மேற்பார்வையில் அமைக்கப்பட்டதாகும். ஏனைய வீட்டுத் திட்டங்கள் இலவசமாகவே பயனாளிகளுக்கு கையளிக்கப்படவிருப்பதுடன், வோகன் கீழ்ப்பிரிவில் அமைக்கப்பப்பட்டு வரும் வீட்டுத்திட்டத்துக்கான  அமைச்சின் நிதி மத்துகம பிரதேச செயலகத்துக்குப் பெற்றுக்கொடுக்கப்பட்டு பிரதேச செயலக அதிகாரிகளின் மேற்பார்வையின் கீழ் பயனாளிகள் அவரவர் தத்தமது விருப்புக்கேற்றவாறு வீடுகளை அமைத்து வருகின்றனர்.  

இந்த வேளையில் மண் சரிவு அபாயத்தை எதிர்நோக்கியுள்ள வோகன், இந்தகொட பிரிவைச் சேர்ந்த 22குடும்பங்களுக்கான வீட்டுத் திட்டத்துக்கான காணியை ஒதுக்கீடு செய்வதில்  இழுபறி நிலையே இருந்து வருகின்றது.  

இவ்வாறிருக்க அரப்பொலகந்த தோட்டம், கூரி பிரிவில் கருங்கல் உடைக்கும் வேலைத்திட்டத்தினால் கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக பாதிப்பை எதிர்நோக்கி வந்த 14குடும்பங்களுக்கு இதுவரையில் வீட்டுத் திட்டம் தொடர்பாக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.  ஒதுக்கப்பட்ட காணியில் கூடாரங்களை அமைத்து கடந்த இரண்டு வருடங்களாக பெரும் சிரமத்துக்கு மத்தியிலேயே இவர்கள் வசித்து வருகின்றனர்.  

இதேவேளையில் 2017மே மாதத்தில் ஏற்பட்ட வெள்ளத்தினால் மிக மோசமாகப் பாதிப்புக்குள்ளான பகுதி புளத்சிங்கள தொகுதியாகும். குடாகங்கை, கில்கா, அல்கெட்டிய, மிஹிரிகீகெலே, கல்லுமலை போன்ற தனியார் தோட்டங்களில் பாதிப்புக்குள்ளான நூற்றுக்கணக்கான குடும்பங்களை பாதுகாப்பான பிரதேசங்களில் குடியமர்த்துவதில் இன்றும் இழுபறி நிலையே இருந்து வருகின்றது.  

இவ்வாறிருக்க  2017நவம்பர் மாதத்தில் இம்மாவட்டத்தில் வீசிய கடுங்காற்றினால் சேதமடைந்த லயன் குடியிருப்புக்கள் பல இன்னும் திருத்தப்படவில்லையென குடியிருப்பாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.  

இது ஒருபுறமிருக்க தோட்டப் பகுதிகளில் ஒருசில சிறுவர் அபிவிருத்தி நிலையங்கள் அபிவிருத்திச் செய்யப்பட்டுள்ளதுடன் சில தோட்டங்களில் தோட்டப்பாதைகள் 85மீட்டர் தூரம் வரையில் கொன்கிறீட் இடப்பட்டு அபிவிருத்திச் செய்யப்பட்டுள்ளன.  பிரதேச அரசியல்வாதிகளினால் சிற்சில திட்டங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.  

எவ்வாறாயினும் 2017ஆம் ஆண்டு மே மாதத்தில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தையடுத்து அமைச்சர் பழனி திகாம்பரம் மேற்கொண்ட நடவடிக்கை குறித்து தோட்ட மக்கள் அவரை பாராட்டத் தவறவில்லை.  

இதேவேளையில் கூட்டணியின் தலைவரான அமைச்சர் மனோ கணேசன் அவரது அமைச்சின் ஏற்பாட்டில் 20.08.2017ல் மத்துகமவிலும், 1.7.2018ல் பதுரலியவிலும் இரண்டு நடமாடும் சேவைகளை நடாத்தியுள்ளார்.  

கூட்டணியின் மற்றுமொருவரான அமைச்சர் இராதாகிருஷ்ணன்  மத்துகம சீ. டபிள்யூ. டபிள்யூ. கன்னங்கர தேசிய பாடசாலையில் அமைக்கப்பட்ட தமிழ்ப் பிரிவுக்கான கட்டடத்தை 2.8.2018ல் திறந்து வைத்தார். இவைதான் இவர்கள் இந்த மாவட்ட தமிழ் மக்களுக்கு செய்த சேவைகளாகும்.  

மலைநாட்டு புதிய கிராமம் உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சினாலோ அல்லது வேறு எந்த ஒரு அமைச்சினாலோ அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படும்போது அந்தந்த அமைச்சுக்களின் அதிகாரிகளினதும், அமைச்சர்களினால் நியமிக்கப்படும் அமைச்சர்களின் அதிகாரிகளான பிரத்தியேகச் செயலாளர், இணைப்பாளர், அமைப்பாளர், மக்கள் தொடர்பு அதிகாரி, மற்றும் நிறுவனங்களின் தலைவர்களினதும் ஒத்துழைப்பும், பங்களிப்பும் கடமை உணர்வும் மிகவும் இன்றியமையாததாகும்.  

குறைபாடுகள், தவறுகள், ஊழல் மோசடிகள் பற்றி சுட்டிக்காட்டும்போது அது குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டியது அவசியமாகும். ஊடகங்களில் சுட்டிக்காட்டப்படும் போது அது குறித்து அதிருப்தியடைவதும், அறிக்கை விடுவதும், மறுத்துரைப்பதும் பத்திரிகைகளில் வெளிவருவதைப் பார்த்துவிட்டு எங்களுக்கு நடவடிக்கை எடுக்க முடியாது என்று கூறுவதையும் தவிர்த்து உண்மையைக் கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுப்பதே அதிகாரிகளுக்கு அழகாகும்.  

2015ஜனாதிபதித் தேர்தலின்போது ஐ.தே.க. அளித்த வாக்குறுதிக்கிணங்க தோட்டத் தொழிலாளருக்கு ஏழு பேர்ச் காணி பகிர்ந்தளிப்பது தொடர்பாக அமைச்சர் அஜீத் பீ. பெரேரா தலைமையில் கடந்த அக்டோபர் 26க்கு முன்னர் தோட்ட அதிகரிகள், கம்பனி அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளுடன் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்பட்டு மூன்றரை வருடங்கள் கடந்துவிட்ட நிலையில் தீர்வு காணப்படாது, மீண்டும் ஐ.தே.க. ஆட்சி அமைத்ததையடுத்து கடந்த 18.01.2019ல் அமைச்சர் அஜித் பீ. பெரேரா தலைமையில் தோட்ட அதிகாரிகள், கம்பனி அதிகாரிகள், மாவட்டச் செயலாளர், பிரதேச செயலாளர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளுடனான பேச்சுவார்த்தை களுத்துறை மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.  

இதே தோட்டத்தில் வேலை செய்பவர்களுக்கு 7பேர்ச் காணி பகிர்ந்தளிக்க இணக்கம் காணப்பட்டது.   இதேவேளையில் களுத்துறை மாவட்டத்தில் இதுவரையில் ஒரு வீட்டுத் திட்டத்துக்கேனும் வீட்டுறுதி பெற்றுக் கொடுக்கப்பட்டதாக இல்லை.

அடுத்த தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகளே உள்ளன. தமிழ் முற்போக்கு கூட்டணியினர் கிடைக்கப்பெற்றிருக்கும் இந்த குறுகிய காலத்துள் அமைச்சர் சஜித் பிரேமதாச கூறியதைப் போல் இரவு பகல் மெய் வருத்தம் பாராது கடுமையாகப் பாடுபட்டு உழைக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.  

மீண்டும் கிடைத்திருக்கும் இந்த வாய்ப்பை மககளுக்காகப் பயன்படுத்தி ஆரம்பிக்கப்பட்ட வீட்டுத் திட்டங்களில் காணப்படும் குறைபாடுகள் குறித்து கவனம் செலுத்தி துரிதமாகச் செயற்பட்டு பூர்த்திசெய்து மக்களிடம் கையளிக்கப்படல் வேண்டும். வீட்டுறுதி மற்றும் காணி பெற்றுக்கொடுக்கப்படல் வேண்டும்.  இந்திய அரசினால் வழங்கப்பட்டுள்ள 10ஆயிரம் வீட்டுத் திட்டத்தில் களுத்துறை மாவட்டத்துக்கான திட்டத்தையும் ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும்.  

கடுமையாக உழைத்த மக்கள் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும் பட்சத்திலேயே அடுத்து நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலோ, பாராளுமன்றத் தேர்தலோ அல்லது மாகாண சபைத் தேர்தலுக்கோ எவ்வித தயக்கமுமின்றி தைரியத்துடன் தமிழ் மக்கள் முன் செல்ல முடியும்.  

மக்கள் திருபதியடையக்கூடிய வகையில் சேவை செய்திருப்பார்களேயானால் மக்கள் முன் செல்ல இவர்கள் தயங்கத் தேவையில்லை. எனவே தைரியத்துடன் செய்வதற்கான ஒரு நிலையை தமிழ் முற்போக்கு கூட்டணி ஏற்படுத்திககொள்ள வேண்டியது அவசியமாகும்.  

களுத்துறை மாவட்ட மக்கள் மனதை வென்றெடுக்கும் உறுதியான ஒரு நிலைப்பாட்டை கூட்டணியினர் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.  

“களுத்துறை மாவட்டத்திலிருந்து மாகாண சபை உறுப்பினரோ,   பாராளுமன்ற உறுப்பினரோ,  தெரிவுசெய்யப்படும் வரையில்  தானே இம் மாவட்டத்துக்கு பொறுப்பாக இருப்பேன் என 1.9.2018ல் மத்துகம நகரில் நடைபெற்ற மக்கள் சந்திப்பின் போது அமைச்சர் மனோ குறிப்பிட்டிருந்தார்.

அவரது கூற்றின்படி அந்த உறுப்பினர்களுக்குரிய கடமைகளையும், பொறுப்புக்களையும் அவர் ஆற்ற வேண்டிய கடப்பாடு அவருக்குள்ளது.

இங்கிரிய மூர்த்தி 

Comments