தற்பாதுகாப்பு அறிவை வழங்குவதே சிறந்தது! | தினகரன் வாரமஞ்சரி

தற்பாதுகாப்பு அறிவை வழங்குவதே சிறந்தது!

மாணவர் பாதுகாப்பு

பாடசாலை கால நினைவுகள் அனைவருக்குமே இனிமையானவை. நாம் கற்ற பாடசாலைகளை மாத்திரமல்ல, எந்தப் பாடசாலையைக் கடந்து செல்லும் போதும், அங்கு கேட்கும் மாணவர்களின் ஆர்ப்பரிப்புக் குரல்களும், பாடசாலை மணியோசையும் ஒரு கணம் அனேகரை அவர்களது பள்ளிப் பராயத்துக்கே இட்டுச் சென்று விடும். ஆனால் கடந்த இரண்டு வாரங்களாக இலங்கையில் எந்தப் பாடசாலையைக் கடந்து சென்றாலும் ஒருவித அச்ச உணர்வே தலைதூக்குகின்றது.  

இம்முறை பாடசாலை விடுமுறை கழிந்து இரண்டு வாரங்கள் முடிவுற்ற நிலையிலும், எந்தவித ஆராவாரமும் இன்றி மயான அமைதியுடன் காணப்படும் எங்களது பாடசாலைகள், பீதியளிப்பனவாக உள்ளன. 

ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி நிகழ்ந்த தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்களை அடுத்து, இரண்டாம் தவணைக்காக ஆரம்பமாகவிருந்த அரச மற்றும் தனியார் பாடசாலைகள் காலவரையறையின்றி முடப்பட்டன. 

ஏப்ரல் மாதம் 21ஆம் திகதியன்று இடம்பெற்ற தொடர் குண்டுத் தாக்குதல்களில் சுமார் 250பேர் கொல்லப்பட்டனர், கொல்லப்பட்டவர்களில் 45பேர் சிறார்கள்.  

சுமார் ஒரு தசாப்த காலமாக எந்தவித குண்டுச் சத்தங்களும் இல்லாது சமாதானக் காற்றைச் சுவாசித்துக் கொண்டிருந்த இலங்கையர்களின் வாழ்க்கையை இத்தாக்குதல்கள் ஒரே நாளில் சீர்குலைத்து விட்டது.  

அந்தத் தாக்குதல்கள் 21ஆம் திகதியன்றோடு நின்று விட்டிருந்தால் பரவாயில்லை. அதன் பின்னரும் தற்கொலைத் தாக்குதல்கள், தேடுதல்கள், தற்கொலைத் தாக்குதல்களுக்கு ஐ.எஸ் உரிமை கோரல் என முழு நாடுமே சிதிலப்பட்டுப்போய் கிடக்கின்றது.  

ஆனாலும், நிலைமைகள் ஓரளவுக்கு கட்டுப்பாட்டுக்குள் வந்தவுடன் நாடெங்கிலும் உள்ள அரச பாடசாலைகளை பூரண சேதனைக்குட்படுத்திய பின்னர் கட்டம் கட்டமாக ஆரம்பிக்கப் போவதாக அரசு அறிவித்தது. பாடசாலைகளில் மாணவர்களின் பாதுகாப்புத் தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தலொன்றையும் அரசு விடுத்தது.  

அவ்வறிவித்தலில், ஒவ்வொரு பாடசாலைகளினதும் பாதுகாப்புக்கு அந்தந்தப் பாடசாலைகளே பொறுப்பென்றும் அதற்கான நடவடிக்கைகளை அவை மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, பாடசாலைகள் சோதனைக்குள்ளாக்கப்பட்டு, அனேக பாடசாலைகளில் 06ஆம் ஆண்டும் அதற்கு மேற்பட்ட வகுப்புகளும் கடந்த 6ஆம் திகதியன்று ஆரம்பிக்கப்பட்டன 

அவ்வாறு பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு முன்னர் ஒவ்வொரு பாடசாலையும் பல அறிவுறுத்தல்களை தமது மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் வழங்கியது.  

அதன் பிரகாரம், அனேக பாடசாலைகளில் பாடசாலைப் பாதுகாப்புக்கென குழுக்கள் நிறுவப்பட்டன. பாடசாலை அயலில் பாடசாலை வேன்களோ எந்தவொரு வாகனமுமோ நிறுத்தப்பட தடைவிதிக்கப்பட்டுள்ளது. பாடசாலை மாணவர்களை சோதிக்கவென சுழற்சி முறையில் பெற்றோர் கடமையில் அமர்த்தப்பட்டனர்.  

பாடசாலை மாணவர்களை சோதனையிடுவதை இலகுவாக்கவென உள்ளே இருப்பது வெளியே தெரியக்கூடிய புத்தகப் பைகள், சாப்பாட்டுப் பெட்டிகள், தண்ணீர்ப் போத்தல்கள், மற்றும் பென்சில் பைகளைக் கொண்டு வருமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.  

இவ்வளவு பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்த பின்னரும் பெற்றோர் தங்களது பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பத் தயாராக இல்லையென்பதை கடந்த ஒரு வார காலத்தில் ஒவ்வொரு பாடசாலையினதும் மாணவர் வரவுப் பதிவேடு நிரூபித்திருக்கின்றது. ஆம் ஒவ்வொரு பாடசாலையிலும் சுமார் நூறோ இருநூறோ மாணவர்கள் தான் பாடசாலைக்குச் சென்றிருக்கின்றார்கள்.   பாடசாலைகள் பாதுகாப்பாய் உள்ளன.  உங்கள் பிள்ளைகளை அனுப்புங்கள் என அரசு அறிவித்தும் மாணவர்கள் செல்லாததற்கு முக்கிய காரணம், அரசின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பெற்றோர் கொண்டிருக்கும் நம்பிக்கையீனம்தான்.  

ஏப்ரல் 21ஆம் திகதியன்று நடைபெற்ற தாக்குதல்கள் குறித்து ஏற்கனவே விடுக்கப்பட்ட எச்சரிக்கைகள் ஏன் புறக்கணிக்கப்பட்டன என்ற கேள்வி நிச்சயம் பெற்றோர் மத்தியில் பீதியைத் தோற்றுவிப்பதில் ஆச்சரியமேதுமில்லையே? 

குறிப்பாக மட்டக்களப்பில் சீயோன் தேவாலத்தில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்களில், உயிரிழந்தவர்கள் அனேகர் சிறார்கள். அது மாத்திரமல்ல, தங்களது தாக்குதல்களில், சிவிலியன் இலக்குகள் மற்றும் இராணுவ இலக்குகள் என்ற வேறுபாடு கிடையாது என்று 21ஆம் திகதியன்றைய குண்டுவெடிப்பின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் தாக்குதல்களுக்குச் சிலநாட்களுக்கு முன்னதாக எச்சரிக்கும் தொனியில் வெளியிட்டதாக் சொல்லப்படும் வீடியோ ஒன்றில் காண்பிக்கப்படுகின்றது. இதுவும் தங்கள் குழந்தைகளின் பாதுகாப்புக் குறித்த அச்சத்தை மக்கள் மத்தியில் அதிகரித்திருக்கின்றது. 

இது தவிர, கத்தோலிக்கப் பாடசாலைகள் மீதான தாக்கதல் அச்சுறுத்தல்கள் காணப்படுவதாகவும், அவற்றை சில காலம் வரை மூடி வைத்திருக்குமாறும் பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அறிவத்தமையும் பெற்றோருக்கு மேலும் பீதியைக் கிளப்பியது.  

 அரசு பாதுகாப்பு உறுதி வழங்கிய போதிலும், பெற்றோர் தங்களது பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புவதைத் தவிர்ப்பதற்கான முக்கிய காரணங்களாக இவையே அமைந்தன. இலங்கையின் உள்நாட்டு யுத்தம் தீவிரமடைந்த 2007ஆம் ஆண்டு முதல் பாரிய குண்டுத் தாக்குதல்கள் இலங்கையின் தெற்குப் பகுதியில் இடம்பெறவில்லை. இலங்கையின் தற்போதைய பாடசாலை மாணவ சந்ததியில், அனேகமனவர்கள் இலங்கையில் யுத்தம் முடிவடையும் காலத்தில் தங்களது பாடசாலைக் கல்வியை ஆரம்பித்தவர்கள்.  

ஏற்கனவே யுத்தத்தின் பயங்கரங்கள் நிறைந்த சூழ்நிலையை அனுபவித்திராத மாணவ சமூகமே தற்போதிருக்கின்றது. இந்நிலையில் தற்போது முடுக்கி விடப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் மாணவர்கள் மத்தியிலும் பெற்றோர் மத்தியிலும் ஒருவித பய உணர்வையே அதிகரிக்கச் செய்துள்ளது.  

பாடசாலை மாணவர்களின் பாதுகாப்புக் கருதி உபயோகிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ள ஒளி ஊடுபுகவிடும் (வெளியில் தெரியக்கூடிய) பைகளுக்கான கிராக்கி தற்போது அதிகரித்துள்ளது.  

அதுமாத்திரமல்ல சாப்பாட்டுப் பெட்டிகளை திறந்து பார்ப்பதைத் தவிர்ப்பதற்காக பாடசாலை மாணவர்கள் உபயோகிப்பதற்காகப் பரிந்துரைக்கப்பட்ட ஒளி ஊடுபுகவிடும் சாப்பாட்டுப் பெட்டிகள் என எல்லாமே பாடசாலை மாணவர்களின் தனித்துவத்துக்கு விரோதமதானவை. தாங்கள் தினமும் பாடசாலைக்கு கொண்டு செல்லும் உணவுப் பொருட்கள் வெளியில் தெரிவதை எத்தனை மாணவர்கள் விரும்புவார்கள்? 

ஏப்ரல் 21ஆம் திகதியன்றைய தீவிரவாதத் தாக்குதல்களுக்குக் காரணமாகச் சொல்லப்படுவது, இலங்கையின் தலைமைத்துவங்களிடையேயான அதிகாரப் போட்டியால் நலிவடைந்து போன தேசிய பாதுகாப்புத்தான்.  

எனவே தற்போது பாடசாலைகளில் முடுக்கி விடப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் சோர்வடைந்து போகும் ஒரு காலகட்டத்தில் மீண்டும் பாதுகாப்புக்கான அச்சுறுத்தல் எற்பட இடமுண்டு.  

அமெரிக்காவின் வீதிகளில் இராணுவத்தைக் காண முடியாவிட்டாலும், முழு அமெரிக்காவும் அதன் புலனாய்வுத்துறையின் கண்காணிப்பிலேயே எந்நேரமும் உள்ளது. அதனாலேயே 2001ஆம் ஆண்டுக்குப் பின்னர், தீவிரவாதத் தாக்குதல்கள் எவையும் அமெரிக்காவில் சாத்தியமற்றுப் போயின. 

அவ்வாறானதொரு கண்காணிப்பு முறைமையே எமக்கும் தேவைப்படுவது, பாதுகாப்பென்ற பெயரில் மாணவர்களையும் பெற்றோரையும் அச்சுறுத்துவதை விட, தங்களைத் தாங்களே பாதுகாப்பது தொடர்பான விழிப்புணர்வுகளே மாணர்களுக்கு அவசரமாகத் தேவைப்படுகின்றது.  

முதலாம் ஆண்டு முதல் உயர்தர வகுப்பு வரை மாணவர்கள் தங்களது உடமைகளை கவனமாகவும் அந்நியர்கள் குறித்தும், அறியாத பொதிகள், என்பன பற்றியும், சந்தேகத்துக்கிடமான நபர்கள், பொதிகள் பற்றி அறியக் கிடைக்குமிடத்து என்ன செய்ய வேண்டும் என்பன பற்றியும் மாணவர்கள் தொடர்ச்சியாக அறிவுறுத்தப்பட வேண்டும்.   அதுவே ஆரோக்கியமான நடைமுறையாகவும் அமையும். 

Comments