தேவனுடைய அற்புதங்கள் என்னூடாக நடப்பதாக நான் உணர்ந்தேன்!. | தினகரன் வாரமஞ்சரி

தேவனுடைய அற்புதங்கள் என்னூடாக நடப்பதாக நான் உணர்ந்தேன்!.

மட்டக்களப்பில் பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கள்ளான சீயோன் தேவாலயத்தின் அருட்சகோதரர் றொசான்  

ஏப்ரல் 17ம் திகதியன்று எமது ஆராதனைக்கு வருகின்ற 9பேர் பயணத்தின்போது ஒரு கோர விபத்தில் சிக்கி மரித்து விட்டார்கள் (மஹியங்கனை). சபையிலுள்ளவர்கள் நான் கூறிய தீர்க்க தரிசனம் அதுவென நினைத்திருந்தார்கள். இருந்தும் என் இருதயத்தில் இருந்த பாரம் நீங்கவில்லை. அதுவே 21ம் திகதிய சம்பவமாகும்  

”சீயோன் தேவாலய சம்பவத்திற்கு பிறகு எத்தனையோ ஊடகங்கள் தங்களுக்கு பேட்டி தருமாறு என்னை நெருங்கின. உண்மையில் நேரமிருக்கவில்லை. இருந்தும் தினகரனுக்காக எனது மனக்கிடக்கைகளை முதல்முதலாக இப்போது வெளிக் கொணர்கிறேன்”  

”யேசு கிறிஸ்து தம்மிடம் வந்த திரளான சனங்களைக் கண்டு மனமுருகி அற்புதங்கள் செய்தார்” என்பதுவே எமது கோட்பாடு.  

மட்டக்களப்பு மாவட்டமும், மட்டு. மாநகரமும் ஒரு இனிமை நிறைந்தவை. எல்லோருடனும் அன்பாகப் பழகுவார்கள். விருந்தோம்பல் குணத்தை தேவன், இந்த மாவட்டத்தின் மூலை முடுக்கெல்லாம் எமது மக்களுக்காக விதைத்து வைத்துள்ளான்.  

உயிர்தெழுந்த ஞாயிறு தினத்தில் உயிர்கள் காவு கொள்ளப்பட்டுள்ளன. உடமைகள் சேதமாக்கப்பட்டுள்ளன. ஆன்மீகத்துக்கு பயங்கரவாத அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இது எல்லாவற்றையும் ஒன்று சேர்த்துப் பார்க்கும்போது ஒரு கோரச் சம்பவம், மட்டு. மாநகரின் சீயோன் தேவாலயத்திலும், மேல் மாகாணத்திலுள்ள மற்றைய இரு தேவாலயங்களிலும், உல்லாச ஹோட்டல்களிலும் பயங்கரவாதிகளால் நிறைவேற்றப்பட்டுள்ளன. பிழைகளை யாரும் விட்டுவிடலாம். ஆனால் பாதிக்கப்படுவதோ அப்பாவிக் குழந்தைகள், உழைப்பாளிகள், குடும்பஸ்தர்கள் இப்படி எத்தனையோ. நான் மதகுருவாக இருந்தாலும் என்னையும் சோகம் கப்புகின்றது. இதிலிருந்து விரைவாக மீள வேண்டும் என ”தேவனை” வேண்டுகிறேன் என மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தின் அருட்சகோதரர். றொசான் தெரிவித்தார்  

அவரது கருத்துக்கள் முழுமையாகத் தரப்படுகின்றன....... 

கேள்வி: இத் தேவாலயத்தின் ஆரம்பம் எவ்வாறானது? நீங்கள் இதில் எவ்வாறு உள்வாங்கப்பட்டீர்கள்?  

பதில்: 1973ல் மட்டக்களப்பு முற்ற வெளியில் ஒரு ஆராதனைக் கூட்டம், அதில் கலந்து கொண்டேன். அந்த காலகட்டத்தில் எனக்கு 13வயது. 1985ல் கர்த்தரின் அழைப்பை ஏற்று சபைக்கு முழுநேரப்பணியாளராக வந்தேன். 1988இலிருந்து தொடர்ந்து மூன்று வருடங்கள் வேதாகம கல்லூரியில் படித்தேன். 1991ல்இருந்து சபையை பொறுப்பேற்று தொடர்ந்து நடாத்தி வருகிறேன்  

கேள்வி: மற்றைய தேவாலயங்களிலிருந்து சிற்சில விடயங்களில் இத் தேவாலயம் வேறுபாடு அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. அதுபற்றி...?  

பதில்: யேசு கிறிஸ்துவை மட்டுமே பிரசங்கிக்கிறவர் என்கிறோம். அவரைத் தவிர வேறுயாருமில்லை. கூடிய அளவில் ஜெபம், உபவாசம், வேதக் கல்வி, தேவனை துதிப்பது, ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம். கிறிஸ்தவத்தில் பல ஊழியங்கள் இருக்கின்றன. அதில், எம்முடையதும் ஒன்று. யேசு கிறிஸ்து தம்மிடம் வந்த திரளான சனங்களைக் கண்டு மனமுருகி அற்புதங்கள் செய்தார் அதுவே எமது கோட்பாடு.  

கேள்வி: இத்தேவாலயத்துக்கு வருபவர்களின் நாட்பட்ட நோய்கள் தீர்த்துவைக்கப்படுவதாக கூறப்படுகிறது. அதுபற்றி...?  

பதில்: தேவனுடைய அற்புதங்கள் எனக் கூடாக நடப்பதாக நான் உணர்ந்தேன். 2010ம் ஆண்டில் இருந்து 2015ம் ஆண்டு வரை கிராமங்கள் தோறும் சென்று சுவிசேஷக் கூட்டங்களை நடத்தி வந்தோம். அந்தக் காலத்தில் அதனைத் தொடர, நாட்டுநிலவரம் கைகொடுக்கவில்வை. அதனால் அந் நடவடிக்கையை தொடர முடியவில்லை. அதனைத் தொடர்ந்து ஜெபத்தில் இருந்தும், தேவபாதத்தில் இருந்தும் துதித்தோம். சுகமளிக்கும் ஆராதனைகளை நடாத்துமாறு, எனது உள்ளத்தில் இருந்து தேவன் என்னை ஏவினான். முதலாவது ஆராதனைக்கு 4பேர் மட்டுமே வருகை தந்திருந்தனர். ஆனால், அதற்குப் பின்பு 2019ம் ஆண்டில் 300பேரளவில் வரத்தொடங்கிவிட்டார்கள்.  

கேள்வி: இத் தேவாலயத்திற்கு கிறிஸ்தவர்களைத் தவிர வேறு மதத்தினரும் தத்தமது நோய்களைத் தீர்த்து வைப்பதற்கு தேவனிடம் வேண்டிக் கொண்டு வருவதாக கூறப்படுகின்றதே? 

பதில்: வந்தார்கள் தேவனின் கருணையைப் பெற்றார்கள் இது உண்மை  

கேள்வி: ஏப்ரல் 21ம் திகதிய குண்டு வெடிப்புச் சம்பவத்திற்கு முதல் ஒரு சில முஸ்லிம்கள் இத்தேவாலயத்திற்கு வருகைதந்து தங்கள் நோய்களை குணப்படுத்தியதாக கூறப்படுகிறது. அதன் உண்மைத்தன்மை என்ன?  

பதில்: நிறைய உண்மை இருக்கிறது, இதனால் சுகமடைந்த திருமலை மாவட்டத்தைச் சேர்ந்த பல முஸ்லிம்கள் பாதிப்படைந்தோரை வைத்தியசாலைக்கு வந்து பார்த்து, அவர்களுக்கு ஆறுதல் கூறியிருக்கிறார்கள்.  

கேள்வி: சாதாரணமான நாட்களில் இத் தேவாலயத்திற்கு வருகை தருபவர்களின் எண்ணிக்கை எப்படியிருக்கும், ஒரு நாளைக்கு எத்தனை பூசைகள் நடைபெறுகின்றன? ஞாயிற்றுக் கிழமைகளில் அதிக பூசைகள் இடம்பெறுமா?  

பதில்: ஞாயிற்றுக் கிழமைகளில் இரண்டு ஆராதனைகள் காலையும், மாலையும் இடம்பெறும். ஒவ்வொரு பூசைக்கும் 800க்கும் 900த்திற்கும் இடைப்பட்ட எண்ணிக்கையில் கலந்து கொள்வார்கள். மற்றைய நாட்களிலும் இவ்வாறே பூசைகள் நடைபெறும் நேரங்களில் மாற்றமில்லை. ஒவ்வொரு பூசைக்கும் 150க்கும் 200க்கும் இடையிலான எண்ணிக்கையில் சபையில் கலந்து கொள்வார்கள்.  

கேள்வி: இத்தேவாலயத்தில் இவ்வாறு ஒரு அசம்பாவிதம் அதாவது குண்டுத் தாக்குதல் நடைபெறப் போகிறதென்பதை தேவனின் அருளால் நீங்கள் முன்கூட்டியே அறிந்திருக்கவில்லையா?  

பதில்: தேவன் தம்முடைய பிள்ளைகளுக்கு உணர்த்தாமல் செய்பவரல்ல. பெப்ரவரி 24ல் நீதிமான்களின், மரணத்தை குறித்து ஆராதனையில் பிரசங்கித்தேன். அந்தச் செய்தியின் முடிவிலே பெரிய பாரமொன்று என் உள்ளத்தை ஆட்கொண்டது. அதைத் தொடர்ந்து ஒரு கோர விபத்து நடக்கப்போவதாக தீர்க்கதரிசனமாக உணர்த்தினேன். 30நிமிடங்கள்வரை அனைவரும் கண்ணீரோடு ஜெபித்தார்கள். மார்ச் மாதம் முழுவதும் மகிமையான உயிர்த்தெழுதல், கிறிஸ்துவின் பாடுகளோடு ஐக்கியப்படுதல், இரத்தச் சாட்சியாக மரிப்பதைப் பற்றியும் பிரசங்கித்துக் கொண்டிருந்தேன். ஏப்ரல் 16ம்திகதி ஊழியத்திற்காக வெளிநாடொன்றுக்கு சென்றுவிட்டேன். இச் சம்பவத்திற்குப் பிறகே இங்கு வந்தேன்.  

ஏப்ரல் 17ம் திகதியன்று எமது ஆராதனைக்கு வருகின்ற 9பேர் பயணத்தின்போது ஒரு கோர விபத்தில் சிக்கி மரித்து விட்டார்கள்(மஹியங்கனை). சபையிலுள்ளவர்கள் நான் கூறிய தீர்க்க தரிசனம் அதுவென நினைத்திருந்தார்கள். இருந்தும் என் இருதயத்தில் இருந்த பாரம் நீங்கவில்லை. அதுவே 21ம் திகதிய சம்பவமாகும்  

கேள்வி:  சம்பவத்தினத்தன்று என்ன நடந்தது? எத்தனை குண்டுகள் வெடித்தது? எத்தனை பேர் ஸ்தலத்தில் இறந்தார்கள்? வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர்? மட்டக்களப்பு போதனா வைத்திய சாலைக்கு அனுமதிக்கப்பட்டபின் இற்றைவரைக்கும் இறந்தவர்களின் எண்ணிக்கை எத்தனை? மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையில் இருந்து கொழும்பு தேசிய வைத்தி சாலைக்கு மாற்றப்பட்டவர்கள் எத்தனை?  

பதில்: ஒரேயொரு குண்டு வெடித்தது. ஸ்தலத்தில் 26பேர் மரணமானார்கள். காயமடைந்தவர்கள் 77பேர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்கள். அவ்வாறு அனுமதிக்கப்பட்டவர்களுள் இற்றைவரை 3பேர் இறந்திருக்கிறார்கள். மட்டக்களப்பில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றவர்களில் அனுராதபுர வைத்தியசாலைக்கு ஒருவரும், கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு ஐவரும், கண்டி வைத்தியசாலைக்கு ஒருவரும் மேலதிக சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.  

கேள்வி: இந்த நிலையில் தேவாலயக் கட்டிடத்திற்கு ஏற்பட்ட சேதம் ஏறக்குறைய எவ்வளவு இருக்கும் என நினைக்கிறீர்கள்? இதனை மீள அமைக்க உங்கள் திருச்சபையில் நிதி நிலை நன்றாக இருக்கிறதா?  

பதில்: இற்றைவரை மதிப்பீடு செய்யப்படவில்லை, எங்களை அங்கு போவதற்கு ஆனுமதிக்கவில்லை. திருச்சபையில் அந்தளவுக்கு நிதி நிலையில்லை. ஆலயம் கீழ்த்தளமும்,இரண்டு மாடிகளையும் கொண்டது. 40x140அடி விஸ்தீரணமானது.  

கேள்வி: அண்மையில் குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, லயன் கழகம் , மாவட்டம் 302சியினால் டாக்டர் ஏ. செல்வேந்திரனின் முயற்சியால் நிதியுதவி வழங்கியதாக அறிந்தோம் வேறு கழகங்களை இவ்விடயத்தில் அனுமதிப்பீர்களா? ஆட்சேபிப்பீர்களா?  

பதில்: இது உண்மை, கழகங்களைப்பற்றி ஆராய்ந்த பின்னே அதுபற்றி தீர்மானிப்போம். ஆட்சேபிப்பதும், அனுமதிப்பதும் அந்த ஆராய்வின் முடிவில் இருக்கின்றன.  

கேள்வி: இற்றைவரைக்கும் இதனை செய்து தருவதற்கு யாரும் முனவரவில்லையா? ?  

பதில்: பிரதம மந்திரி அண்மையில் ஆலயத்திற்கு வந்தபோது இக்கோரிக்கையை முன் வைத்தேன். உங்களிடம் இருப்பதைக் கொண்டு ஆரம்பியுங்கள். நாங்கள் அதனை உயர்த்துவோம். என்றார்.  

கேள்வி: எப்படி? எப்போது வழமைபோல பூசைகளை ஆரம்பிப்பீர்கள்?  

பதில்: தேவாலயம் பாதுகாப்புப் படையினர் வசம் உள்ளதால், அங்கு யாருமே உட்புக முடியாது. இப்பொது ஞாயிறு ஆராதனையை வேறொர் இடத்தில் நடாத்துகிறோம்.  

கேள்வி:வாசகர்களுக்கு நீங்கள் கூறும் செய்தி என்ன? 

பதில்: தீமைக்கு தீமை செய்யக் கூடாது, தீமையை நன்மையால் மாத்திரமே வெல்லலாம். காயப்பட்டவர்களை மாற்றுவோம், துயரப்பட்டவர்களை தேற்றுவோம். நம்பிக்கையுள்ள வார்த்தைகளையே பேசுவோம். பாதிக்கப்பட்டவர்களுடைய வீடுகளுக்குச் சென்று அவர்களிடம் நடந்த சம்பவங்களை ”கேட்டுக் கிளறி”, அவர்களை துயரத்திற்கு உள்ளாக்குவது ஒரு பொருத்தமான செயலல்ல. அவர்களது மனதின் ஆற்றுகைக்கென்று இடம் கொடுக்க வேண்டும். இது எனது உருக்கமான வேண்டுகோள்!  

இந்த சம்பவத்தைக் கேள்வியுற்று ஓடோடி வந்து உதவிசெய்த அவைருக்கும் நன்றியறிதலை சீயோன் தேவாலயத்தின் சார்பில் தெரிவிக்கிறேன் என்றார்  

சீயோன் தேவாலய சம்பவத்திற்கு பிறகு எத்தனையோ ஊடகங்கள் தங்களுக்கு பேட்டி தருமாறு என்னை நெருங்கின. உண்மையில் இப்பவோ, அப்பவோ நேரமில்லை. இருந்தும் தினகரனுக்காக எனது மனக்கிடக்கைகளை இப்போது முதல்முதலாக வெளிக் கொணர்கிறேன்.  

எஸ்.தவபாலன்

Comments