சோதனை, கெடுபிடிகள் வடக்கிலும் தீவிரம் | தினகரன் வாரமஞ்சரி

சோதனை, கெடுபிடிகள் வடக்கிலும் தீவிரம்

வன்னி மாவட்ட சிவமோகன் எம்.பி 

விடுதலைப் புலிகளின் காலத்திலேயே இலங்கை தீவு பாதுகாப்பாக இருந்தது. ஐ.எஸ் தீவிரவாதத்தால் இன்று இந்தியாவுக்கு கூட அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்துள்ளார். 

தினகரன் வாரமஞ்சரிக்கு வழங்கிய பிரத்தியேக பேட்டியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். பேட்டியின் முழுவிபரம் 

கேள்வி: இலங்கையில் இடம்பெற்ற ஐ.எஸ் தீவிரவாத தாக்குதலை எப்படி பார்க்கிறீர்கள்? 

பதில்: ஐ.எஸ் தீவிரவாதம் எங்கு இருக்கின்றது என்று எங்களுக்கு தெரியாமல் தான் இருந்தது. நேரடியாக அதை நாம் காணவும் இல்லை. பல பத்தாயிரம் மைல்களுக்கு அப்பால் நடந்த விடயம் இன்று ஒரு சிறிய தீவில் அமைதியைக் குலைத்து விட்டுள்ளது.  இந்த தாக்குதலை வன்மையாக கண்டிக்கும் அதேவேளை, அரபு நாடுகளில் காணப்பட்ட ஐ.எஸ் தீவிரவாதம் எவ்வாறு இங்கு இழுதுக் கொண்டு வரப்பட்டது என்பதை அரசாங்கம் ஆராய வேண்டும். அரசாங்கம் தன்னையும் மறுபரிசீலனை செய்ய வேண்டும். வவுணதீவில் பொலிசாரை கொலை செய்ததாக முன்னாள் போராளிகளை கைது செய்து ஒரு மாவீரர் தினத்துடன் தொடர்பு படுத்தி அவர்கள் தான் செய்தார்கள் என முடிவெடுத்து நடவடிக்கைகளை எடுத்திருந்தார்கள். ஆனால் இன்று கதை மாறிக் கொண்டு வருகின்றது. அவர்கள் உண்மையான குற்றவாளிகள் இல்லை என்பது தெரிய வந்து கொண்டிருக்கின்றது. தற்போது உண்மை தெரியவந்துள்ளதென்றால் அன்று இந்த அரசு பாரிய பிழையை விட்டுள்ளது. அந்த பிழையை ஏற்றுக் கொள்ள வேண்டும். அந்த சம்பவத்தை சரியாக விசாரித்து உண்மையை கண்டு பிடித்திருந்தால் இன்று இந்த தீவிரவாதத் தாக்குதல் நடைபெற்றிருக்காது.

கேள்வி: ஐ.எஸ் தீவிரவாத தாக்குதலாளிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் தொடர்பு இருப்பதாக பேசப்படுகிறது. இது பற்றிய உங்கள் கருத்து என்ன..? 

பதில்: அரசியல்வாதிகள் ஐ.எஸ் தீவிரவாதத்துடன் தொடர்புபட்ட இளைஞர்கள் அல்லது அந்த நபர்களுடன் தொடர்பு வைத்திருந்திருக்கிறார்கள். அதாவது அவர்கள் இவர்களை சந்தித்து இருக்கிறார்கள் என்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் அதற்காக அந்த அரசியல்வாதிகள் ஐ.எஸ் தீவிரவாதத்தை ஆதரித்து தான் அவர்களை சந்தித்தார்கள் என்று நிச்சயமாக கூற முடியாது. 

கேள்வி: பயங்கரவாத தாக்குதலில் யார் அதிகமாக இலக்கு வைக்கப்பட்டுள்ளார்கள்? அதற்கான காரணம் என்ன? 

பதில்: கடந்த 21ஆம் திகதி இந்த பயங்கரவாத தாக்குதல் நடைபெற்றது. ஒரு விடுதலைப் போராளியின் தாக்குதல் என்பது யாரிடம் இருந்து அடக்குமுறை வந்ததோ, அவர்களுக்கு எதிராக போராடுவது. அது தான் விடுதலைப் போராட்டம். ஆனால் இங்கு நடத்தப்பட்டிருப்பது அப்பாவி கிறிஸ்தவ மக்களின் மீதானதும், நட்சத்திர விடுதிகளில் தங்கியிருந்த வௌிநாட்டவர்கள் மீதானதுமான தாக்குதல். ஐ.எஸ் தீவிரவாதிகள் வெளிநாட்டவரை குறித்து வைக்கிறார்கள் என்பது வெட்ட வெளிச்சமானது. இரண்டாவது, உள்நாட்டில் அதுவும் அப்பாவி கிறிஸ்தவ மக்களின்  தேவாலயங்கள் குறிவைக்கப்பட்டுள்ளன. இவர்களது குறி மாறி ஒரு பௌத்த விகாரையில் நடந்திருந்தால் இன்று முஸ்லிம்கள் அனைவரும் அகதிகளாகப்பட்டிருப்பார்கள். இந்தக் தாக்குதலை வன்மையாக கண்டிக்கின்றோம்.  முஸ்லிம் இளைஞர்களும் கடந்த காலங்களில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களது குடும்பங்களும் பாதிக்கப்பட்டிருக்கின்றன. அவர்கள் மீதும் கடந்த காலத்தில் தர்க்கா நகர், கண்டி போன்ற பகுதிகளில் வன்முறை நடந்தது. ஆனால் அது யாரால் நடத்தப்பட்டது என்பதை சிந்திக்க வேண்டும். அதை மனதில் வைத்து அப்பாவிகளை இலக்கு வைக்க கூடாது. 

கேள்வி: தற்போது வடக்கில் ஏற்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு கெடுபிடிகள் தொடர்பில் உங்கள் கருத்து என்ன? 

பதில்: அரசைப் பொறுத்தவரை இந்த பாதுகாப்பு கெடுபிடிகள் தவிர்க்க முடியாதது. எமது இயல்பு வாழ்க்கை உருலுக்குலைக்கப்பட்டு விட்டது. வவுனியாவில் இருந்து முல்லைத்தீவுக்கு ஒரு மணித்தியலாயத்திற்கும், யாழ்ப்பாணத்திற்கு இரண்டு மணித்தியலாத்திற்கும் செல்ல முடிந்தது. ஆனால் தற்போது அப்படி அல்ல. பல இடத்தில் இறங்கி ஏற வேண்டியுள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கையின் மீது கைவைக்கப்படடுள்ளது. தாக்குதல் நடந்தது கொழும்பைச் சுற்றியுள்ள பகுதிகளிலும், மட்டக்களப்பிலும் தான். ஆனால் நடத்தப்படும் சோதனைப் கெடுபிடிகள் வடக்கில் அதிகமாக திருப்பப்பட்டிருக்கிறது. ஏன் அவ்வாறு செய்கிறார்கள் என்பது சந்தேகத்திற்குரிய கேள்வியை உருவாக்கியுள்ளது. பல வாகனங்களின் இலக்கங்களை சொல்லி, வடபகுதிக்குள் நுழைந்து விட்டதாக கூறுகிறார்கள். இதை இவர்களால் பிடிக்க முடியாதா?பத்து அடிக்கு ஒரு இராணுவம் உள்ள நிலையிலும், ஒட்டுமொத்த வடபகுதியையும் இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் நெருக்கி வைத்துள்ள நிலையிலும், பொலிஸ் நிலையம், சோதனை நிலையம் என பரவலாக உள்ள நிலையில் இந்த வாகனங்களை உங்களால் பிடிக்க முடியாதா?  வடபகுதியில் தான் இந்த வாகனங்கள் இருக்கின்றது என்பதை நான் நம்ப வில்லை. வடபகுதியை நெருக்கடிக்குள் வைத்திருப்பதற்காகவே இவ்வாறு கூறப்பட்டுள்ளது எனக் கருதுகிறேன். 

கேள்வி: அவசரகால சட்டத்தை பயன்படுத்தி இரு பல்கலைக்கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். இது தொடர்பாக உங்கள் கருத்து என்ன? 

பதில்: அவசரகாலச் சட்டம் என்பதே தாங்கள் நினைத்த மாதிரி எந்தக் குற்றத்தையும் சாட்டலாம் என்பது தான். படையினரைப் பொறுத்தவரை அவர்கள் எதைச் சாட்டினாலும் அதனை ஏற்றுக் கொள்ளும் நிலை தான் நீதிமன்றில் இருக்கப் போகிறது. இந்த அவசரகாலச் சட்டத்தை கொண்டு வரும் போது ஜனாதிபதி  சொன்ன விடயம் ஐ.எஸ் பயங்கரவாதத்தை நிறுத்துவதற்கு மட்டும் இந்த சட்டத்தை பாவிப்பேன் என்பதுதான். எனவே அவர் சொன்னது போல் அதற்கு மட்டும் இதை பாவிக்க வேண்டும். அப்பாவி பல்கலைக்கழக மாணவர்களை இதில் பலிக்கடா ஆக்கக் கூடாது. விடுதலைப் புலிகளின் தலைவரின் படம் இருந்தது என்றால் அது இன்று இருக்கவில்லை. அது 7, 8வருடங்களாக பல்கலைக்கழகத்தில் இருந்த படங்கள். அதனை முன்னர் பிடிக்க முடியவில்லை. தற்போது அவசரகால சட்டத்தை பயன்படுத்தி மாணவர்களை பழிவாங்குகிறார்கள். 

அப்பாவி மாணவர்களின் கைதுகள் நிறுத்தப்பட வேண்டும். அவசரகால சட்டத்தை பயன்படுத்தி மாணவர்களை பயங்கரவாத சட்டத்தின் கீழ் கைது செய்ய முயல்கிறார்கள். மாணவர்களை விடுதலை செய்யாது விடின் வன்னியிலும் போராட்டம் வெடிக்கும். தலைவர் பிரபாகரன் போராட்டத்தை மௌனித்த பின் அவர்களால் ஒரு துப்பாக்கி கூட வெடிக்கவில்லை. அப்படி இருக்கையில் மாணவர்களையும், அப்பாவி தமிழ் மக்களையும் இலக்கு வைப்பது நிறுத்தப்பட வேண்டும். ஜனாபதிபதியும், பிரதமரும் இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும். 

கேள்வி: இறுதி யுத்தம் நடைபெற்ற முள்ளியவாய்க்கால் நினைவேந்தலின் 10ஆம் ஆண்டு நினைவேந்தல் வரும் 18ஆம் திகதி வரவுள்ள நிலையில், அவசரலகால சட்டம் அதில் தாக்கத்தை ஏற்படுத்தும் என நம்புகிறீர்களா? 

பதில்: நிச்சயமாக தாக்கத்தை ஏற்படுத்தப் போகின்றது என்பது இன்று பல்கலைக்கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டதில் இருந்து தெரியவருகிறது. இந்த முள்ளியவாய்க்கால் நினைவைக் குழப்ப வேண்டும் என நெடுங்காலமாக செயற்பட்டு வந்தார்கள். அதை எப்படித் தடை செய்வது என்று யோசித்து வந்தார்கள். இன்று இந்த சட்டம் அவர்களுக்கு வாய்ப்பைக் கொடுத்துள்ளது. இதனால் முள்ளியவாய்க்கால் நினைவேந்தல் நடைபெறுவதில் பல்வேறு இடையூறுகள் நிறையவே இருக்கின்றன. 

கேள்வி: இறந்த மக்களை நினைவு கூருவதற்காக முள்ளியவாய்க்கால் நினைவேந்தல் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு, அரசுடன் ஏதாவது பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதா? 

பதில்: தமிழ் தேசிய கூட்டமைப்பு அப்படியான பேச்சுக்கள் எதிலும் ஈடுபடவில்லை. கடந்த காலங்களிலும் அப்படிப் பேசவில்லை. இறந்த எமது உறவுகளை நினைவு கூருவது எமது உரிமை. அதை செய்திருக்கிறோமே தவிர, அதற்காக நாம் கெஞ்சி கேட்கவில்லை. 

கேள்வி: இலங்கையினுடைய தற்போதைய அரசியல் நிலமை எப்படி இருக்கிறது? 

பதில்: இலங்கையின் அரசியல் நிலமை என்பது மிகவும் இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

இன்று ஒரு தேர்தல் கூட இவர்களால் இலகுவாக நடந்த முடியுமோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஐ.எஸ் தீவிரவாதம் ஊடுருவியுள்ள நாட்டில் எப்படி இந்த தேர்தல்களை சுமுகமாக நடத்த முடியும். அது சவாலுக்குட்படுத்தப்பட்டுள்ளது. இந்த அரசு மட்டுமல்ல இந்த நாடே சவாலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகள் இருக்கும் வரை மட்டுமே இந்த இலங்கை நாடு பாதுகாப்பாக இருந்தது. தேர்தல்கள் நடந்தது. எந்த அப்பாவி மக்கள் மீதும் அவர்கள் கை வைக்கவில்லை. அவர்கள் தங்களுக்கு எதிரான படையினருக்கு எதிராகவே நடந்தார்கள். அவர்கள் ஒரு படையதிகாரிக்கு எதிராக  செயற்பாட்டால் கூட ஒரு சிறு தொகை மக்கள் தான் பாதிக்கப்பட்டார்கள். இப்படி 400பேரை பாதிக்கும் அளவுக்கு புலிகள் செயற்படவில்லை. இலங்கை மட்டுமன்றி இந்தியாவின் பாதுகாப்பு கூட விடுதலைப் புலிகளின் கையிலேயே தங்கியிருந்தது. இதனை இந்தியாவும் சிந்திக்கும் காலம் வந்துவிட்டது. இன்று ஐ.எஸ். தீவிரவாதிகள் இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு செல்லும் நிலை உருவாகியிருக்கிறது. இந்தியாவுக்கு மட்டுமல்ல உலகத்திற்கே இலங்கை தீவு அவசியமான ஒரு தீவு. ஆனால் அதனை இன்று உருக்குலைத்துவிட்டார்கள்

நேர்காணல் 
கே.வசந்தரூபன் 

Comments