நெருக்கடி நிலையை எதிர்கொள்வதெப்படி? | தினகரன் வாரமஞ்சரி

நெருக்கடி நிலையை எதிர்கொள்வதெப்படி?

அவசர நிலைமைகள் எமக்குப் புதிதானவை அல்ல. அவை இயற்கையாலும் ஏற்படுத்தப் படலாம். மனிதனாலும் ஏற்படுத்தப் படலாம். அத்தகைய நிலைமைகள் அனைவரையும் பாரபட்சமின்றிப் பாதித்தாலும் பாதிப்பின் அளவும் தன்மையும் வேறுபடத்தான் செய்கிறது. இத்தகைய நெருக்கடி நிலைமைகளால் அதிகம் பாதிக்கப்படுபவர்களாக விவசாயிகளே காணப்படுகிறார்கள் என உலக விவசாய ஸ்தாபனம் தெரிவிக்கிறது.  

நெருக்கடி நிலையொன்று ஏற்படும் போது பயிரழிவை மட்டுமன்றி தம்மிடம் காணப்படும் வரையறுக்கப்பட்ட, உற்பத்தி த் திறன் மிகு சொத்துகளையும் அவர்கள் இழக்கும் நிலையை அவர்கள் எதிர் நோக்குகிறார்கள். பல வேளைகளில் தம்மை நிலைத்திருக்கச் செய்ய இயலாமல் இடம்பெயரத் தலைப்படுகிறார்கள்.  

ஆதலினால் தான் இங்கு அனர்த்த அபாயக் குறைப்பு, தாங்குதிறனைக் கட்டியெழுப்புதல் போன்ற விடயங்கள் முன்னிலை பெறுகின்றன. பாதிக்கப்படும் தன்மை கூடிய மக்கள் அவற்றின் மூலம் அதிர்ச்சிகளிலிருந்தும் நெருக்கடிகளிலிருந்தும் மீளவும் அவற்றை எதிர்கொள்ளவும் தம்மைப் பழக்கப்படுத்திக் கொள்கிறார்கள்.  

அதற்காக தகவல்களில் அவர்கள் அதிகமாகத் தங்கியிருக்க வேண்டியிருக்கிறது.  

ஆதலினால் முன்னெச்சரிக்கைச் செயற்பாடுகள், அவற்றிலும் குறிப்பாக தகவல் பரிமாற்றத்தில் அதிக முதலீடுகளை மேற்கொள்ள வேண்டிய அவசியம் காணப்படுவதைத் தவிர்க்க இயலாது. அனர்த்தம் ஏற்பட முன்னரே அவற்றிலிருந்து மக்கள் தம்மையும் தமது உடைமைகளையும் காப்பாற்றிக் கொள்ள, முற்பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள இத் தகவல் எச்சரிக்கைகள் உறுதுணையாக இருக்கும்.  

இத்தகவல் எச்சரிக்கைகளைத் துணையாகக் கொண்டு அரசாங்கங்களும் நிறுவன ங்களும் துரிதமாகச் செயற்பட்டு பாரிய மனிதாபிமான அனர்த்தங்கள், பட்டினி, இடப்பெயர்வுகளைத் தடுக்க முடியும்.  

தகவல் மட்டும் கிடைத்து பெரிய பயனைத் தந்துவிடப்போவதில்லை. தயார் நிலையிலிருத்தலென்பது மிக அவசியமானது. தயார் நிலையிலிருத்தல் எப்போதும் வலுப்பட்ட நிலையில் காணப்பட வேண்டும். வேறுபட்ட விவசாயத்துறைகளுக்கு ஏற்ற வகையிலே திட்டங்கள் தயாரிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். ஒருங்கிணைக்கும் ஏற்பாடுகள், பொதுத் தகவல், பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக விதைகளைப் பேணல், கால் நடைகள் உணவாகக் கொள்ளும் இலை குழைகளுக்கான இருப்பை உறுதி செய்தல், விதைகளுக்குப் பாதுகாப்பான களஞ்சிய வசதியை ஏற்படுத்தல், விவசாய உபகரணங்களின் இருப்பைப் பேணல், அவசர நிதியமொன்றைப் பேணல் போன்றனவும் தயார் படுத்தலுக்குள் அடங்குவனவே.  

 அதிகளவில் அச்சுறுத்தலுக்குள்ளாகும் தாவரம், அதிக பாதிப்பை ஏற்படுத்தும் தாவர, விலங்கு நோய்கள், பீடைகள் தொடர்பில் விசேட திட்டங்கள் தாயரிக்கப்பட வேண்டும். நாடொன்று எத்தகைய தயார் நிலையில் இருக்கிறதென்பதும் அது எங் ஙனம் நெருக்கடி நிலையை எதிர்கொள்கிறது என்பதும் நெருக்கடி நிலை ஏற்படுத்தும் தாக்கத்தை வைத்து மதிப்பிடக் கூடியவை.  

அனர்த்தத்துக்குப் பின்னரான நிலைமைகளிலே, சேதமடைந்த சொத்துகளைப் புனரமைப்பதன் மூலம் கிராமிய வாழ்வாதாரத்துக்கான அடிப்படையை ஏற்படுத்திக்கொடுத்தலும் உள்ளுார் உணவு உற்பத்தியை மீள ஆரம்பித்தலும் மிக முக்கியமானது. அப்போது தான் அதீத நிலைமைகளையும் நெருக்கடிகளையும் எதிர்கோள்வதற்கு ஏதுவாக அவர்களை வலுப்படுத்த முடியும். விதைகள், உரங்கள், மீன் பிடி உபகரணங்கள், கால் நடை வளர்ப்பு உதவிகள், விவசாய உபகரணங்கள், வீதிகள், குளங்கள் போன்ற விவசாய உட்கட்டமைப்பு வசதிகளைப் புனரமைத்தல் போன்ற வற்றை ஏற்படுத்திக் கொடுப்பதன் மூலம் அவர்களை வலுப்படுத்தலாம்.  

உணவுப்பாதுகாப்பையும் நிலைத்து நிற்கும் விவசாயத்தையும் அடைய வேண்டுமாயின் ஒன்று டனொன்று பின்னிப்பிணைந்த காலநிலை மாற்றத்தின் சவால்களை எதிர்கொள்வது மிக அவசியமானது. விவசாயத்துறையைப் பொறுத்த வரையிலே காலநிலை மாற்றத்தை எதிர் கொள்ளும் அதன் வல்லமையானது மக்களின் வாழ்வாதாரத்துடனும் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளைப் பொறுத்தவரையிலே தேசிய பொருளாதாரத்துடனும் தொடர்புபட்டது. ஆதலினால் ஒருங்கிணைந்த வகையிலேயே எமது செயற்பாடுகள் அமைய வேண்டும்.  

அதேவேளை பச்சை இல்ல வாயுக்களை வெளியேற்றும் பிரதான மூலங்களுள் ஒன்றாக விவசாயத்துறையும் காணப்படுகிறது என்பதையும் நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். ஆதலினால் தான் மிகவும் பிரபல்யமான பாரிஸ் கால நிலை மாற்ற உடன்படிக்கையிலே விவசாயமும் ஏனைய நிலப்பாவனை முறைமைகளும் பிரதான இடத்தைப் பிடித்திருக்கின்றன.  

கால நிலை மாற்றம் தொடர்பில் இன்றும் கூடப் பலர் ஐயம் தெரிவித்து வரும் நிலையில் விவசாயிகள் அதன் யதார்த்த த்தை எப்போதோ உணர்ந்து விட்டனர் என்று தான் கூறவேண்டும். அவர்களது பாரம்பரிய வழிகாட்டியாய்த் திகழ்ந்த பயிர் நாட்காட்டி தற்போது வழக்கொழிந்து போகும் அச்சுறுத்தலுக்கு ஆளாகியிருக்கிறது என்றால் கால நிலை மாற்றத்தின் தாக்கம் எத்தகையது என்பதை அனைவரும் உணர வேண்டும்.  

நிரந்தரமற்ற, அதீத வானிலைக்கோலங்கள் உட்கட்டமைப்புகளையும் விளைச்சல்களையும் நாசம் செய்வதோடு மட்டுமன்றி மீன்வளத்தை மேலும் ஆழமான பகுதிக்கு இடம்பெயரவும், இயற்கை வழங்களையும் உயிரிங்களையும் அருகவும் செய்கின்றன.  

2030ஆம் ஆண்டளவில் ஆபிரிக்க பிராந்தியத்தில் உணவுப்பொருட்களின் விலையானது தற்போதைய விலையில் 13சதவீதத்தால் அதிகரிக்கும் என ஆய்வுகள் எதிர்வுகூறுகின்றன. இதனால் அப்பிராந்தியத்தின் மொத்த செலவில் 60சதவீதமானது வறிய குடும்பங்களின் உணவுத் தேவைக்காக  செலவிடப்படுவதாக அமையும் எனப்படுகிறது.  

காலநிலை மாற்றம் என்ற பேரிடரை நாம் நாளை என்று தள்ளிப்போட முடியாது. அதற்கான பதிலடியை இன்றே கொடுக்கத் தயாராக வேண்டும். ஏனெனில் விவசாயிகளாகட்டும், மீனவர்களாகட்டும், பண்ணையாளராகட்டும், உற்பத்தியாளராகட்டும், அவர்களது அன்றாட நடவடிக்கைகள் கூட கால நிலை மாற்றத்துடன் தொடர்புபட்டவை. கால நிலைக்குத் தாங்குதிறன் மிக்கவையாக அவை மாற்றப்பட வேண்டுமாயின் அவர்களுக்கு தொழில் நுட்பத்துக்கான அணுகலும் சந்தை வாய்ப்பும் தகவலும் முதலீட்டுக்கான கடனும் கிடைக்கப்பெற வேண்டும். அதன்மூலம் அவர்களது உற்பத்திச் செயற்பாடு தொட்டு முறைமைகள் யாவும் கால நிலைச் சாதுரியம் மிக்கவையாக மாற்றப்பட வேண்டும்.  

நாடுகள் தேசிய கால நிலைத் திட்டத்தை ஏற்படுத்தி நடப்பதோடு, தாங்குதிறன் மிக்க கிராமிய வாழ்வாதாரத்தை நோக்காகக் கொண்ட ஆய்வுகள், செயற்றிட்டங்கள் ஆகியவற்றை ஊக்குவிக்க வேண்டும். அவற்றின் மூலம் பல மாற்றங்கள் உருவாகலாம்.  

விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு நின்று விடாமல் புத்தாக்கம், திறன் விருத்தி, ஊக்குவிப்பை அடிப்படையாகக் கொண்ட முறைமைகள் ஆகியனவும் அத்தியாவசியமாகின்றன.  

விவசாயத்தைப் பொறுத்தவரையில் கால நிலைச் சாதுரியம் மிக்க முன்னெடுப்புகள் பலவற்றை உலக விவசாய ஸ்தாபனம் மேற்கொண்டு வருகிறது.

அவற்றின் மூலம் விவசாயத்தின் உற்பத்தித் திறன் அதிகரிக்கப்பட்டு வருமானம் அதிகரிக்கப்படல், கால நிலை மாற்றத்துக்கான தாங்குதிறனைக் கட்டியெழுப்புதல், பச்சை இல்ல வாயு வெளியேற்றங்களைக் குறைத்தல் ஆகிய நோக்கங்களை அடைய எதிர்பார்க்கப்படுகிறது.  

காடுகளைப் பொறுத்தவரையிலே காடழிப்பினாலும் காடுகளைத் தரமிழக்கச்செய்வதாலும் ஏற்படும் வாயு வெளியேற்றங்களைக் குறைப்பதற்கான செயற்றிட்டங்கள் ஏலவே ஆரம்பிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.  

ஆயினும் சூழல் தொகுதிகளின் தாங்குதிறனை அதிகரித்தலும் விவசாயத்தின் உற்பத்தித் திறனைக் கூட்டலும் நேர்மாறான தொடர்பினையே கொண்டிருக்கின்றன.

செறிவுபடுத்தப்பட்ட விவசாயம் என்பது கிட்ட த் தட்ட சிறப்புத்தேர்ச்சியை அடிப்படையாகக் கொண்டது. ஒரே இனப்பயிர்களை பாரியளவில் பயிரிட்டு அறுவடை செய்தலைக் குறிக்கும். அதைப் போன்றது தான் கால் நடை வளர்ப்புமாகும். இத்தகைய ஒற்றைக் கலாசார விவசாயத்தால் கிடைக்கப்பெறும் சூழல் தொகுதி சேவைகளானவை, அவ்விவசாயத்தால் ஏற்படுத்தப்படும் சூழல் மாசை ஈடுசெய்யப் போதுமானவையாக இல்லை என்பதைப் பல ஆய்வுகள் நிஷரூபித்திருக்கின்றன. வளங்கள் குறைவாக இருக்கும் போது செறிவுபடுத்தப் பட்ட விவசாயமானது, சிறியளவிலான விவசாயிகளைப் பொறுத்தவரையிலே அதிக அழுத்த த் தை ப் பிரயோகிக்கும்.  

இத்தகையதோர் நிலையிலே தான் ஒருங்கிணைந்த விவசாய முறைமைகள் அதிகளவில் ஊக்குவிக்கப்படுகின்றன. உணவு வலையின் அங்கங்கள் அதிகரிக்கும் போது முழு முறைமையினதும் தாங்கு திறன் அதிகரிக்கும் என்பது வெளிப்படை. அத்துடன் அதிகளவிலான சூழல் தொகுதிச் சேவைகளும் கிடைக்கப்பெறும்.  

ஒருங்கிணாய்ந்த விவசாய முறைமையென்பது அடிப்படையில் கலப்புப் பயிர்ச்செய்கை, பயிர்- கால் நடை, விவசாய வனவியல், மரம்-பயிர்-கால் நடை, நன்னீர் மீன் பிடியியல் ஆகியவற்றுள் ஒன்றையோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்டவற்றையோ பின்பற்றுவதாக அமையும். அத்துடன் கால நிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் ஆற்றலையும் சிறப்பாக வெளிப்படுத்தி உணவு, வாழ்வாதாரப்பதுகாப்பை உறுதி செய்யும்.  

இத்தகைய முறைமைகள் சார் முன்னெடுப்புகளை மேற்கொள்ளும் போது ஒருங்கிணாய்ந்த செயற்பாடுகளூடாக நிலைத்து நிற்கும் அபிவிருத்தி இலக்குகளை அடைய இலகுவாக இருக்கும். உயிர்ப்பல்வகைமை,  நிலப்பாவனையும் முகாமைத்துவமும், நீர் முகாமைத்துவம், வன முகாமைத்துவம் ஆகியனவும் செவ்வனே நடைபெறும்.  

அவற்றின் மூலம் சமூக-அரசியல் முறைமைகளை மையப்படுத்தி தனிப்பட்ட பண்ணைகள் என்ற எல்லைகளுக்கு அப்பால், வேலை வாய்ப்பு, வருமானம், சமூக இணைவு போன்ற பல விடயங்கள் தொடர்பில் முன்னேற்றங்கள் ஏற்படும். நிலைத்து நிற்கும் அபிவிருத்தி இலக்குகளை அடைய வேண்டுமாயின் இவை நிச்சயம் தேவை!    

சாரதா மனோகரன்

Comments