ஐ.எஸ் தீவிரவாதிகள் இலங்கையில் காலூன்ற பௌத்த மேலாதிக்கவாதமே காரணம்! | தினகரன் வாரமஞ்சரி

ஐ.எஸ் தீவிரவாதிகள் இலங்கையில் காலூன்ற பௌத்த மேலாதிக்கவாதமே காரணம்!

கிழக்கு மாகாணசபை முன்னாள் அமைச்சர் கி.துரைராஜசிங்கம்

ஏப்ரல் 21தாக்குதல் இலக்கற்றது, இந்த நாட்டின் சமாதானத்திற்கு, ஐக்கியத்திற்கு, அமைதிக்கு, பொருளாதாரத்திற்கு விழுந்த பலத்த அடி என்கிறார், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும், கிழக்கு மாகாணசபையின் முன்னாள், விவசாய கைத்தொழில், கூட்டுறவு, மீன்பிடித்துறை அமைச்சருமான சட்டத்தரணி கி.துரைராஜசிங்கம். நாட்டை உலுக்கிய பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக அவர் வழங்கிய நேர்காணல் முழுமையாக....

"முஸ்லிம் தலைமைகள், தொடர்ந்தும் சலுகை அரசியலிலே மக்களை வழிநடத்தினார்கள். இது, முஸ்லிம் இளைஞர்களின் ஒரு சாராரால் தங்கள் உரிமைகள் விடயமாக கொள்ளப்பட்டது"

"இங்கு நடைபெற்றுள்ள சம்பவங்களும் இங்குள்ள முஸ்லிம் தலைவர்களால் அவை கையாளப்பட்ட விதங்களும், அத்தனைக்கும் மேலாக சிங்கள பௌத்த மேலாதிக்கமுமே தீவிரவாதிகள் முஸ்லிம் இளைஞர்களை கையாள்வதற்கு காலாய் அமைந்துள்ளது"

கேள்வி: இந்த நாட்டில் அண்மையில் பயங்கரவாதம் அகோரத் தாண்டவம், ஆடியுள்ளது. அதனால் ஏற்பட்ட இழப்புக்கள் அதிகமானவை. இதனை பொறுப்புவாய்ந்த அரசியல்கட்சியின் அதாவது தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் என்ற வகையில் எப்படிப் பார்க்கிறீர்கள்?  

பதில்: இதுவொரு இலக்கற்ற தாக்குதல், அதே நேரத்தில் இதனுடைய மூலம் கூட எதுவென்று தெரியவில்லை. "ஐஎஸ்" அமைப்பு இதற்கு உரிமை கோரியுள்ளது. அவர்களுக்கு இலங்கை எப்படி இலக்காக அமைந்தது? நியூசிலாந்து பள்ளி வாசல் தாக்குதலையும், ஏப்ரல் 21ம் திகதிய தாக்குதலையும் தொடர்புபடுத்துகிறார்கள். எவ்விதத்தில் பார்த்தாலும் இதனை கண்மூடித்தனமான தாக்குதல் என்றே கூறலாம்.  

கேள்வி: இன்னொரு நாட்டைச் சேர்ந்தவர்களின் முதன்மையும், நம்நாட்டைச் சேர்ந்த முஸ்லிம்களின் பக்க பலமும் அதற்கு இருந்துள்ளது. அந்தப் பயங்கரவாதம் நமது நாட்டுக்குள் விதைக்கப்பட்டு, அது நாட்டின் நாற்புறமும் விரிவடைந்துள்ளது. அதுபற்றிய உங்களது அபிப்பிராயம் எப்படியிருக்கிறது?  

பதில்: இலங்கை முஸ்லிம்களின் ஒருகுறிப்பிட்ட குழுவினரே இதில் ஈடுபட்டுள்ளனர். காரணம் இல்லாமலில்லை, இந்தவிடயத்திலேதான் இலங்கைத் தமிழர்களுடைய அரசியலையும், இலங்கை முஸ்லிம்களுடைய அரசியலையும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டியுள்ளது. தமிழ் மக்களது உரிமைகள் தொடர்பான விடயங்களை அரசு நேரடியாகவோ, மறைமுகமாகவோ கையாண்டது. அது தமிழ்மக்களின் உரிமைகளில் கைவைக்கின்ற விடயமாகவே தமிழத் தலைவர்களால் கையாளப்பட்டது. ஆனால் முஸ்லிம் மக்கள் மீது செயற்படுத்தப்பட்ட இதே விதமான நடவடிக்கைகளை முஸ்லிம் தலைமைகள் அவ்வப்போதான "சம்பவங்களாக" எடுத்துக் கொண்டு உடனடித் தீர்வுகளையும் பெற்றனர். தொடர்ந்து சலுகை அரசியலிலே மக்களை வழிநடத்தினார்கள். 1915ல் நடந்த முஸ்லிம் சிங்கள கலவரம் மறக்கப்பட்ட ஒன்றாக இருந்த போதிலும், முஸ்லிம்களின் மனதினில் அவர்களது உரிமை சார்ந்த பதிவாகவே இருக்கிறது. 1970ம் ஆண்டின் புத்தளம் பள்ளிவாசல் தாக்குதல், 2001ல் மாவனல்ல கலவரம், அக்குறணை கலவரம், 2014ல் களுத்துறை கலவரம், 2018ல் திகன கலவரம் ஆகியன முஸ்லிம் இளைஞர்களின் மனதினில் ஒரு வடுவாகவே பதிந்திருக்கும். இந்தத் தாக்கங்களில் இருந்து மீள ”எஸ்எஸ்” அமைப்பினுடைய வசீகரம் ஒரு சில முஸ்லிம் இளைஞர்களின் மனதை தொட்டிருக்கும். அவர்கள் இதுபற்றி விசாலமாக சிந்திக்காவிட்டாலும், அத்தகைய ஒரு சுழலுக்குள் அகப்பட்டமை இயற்கைக்கு மாறானதல்ல. ஆக இலங்கையில் நடைபெற்றுள்ள சம்பவங்கள் இங்குள்ள முஸ்லிம் தலைவர்களால் கையாளப்பட்ட விதங்களும், சிங்கள பௌத்த மேலாதிக்கமுமே தீவிரவாதிகள், முஸ்லிம் இளைஞர்களை கையாள்வதற்கு காலாய் அமைந்துள்ளது என்ற விடயத்தை புத்தி ஜீவிகளும், வாசகர்களும், இன்னும் ஆழமாக சிந்திப்பது இவ்விடயம் தொடர்பாக சரியான முடிவை எடுப்பதற்கு திறவு கோலாய்இருக்கும் எனநம்புகிறேன்.  

கேள்வி: பல முஸ்லிம் அரசியற் பிரமுகர்கள் பயங்கரவாதத்தோடு தொடர்பு கொண்டுள்ளனர் என்றும், அவர்களுள் சிலர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள் என்றும் வௌியாகும் செய்திகள் பற்றி....  

பதில்: இதற்கான விடையை நான் மேலே கூறிய பதிலின் தொடர்ச்சியாகவே பார்க்க வேண்டும். அரசியல்வாதிகளில் அனேகர் தங்களின் அடுத்த தேர்தலைப் பற்றித்தான் சிந்திக்கிறார்கள். தீவிரவாதம் உணர்வு பூர்வமானதாகவும், கவர்ச்சியானதாகவும் உள்ள விடயம் என்ற அடிப்படையிலேதான் அரசியல்வாதிகள் இவ்விடயத்தில் சம்பந்தப்படடிருக்கிறார்கள். தீவிரவாதிகளைப் பொறுத்தவரையில், சரியோ, பிழையோ இலக்கு இருக்கிறது. அரசியல்வாதிகள் தங்களுடைய இலாபத்திற்காக இந்த இளைஞர்களுக்கு தியாகப் பட்டம் சூட்டி, களப்பலியாக்கிவிட்டு, தங்கள் அரசியலை நடத்துகிறார்கள். இவர்களே சட்டத்தினால் கடுமையாக கையாளப்பட வேண்டியவர்கள். இலங்கையில் சட்ட ஒழங்கு நடைமுறையைப் பொறுத்தவரையில், பல்வேறு தரப்பு செல்வாக்குச் செலுத்துவதன் காரணமாகவே நீதித்துறைக்கு தேவையான சான்றுகள் வழங்கப்படுவதில்லை என்ற முடிவுக்கு வரக்கூடியதாய் உள்ளது. இந்த விடயத்தில், நான் சொன்ன சட்டம், ஒழுங்கு நடைமுறை, சரியான முறையில் கையாளப்பட்டு குறித்த அரசியல்வாதிகள் நீதித் துறைக்கு பதில் சொல்பவர்களாக ஆக்கப்படவேண்டும்.  

கேள்வி: 2014ம் ஆண்டிலேயே இலங்கையில் இவ்வாறான அடிப்படைவாதச் செயற்பாடுகள் பற்றி இஸ்லாமிய மார்க்கத்தின் அதி உச்ச சபையான உலமா சபையினர், அப்போதிருந்த பாதுகாப்புச்செயலாளர் கோதபாய ராஜபக்ஸவிடம் முறையிட்டுள்ளனர். இருந்தும் அவர் அதுபற்றி நடவடிக்கை எடுக்கவில்லை என சிப்லி பாறுக் தனது பேட்டியில் கூறியுள்ளார் அதுபற்றிய உங்கள் கருத்து?  

பதில்: அவருடைய கருத்தை நானும் ஆமோதிக்கிறேன்.  

கேள்வி: "ஐஎஸ் அமைப்பினரோடு ஒட்டி உறவாடிய தேசிய தௌஹீத் அமைபின் பல உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு அமைச்சு மாதாந்தச் சம்பளம் வழங்கியுள்ளதென சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார். இது பாதுகாப்பு அமைச்சு விட்ட பாரிய தவறு. இதனால் நீங்கள் விளங்கிக் கொள்வதென்ன?  

பதில்: "தலிபான்" அமைப்பின் தலைவர் ”ஒசாமா பின்லேடனை” அமெரிக்காவே உருவாக்கியது. பொதுவுடமைச் சக்தியை பலமிழக்கச் செய்வதற்கு அவர் பயன்படுத்தப்பட்டார் என்று கூறப்படுகிறது. இறுதியில்” ஒசாமா பின்லேடனே” அமெரிக்காவுக்கு சவாலாக மாறினார். அமெரிக்கா அவரை முடித்த கதை வேறு. தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பை தமது அரசியலுக்கு பயன் படுத்துவதற்கு அன்றைய பாதுகாப்புச் செயலாளர் "எருப்போட்டு, நீர் பாய்ச்சியுள்ளார்". எவ்வாறு ஓபாமா பின்லேடன் அமெரிக்காவுக்கு எதிராக மாறினாரோ அதே போலத்தான் தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பினரது ஏப்ரல்21ம் திகதிய சம்பவமும் இடம் பெற்றிருக்கிறது. ஆனால், அது ஏன் கிறிஸ்தவ மக்களுக்கு எதிராகவும், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்யை பார்க்கும் போது தமிழ்மக்களுக்கு எதிராகவும் பாய்ந்தது என்ற விடயம் தொடர்பில் இன்னும் உரத்துச் சிந்திக்க வேண்டியுள்ளது.  

கேள்வி: சமீபத்தில் இந்த நாட்டின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சிரியாவில் பயிற்சி பெற்ற "ஐ.எஸ் அமைப்பினரோடு சம்பந்தப்பட்ட இலங்கையர்களை கைது செயவதற்கு சட்டத்தில் இடமில்லை" என கூறியுள்ளார். ஊடகங்கள் அவரை விமர்சித்து செய்திகளை வெளியிட்டுள்ளன. இது எதனைக் காட்டுகிறது?  

பதில்: ஏப்ரல் 21ல் நடந்த சம்பவத்துடன் தொடர்பு பட்டவர்களை தண்டிப்பதற்கு, நம் நாட்டுச் சட்டத்தில் இடமில்லை என்று சட்டத்தரணியும் அனுபவம் வாய்ந்தவருமான பிரதமர் கூறுவது ஆச்சரியமாக இருக்கிறது  

இந்த விடயம் தொடர்பில் பல்வேறு சட்டத்தரணிகள் தங்கள் கருத்துக்களை கூறியிருந்தார்கள். விமானக் கடத்தலில் ஈடுபட்ட இலங்கையைச் சேர்ந்த சேபால எக்கநாயக்காவுக்கும் இலங்கை நீதிமன்றில் தண்டனைபெற்றுக் கொடுக்கப்பட்டது. அவர் கைது செய்யப்படும்போது அக் குற்றத்தை கையாளக் கூடியசட்டம் இங்கு இருக்கவில்லை.  

ஆனால், பின்னோக்கிச் செயற்படும் வாறாக சட்டம் இயற்றப்பட்டு அது கையாளப்பட்டது. பிரதமர் கூறுகிறபடி சட்டப் "போதாமை" இருந்தால் "சேபால ஆட்டிக்கலையின்" சம்பவம் ஒரு முன்னுதாரணமாக இருக்கும்.  

ஆனாலும், இலங்கையில் தற்போது நடைமுறையிலுள்ள அரசியல் மற்றும் குடியியல் உரிமைகள் தொடர்பாக சர்வதே சமவாயச் சட்டம்(2007), பயங்கரவாத குண்டுத் தாக்குதலை ஒடுக்குதல் சட்டம் (1999) ஐ.நா.வின் உறுப்பு நாடு என்ற வகையிலே இலங்கை கையாளக்கூடிய "ஐஎஸ்" அமைப்புக்கு எதிரான ஐக்கிய நாடுகள் சபையின் (Sanction) சுட்டிக்காட்டல்கள் மற்றும், தற்போது நடைமுறையிலுள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தின் பிரிவு 27என்பன ஏப்ரல்21விடயத்தை கையாள்வதற்குரிய சட்ட நிலமைகளாகும். ஆகவே பிரதமர் தனது பதிலை மீளாய்வு செய்ய வேண்டும்.  

கேள்வி: வவுணதீவு பொலீஸ் படுகொலையில் சம்பந்தப்படாமல் சந்தேகக் கைதியாக்கப்பட்ட அஜந்தன் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இதற்கு முன்னின்று உழைத்தவர் அமைச்சர் மனோ கணேசனாவார். த.தே. கூட்டமைப்பு எம்.பி.க்கள் அதனைச் செய்திருந்தால் இப்பகுதி மக்கள் சந்தோஷப்பட்டிருப்பார்களே? 

பதில்: மனோ கணேசன் ஜனாதிபதியுடைய கவனத்திறகு கொண்டுவந்த கையோடு பத்திரிகையிலும் வெளிப்படுத்தினார். இருப்பினும் இவ்விடயம் சரியான முறையில் கையாளப்பட வேண்டும் என்பதில் எமது கட்சிக்கு எப்போதும் அக்கறை இருந்தது.  

"அஜந்தனுடைய" விடுதலை என்பது பாதுகாப்புச் செயலாளருடைய தடுப்புக் கட்டளையை முடிவுறுத்துவதிலேயே பெரிதும் தங்கியிருந்தது என்ற விடயத்தை கருத்தில் கொண்டோம். இதனடிப்படையில் தலைவர் சம்பந்தன் பாதுகாப்புச் செயலாளருக்கு கடிதம் எழுதியிருந்தார். உண்மையில் அஜந்தன் தொடர்பான விடயம் நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்ட நேரத்தில், பாதுகாப்புச் செயலாளர் இலங்கையில் இருக்கவில்லை. அவர், நாட்டுக்கு திரும்பி வந்ததைத் தொடர்ந்து, அவர் பதவி விலக வேண்டும் என்ற அழுத்தம் இருந்தது. பதவியையும் விட்டுவிலகினர். புதிய பாதுகாப்புச் செயலாளரே, இவ்விடயத்தை கையாளக் கூடியவராக இருந்தார். இந்த வகையிலேயே சரியாக அஜந்தன் விடுவிக்கப்பட்டார். 

கேள்வி: ஆளுநர் ஹிஸ்புல்லாவை நீக்கும்படி திருகோணமலையில் ஹர்த்தால் அனுட்டிக்கப்பட்டது, அவர் புணானையில் கட்டியிருக்கும் உயர்கல்வி நிறுவனத்தை எங்கேயாவது பதிவு செய்திருக்க வேண்டும். தொழில் பயிற்சி அமைச்சின் கீழ் பதிவு செய்திருந்தால், அது பல்கலைக்கழகம் ஆக முடியாதே? இதுபற்றி மட்டக்களப்பு அரசாங்க அதிபரையும், வாகரைப் பிரதேச செயலாளரையும், கோறளைப் பற்று மத்தி பிரதேச செயலாளரையும் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் பாராளுமன்ற தெரிவுக்குழு விசாரித்ததாக அரச அதிபர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். இதுபற்றி கிழக்கு மாகாண சபையில் அமைச்சராக இருந்த நீங்கள் கவனிக்காமல் இருந்தமைக்கான காரணம்என்ன?  

பதில்: ஹிஸ்புல்லாஹ் "ஆளுநராக" நியமிக்கப்பட்ட காலம் தொடக்கம் இன்றுவரை பலராலும் விமர்சிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்  

பொ.ஜ.பெரமுனவின் கந்தளாய் பிரதேச சபை உறுப்பினர் "லாமா ஹேவகே" கந்தளாய் பிரதேச சபைக்கு முன்பா "ஹிஸ்புல்லாஹ் ஆளுநர் பதவியில் இருந்து நீக்கப்படவேண்டும்” என்று கவன ஈர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தார்.  

முன்னர் இருந்த ஆளுநரை ஒத்ததாக வெளியார் ஒருவரை ஜனாதிபதி ஆளுநராக நியமித்திருக்கலாம். அதனால் எண்ணியபடி வேலைகள் துரிதமடைந்திருக்கும். ஜனாதிபதி தனது நோக்கத்திற்கு இடர் ஏற்படுத்துபவரை ஆளுநராக வைத்துக்கொண்டு செயற்பட முடியாது. தனது இலக்கை எட்டவும் முடியாது இவ்விடயத்தில் மக்களுடைய கருத்தை ஜனாதிபதி கவனத்தில் எடுத்து தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டும்  

"மட்டக்களப்பு பல்கலைக்கழகம்" (புணானை) கிழக்கு மாகாண சபைக்கு உட்பட்டதல்ல, 2015ல் மாகாண சபையை ஆட்சியில், அமர்த்துவதற்கு முன்பதாக இக் கல்வி நிறுவனத்தைப்பற்றிய பல தரப்பட்ட விமர்சனங்கள் எழுந்திருந்தன. தற்போதைய நிலையில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் குறிப்பிட்டவாறு பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட கருத்துக்களை அடிப்படையாகக்கொண்டு அரசாங்கம் எடுக்கின்ற தீர்மானத்தின்படிதான் அதுபற்றிய செயற்பாடுகள் அமைய வேண்டும்.    

எஸ்.தவபாலன்

Comments