'விட்டுக்கொடுப்புகளை செய்ய தயாராக இருக்கின்றோம்' | தினகரன் வாரமஞ்சரி

'விட்டுக்கொடுப்புகளை செய்ய தயாராக இருக்கின்றோம்'

முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் உடனான நேர்காணல்  

நாட்டு மக்களிடையே இனவாதத்தை தூண்டி கலவரங்களை ஏற்படுத்தி தேசத்தை அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்வதன் மூலம் எமது எதிர்காலச் சந்ததியினருக்கு எவ்வாறானதொரு நாட்டை கையளிக்கப்போகின்றோம் என்று கேள்வி எழுப்பிய முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார், சகல வளங்களையும் கொண்ட இந்த செழிப்பு மிக்க நாட்டை குறுகிய நோக்கம் கொண்ட தீய சக்திகள் சின்னாபின்னப்படுத்தி சீர்குலைப்பதை கைகட்டிப்பார்த்துக் கொண்டிருக்க முடியுமா எனவும் கேட்கின்றார்.

இன்றைய நாட்டு நிலைமைகள் தொடர்பாக தினகரன் வாரமஞ்சரிக்கு வழங்கிய நேர்காணலின்போதே இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் மேற்கண்டவாறு கேள்வி எழுப்பினார். அவரது நேர்காணல் வருமாறு:

கேள்வி – இன்று நாட்டில் உருவாகியுள்ள வேதனை தரக்கூடிய நெருக்கடியான நிலைமைகளை நீங்கள் எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

பதில் – எமது நாட்டின் வரலாற்றுப்பாதையில் இன்று நாம் முக்கிய திருப்பத்தில் நிற்கின்றோம். செழிப்புமிக்க வளம் நிறைந்த நாட்டில் வாழும் மக்கள் ஒருவகையில் துரதிஷ்டசாலிகளாகவே காணப்படுகின்றனர். ஒற்றுமையுடன் வாழ்ந்த இனங்கள் சந்தேகத்திற்கு ஆளாக்கப்பட்டு பிளவுண்டு காணப்படுகின்றனர். மதங்களுக்கிடையேயான புரிந்துணர்வு கடந்த காலத்தில் உரிய முறையில் பேணப்படவில்லை என்பதை குறிப்பிட்டேயாக வேண்டும்.

இனங்களுக்கிடையில் ஏற்றத்தாழ்வைத் தேடி முரண்பட்டு, கலவரங்களை தோற்றுவிப்பதன் மூலம் எமது எதிர்காலச் சந்ததியினருக்கு எவ்வாறானதொரு தேசத்தை கையளிக்கப்போகின்றோம் என்பதை சிந்தித்துப்பார்க்க வேண்டும். ஒரு முக்கிய விடயத்தை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

இன, மத ரீதியிலான பாடசாலைகள் காரணமாக நாம் நிறைய முரண்பாடுகளை எதிர்கொண்டுள்ளோம். உதாரணமாக முஸ்லிம் பாடசாலைகளில் கற்று வெளியே வரும் பிள்ளைகள் பௌத்தர்களின் காவியுடைக்கோ, கிறிஸ்தவர்களின் புனித மரியாள் அன்னைக்கோ மரியாதையளிக்கும் மனநிலையை கொண்டவராக காணப்படமாட்டார்கள். இதேபோன்று தான் ஏனைய மதரீதியிலான பாடசாலைகளிலும் காணப்படுகின்றன.

இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தையும் நல்லெண்ணத்தையும் பாடசாலை மட்டத்திலிருந்து முன்னெடுக்க வேண்டும் இதைச் செய்யத் தவறினால் எமக்கு மீட்சி என்பது கேள்விக்குறியாகவே இருக்கும் இதனை அனைவரும் ஆழமாக சிந்திக்கவேண்டும்.

இனங்களுக்கிடையில் இருக்கும் ஒற்றுமைத்தன்மையை ஆராய்ந்து அதனை மேலோங்கச் செய்வதன் மூலம் இன நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும். அவ்வாறு இல்லாமல் நாங்கள் பிரிந்து செயற்படுவதன் மூலம் எமது எதிர்கால சந்ததியினருக்கு மோசமான நாட்டையே வழங்க வேண்டிவரும்.

அதனால் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்துக்கு யார் காரணம் என்று தீர்ப்பு வழங்க நான் தயாராக இல்லை. என்றாலும் இதன் பிறகு இவ்வாறான சம்பவங்கள் இடம் பெறாதவகையில் எங்களில் மாற்றங்களை மேற்கொள்ளவேண்டும்.

அந்தவகையில் முஸ்லிம் சமூகத்தில் விட்டுக்கொடுப்புகளை செய்ய நாங்கள் தயாராக இருக்கின்றோம்.

ஆரம்ப காலத்தில் முஸ்லிம், சிங்கள மக்கள் ஒரு குடும்பம்போல் வாழ்ந்து வந்தவர்கள். நாகரிக மாற்றத்துடன் எமக்குள்ளும் பிளவு ஏற்பட்டது. அதனை மீண்டும் ஏற்படுத்த முயற்சிக்கவேண்டும்.

எந்த இனத்தைச்சேர்ந்தவர்களாக இருந்தாலும் சிறிய குழுவினால் பாரிய அழிவை ஏற்படுத்த முடியும். அதற்காக ஒட்டுமொத்த சமூகத்தையும் அந்த குழுவுடன் இணைத்துவிடக்கூடாது. பெரும்பாலானவர்கள் அடிப்படை வாதத்துக்கு எதிராகவே இருக்கின்றனர்.

அதனால் எமது பாடசாலைகளை அடிப்படையாகக்கொண்டு இனங்களுக்குள் இருக்கும் வேறுபாடுகளை இல்லாமலாக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

கேள்வி – உடைகள் தொடர்பிலான கலாசாரம் நாட்டில் மற்றொரு பிரச்சினையை தோற்றுவித்துள்ளது. இது குறித்து என்ன கூறுவீர்கள்?

பதில் – எமது நாட்டுக்கென தனித்துவமான கலாசாரம் ஒன்று உள்ளது. அந்தக் கலாசாரம் ஒரு தனிப்பட்ட சமுதாயத்துக்கானதல்ல. அது இலங்கையர்களுக்கான கலாசாரமாகும். அதனோடு அனைவரும் ஒன்றிணைய வேண்டும். முஸ்லிம்களும் இது விடயத்தில் உடன்பட்டேயாக வேண்டும்.

கலாசார பண்பாடுகளைப் பேணும் விடயத்தில் எமக்கிடையே பரந்துபட்ட கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். அரபு நாட்டுக் கலாசாரத்தை இலங்கையில் முஸ்லிம்கள் பின்பற்ற வேண்டுமென்ற நிபந்தனை எதுவும் கிடையாது இஸ்லாம் கூறும் வழியில் நாம் நடக்க வேண்டுமேயொழிய அரபுக்கலாசாரம் எமக்கு அவசியம் என நான் கருதவில்லை.

கேள்வி – இஸ்லாமிய பயங்கரவாதம் என்ற சொல்லாடலால் இலங்கை முஸ்லிம்களும் பயங்கரவாதிகளாக அடையாளம் காணப்படுகின்றனரே. இதனை நிவர்த்திக்க எவ்வாறான வழிவகைகளை கூறுகிறீர்கள்?

பதில் – மேற்குலகின் இஸ்லாமிய வெறுப்புப் பிரசாரம் உலகளாவிய மட்டத்தில் முஸ்லிம்கள் தொடர்பான சந்தேகத்தையும், வெறுப்புணர்வையும் ஏற்படுத்தியிருக்கின்றது. அது தான் இன்று இஸ்லாமிய பயங்கரவாதம் என்ற பெயரில் பரவலாக்கப்பட்டு வருகின்றது. முஸ்லிம்களை இலக்கு வைத்து மேற்குலகம் நீண்டகாலமாகவே வெறுப்புணர்வு போக்கை அரங்கேற்றிக் கொண்டிருக்கின்றது. மேற்குலக ஊடகங்களை வைத்தே இந்த நாடகம் அரங்கேறிக் கொண்டிருக்கின்றது.

அடிப்படைவாதம், பயங்கரவாதம், இனவாதம் எதனையும் இஸ்லாம் அங்கீகரிக்கவில்லை. அதேபோன்று தற்கொலைக்கும் இஸ்லாத்தில் இடமில்லை. சிலரது தவறான எடுகோள்களை இஸ்லாமிய கோட்பாடுகளாக காட்ட முனைவதன் காரணமாக நாம் பல்வேறு சவால்களுக்கும் முகம் கொடுக்க நேர்ந்துள்ளது.

இந்த இஸ்லாமிய மதவாதச் சிந்தனையை முழுமையாக இல்லாதொழிக்கும் பொறுப்பு முஸ்லிம் சமூகத்திற்கு இலங்கையர்கள் அனைவருக்கும் உள்ளது. உலகின் பலம் வாய்ந்த ஊடகங்கள் என்று தம்மை பிரகடனப்படுத்திக் கொண்டிருக்கும் சில மேற்குலக ஊடகங்கள் முஸ்லிம்களை தாடி வளர்த்து துப்பாக்கிகள் கையிலேந்தியவர்களாகவே சித்தரிக்க முயற்படுகின்றன. முழு உலகுக்கும் முஸ்லிம்களை பயங்கரவாதிகளாகவே காட்டி வருகின்றன.

இன்று இலங்கையில் நடக்கும் சம்பவங்கள் எம்மை பெரும் கவலை கொள்ளச் செய்பவையாகவே பார்க்க முடிகிறது. நாட்டு மக்கள் குறிப்பாக முஸ்லிம்கள் அச்சம் பீதிகொண்ட நிலையில் காணப்படுகின்றனர். முஸ்லிம்கள் என்று பேசும்போது வெறுப்புடன் நோக்கும் ஒரு நிலையை சில சக்திகள் தோற்றுவித்துள்ளன. மனிதாபிமானம் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது. எமக்கிடையே மாற்றம் தேவைப்பட்டுள்ளது. எமது மனநிலை மாறாதவரை இந்தச் சவால்களை எம்மால் வெற்றிகொள்ளமுடியாது.

ஏனையவர்களிடமிருந்து நாம் எந்தளவு மாற்றம் கண்டுள்ளோம் என்பதை எண்ணிப் பார்க்கவேண்டும். மேற்குலகம் காட்டும் முஸ்லிம்கள் தொடர்பான பயங்கரவாத பிம்பத்தை அழித்தொழிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. இதற்கான எமது பணியை உடனடியாக தொடங்கப்பட்ட வேண்டும். ஏனெனில் இலங்கையில் இன்று இஸ்லாமிய பயங்கரவாதம் என்ற சொல்லாடல் வளரத் தொடங்கிவிட்டது. இதனை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். அதனை புரையோட இடமளிக்கப்படக்கூடாது.

எந்த விடயத்திலும் நாம் ஆழமாகச் சிந்தித்துச் செயற்பட வேண்டும். இதனை நான் முஸ்லிம் சமூகத்துக்கு மட்டும் சொல்லவில்லை. சகல தரப்பினருக்கும் இது பொருத்தமானதாகும்.

ஒன்றுக்குப் பல தடவை சிந்தித்தோமானால் எமது பயணத்தில் சறுக்கல் ஏற்பட இடமேற்படாது. நாம் பாதையை சீர் செய்துகொண்டு பயணிக்க வேண்டும். எதிர்காலம் நம்பிக்கையுள்ளதாகவும் பலம்மிக்கதாகவும் மாறவேண்டும். அதற்கான பணிகளை நாம் ஒன்றுபட்டு முன்னெடுக்க வேண்டும்.

எம்.ஏ.எம். நிலாம்

Comments